திருமணத் தடை நீங்கும் வழிபாடு

ஈசனுக்கே சாபம் தந்த கரூர் சித்தர், வலைக்கம்பிக்குள் இராவணன்

[ ஆன்மீகம்: சிவன் ]

Ritual for removal of marriage ban - Karur Siddhar, who cursed Isa, Ravana in the web in Tamil

திருமணத் தடை நீங்கும் வழிபாடு | Ritual for removal of marriage ban

சிவபெருமானுக்கும் அன்னை பார்வதி தேவிக்கும் திருமண வைபவம் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது. சிவசக்தியின் திருமணத்தைக் காண கைலாய மலைக்கு முனிவர்கள், தேவர்கள். பார்வதிதேவியின் உறவினர்கள், அசுரர்கள் என்று பலர் ஒன்றாகத் திரண்டு வந்ததால், பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்தது; தென் திசை உயர்ந்தது.

திருமணத் தடை நீங்கும் வழிபாடு

சிவபெருமானுக்கும் அன்னை பார்வதி தேவிக்கும் திருமண வைபவம் கோலாகலமாக நடந்து கொண்டு இருந்தது. சிவசக்தியின் திருமணத்தைக் காண கைலாய மலைக்கு முனிவர்கள், தேவர்கள். பார்வதிதேவியின் உறவினர்கள், அசுரர்கள் என்று பலர் ஒன்றாகத் திரண்டு வந்ததால், பாரம் தாங்காமல் வடதிசை தாழ்ந்தது; தென் திசை உயர்ந்தது.

இதனால் திருமண நிகழ்ச்சியில் குழப்பம் உண்டானது. அந்த நேரத்தில் மணமகனான சிவபெருமான், அகத்திய முனிவரிடம், "அகத்தியனே நீ தென் திசைக்குச் சென்று பூமியை சமமாக்கு" என்றார். 'இறைவா... தங்கள் திருமணத்தைக் காணும் பாக்கியம் இல்லாதவனா நான்" என்று வருந்தினார் அகத்தியர்.

'கவலை வேண்டாம். நீ எங்களைத் திருமணக் கோலத்தில் காண நினைக்கும்போது, நாங்கள் உனக்குக் காட்சி தந்தருளுவோம்" என்றார் இறைவன். அவ்வாறே தென் திசை வந்த அகத்தியரால் பூமி சமநிலையை அடைந்தது. ஒரு நாள் அகத்திய முனிவர் சிவனை நினைத்துத் தவம் இருந்தார். இறைவனின் திருமணக் கோலத்தை காண விரும்பினார்.

சிவபெருமானும் அன்னை பார்வதியும் மணக்கோலத்தில் அகத்தியருக்குக் காட்சி தந்தனர். இப்படி இறைவனும் இறைவியும் அகத்தியருக்குக் திருமணக் காட்சி தந்த ஊர்களில் ஒன்று திருநெல்வேலி. அகத்தியரின் வேண்டுகோளுக்கு அருளி, இன்று வரை திருமணக்கோலத்தில் அம்மன் காந்திமதியாகப் பக்தர்களுக்கும் தரிசனம் தந்து வருகிறாள். அந்தக் கோலத்தைத் தரிசித்தால் தடைபட்ட திருமணங்கள் நடைபெறும்.

 

தடைபட்ட பொன்னழகனின் திருமணம், நடத்தி வைத்தார் அம்மன்

பாப்பையன் என்பவருக்கு நல்ல குணவதியான மனைவி இருந்தாள். அவள் பெயர் நாகமணி. செல்வ வசதியும், நல்ல குணமும் படைத்த இவர்களுக்குப் பொன்னழகன் என்ற ஒரு மகன் இருந்தான். பெயருக்கேற்ப எல்லோரையும் கவரும் இயல்பினன் பொன்னழகன். உறவினர் மத்தியிலும் நண்பர்கள் மத்தியிலும் பொன்னழகனுக்கு நல்ல பெயர் இருந்தது. இருந்தாலும் ஏனோ திருமண பாக்கியம் இல்லாமல் இருந்தான். இவன் வயதில் இருப்பவர்களுக்கெல்லாம் திருமணம், குழந்தை என்று குடும்ப வாழ்க்கையில் இருக்கும்போது. தங்கள் மகனுக்குக் காலாகாலத்தில் திருமணம் நடக்கவில்லையே என்ற கவலை பெற்றோருக்கு இருந்தது. உறவினர் வகையில் எந்தப் பெண்ணும் சரியாக அமையவில்லை. எல்லா வசதி இருந்தும் தன் மகனின் திருமணம் நடக்கவில்லையே! இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்பதை அறிய ஜோதிடரிடம் சென்றனர் பொன்னழகனின் பெற்றோர்.

