டாக்டர் நம்மிடம் கேட்கவே கூடாத கேள்விகளும், கேட்கக் கூடிய கேள்விகளும் இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் கேட்கும் கேள்விகள்
டாக்டர்
நம்மிடம் கேட்கவே கூடாத கேள்விகளும், கேட்கக் கூடிய கேள்விகளும் இந்தக்
கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் வளர்ச்சி என்பது நல்லதொரு
மருத்துவம், ஆரோக்யமான வளர்ச்சி, உடல்நிலை, மனநிலை இருப்பதே ஆகும்.
மருத்துவர் கேட்கக் கூடாத கேள்வி!
கேட்கக்கூடாத
கேள்விகள் என்ற பட்டியலில் எத்தனையோ வகை இருக்கின்றன. அவற்றில் மிகமிக மோசமானது, மருத்துவர் நோயாளியிடம் "உங்க உடம்புக்கு என்ன செய்கிறது?"
என்று கேட்கும் கேள்விதான். உடம்புக்கு ஏதோ செய்கிறது. தலைவலிக்கிறது.
காய்ச்சல் அடிக்கிறது. கைகால் உளைச்சல் இருக்கிறது. இதெல்லாம் ஒரு நோயாளிக்குத் தெரிகிறது.
ஆனால், மற்றவர்களின் உடல் நிலையில் மாற்றம் என்னச் செய்கிறது?"
என்பதைச் சொல்கிறார்களா? என்பது தான் பெரிய சந்தேகம்.
ஒரு
குடும்பப் பெண் தனக்குத் தலை வலிக்கும்போது அதை இன்னொரு பெண்ணிடம் சொல்வதற்கும், தன் கணவனிடம் சொல்வதற்கும், மாமியார், நாத்தனாரிடம் சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதே நோயாளிப் பெண்ணை
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் மருத்துவர் உடம்புக்கு என்ன செய்கிறது என்று கேட்கும்போது
அந்த நோயாளிப் பெண்ணை அழைத்து வந்தது யார் - எதிரில் இருப்பது யார் என்பதைப் பொறுத்துத்தான்
அமையும். இதை வைத்து மருத்துவர் மருத்துவம் செய்தால் அந்த நோய் எப்படி குணமாகும்? நோயாளிக்கு உடம்பில் என்ன நோய் இருக்கிறது என்பதைக் கண்டு பிடிக்க மருத்துவரிடம்
ஏராளமான கருவிகள் இருக்கின்றன. உடற்கூறு பற்றிப் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து படித்துப்
பட்டமும் வாங்கி இருக்கிறார். பின் எதற்காக நோயாளியிடம் "என்ன செய்கிறது?"
என்று கேள்வி கேட்க வேண்டும்.
கடையில்
ஒரு சரக்கு வாங்கப் போகிறோம். அதற்க்கு அந்தக் கடைக்காரர் உங்களுக்கு என்ன வேண்டும்?
என்று கேட்கிறார். ஏனென்றால் அவருக்கு நம் மனதில் என்ன இருக்கும் என்று தெரிந்திருக்க
வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு பஸ்ஸில் ஏறி ஊருக்குப் போகிறோம். நடத்துனர்
நீங்கள் எங்கே செல்ல வேண்டும்? என்று கேட்கிறார். இதை அவர் அவசியம் கேட்கத்தான் வேண்டும்.
ஆனால் உடல் நலம் சரியில்லை என்று மருத்துவரைத் தேடிச் சென்றுள்ள போது, எதற்காக வந்து இருக்கிறோம் என்று தெரிந்துள்ள மருத்துவர் "உடம்புக்கு
என்ன செய்கிறது?" என்று கேட்கலாமா?
உடலில்
பலவிதமான நோய்கள் தோன்றுகின்றன. நோயாளி இன்னது செய்கிறது என்று தெரிவித்தால் அதன் குறிப்பறிந்து
மருத்துவம் செய்வதற்கு மருத்துவருக்கு எளிதாக இருக்கும். அதற்காகத்தான் கேள்வி கேட்கிறார்
என்று சொல்ல முடியுமா? மருத்துவமனையில் என்ன நோயாளிக்கு
தேர்வா நடக்கிறது? கேள்வி கேட்டுப் பதிலை வரவழைத்து மார்க் போடுவதற்கு?
