திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ளது சீவலப்பேரி என்ற ஊரில் உள்ளது சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
சத்தியம்_காக்கும்_சீவலப்பேரி சுடலைமாடசுவாமி_கோவில்.!!
திருநெல்வேலி மாவட்டம்
பாளையங்கோட்டை அருகே உள்ளது சீவலப்பேரி என்ற ஊரில் உள்ளது சீவலப்பேரி
சுடலைமாடசுவாமி கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
ஆதி கயிலாயத்தில்
கொலுவிருக்கும் சிவபெருமான்,
தினமும் உலக மக்களுக்கு படி அளக்கிறார். ஈசன் படி அளப்பதன் மீது
சந்தேகம் கொண்ட பார்வதி,
அவரை சோதனை செய்ய எண்ணினாள். அதற்காக ஒரு எறும்பை பிடித்து சிமில்
கூண்டிற்குள் அடைத்தாள். சிவபெருமான் படி அளந்துவிட்டு வந்ததும், அவரிடம் ‘நீங்கள்ல்லா உயிர்களுக்கும் பட்டினி இல்லாமல் படி அளந்து
விட்டீர்களா?’ என்று கேட்டாள் பார்வதி.
அதற்கு சிவபெருமான்
‘ஆமாம்’ என்று கூறினார். அப்போது பார்வதி, சிமில் கூண்டிற்குள்
அடைத்து வைத்து இருந்த எறும்பை பார்த்தார். அந்த எறும்பு ஒரு திணை அரிசியை தனது
வாயில் கவ்விக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றி வந்தது. உடனே பார்வதி, சிவபெருமானிடம் ‘சுவாமி! நான் செய்த தவறை மன்னிக்க வேண்டும்’ என்று
வேண்டினாள்.
சிவபெருமானும் தவறை
மன்னிப்பதாக கூறினார். அப்போது பார்வதி தனக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என்று
கேட்டாள். உடனே சிவபெருமான் ‘கயிலாயத்தில் உள்ள 32-வது தூணில், நீ சேலையின் முந்தானையை ஏந்தி தவம் செய்தால் உனக்கு குழந்தை
கிடைக்கும்’ என்றார்.
பார்வதியும் அவ்வாறே
செய்தார். அந்த தவத்தின் மூலம் அவருக்கு ஆண் குழந்தை கிடைத்தது. அந்த குழந்தைக்கு
‘சுடலைமாடன்’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தாள் பார்வதி. சுடலை மாடன் சைவ
கயிலாயத்தில் மாமிசத்தை கலந்தார். உடனே சிவபெருமான், சுடலைமாடனை பூலோகத்திற்கு
அனுப்பி வைத்தார் என்றும்,
பூலோகத்திற்கு வந்த சுடலைமாட சுவாமி பக்தர்களை காக்கும் காவல்
தெய்வமாக வலம் வருகிறார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
சீவலப்பேரி கோவில் :
திருநெல்வேலி மாவட்டம்
பாளையங்கோட்டை அருகே உள்ளது சீவலப்பேரி என்ற ஊர். இங்கு தாமிரபரணி, சித்ரா நதி,
கோதண்டராம நதி ஆகிய 3 நதிகளும் இணைகின்ற திருவேணி சங்கமம் என்ற
இடம் உள்ளது. இதை ‘முக்கூடல்’ என்றும் அழைத்து வந்தனர். ஒரு முறை வறட்சியான
காலத்தில் மாசானக்கோனார் என்ற 12 வயது சிறுவன் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தான்.
அப்போது அங்கு சுடலைமாட சுவாமி சன்னியாசி வேடத்தில் வந்து சிறுவனிடம், தனக்கு பசியாக உள்ளது, தனது பசியை தீர்க்க ஒரு
ஆட்டை காட்டி அதில் பால் கறந்து தரவேண்டும் என்று கேட்டார்.
உடனே சிறுவன் ‘அது ஒரு
மலட்டு ஆடு’ என்றான். இருந்தாலும் சன்னியாசி தன்னிடம் இருந்த திருவோட்டை கொடுத்து, அதில் ஆட்டுப் பால் கறந்து தரக் கூறினார்.
சன்னியாசி சொல்வதைத் தட்ட
மனமில்லாத சிறுவன்,
மலட்டு ஆடு மடுவின் கீழ் திருவோட்டை வைத்தான். மடுவில் இருந்து
தானாக பால் சுரக்க ஆரம்பித்தது. பாலை அருந்தி விட்டு சுவாமி தன் தோற்றமான சுடலை
வடிவில் காட்சி அளித்தார். இதைக் கண்டு சிறுவன், சுவாமியை வணங்கினான்.
