இராஜயோகி

உயர்ந்த உணர்வுகளை உற்பத்தி செய்வதற்கான வழி. தியானம்

[ ஞானம் ]

Rajayogi - A way to produce higher feelings. Meditation in Tamil

இராஜயோகி | Rajayogi

ஆத்மா தானும் துக்கத்தை அனுபவிப்பதில்லை, மற்றவர்களுக்கும் ஒருபோதும் துக்கத்தை அளிப்பதில்லை.

இராஜயோகி

உயர்ந்த உணர்வுகளை உற்பத்தி செய்வதற்கான வழி

இராஜயோகம், ஏற்கனவே குறிப்பிட்டதைப் போன்று, சிறந்த சமஸ்காரங்களை உருவாக்குவதன் மூலம் உயர்ந்த உணர்வுகளை, அமைதியான மற்றும் தெளிவான எண்ணங்களை உருவாக்குவதற்கான சக்தியை புத்தி அடைவதால், ஆத்மா தனது வாழ்க்கையை உயர்ந்ததாகச் செய்து சுகத்தை அனுபவம் செய்யத் தலைப்படுகிறது. ஆத்மா தானும் துக்கத்தை அனுபவிப்பதில்லை, மற்றவர்களுக்கும் ஒருபோதும் துக்கத்தை அளிப்பதில்லை.

 

உலகின் அனுபவங்களின் நினைவுகள் மேலோட்டமாகவும், சமஸ்காரங்கள் மிக ஆழத்திலும் இருக்கின்றன, பலருக்கு தன்னுள் உயர்ந்த சமஸ்காரங்கள் இருப்பது தெரிய வருவதில்லை. தியானத்தின் ஆரம்ப கட்டத்திலேயே, ஆத்மா, உலகின் நினைவுகளைக் கடந்து உள் மனதை ஆராயும்போது, தன்னுள் சீரிய குணங்கள் இருப்பதை உணர்கின்றது. தூய்மை, சாந்தி, திருப்தி ஆகியவையே ஆத்மாவின் உண்மையான, நிரந்தரமான நற்குணங்கள் ஆகும். அதாவது உண்மையான சமஸ்காரங்கள். இந்த அனாதியான சமஸ்காரங்களை ஆத்மா தியானத்தில் அனுபவம் செய்யும்போது, அன்பு, அமைதி, ஆனந்தம், சுகம், ஆகியவையும் தாமாகவே அனுபவம் ஆகின்றன. சிறிது காலப் பயிற்சிக்குப் பிறகு இராஜயோகி, தன் புத்தியின் சக்தியின் மூலமாக, இந்த உயர்ந்த சமஸ்காரங்களை தன் வாழ்க்கையில், எந்த நேரத்தில் வேண்டுமானாலும், நடைமுறையில் கொண்டுவர இயலுகிறது. அச்சம், கவலை, மனத்தளர்ச்சி, களைப்பு, வெறுப்பு, அல்லது ஆவேசம் போன்ற தாழ்ந்த உணர்வுகளை ஒரு சராசரி மனிதன் அடையச் செய்யும் ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும், ஒரு இராஜயோகி, தன் நிலை குலையாமல், அமைதி காத்து, சுற்றுப்புறத்திலும் அமைதியை ஏற்படுத்துகிறார். இது அவருக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்கிறது.

 