உண்மை இதுதான்.
மருத்துவர், நோயாளியின் உடம்புக்கு என்ன என்று கண்டு பிடிப்பதற்கு போதுமான ஆராய்ச்சி அறிவை
அவர் பெற்றிருக்கவில்லை. அவரிடம் உள்ள கருவிகள் மீதும் அவருக்கு நம்பிக்கை இல்லை. நோயாளி
சொல்கிற பதிலுடன், தன்னுடைய சோதனையை ஒப்பிட்டுச் சரியாக இருக்கிறதா
என்று கண்டறிவதற்காகத் தான் மருத்துவர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார் என்று சொன்னால்
மருத்துவர் தன் இயலாமையைத் தானே ஒப்புக் கொண்டதாக அர்த்தம் ஆகிவிடும். ஒப்பிட்டு சரிபார்த்து
ஆராய்ச்சி நடத்துவதற்காகவா மருத்துவமனைக்கு நோயாளி போகிறார்? அப்படித்தான் என்றால் மருத்துவர் அல்லவா நோயாளிக்குப் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்?
ஹோமியோபதி
மருத்துவர்கள் நோயாளியை விரித்து விரித்து விசாரிப்பார்கள். அப்படியெல்லாம் விசாரிக்க
வேண்டும் என்று அந்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணம் ஹோமியோபதி மருத்துவம்
யார் வேண்டுமானாலும் படித்து வரலாம் என்று உள்ளது. அவர்களுக்கு போதிய அளவு உடற்கூறு
பற்றிய ஆராய்ச்சி அறிவோ, கருவிகள் வசதியோ கிடையாது. ஆனால்
எல்லா வகையான ஆராய்ச்சி அறிவும், வசதிகளும் படைத்த ஆங்கில மருத்துவர்கள்
நோயாளியிடம் விசாரித்து வைத்தியம் பார்க்கலாமா என்பதுதான் கேள்வி. நோயாளியிடம் முதலிலேயே
விசாரித்து அறிந்து விட்டால் அவருக்கு எந்த விதமான சிகிச்சை சோதனைக்கு உட்படுத்தலாம்
என்று கண்டறிவதற்கு மருத்துவர்க்கு வசதியாக இருக்கும். அதாவது நீர் சோதனை செய்ய வேண்டுமா?
இரத்தப் பரிசோதனையா? எக்ஸ்ரே எடுக்க வேண்டுமா?
என்பது போன்ற கேள்விகளுக்குச் சட்டென்று முடிவுக்கு வருவதால் நோயாளிக்குச்
செலவு மிச்சமாகிறது என்று சிலர் காரணம் சொல்கிறார்கள். இதுவும் சரியானதல்ல.
தீராத
வியாதிக்காரர்கள் தங்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். மருத்துவமனையில்
எத்தனை வகையான சிகிச்சை உள்ளதோ அத்தனை வகையான சிகிச்சையும் செய்து, பணம் செலவழித்து ஓய்ந்துபோய் இருக்கிற விசயம் தெரியவரும். தீராத வியாதிக்காரர்கள்
ஆனதற்குக் காரணமே பல வகையான சிகிச்சை மேற்கொண்டதுதான் என்பது தெளிவாகும்.
எனது
உறவுக் காரப் பெண்ணு ஒரு தடவை வைத்தியம் பார்ப்பதற்காக கூடச் சென்றிருந்தேன். அவர்கள்
படிப்புதான் குறைச்சலே தவிர பேச்சில் பெரிய புலி. அந்த டாக்டர் வழக்கம் போலவே,
"என்ன செய்யுது?" என்று கேட்டார்.
"என்ன செய்துன்னு தெரிஞ்சிட்டா நாங்க எதுக்கு உங்ககிட்ட வைத்தியம் பாக்க வர்றோம்...