பொன்னழகனின் ஜாதகத்தைக் கண்ட ஜோதிடர். "கவலைப்படாதீர்கள். திருமணம் கைகூட இறைவனை வணங்குங்கள். நல்லதே நடக்கும். உங்கள் மகன் ஜாதகத்தில் எந்தப் பெரிய தோஷமும் இல்லை. சில கிரகத் தடைகளே உள்ளன. அந்தக் கிரகத் தடைகளை நீக்குபவள் நெல்லை ஸ்ரீகாந்திமதி அம்மன். அவளின் திருக்கோயிலுக்குச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து புடவை சாத்துங்கள். கல்யாண கோலமுகத்தில் இருக்கும் அம்மனைக் கண்டு வணங்கி வாருங்கள். அம்மனைக் கல்யாண அலங்காரத்தில் கண்டால், கிரகக் கோளாறுகளால் திருமணம் தடைப்படும் உங்கள் மகனுக்குத் திருமண பாக்கியத்தை, ஸ்ரீகாந்திமதி நிச்சயம் அருளுவாள். அத்துடன் கோயிலில் பொங்கல் படைத்து வணங்குங்கள்." என்றார் ஜோதிடர்.

ஜோதிடர் கூறியது போல் தங்கள் மகன் பொன்னழகளை நெல்லை ஸ்ரீகாந்திமதி அம்மன் கோயிலுக்கு அழைத்துச் சென்று, பரிகாரங்களை செய்தனர் பாப்பையா தம்பதியினர். திருமணக் கோலத்தில் இருக்கும் அம்மனைக் கண்டதால் சில மாதங்களிலேயே திருமணத் தடை நீங்கி, பொன்னழகனுக்கு அழகும் நல்ல குணமும் படைத்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. தன் மகனின் திருமண வைபவத்தைக் கண்குளிர காண்போமா என்று ஏங்கித் தவித்த பெற்றோர்களின் மனத்தில் ஆனந்தம் பொங்கியது. ஸ்ரீகாந்திமதி அம்மனைத் திருமண அலங்கார கோலத்தில் தரிசித்தால், திருமணம் தடைப்படுபவர்களுக்கு நிச்சயம் திருமணப் பாக்கியம் அமையும்.

 

ஈசனுக்கே சாபம் தந்த கரூர் சித்தர்

ஒருமுறை கரூர் சித்தர் நெல்லையப்பரைத் தரிசிக்க 'திருநெல்வேலி வந்துள்ளார். அவர் வந்த சமயத்தில் இறைவனுக்குப் பூஜைகள் நடந்து கொண்டு இருந்ததனால்," நெல்லையப்பா!" எனப் பலமுறை கரூர் சித்தர் அழைத்தும், இறைவனால் பதில் அளிக்க இயலவில்லை.

இதனால் கோபம் கொண்ட கரூர் சித்தர், "ஈசன் இங்கு இல்லை போலும், அதனால் தான் நான் அழைத்தும் பதில் அளிக்கவில்லை, அதனால் ஈசன் இல்லாத இவ்விடத்தில் குறுக்கும், எருக்கும் எழுக" என சாபம் அளித்துவிட்டு வடக்கு நோக்கிச் சென்றுவிட்டார். இதைக் கண்ட இறைவன், பூஜை முடிந்ததும் தானே கரூர் சித்தரைத் தேடிச் சென்றான்.

அதேநேரத்தில் வடக்கு நோக்கிச் சென்ற கரூர் சித்தர் மானூர் எனும் இடத்திலே, இறைவனை நடராஜ ரூபத்திலே எண்ணி வழிபட்டுவரும், அம்பலவாண முனிவர் என்பவரைக் காணும் பொருட்டு அங்குச் சென்றார். அங்கே சென்ற இறைவன், கரூர் சித்தருக்குக் காட்சி அளித்து, அவர் சினம் தணித்து, அங்கே நடராஜராக அம்பலவாண முனிவருக்கும் காட்சி அளித்துத் தடுத்தாட்கொண்டார்.

தமது நடராஜர் கோலத்திற்கு "அம்பலவாணர்” என்று அந்த முனிவரின் பெயரைச் சூட்டிக்கொண்டார். பின்னர் தன்னோடு கரூர் சித்தரையும் திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்று, சாபத்தினை நிவர்த்தி செய்கிறார். சித்தரும் இறைவன் இங்கு உள்ளான்; எருக்கும் குறுக்கும் அறுக "என சாப நிவர்த்தி அளிக்கிறார்.

