திருமாந்துறை அரசி!

திருமாந்துறை திருத்தலம்

[ அம்மன்: வரலாறு ]

Queen of Tirumantura! - Tirumantura Temple in Tamil

திருமாந்துறை அரசி! | Queen of Tirumantura!

கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் திருமாந்துறை திருத்தலம் அமைந்துள்ளது.

திருமாந்துறை அரசி!

 

கும்பகோணம்-மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் திருமாந்துறை திருத்தலம் அமைந்துள்ளது. சூரியனார் கோயிலுக்குச் செல்பவர்கள் அருகிலுள்ள இக்கோயிலுக்கும் சென்று தரிசித்துவிட்டு வரலாம். ஏழுலோகநாயகி என்ற பெயரில் அழகின் பிரதி பிம்பமாக இங்கே அரசியாக எழில் உருக்கொண்டு அன்னை, பக்தர்களின் குறைபாடுகளை நீக்கி அருள்பாலித்து வருகின்றாள்!.

 

இந்த ஆலயத்தில் ஆடி மாதமானால் கூட்டம் அலை மோதுகிறது. அபிஷேகத்தின் போது அந்த அரசியின் சிலையின் மீது வழியும் பாலபிஷேகம் காணக் கண் கோடி வேண்டும்!

 

பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டி என்று அழைக்கப்படும் சப்த மாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமே ஏழுலோக நாயகி ஆகும்! ஈரேழு உலகங் களையும் ரட்சிப்பதால் இவளை ஏழுலோகநாயகி என்றழைக்கின்றனர். இந்த அன்னையின் சிலை வெகு அபூர்வமானது!

 

பக்தர்களை தன்னருகே அழைத்து, அருளையும் பொருளையும் வாரித் தருபவளான இந்த அரசி, திருமாந்துறையில் எப்படி வந்து கோவில் கொண்டாள் என்பதைப் பார்ப்போமா?

 

கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது மணலூர் கிராமம். இந்தக் கிராமத்து அழகான குளத்திற்குள் லீலை புரிய அடியெடுத்து வைத்தாள் இந்த அம்பிகை!

 

கரையில் அமர்ந்து ஏதேதோ குடும்பக் கவலையில் மூழ்கிய வர்களுக்குச் சட்டென்று தீர்வு கிடைத்தது. குளக்கரையில் அமர்ந்து, தியானத்திற்காகப் போராடிய சில சந்நியாசிகள் தம்மை மறந்து அங்கேயே கிடந்தனர். குடும்பஸ்தர்கள் யாரிடமோ தம் மனக்குறை எல்லாவற்றையும் சொல்லி விட்டது போல பாரம் இறங்கி விட, வீட்டிற்குத் திரும்பினார்கள்!. இரவு நேரங்களிலும் மனித நடமாட்டம் இல்லாத காலங்களிலும் சிறுமி ஒருத்தி காலில் கொலுசு கட்டிக் கொண்டு ஓடுவது போன்று ஓசை குளத்து நீரில் கேட்டபடி இருந்தது.

 

முதலில் அது பிரம்மைதான் என்றே எல்லோரும் அலட்சியமாக இருந்து விட்டனர். தொடர்ந்து அந்த ஓசை எல்லோருக்கும் தெளிவாகக் கேட்டபோது, காதைக் கூர்மையாக்கி நீருக்குள் அலைந்தனர். நீருக்குள்ளேயே மெல்லிய வெளிச்சம் பூசியது போன்று ஒரு இடத்தில் அகிலமனைத்தும் காக்கும் அம்பிகை, சிலை வடிவில் மெல்லிய புன்முறுவல் பூத்த முகத்தோடு காட்சி தந்தாள். சிலையை அள்ளி எடுத்துக் கரை சேர்த்தனர். அப்போது எங்கிருந்தோ ஒரு குரல் எல்லோரையும் வானோக்கி நிமிர்ந்து பார்க்க வைத்தது.

 

''என்னை ஊரின் வடக்கு நோக்கி எடுத்துச் செல்லுங்கள். உரல், உலக்கை சத்தம் கேட்காத இடத்தில் என்னை அமர்த்துங்கள். நான் எப்போதும் உங்களைக் காப்பேன்!...." என்று ஆணையிட்டாள் அன்னை.

 

ஊர் மக்களுக்கு அதென்ன உரல், உலக்கை சத்தம் கேட்காத இடம் என்று புரியவில்லை//.

 

குளத்தில் பூத்த நாயகியை ஏந்திக்கொண்டு கூட்டமாகச் சென்றனர். கிராம எல்லையைத் தாண்டி காடு போன்ற ஓரிடத்தில் உரல், உலக்கை சப்தம் கேட்கவில்லை. மனிதர் புழங்காத அந்த இடத்தில் சிலையை இறக்கி வைத்தனர். மின்னல் போன்ற ஒளி, அம்மையின் முகத்தில் தோன்றி மறைந்தது!!. மக்கள் மனம் நிறைந்தனர். அங்கேயே சிறு கோயில் கட்டினர். இன்றும் சூரியனார் கோயிலுக்கும், திருமாந்துறைக்கும் வடக்குப் பகுதியில் காவல் தெய்வமாக இந்த அன்னை விளங்குகின்றாள்.

 

பார்ப்பதற்கு மிகச்சிறிய கோயில்தான். ஆனால் அருள்வதிலும், கீர்த்தியிலும் மிகப் பெரியதாக இக்கோயில் இன்றளவும் விளங்கி வருகிறது!. ஆரம்ப காலத்தில் மக்கள் இந்த ஆலயத்திற்குச் செல்லவே அஞ்சினார்கள். ஆனால் இப்போது அன்னை சாந்த மூர்த்தியாக எல்லோரையும் அழைத்து அருள்பாலிக்கின்றாள்.

 

இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் தனி ராஜ்யம் நடத்தி வரும் அரசியாகத் திகழ்ந்து வருகிறாள் இந்த ஏழுலோகநாயகி அம்மன் . சப்த மாதர்களுக்கு இருப்பது போலவே இந்த ஆலயத்திலும் அன்னைக்கு இரு புறமும் விநாயகர், வீரபத்திரர் திகழ, அம்பிகை வடக்கு நோக்கி அருள்பாலிக்கின்றாள். வலது காலை மடித்தும், இடது காலைத் தொங்க விட்டும் அமர்ந்திருக்கும் கோலம் சிலிர்ப்பூட்டுகின்றது! கேசத்தில் தெருப்பு ஜுவாலை பறப்பது போன்ற அமைப்பும், சற்று தலையை சாய்த்துப் பார்க்கும் கருணைத்தோற்றமும் உள்ளத்தை உருக்குகிறது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

 

அம்மன்: வரலாறு : திருமாந்துறை அரசி! - திருமாந்துறை திருத்தலம் [ அம்மன் ] | Amman: History : Queen of Tirumantura! - Tirumantura Temple in Tamil [ Amman ]