அது தெரியாமத்தான வந்திருக்கோம்?" என்று ஒரு
ஜோக்கிற்காக பதிலே சொன்னாலும், அது அந்த டாக்டருக்கு முகத்தில் அறைந்தது போல் ஒரு உணர்வு இருந்தது. சரியான
பதில் தானே..... இந்தப் பதிலை ஒவ்வொரு நோயாளியும் சொல்ல வேண்டும். அப்போதுதான் இந்த
பாமரத்தனமான கேள்வியை டாக்டர்கள் இனியாவது கேட்காமல் இருப்பார்கள்.
சித்த
மருத்துவர்கள் இதற்கு நேர்மாறான முறையில் செயல்படுகிறார்கள். சித்த மருத்துவர்களிடம்
கருவிகள் எதுவும் கிடையாது. உடம்பில் ஓடுகிற நாடித் துடிப்பை வைத்தே சரியாகச் சொல்லிவிடுகிறார்கள்.
இதை நேரிலேயே சோதனை செய்து பார்த்திருக்கிறேன். தமிழகத்தில் பிரபலமாக விளங்கியவர், பழனி டாக்டர் காளிமுத்து. இவரைப்பற்றி விளம்பரம் வராத பத்திரிகைகளே கிடையாது.
இவரது வைத்தியத்தைப் பற்றி மிகப் பலரும் என்னிடம் வியப்பாக தெரிவித்தார்கள். நான் எதையும்
நேரடியாக சோதனை செய்து பார்க்காமல் எதையும் நம்ப மாட்டேன்.
பொதுவாக
சித்த மருத்துவர்கள் என்றாலே அலட்சியமாக நினைக்கும் காலத்தில் இவர் மணி கணக்குப்படிதான்
ஒரு ஊரில் தங்கியிருந்து வைத்தியம் பார்ப்பார் என்பது நம்பமுடியாத ஒன்று. ஆனாலும் உண்மை.
எனது நண்பர் கண்ணன் என்பவர்க்கு டி.பி. நோய் போல் இருந்தது. அவர்கள் என்னிடம் கொஞ்சம்
அதைப்பற்றி கேட்டார்கள். இதுதான் சமயம் என்று பழனி டாக்டர் காளிமுத்துவைப் பற்றி சொன்னேன்.
அவரும் அதுபற்றி முன்பே தெரிந்து வைத்திருந்தார். அதனால் அவரது சம்மதத்துடன் திருநெல்வேலியில்
அவரை சந்தித்தோம். அப்போது எங்களுக்கு முன்பாகவே மூன்று பேர் வந்து வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.
அவர் வைத்தியம் செய்யும் முறையை கவனித்தேன். என்ன உடம்புக்கு என்று யாரிடமும் கேட்கவேயில்லை.
இது எனக்கு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கண்ணன் முறை வந்ததும் கையைப் பிடித்து
நாடி பார்த்தார். அதிகம் இருந்தால் ஐந்து செகண்டுக்கு மேல் இருக்காது. லெட்டர் பேடை
எடுத்தார். மூன்று வகையான லேகியம் எழுதினார். "நோய் கொஞ்சம் கடுமையா இருக்கு....
முணு மாசத்துக்கு மருந்து சாப்பிடுறாப்ல இருக்கும்... அறுநூத்தி அம்பது ரூபா ஆகுது.
மருந்து தரவா?" எங்களிடம் பணம் இருந்தது. என்றாலும் கொஞ்சம்
யோசிக்கின்ற நேரத்தில் பக்கத்திலிருந்தவர் கையைப் பிடித்து நாடி பார்த்துவிட்டு இதேபோல்
லெட்டர் பேடை எடுத்து எழுதிவிட்டு "ஆயிரத்தி முந்நூத்தி முப்பது ரூபா ஆகுது. மருந்து
தரவா?" என்று கேட்டார். அவர் யோசிக்கும்போதே எங்கள் பக்கம்
திரும்பி "மருந்து தரவா?" என்றார்.