சுய அனுபவம்

இயற்கையின் அழகு, கடற்கரையின் அலைகளின் விளையாட்டு, நந்தவனத்தின் மரங்களின் இலைகளின் அசைவு ஏற்படுத்தும் இன்னிசை, உயர்ந்து பறக்கும் பறவைகளின் அழகு ஆகியவையே மனதிற்கு அமைதி ஏற்படுத்தவல்லவை என்று நான் இதுவரை கருதி வந்தேன். சிலநேரங்களில், மன அமைதிக்காக இனிய இசையைக் கேட்பது, பூங்காவில் உலாவுவது ஆகியவற்றையும் செய்துவந்தேன். ஆனால், தியானம் செய்யத் துவங்கிய சில நாட்களிலேயே நான் என்னுடைய உண்மையான சமஸ்காரமான அமைதியை அனுபவம் செய்தேன். இதனால் இதுவரை வெளி உலகில் நான் அமைதியை நாட முற்பட்டது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதை உணர்ந்தேன். இந்த உள் அமைதியை அனுபவம் செய்தபிறகு, உலகில் நான் மேலோட்டமாக அனுபவம் செய்த அமைதி உண்மையான அமைதி அல்ல என்பது தெரிந்தது. அவற்றின்மீது நான் காட்டி வந்த ஈடுபாடு மறைந்து விட்டது. இந்த உடல் மற்றும் உலகில் காணப்படும் இயற்கைக்காட்சிகள் அளித்துவந்த அமைதி உண்மையானதல்ல. உண்மையான நிரந்தரமான அமைதி எனக்குள்ளேயே இருந்துவந்ததை இதுவரை நான் அறியவில்லை. அதை ஒரு முறை உணர்ந்தபிறகு, நான் கிராமத்தில் இருந்தாலும், நகரத்தில் இருந்தாலும், ஆக நான் எங்கிருந்தாலும், அந்த அமைதி என்னுள் நிரந்தரமாக இருந்துவருவதை உணர்கின்றேன். குழப்பமான சூழ்நிலையிலும் நான் ஆழ்ந்த அமைதியை அனுபவம் செய்து வருகின்றேன்.

 

தியானம்

யோகம் என்றால், நினைவின் மூலமாக ஒரு தொடர்பை ஏற்படுத்துவதே ஆகும். மனதை ஓரிடத்தில் செலுத்துவது யோகம் ஆகும். ஏதாவது ஒரு பொருளை அல்லது ஒரு மனிதனை நினைத்தால், அதுவும் யோகம் என்றே கூறப்படும். ஏதாவது ஒரு பொருளை, அல்லது ஒரு மனிதரை, அல்லது கடந்த கால சம்பவங்களை அல்லது எதிர்கால எதிர்பார்ப்புகளை நாம் தொடர்ந்து இடைவிடாமல் நினைவு கூர்ந்து வருகிறோம். கடந்த காலத்தில் நடந்த இனிய சம்பவங்களை, எண்ணங்கள் மூலமாக, நினைவு கூர்ந்து அவற்றின் மூலமாக நாம் சந்தோஷம் அடைய முயன்று வருகின்றோம். இந்த எண்ணங்களின் காரணமாக நாம் சுற்றுப் புறச் சூழ்நிலையையும் மறந்து அந்த இனிய எண்ணங்களிலேயே லயித்துவிடுகிறோம். இவ்வாறு உள்நோக்குவது ஆத்மாவின் ஒரு சக்தி ஆகும். இதே சக்தி தியானத்தில் உபயோகப்படுத்தப்படுகிறது. புத்தி என்கிற பாத்திரத்தில் ஞானம் இருக்கிறது. புத்தியில் பழைய நினைவுகளும் இருக்கின்றன. புத்தியானது தனது பழைய சமஸ்காரத்தின் காரணமாக ஏதாவது ஒன்றை அல்லது ஒருவரை நினைவு கூர்கின்றபோது, அதுவே எண்ணமாகிறது. அந்த ஒன்று அல்லது ஒருவரின்மீது புத்தி லயித்திருக்கும்போது, அந்த ஒருவரின் குணங்களை புத்தி அனுபவம் செய்கிறது. உதாரணமாக அமைதியான ஒரு கடந்த கால இனிய அனுபவத்தை நினைவு கூர்வதால், நாம் மீண்டும் அமைதி ஆனந்தத்தை அனுபவம் செய்வதால், நிகழ்காலத்தின் துக்கம் துன்பம் மறைந்துவிடுகிறது. அவ்வாறே, ஒரு துக்கமான சம்பவத்தை நினைவு கூர்கையில், மனம் அமைதியை இழக்கின்றது. இவ்வாறு பலவிதமான எண்ணங்களினால், ஆத்மா பல வேறுபட்ட உணர்ச்சிகளை அனுபவம் செய்கிறது. ஆகவே புத்தி செல்லுமிடத்திற்கு ஏற்ப எண்ணங்கள் உருவாகின்றன. சுருக்கமாகக் கூறினால், உணர்வுகளுக்கு ஏற்ப அனுபவம் ஏற்படுகிறது.

