கண்மலர் சாத்தினால் கண்பார்வை அருளும் சமயபுரம் மாரி, திருச்சி

ஆன்மீக குறிப்புகள்

[ அம்மன்: வரலாறு ]

Samayapuram Mari, Trichy, which grants eyesight with Kanmalar Sat - Spiritual Notes in Tamil

கண்மலர் சாத்தினால் கண்பார்வை அருளும் சமயபுரம் மாரி, திருச்சி | Samayapuram Mari, Trichy, which grants eyesight with Kanmalar Sat

திருச்சி மாவட்டத்தில் சமயபுரத்தில் வீற்றிருக்கிறாள் மாரியம்மன். ஆதியில் இந்தப் பகுதி கண்ணனூர் அரண்மனை மேடு என்றழைக்கப்பட்டது. முதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் தான் அம்மனின் திருவுரு இருந்தது. அது உக்கிரம் மிகுந்ததாக இருந்ததால் அங்கிருந்து சமயபுரத்திற்கு இடம் பெயர்ந்தது. அச்சிலையை எடுத்து வந்தபோது இனாம் சமயபுரம் என்ற இடத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்கள். சமயபுர கோயில் திருவிழாவின் எட்டாம் நாள் வைபவத்தில் இன்றும் அம்மன் இனாம் சமயபுரம் சென்று ஓய்வெடுக்கிறாள்.

கண்மலர் சாத்தினால் கண்பார்வை அருளும் சமயபுரம் மாரி, திருச்சி

 

திருச்சி மாவட்டத்தில் சமயபுரத்தில் வீற்றிருக்கிறாள் மாரியம்மன். ஆதியில் இந்தப் பகுதி கண்ணனூர் அரண்மனை மேடு என்றழைக்கப்பட்டது. முதலில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் தான் அம்மனின் திருவுரு இருந்தது. அது உக்கிரம் மிகுந்ததாக இருந்ததால் அங்கிருந்து சமயபுரத்திற்கு இடம் பெயர்ந்தது. அச்சிலையை எடுத்து வந்தபோது இனாம் சமயபுரம் என்ற இடத்தில் சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்கள். சமயபுர கோயில் திருவிழாவின் எட்டாம் நாள் வைபவத்தில் இன்றும் அம்மன் இனாம் சமயபுரம் சென்று ஓய்வெடுக்கிறாள்.

 

விஜயநகர மன்னர் ஒருவர் இப்பகுதிக்குப் படையெடுத்து வந்தபோது அரண்மனை மேடு அம்மனை வணங்கி வழிபட்டு போரில் வெற்றியும் பெற்றார். அதன் நன்றிக் கடனாக அவர் உருவாக்கியது தான் இக்கோயில் என்றும் சொல்கிறார்கள். கோயிலின் தல விருட்சம், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டதாகக் கருதப்படும் வேப்பமரம். இந்த மரத்தில் மக்கள் திருக்காப்பு சீட்டை சமர்ப்பிக்கிறார்கள். தம் குறைகளை எழுதி இம்மரத்தில் கட்டிவிட்டு மாரியம்மனை வேண்டிக்கொண்டால் கோரிக்கை நிறைவேறுகிறது என்கிறார்கள்.

 

அம்மனுக்கு பூஜைகள் நடத்தும்போது இந்தத் தலவிருட்சத்துக்கும் பிரத்யேகமாக பூஜைகள் நடத்தப் படுகின்றன. இந்த வேப்ப மரத்தினடியில் உள்ள புற்றிலிருந்து, ஆயிரம் கண்ணுடையாள் என்ற அம்பிகையின் அழகிய செப்புத் திருமேனி கண்டெடுக்கப்பட்டது. இந்த அம்பிகை தற்போது துணை சந்நதியில் வீற்றிருக்கிறாள். மூலவர் மாரியம்மன் திருவுருவம் மரத்தால் ஆனது; அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இச்சிலையை மறுசீரமைப்பு செய்கிறார்கள்.

 

தங்கஜடா மகுடத்துடன், மேனி குங்கும நிறத்தில் திகழ, நெற்றியில் அழகிய வைரப்பட்டைகள் மின்ன, கண்களில் அருளொளி வீச, வைரக் கம்மல்களுடனும், மூக்குத்தியுடனும் அன்னை அற்புதமாகக் காட்சி தருகிறாள். தனது எட்டுக் கைகளில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம்; வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில் அமர்ந்திருக்கிறாள். வலது காலின் கீழே மூன்று அசுரர்களின் தலைகள் உள்ளன.

 

காவேரியின் உபநதியான பெருவளை வாய்க்கால், இக்கோயிலின் புனித சக்தித் தீர்த்தமாக விளங்குகிறது. இத்தலத்தில் தை மாத தைப்பூச திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறும். பத்தாம் திருநாளன்று மாரியம்மன் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று ரங்கநாதரிடமிருந்து சீர்வரிசைபெறுகிறாள். மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பக்தர்களுக்காக அம்மனே பட்டினி கிடந்து விரதம் மேற்கொள்கிறாள். இதனை ‘பச்சை பட்டினி விரதம்’ என்கிறார்கள்.

 

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி அன்று இரவு முழுவதும் சமயபுரம் சந்நதி வீதியில் தங்கியிருந்து காலை நீராடிவிட்டு அம்மனை தரிசனம் செய்தால் சகல நோய்களையும், தோஷங்களையும் நீக்கி, வேண்டும் வரம் தருவாள் மாரியம்மன். கருவறையின் இடப்புறம் உற்சவ அம்பாளின் சந்நதி உள்ளது. இத்திருமேனிக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்தக் கோயிலுக்கு வடக்கே உள்ள செல்லாண்டியம்மன் கோயில் உற்சவருக்கும் இங்குதான் நாள்தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

 

மாரியம்மன் உற்சவருக்கு காலை, மற்றும் மாலையில் செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் திருக்கோயிலின் வடக்குப் பிராகாரத்தில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள், விபத்துகளில் பார்வை குறை நேர்ந்தாலோ, வயது முதிர்ச்சியின் காரணமாக கண் பார்வையில் குறைப்பட்டாலோ சமயபுரம் வந்து அம்பாளுக்கு கண்மலர் சாத்தி வழிபட்டால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறலாம்.

இந்த தலைப்புகளில் அம்மன் தெய்வம் அனைத்தையும் பற்றி விவரமாக பதிவிடப்படுகிறது.

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

அம்மன்: வரலாறு : கண்மலர் சாத்தினால் கண்பார்வை அருளும் சமயபுரம் மாரி, திருச்சி - ஆன்மீக குறிப்புகள் [ ] | Amman: History : Samayapuram Mari, Trichy, which grants eyesight with Kanmalar Sat - Spiritual Notes in Tamil [ ]