"தம்பிக்கு
என்ன நோய் இருக்கு....?" நான்தான் கேட்டேன். "தம்பிக்கு
அடிக்கடி ஜலதோசம் பிடிக்கும்போல. இவர் தேவையில்லாம மாத்திரை மருந்துகளை எல்லாம் சாப்பிட்டு
ரத்தமே கெட்டுப் போயிருக்கு.... டி.பி. ஆரம்பிச்சு முணு மாசம் ஆகுது... ஆனாலும் முணு
மாசம் மருந்து சாப்பிட்டா கம்ப்ளீட்டா சரியாகிரும்" பணத்தைக் கொடுத்து மருந்தை
வாங்கி வந்து விட்டோம். ஒரே வாரத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது. அடுத்த மாதம் போனபோது
இரண்டு செகண்டுதான் கையைப் பிடித்துப் பார்த்தார். இந்த இரண்டு செகண்டில் எப்படி கண்டுபிடிக்க
முடியும் என்று என்னால் நம்பவே முடியவில்லை. மீண்டும் மருந்து கொடுத்தார். அடுத்த மாதம்
போய் உட்கார்ந்த போது கையைப் பிடித்து பார்க்கவில்லை. கண்ணனின் முகத்தைத்தான் பார்த்தார்.
"அடடே.... ரெண்டு மாசத்திலயே சரியாப் போச்சே... இன்னொரு மாசம் சாப்பிடணும்னா சாப்பிடுங்க.
வேண்டாம்னாலும் நிறுத்திக்கலாம்" சொல்லிக்கொண்டே அடுத்தவர் கையைப் பிடித்து நாடி
பார்த்துக் கொண்டிருந்தார். 'இப்படியும் ஒரு டாக்டரா?'
என்று எனக்கு ஒரே ஆச்சர்யம். கண்ணன் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்
என்பதால் மருந்து வாங்கவில்லை. அதன் பிறகு பல பேர்க்கு நானே "மனி பாக்டரைப் போய்ப்
பாருங்க" என்று சிபாரிசு செய்திருக்கிறேன். சிலரைக் கூட்டிச் சென்றும் வைத்தியம்
பார்த்திருக்கிறேன். நோயாளிகள் தாங்களாகவே தங்கள் நோயைப்பற்றி அவரிடம் ஏதாவது சொல்வார்களே
தவிர யாரிடமும் நோயைப்பற்றி கேட்டதே இல்லை.
இரண்டு
மாதம் மருந்து சாப்பிட்ட கண்ணனுக்கு நோய் திரும்ப வரவில்லை என்பது சிறப்புச் செய்தி.
பழனி டாக்டரைப் போலவே சித்த மருத்துவர்கள் பலர் நோயாளியிடம் என்ன செய்கிறது என்று கேட்காமலேதான்
வைத்தியம் பார்க்கிறார்கள். இதுதான் உண்மையான வைத்தியமும் கூட. ஆனால் ஆங்கில மருத்துவர்கள்
நோயாளியை பல சோதனைக்கு உட்படுத்திவிட்டு, புரியாத போது என்ன
செய்கிறது என்று கேட்டால் கூட பரவாயில்லை. போய் உட்கார்ந்தவுடன், என்ன செய்கிறது என்று எடுத்த எடுப்பிலேயே கேட்கிறார்கள். இது எப்படி சரியாகும்.
இப்போது பள்ளியில் மாணவர்களைக் கேள்வி கேட்கும் பழக்கம்கூட மெல்ல மெல்ல மறைந்து கொண்டு
வருகிறது. அதுபோலவே மாணவர்கள் முன்பு ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்பது வழக்கம். இதுவும்
இப்போது கிடையாது. கல்லூரியில் பேராசிரியர் பாடம் நடத்தும்போது ஏதாவது சந்தேகம் கேட்க
வேண்டியிருந்தால், தனியாகக் கேள் என்று போராசிரியரே மாணவர்க்கு
அட்வைஸ் வழங்குகிற அளவிற்கு வந்து விட்டது. காரணம், மாணவர்கள்
கேட்கும் சில சந்தேகங்களுக்கு ஆசிரியரால் உடனடியாகப் பதில் சொல்ல முடிவதில்லை.