 

இராஜயோகத்தில், ஸ்தூலமான உருவ வழிபாடு, ஆசனங்கள், மற்றும் பூஜை புனஸ்காரங்கள் ஆகிய எதுவும் கிடையாது. மாறாக, சூட்சுமமான மனம், புத்தி, மற்றும் சமஸ்காரம் ஆகியவற்றின் மீதே கவனம் செலுத்தப்படுகிறது. இராஜயோகத்தின் முதல் கட்டமாவது; ஆத்மாவின் உள் அமைதியை அனுபவம் செய்வதிலேயே நிலைக்கச் செய்வதே ஆகும். ஆரம்பத்தில் மனதில் பல்வேறு வீண் எண்ணங்கள் வரக்கூடும். இவற்றை அகற்றப் பெறு முயற்சி செய்வதற்குப் பதிலாக, அவற்றை விட்டு நீங்கள் அகன்று சென்றால் போதும்.

 

தியானப் பயிற்சி

எந்த ஒரு குழப்பமான சூழ்நிலையிலும், உடனடியாக உங்களுடைய மனதை உள்ளிழுத்து, சமஸ்காரம் என்கிற கடலின் அடியில் சென்று, அமைதி, திருப்தி என்கிற முத்துக்களைத் தேடிக் கண்டுபிடித்து மீண்டும் அந்த குழப்பமான சூழ்நிலைக்கு புத்துணர்ச்சியுடன் வந்து இதனால் அடைந்த சக்தியின் மூலமாக அந்த குழப்பத்திற்கு ஒரு விடை காணுங்கள். இந்த உள் நோக்கிற்கு ஒரு சில கணங்கள் போதும்.

 

ஆத்மாவை உணருதல்.

கீழே குறிப்பிடப்படுகிற எண்ணங்களின் மீது உங்களுடைய கவனத்தைச் செலுத்தி, அதில் சொல்லப்படுகின்ற ஸ்திதியை அனுபவம் செய்யுங்கள்.

ஆத்மா ஒரு ஒளிப்புள்ளி, பளுவற்றது. புத்தி உள்ளே சென்று, ஆத்மாவின் அனாதி குணமான அமைதியை வெளிக்கொண்டு வரட்டும். புற உலகம் அதன்வழியில் செல்லட்டும். ஆனால், ஆத்மா அதிலிருந்து ஒரு சில கணங்களுக்கு விலகியிருக்கட்டும். உள்ளே செல்லுங்கள். ஆழத்தில் உள்ள பொக்கிஷங்களான அமைதி, தூய்மை ஆகியவற்றை அனுபவம் செய்யட்டும். இவ்வாறு அமைதியை அனுபவம் செய்வது ஆத்மாவுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது. புத்தி மீண்டும் தன் சுய சக்தியை அடைகிறது. மனம் தூய்மையாகிறது.

 

சுற்றுப்புறச் சூழ்நிலை

ஆத்மாவைச் சுற்றி இரு வகைப்பட்ட சுற்றுப்புறச் சூழ்நிலை கள் உள்ளன.

1. ஸ்தூல சுற்றுப்புறச் சூழ்நிலை, அதாவது பருவ காலம், காற்றின் தன்மை போன்ற பஞ்ச தத்துவங்களால் உருவாகும் சுற்றுப்புறச் சூழ்நிலை.