இந்த நிகழ்வினை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று விழாவாகக் கொண்டாடுகின்றனர். பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் இத்திருவிழா, திருநெல்வலி நெல்லையப்பர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பின்னர் ஆவணி மூலத்தன்று இறைவன் நெல்லையப்பர் ரூபத்திலே, குதிரை வாகனத்திலே யானை முன்னே செல்ல, வாத்தியங்கள் அதன் பின்னே செல்ல திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மனூரை நோக்கிச் செல்கிறார். அவரோடு பவானி அம்மன், அகஸ்தியர், பாண்டிய ராஜா, குங்கிலிய நாயனார், தாமிரபரணி அம்மன் ஆகியோரும் பல்லக்குகளில் உடன் செல்கின்றனர். வழியிலே இராமையன்பட்டி என்னும் இடத்திலே அமைந்துள்ள பெரிய இரு கல்மண்டபங்களை அடைந்து, அங்கே நடைப்பெரும் பூசையினை ஏற்றுக் கொள்கிறார்.

இந்த மண்டபங்களுக்கு "அம்பலம்" என்றுப் பெயர். அங்கே இறைவன் "நெல்லையப்பர்" எனும் ரூபத்தில் இருந்து "சந்திரசேகரர்" எனும் ரூபமாக மாறுவதாக ஐதீகம். கால ஓட்டத்திலே இந்த மண்டபங்கள் தற்போது முற்றிலும் இடிந்து விழுந்து விட்டன.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மானூரைச் சென்றடையும் இறைவன், கரூர் சித்தருக்கும், அம்பலவாண முனிவருக்கும் காட்சி அளிக்கிறார். அதன்பின் மீண்டும் இராமையன்பட்டி வந்து நெல்லையப்பராக உருமாறி திருநெல்வேலி நகர் சென்று அடைகிறார்.

அவரோடு கரூர் சித்தரும் திருநெல்வேலி வந்து தனது சாபத்தினை நிவர்த்தி செய்கிறார். இந்த விழாவின் போது சுமார் பத்தாயிரம் பேருக்கும் மேலாக மக்கள் இந்த ஆலயத்திலே கூடுகின்றனர்.

மிகப் பெரிய விழாவாகக் கோலாகலமாக இத்திருவிழா நடைபெறுகிறது. அருகில் அமைந்துள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் மக்கள் இவ்விழாவிலே திரளாகக் கூடுகின்றனர்.

 

வலைக்கம்பிக்குள் இராவணன்

நெல்லையப்பர் கோவிலுக்கு முன்னாலே முக்கியச் சாலையில், அழகான அலங்கார நுழைவு வாயில் உள்ளது. சிற்பங்களைக் கல்லிலே இழைச்சு வச்சுருக்காங்க. நெசமாவே இதெல்லாம் கல்லுதானான்னு சந்தேகம் வரும்.

என்னமோ களிமண்ணுலே இஷ்டத்துக்கு இழுத்து வளைச்சுச் செஞ்சதுபோல இருக்கிறது; கல்லு எப்படித்தான் சிற்பிகளின் விருப்பத்துக்கும் எண்ணத்துக்கும் வளைஞ்சு கொடுத்துருக்குன்னு ஆச்சரியப்படுத்தும். இராவணேஸ்வரனுக்கும் ஒரு சிற்பம் உள்ளது.

வலைக்கம்பிக் கதவு போட்டுப் பூட்டி இருக்கு. இந்த இராவணன் சிலைக்குப் பின்னால் சுரங்கப்பாதை ஒன்று இருப்பதாகவும் அது மதுரைவரை போகுதுன்னும், பாண்டிய மன்னர்கள் காலத்துச் சமாச்சாரமுன்னும் ஒரு 'கதை' இருக்கு. பெயருக்கேத்தாற்போல் தாமிர ஓடுகள் வேய்ஞ்ச மண்டபம், சுத்திவர மரவேலைப் பாடுகள் பிரமிக்கவைக்குது.

சிவபெருமான் நடனமாடிய ஐந்து சபைகளில் இது ஒன்று. சிதம்பரத்தில் கனக சபை, மதுரையில் ரஜத சபை, இங்கே தாமிரசபை, குற்றாலத்தில் சித்திர சபை, திருவாலங்காட்டில் ரத்தின சபை. ஆனந்தத் தாண்டவம், சந்தியா தாண்டவம், முனித் தாண்டவம், திரிபுரத்தாண்டவம், காளித் தாண்டவம் இப்படி ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு உணர்ச்சிகளில் சிவன் தாண்டவமாடிட்டார். தலவிருட்சமாக மூங்கில் உள்ளது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீகம்: சிவன் : திருமணத் தடை நீங்கும் வழிபாடு - ஈசனுக்கே சாபம் தந்த கரூர் சித்தர், வலைக்கம்பிக்குள் இராவணன் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Ritual for removal of marriage ban - Karur Siddhar, who cursed Isa, Ravana in the web in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை








தொடர்புடைய தலைப்புகள்