இந்த
நிலைமை விரைவில் மருத்துவமனைகளிலும் வரப் போகிறது என்பது உண்மை. இதை நான் பலரிடம் சொல்லிக்
கொண்டிருந்தபோது, அந்த உறவுக்கார பொண்ணு இதைக் கேட்டுக்
கொண்டே இருந்திருக்கிறார். ஒருமுறை அவுங்களுக்கு காய்ச்சலுக்காக ஆஸ்பத்திரிக்குப் போனோம்.
டாக்டர் வழக்கம் போலவே என்ன செய்யுது என்று கேட்டார். அந்தப் பொண்ணு சிரித்துக்கொண்டே, அது தெரிஞ்சா நாங்க எதுக்கு ஒங்ககிட்ட வர்றோம் என்று சொன்னதும் அந்த டாக்டருக்கு
ஆச்சர்யம் தாங்கவில்லை. அவர் எனது நண்பர் என்பதால் பெருமைப்பட்டுக் கொண்டாரே தவிர கோபப்படவில்லை.
மருத்துவமனைக்கு சிகிச்சைக்குப் போனால் மருத்துவர் நோயாளியிடம் கேட்க வேண்டிய கேள்வி
ஒன்றும் உள்ளது. ஆனால் எந்த மருத்துவரும் அந்தக் கேள்வியைக் கேட்பதில்லை.
மருத்துவர் கேட்க வேண்டிய
கேள்வி:
இந்த உலகத்தில் ஏழை பணக்காரர்கள் என்ற வேறுபாடு
எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கும். காரணம் உலகத்தின் அமைப்பும் அப்படித்தான்
இருக்கிறது. வருமானத்திற்குத் தக்கபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான வசதியும் இருப்பது
தான் வரவேற்கத்தக்க விசயமாக இருக்கிறது.
திடீரென்று அவசரமாக ஊருக்குப்போக வேண்டியிருக்கிறது.
வசதி படைத்தவர் ரயிலில் போனால் முதல் வகுப்புப் பெட்டியில்தான் போவார். அதற்கடுத்த
வகுப்பினர் இரண்டாவது வகுப்பு பெட்டியில் பிரயாணம் செய்கிறார்கள். இதில் ஆச்சர்யப்பட
வேண்டிய விசயம் என்ன என்றால் அதிகப் பணம் கொடுத்து பிரயாணம் செய்பவரும், குறைந்த பணம் கொடுத்துப் பிரயாணம் செய்பவரும் போய்ச் சேரும் இடமும் நேரமும் ஒன்றாக
இருப்பதுதான். முதல் வகுப்புப் பெட்டி மட்டும் முந்திப் போகாதல்லவா?
ஒரு திரைப்படக் கொட்டகையை எடுத்துக் கொள்வோம். வசதி
படைத்தவர்களுக்குக் கூடுதல் டிக்கெட்டும், வசதி குறைந்தவர்களுக்குக் குறைந்த
கட்டண டிக்கெட்டும் கொடுக்கிறார்கள். இதிலும் வியக்கத் தக்க காரியம் இருவருக்கும் ஒரே
திரையில் ஒரே படம்தான் காட்டப்படுகிறது என்பதாகும். இந்த ரயில் பயணத்தைப்போல - திரையரங்குபோல
எந்த ஆஸ்பத்திரியாவது இருக்கிறதா? ரயில் நிலையத்துக்குச் சென்று
டிக்கெட் எடுக்கும் போது அங்கே நீங்கள் ஏழையா பணக்காரரா என்று நீங்கள் என்ன முடிவு
செய்கிறீர்களோ அதுதான், உங்களை யாரும் கேள்வி கேட்கப் போவது இல்லை. நீங்கள்
பெரும் வசதிபடைத்தவராகவே கூட இருக்கக் கூடும். இரண்டாவது வகுப்புப் பெட்டியில் பிரயாணம்
செய்தாலும் உங்களை யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை. இதுபோல் ஒரு ஆஸ்பத்திரிக்குப்
போய் உங்கள் ஏழைமைத் தன்மையை - சிக்கனத்தைக் காட்ட முடியுமா?