2. சூட்சும சுற்றுப்புறச் சூழ் நிலை; இது மனித மனதால் உருவாகின்றது. இதை புத்திதான் உணர முடியும். இதை அதிர்வுகள், மூட் என்றும் கூறலாம்.

சூடான வாதவிவாதத்தின் போது ஒருவர் நீ என்று கூறும் சொல்லுக்கும் வாள் போல வெட்டும் சக்தி இருப்பதை நாம் உணரலாம்; ஆனால் அதைக் காணமுடியாது; அளக்க முடியாது: இதை புத்தியால் மட்டுமே உணர முடியும். இத்தகைய கொடுமையான அதிர்வுகளை அரசியல் கூட்டங்களிலும், கொலை வெறியுடன் அலையும் நாசகாரி கும்பலிலும் உணரலாம். ஒருவர் மரணம் அடையும்போது வருத்தத்தின் அதிர்வுகளை உணரலாம். இத்தகைய சூட்சுமமான தீய அதிர்வுகளால் ஆட்கொள்ளப் படாதிருக்க ஆத்மாவிடத்தில் மிகுந்த சக்தி இருக்கவைண்டும். இந்த சூட்சுமமான அதிர்வுகள் எவ்வாறு உண்டாகின்றன? எண்ணங்கள் தான். எண்ணம் சூட்சுமமான சக்தி ஆகும். இதன் பிரபாவம் மற்ற மனிதர்கள் மற்றும் தத்துவங்கள் மீதும் படிகிறது. டெலிபதி, ஈஎஸ்பி அதாவது கர்மேந்திரியங்களுக்கு அப்பாற்பட்ட சூட்சுமமான உணருதல் என்பது பற்றி இப்போது மிகுந்த ஆராய்ச்சி நடந்துவருகிறது. ஒரு ஆத்மா பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள இன்னொரு ஆத்மாவுடன் தன் மனதின் எண்ணங்கள் என்கிற அலைகளின் மூலமாக, சூட்சுமமான தொடர்பை ஏற்படுத்தி கருத்துப்பரிமாறல் செய்ய இயலுகிறது. இது ஒரு சூட்சுமமான வானொலி போல செயலாற்றுகிறது!. சிலர் தமது மனதின் எண்ண அலைகளின் மூலமாக இரும்புக்கம்பிகளையும் வளைத்து, அறையில் உள்ள பளுவான மேஜை நாற்காலி போன்றவற்றை நகர்த்தி, அதிசயத்தை நிகழ்த்துகின்றனர். மந்திர தந்திரங்களும் எண்ணங்கள் மூலமாக தீமைளை விளைவிக்க வல்லவையாக இருக்கின்றன.

 

எண்ணங்கள், உணர்ச்சிகள், ஆசைகள், மற்றும் "மூட்" ஆகியவை ஆத்மாவைச் சுற்றியுள்ள வாயுமண்டலத்தில் நல்லது அல்லது தீய சுற்றுப்புறச் சூழ்நிலையை உருவாக்குகின்றன. அதன் தரத்திற்கு ஏற்ப அதன் பிரபாவம் மற்ற ஆத்மாக்கள் மற்றும் பஞ்ச தத்துவங்கள் மீதும் படிகின்றன. பல ஆத்மாக்கள் ஒரே நேரத்தில் ஒரு உணர்ச்சியை அனுபவம் செய்யும்போது, சூழ்நிலையும் அவ்வாறே மிகுந்த சக்தியுடன் காணப்படும். உதாரணமாக கொலை வெறியுடன் அலையும் நாசகாரி கும்பலிலும் இந்த சக்தியை மற்றவர்களும் உணரலாம்.. அவ்வாறே ஒரு மகான் ஆத்மாவைச் சுற்றிலும் ஒரு ஆன்மீக சக்தி இருப்பதை மற்றவர்களும் உணரலாம். ஒரு காட்டில் தவம் செய்துவரும் தபஸ்வியின் முன்னிலையில் சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்களும் சாதுவாக இருக்கும் என்பதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.

