படிங்க.. கேளுங்க... நல்ல விசயங்கள் செயல்படுத்துங்க..!

ஊக்கம்

[ ஊக்கம் ]

Read.. Listen... Do good things..! - Encouragement in Tamil

படிங்க.. கேளுங்க... நல்ல விசயங்கள் செயல்படுத்துங்க..! | Read.. Listen... Do good things..!

ஒழுங்குமுறை குறையாமல் திட்டமிட்டபடி வாழ வேண்டுமானால் தொடர்ந்து புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கட்டாயமாக வளர்த்துக் கொள்ளுங்கள்

படிங்க.. கேளுங்க... நல்ல விசயங்கள் செயல்படுத்துங்க..!


ஒழுங்குமுறை குறையாமல் திட்டமிட்டபடி வாழ வேண்டுமானால் தொடர்ந்து புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கட்டாயமாக வளர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார் கஸ்டவ் ஃபிளாவ்பெர்ட் என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு எழுத்தாளர்.

காரணம், உலகிலேயே மிகவும் தூய்மைமிக்க இன்பமான மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்கு, புத்தகம் வாசிக்கும் பழக்கம்தான். அறிவு நலத்திற்கு இன்பமும் புத்துணர்வும் அளிப்பது புத்தகங்கள்தான். ஒழுங்கு தவறாமல் சிறந்த வாழ்க்கை வாழ விரும்பினால் புத்தகங்களையே சிறந்த தோழனாகக் கொள்ளுங்கள்.

பள்ளி, கல்லூரிகளில் பாடம் சம்பந்தமான புத்தகங்களைப் படித்தவர்களுள் 90% பேர் அதற்குப் பிறகு புத்தகங்களையே படிப்பதில்லை. புத்தகங்கள் தான் நம்முடைய இலட்சியங்களை அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கையை மீண்டும் மீண்டும் புதுப்பித்துச் செயல்படத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. படிக்கும் போது எந்த அளவு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறதோ அதே அளவு செயல்படத் தேவையான துணிச்சலையும் அதுவே நமக்குள் உற்பத்தி செய்து தருகிறது. வாழ்வில் ஒரு புது உலகத்தையே திறந்து காட்டுகிறது.

படிக்கப் படிக்க நமது அறியாமையை உணர்கிறோம். அறிகிறோம். புத்தகங்களில் உள்ள கடந்தகால வரலாற்றுச் செய்திகளும், வாழ்க்கை வரலாறு நூல்களும் முறையே இன்று சட்டங்கள் இயற்றவும், தனிமனிதர்கள் தங்களின் மேன்மையான குணங்களை வளர்த்துக் கொள்ளவும் உதவுகின்றன.

தனிமையில் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகச் சிறந்த வியத்தகு நண்பன் புத்தகம்தான். 'கல்கி' தனக்குக் கிடைத்த ஒரே ஒரு கவிதை வரியை வைத்துக்கொண்டு ஒரு சரித்திர நாவலையே எழுதிவிட்டார். அந்த அளவிற்கு படிக்கும் பழக்கம் கற்பனை சக்தியை வளர்த்து செயலாற்றலுடன் எழுதவும் வைத்தது கல்கியை.

சரித்திரத்தில் உள்ள இரண்டொரு குறிப்புகளை வைத்துக்கொண்டே கற்பனைக் கதாபாத்திரங்களுடன் உண்மையான வரலாற்று நாயகர்களையும் கலந்து எழுதினார், சாண்டில்யன். வேலை பார்த்தாலும் சரி, சொந்தத் தொழில் செய்தாலும் சரி, தினமும் ஒரு மணிநேரமாவது புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தைத் தொடரவேண்டும். காரணம் எடிசனின் ஓர் அரிய கண்டு பிடிப்பைவிட சுதேயின் ஒரே ஒரு சொல் - இந்த உலகத்தையே சிந்திக்கவும் செயல்படவும் தூண்டிவிடும் ஆற்றல் உடையது. படிக்கப்படிக்க நமக்குள் என்ன நிகழ்கிறது? கீழ்த்தரமான ஆதாயம் இன்றி மனத்துய்மையுடன் செயல்பட்டு நேர்வழியில் நமது இலட்சியங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்ற அசையா உறுதி நமது மனதில் உருவாகி நிலைக்கிறது.