மருத்துவமனைகளில் இப்போது வசதி படைத்தவர்களுக்கு
என்று விலையுயர்ந்த மருத்துவமனைகள் சில தோன்றியுள்ளன. அங்கெல்லாம் மருத்துவச் செலவு
ஏராளமாக இருப்பதால் பணக்காரர்கள் மட்டுமே வைத்தியம் பார்க்க முடியும் ஏழைகளுக்கு என்று
சில இலவச மருத்துவமனைகளும், அரசாங்க மருத்துவ மனைகளும் உள்ளன.
ரெயில் நிலையத்தைப் போலவும், திரையரங்குகளைப் போலவும் இவை
இல்லையா என்று சிலர் வாதம் பண்ணக் கூடும். இது சரியல்ல. ரெயிலில் பிரயாணம் செய்யும்போது
முதல் வகுப்புப் பெட்டியில் பிரயாணிக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கிறதே தவிர
அவர் அமர்ந்திருக்கும் பெட்டி மட்டும் முந்திச் சென்று அவரை இறக்கி விட்டுவிடாது. முதல்
வகுப்பில் பிரயாணம் செய்பவரையும், இரண்டாவது வகுப்பில் பிரயாணம்
செய்பவரையும் ஒரே நேரத்தில் மட்டுமல்ல, ஒரே இடத்திற்குத்தான் கொண்டு
போய்ச் சேர்க்கிறது. திரையரங்குகளிலும் ஐந்து ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினாலும்
ஐம்பது ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினாலும் ஒரே படம் தானே காட்டப்படுகிறது? இதுபோல் மருத்துவமனையில் எங்கே இருக்கிறது? மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ள விதமே சரியல்ல. ஒவ்வொரு மருத்துவமனையிலும் பணக்காரர்களுக்கு
வசதி மிகுந்த தங்கும் வசதியும், ஏழைகளுக்கு வசதி குறைந்த தங்கும்
அறைகளும் இருக்க வேண்டும் ஆனால் மருத்துவம் இருவருக்கும் ஒரே மாதிரிதான் இருக்க வேண்டும்
இதுதானே முறை? இதுதானே நியாயம்?
ஒரு கடைக்குச் சென்று ஒரு பூட்டு வாங்க வேண்டும்
என்று செல்கிறீர்கள். கடைக்காரர் இருபது ரூபாய்க்குள் வேண்டுமா? அறுபது ரூபாயில் தரட்டுமா என்று கேட்கிறார். இதுபோல் எந்த மருத்துவ மனையிலாவது
கேட்கிறார்களா? மருத்துவர்கள் நோயாளியைப் பார்த்தவுடன் கேட்க வேண்டிய
முதல் கேள்வி, "நீங்கள் என்ன பணி செய்கிறீர்கள்?" என்பதுதான். ஒருவர் செய்கிற பணியைப் பார்த்தே அவருடைய
வருமானத்தை ஓரளவு நிர்ணயித்து விடலாம். இந்தக் கேள்வியை எந்த மருத்துவரும் கேட்பதே
இல்லை.
உடனே லெட்டர் பேடை எடுக்கிறார். எக்ஸ்ரே எடுக்க
வேண்டும். ரத்தம், நீர் டெஸ்ட் பண்ண வேண்டும் என்று மளமள வென்று எழுதித்
தள்ளுகிறார். இந்தச் செலவை நோயாளியால் தாங்க முடியுமா என்பது பற்றியெல்லாம் எந்த மருத்துவ
ருக்கும் கவலை இல்லை. இதில் பெரிய ரகசியம் என்ன தெரியுமா? மருந்துக்கடைக்காரர்கள், தங்கள் மருந்துக்கடை விளம்பரத்துக்காக
கீழே கடை முகவரியை அச்சடித்து மேலே மருத்துவரின் பெயரையும் முகவரியையும் அச்சடித்து
இலவசமாகவே லெட்டர் பேடுகளை மருத்துவர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த இலவச லெட்டர் பேடுகளை
மருந்துக் கடைக்காரர்கள், போட்டி போட்டுக் கொண்டு வழங்குகிறார்கள். மருத்துவமனையில்
இதுபோன்ற இலவச லெட்டர் பேடுகள் குவிந்து போய்க் கிடக்கும். அதனால் மருத்துவர் எழுதித்
தருகிற சீட்டுத் தாளுக்குக் கூட மருத்துவர் ஒரு பைசா செலவழிக்கவில்லை என்பதுதான் உண்மை.