 

சக்தி மிக்க சுற்றுப்புறச் சூழ்நிலையை எவ்வாறு உருவாக்குவது?

ஒரு பலவீனமான ஆத்மா சுற்றுப்புறச் சூழ்நிலையினால் பாதிக்கப்படுகிறது. அதற்கேற்பவே அவருடைய உணர்ச்சிகள், சமஸ்காரம் ஆகியவை அமைகின்றன. அச்சமயத்தில் அந்த ஆத்மா அந்த நல்ல அல்லது தீய சூழ்நிலையின் பிரபாவத்திலிருந்து தப்பமுடியாது. தனக்கு விருப்பமான எண்ணங்களை சிந்திக்க முடியாது. இதிலிருந்து விடுபட்டு இருப்பதற்கு;

 

* தான் சக்தியுடன் விளங்குவதற்கு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்

* புத்தியின் உதவியுடன் மனதை தூய்மைப்படுத்தி, உள்நோக்குடன் இருக்கவேண்டும்.

* ஆத்மாவின் ஆழத்தில் சென்று, உள்ளே உள்ள அமைதி, சக்தி போன்ற நற்குணங்களைக் கொண்டுவந்து மனதில் நிலை நிறுத்தவேண்டும்.

தனிப்பட்ட ரீதியில், எல்லைக்குட்பட்ட வழியில் நன்மையை வழங்கும் சூழ்நிலையை எதிர்பார்த்திருப்பதை விட இம்மாதிரி (அமைதி, திருப்தி,...) சக்திவாய்ந்த சூழ்நிலையின் ஆதாரத்தில் எச்சூழ்நிலையிலும் நன்மை செய்வதற்கு முயல வேண்டும். எங்கு எதிர்பார்ப்பு உள்ளதோ அங்கு ஏமாற்றம் நிகழ வாய்ப்புண்டு: ஆனால் எப்போதுமே பிறருக்கு வழங்க வேண்டும் என்கிற கண்ணோட்டத்தில் செயல்படும் போது ஏமாற்றம் ஏற்படாது.

 

ஒரு ஆத்மா தன்னுள் நல்லெண்ணங்களை உருவாக்கி அவற்றை அனுபவம் செய்யும்போது, சுற்றுப்புறச் சூழ்நிலையும் அத்தகைய சிறந்த ஒன்றாகிவிடுகிறது. அந்த ஆத்மாவின் சக்திக்கு ஏற்ப சுற்றியுள்ள மற்ற ஆத்மாக்களும் சக்தி பெறுகின்றனர்.

 

அமைதிதான் ஆத்மாவின் அனாதி சமஸ்காரம் ஆகும். ஆகவே இராஜயோகத்தின் மூலமாக, நாம் நெடுங்காலத்திற்கு அந்த அமைதியை அனுபவம் செய்ய இயலுகிறது. நாம் பேசுவது, உலாவுவது போன்ற அன்றாட காரியங்களைச் செய்துவரும் போதும் இந்த அமைதியின் பிரபாவம் நாம் இருக்கும் அறை, வீடு ஆகியவற்றின் மீதும் ஏற்படுகிறது. இவ்வாறு எண்ணற்ற ஆத்மாக்கள் இத்தகைய அமைதி அதிர்வுகளை ஒருங்கிணைந்து உருவாக்கினால், இந்த முழு உலகின் மீதும் அமைதி மற்றும் ஆக்கப்பூர்வ எண்ணங்களைப் பரவச் செய்யமுடியும்.


ஆன்மீக பணியில்!

தமிழர் நலம்

நன்றி...🙏

ஞானம் : இராஜயோகி - உயர்ந்த உணர்வுகளை உற்பத்தி செய்வதற்கான வழி. தியானம் [ ஞானம் ] | Wisdom : Rajayogi - A way to produce higher feelings. Meditation in Tamil [ Wisdom ]