இதனால் சிந்திப்பதில் தெளிவும், செயல்படுவதில் துணிவும், தரத்தில் தங்கமும் வெளிப்பட்டு மகிழ்ச்சி தொடர்கிறது. சோர்வுற்றாலும் நாம் படித்த வரிகள் நம்மைத் தூண்டி முன்னேறச் சொல்கின்றன.

பண்பு நிறைந்த நாகரிக மக்களை உருவாக்குபவை புத்தகங்கள்தான். ஏர் உழுவதைப் போலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கையில் அதிக உழைப்பு இருந்தால்தான் முன்னேறிச் செல்லமுடியும் என்ற ஞானத் தெளிவு, ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதோ ஒரு புத்தகம் மூலம்தான் கிட்டுகிறது.

எனவே, முதலில் உங்களுக்கு எந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்க விருப்பமாக இருக்கிறதோ, அவற்றையே படியுங்கள். அந்த வாசிப்பே உங்களை நல்ல புத்தகங்களைப் படிக்கத் தூண்டிவிடும். ஓய்வுபெற்ற அமெரிக்க ஜனாதிபதிகள் எல்லாம் நீண்டநாள்கள் வாழ்ந்தே மறைந்தார்கள். அவர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் பொதுஅறிவு நூல்களையே படித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓஷோ ரஜனிஷ் புத்தகங்களால் உருவானவரே! விவேகானந்தரின் ராஜயோகம், பகவத்கீதை ஆகிய நூல்களின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பில் தனது கருத்துக்கள் இருந்ததைப் படித்து பார்த்து தனது எண்ணங்களையே மாற்றி இந்தியாவிற்கே வந்துவிட்டார் பாண்டிச்சேரியில் இருக்கின்ற ஸ்ரீ அரவிந்த அன்னை அவர்கள்.

சாக்கடையில் விழுந்து மேலே வரமுடியாமல் தத்தளித்த பன்றியை உடனே தூக்கி வெளியே விட்டார், அமெரிக்க அதிபராக பதவியில் இருந்தபோதே. அவர்? ஆப்ரஹாம் லிங்கன்தான். ஆன்மீகம் படித்தவரல்ல லிங்கன். புத்தகங்களை நண்பனாகக் கொண்டவர். அதனால்தான் உடனே பன்றியைக் காப்பாற்றினார். படிக்கும் பழக்கம் செய்த மாயாஜாலம் இது. மனம் மிகவும் அமைதியாக இருந்ததால்தான் பன்றியும் கஷ்டப்படுகிறது என்று உணர்ந்து காப்பாற்றினார்.

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தால் விழிப்புணர்வு கூடும். நம் காரியங்களை எந்த அளவு விழிப்போடு செய்கிறோமோ, அதே அளவு பிறரது பிரத்யேக விஷயங்களில் தலையிடக் கூடாது என்ற விழிப்புணர்வும் அறிவும் நமக்குக் கிடைக்கும்.

எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டிருக்கிறீர்களே என்று யாரைப் பார்த்தும் கேட்காதீர்கள். படிப்பது மனதை மகிழ்ச்சிப்படுத்தி அறிவைப் பெருக்குகிறது. அந்த நன்மை உங்களுக்கும் உண்டு. எனவே, நீங்களும் தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். இதன்மூலம் வாழ்வு முன்னேற்றத்திற்கும் அமைதியான வாழ்விற்கும் அடித்தளம் அமைப்பீர்கள் என்பது நிச்சயம்.

வயது ஒரு தடை அல்ல!

வாழ்க்கை 83 வயதிலும் தொடங்கலாம் என்பதைப் புரிந்து கொண்டால் வாழ்வு இனிக்கும். நியூபரி போர்ட் வங்கியின் தலைவராக வில்லியம் பிளாக் என்ற 83 வயது இளைஞர் பொறுப்பேற்றார்.

நீங்கள் இன்னும் இளமையாகவும், உற்சாகமானவராகவும் இருப்பதாக உணர்ந்தால் எந்த வயதிலும் ஆரோக்கியமாகவும், சாதனையாளராகவும் வாழ முடியும். வாழ்நாளும் அதிகரிக்கும்.

- எடம். மால்ட்ஜ்


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஊக்கம் : படிங்க.. கேளுங்க... நல்ல விசயங்கள் செயல்படுத்துங்க..! - ஊக்கம் [ ஊக்கம் ] | Encouragement : Read.. Listen... Do good things..! - Encouragement in Tamil [ Encouragement ]