இந்த இலவச லெட்டர் பேடில் எழுதிக் கொடுத்து டாக்டர்கள் நோயாளியிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.
சில மருந்துக் கடைக்காரர்கள் தங்கள் லெட்டர் பேடை உபயோகித்து நோயாளிகளை அதிக அளவில்
கடைக்கு அனுப்பி வைத்தால் கமிசனும் தருகிறார்களாம். மருத்துவத் தொழில் தரகு வியாபாரம்
போலவே தரம் தாழ்ந்து விட்டது. வருமான சான்றிதழ் காட்ட வேண்டும் என்று அரசாங்கத்தினர்
எதற்கெதற்கோ விதித்துள்ளார்கள். அரசு ஆஸ்பத்திரியில் இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்களா? கிடையவே கிடையாது. அரசாங்க மருத்துவமனை வசதியில்லாத ஏழைகளுக்குத்தானே செயல்பட்டு
வருகிறது? இங்கே போய்ப் பார்த்தால், நல்ல வருமானம் உள்ளவர்களின் கூட்டம் தான் அதிகமாக இருக்கிறது. சிலர் அங்குள்ள ஊழியர்களுடன்
தொடர்பு வைத்துக் கொண்டு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இன்னும் வசதியான
சிலர் போனால் போகிறது என்று ஊழியர்களுக்கு ஐம்பது நூறு கொடுத்து நல்ல முறையில் பயன்படுத்திக்
கொண்டு பழக்கப்படுத்தி விடுகிறார்கள். அரசு மருத்துவமனை ஊழியர்கள் இந்த அன்பளிப்பை
சாதாரண ஏழைகளிடமும் எதிர்பார்க்கிறார்கள். இது என்ன நியாயம்? இரண்டு பேர் செய்வதும் சரியல்ல. அரசு மருத்துவமனையில் முதல் கேள்வியாக வருமானச்
சான்றிதழ் கேட்க வேண்டும். நல்ல வருமானம் உள்ளவர்களாக இருந்தால் மருத்துவர்கள், "இது ஏழைக்காக உள்ள மருத்துவமனை. நீங்கள் வெளியில்
பார்த்துக் கொள்ளலாமே" என்று இணக்கமாகப் பேசி மருத்துவம் பார்த்து அடுத்த முறையாவது
அவர்களை வரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சிலரைத் தோற்றத்திலேயே அறிந்து விடலாம்.
ஏழைகள் என்று தெரிந்தால் அவர்களுக்கு உண்மையாகவே ஊழியம் செய்ய வேண்டும். தனியார் மருத்துவமனைகளில்
வழக்கமாக வருகின்ற வாடிக்கையாளர்கள் தான் நிறைய உண்டு. மருத்துவர்கள் அவர்களைப் பற்றிய
விபரங்களை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்குத் தகுந்தவாறு கட்டணம் வசூலிக்க
வேண்டும்.
மருத்துவர்கள், நோயாளி பெஞ்சில் அமர்ந்தவுடன், "உங்களுக்கு உடம்புக்கு
என்ன செய்கிறது?" என்ற அபத்தமான கேள்வி கேட்பதை விட்டு விட்டு பரிசோதனை
செய்து கொண்டே, "எந்த ஊரில் இருந்து வருகிறீர்கள்? என்ன பணி செய்கிறீர்கள்?" என்பது போன்ற கேள்வியை
எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல், என்று கட்டணம் வசூல் செய்கிறார்களோ அன்றுதான் மக்கள் மருத்துவத்தின் உண்மையான பயனை
அடைய முடியும். அப்போது தீராத வியாதிக்காரர்கள் என்று யாரும் இருக்க மாட்டார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் மீண்டும்
நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆரோக்கிய குறிப்புகள் : டாக்டர் கேட்கும் கேள்விகள் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Questions the doctor asks - Health Tips in Tamil [ Health ]