சுவாமி சிறுவனிடம் ‘நீ என்னை கோவில் கட்டி வழிபடு. நான் உன் வம்சத்தையும், ஊர்மக்களையும் காத்து அருள்கிறேன்’ என்று கூறினார்.
அதற்கு அந்தச் சிறுவன்
‘நான் உன்னை கோவில் வைத்து வழிபட்டால், எனக்கு ஒரு வரம்
தரவேண்டும்’ என்று கேட்டான். சுடலைமாடனும் ஒப்புக்கொண்டார்.
‘பிறக்கும்
பிள்ளைக்கும்.. கறக்கும் கன்றுக்கும் எந்த நோய் நொடியும் இல்லாமல் மண்டையில் பத்து
பூசாமல் பாதுகாத்து கொடுக்கவேண்டும்’ என்றான். வரம் அளித்ததற்கு அடையாளமாக
மாசானக்கோனாரின் நாக்கில் ‘அ’ என்ற அச்சாரத்தை சுடலைமாடசாமி எழுதினார்.
அதன்பின் சிறுவன் முறையான
வழிபாட்டு முறைகளை கற்பதற்காக,
சுந்தரமகாலிங்க சுவாமி அருளும் சதுரகிரி மலைக்கு சென்றான். அங்கு
கோரக்க சித்தரின் சீடரான சுந்தரமூர்த்தி முனிவருக்கு சேவை செய்து சீடராக
பணியாற்றினான். 12 ஆண்டுகள் தான் செய்த தவத்தை முடித்து காசிக்கு அந்த முனிவர்
செல்லும்போது மாசானக்கோனாரிடம்,
‘நீ உன் இடத்திற்குச் சென்று, உன் இறைவன் சுடலைக்கு பூஜை செய்வாயாக’ என்று கூறினார். மேலும்
மாசானக்கோனாருக்கு ‘வாலகுரு’ என்ற பெயரையும் சூட்டினார்.
பேச்சியம்மன், பிரம்ம சக்தி,
சுடலைமாட சுவாமி
24 வயது இளைஞனாக
மாசானக்கோனார் தனது ஊரான சீவலப்பேரிக்கு நீள சடைமுடியுடன் வந்தார். இதை கண்ட
ஊர்மக்கள் அவரை ‘சன்னியாசி’ என்று அழைத்தனர். அன்று முதல் மாசானக்கோனார் என்ற
அவருடைய பெயர் மருவி ‘வாலகுரு சன்னியாசி’ என்று விளங்கியது.
முக்கூடலில்(சீவலப்பேரி)சுடலைமாடசாமி
காட்சி அளித்த இடத்திற்கு வாலகுரு சன்னியாசி வந்தார். அந்த இடத்தில் சுடலைமாடசாமி, சுயம்புலிங்க சொரூபமாக காட்சி அளித்தார். அந்த இடத்தில் கோவில்
கட்டி அதற்கு உரிய பூஜைகளை முறையாக செய்து வணங்கி வழிபட்டு வந்தார். இது 600
ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக தலவரலாறு கூறுகிறது. இன்னும் அந்த சுயம்பு லிங்கம், சுடலைமாடசுவாமி,
பேச்சியம்மன்,
பிரம்மசக்தி சிலை உள்ள பீடத்திற்கு கீழ் இருக்கிறது.
சுடலைமாடசாமிக்கு கோவில் அமைத்து வழிபாடு செய்ய சத்திவாக்கு பெற்ற வாலகுரு
சன்னியாசிக்கும் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது.
சுடலைமாட சுவாமி எதிரே
ஒரே கல்லில் புதிய சுவாமி சிலையும், முண்டசுவாமி சிலையும்
உள்ளது. புதிய சுவாமி மேற்கு நோக்கியும், முண்டசுவாமி கிழக்கு
நோக்கியும் உள்ளனர். முண்டசுவாமி முன்பாக ஆடு, கோழி, பன்றி பலியிடக்கூடிய இடம் உள்ளது. இதில் கோவில் கொடைவிழா நடைபெறும்
சித்திரை மாதம் 1தேதி ஏராளமான ஆடு, கோழி,
பன்றிகள் பலியிடப்படும். தென்மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான
சுடலைமாட சுவாமி கோவில்கள்,
இந்த கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து சென்று கட்டப்பட்டதாக
கூறப்படுகிறது.
கோவிலின் சிறப்பு :
இந்தக் கோவிலில் சுடலைமாட
சுவாமி, நான்கு கைகளுடன் காட்சி அளிக்கிறார். வலது கையில் சங்குடனும், இடதுகையில் அக்னியுடனும் அருள்கிறார். இதன் விளக்கம் சங்கு -
ஆற்றல் சக்தி வாய்ந்தது. அக்னி - அழித்தல் சக்தி வாய்ந்தது. இந்த இரண்டும்
கயிலாயத்தில் சிவபெருமான் சுடலைமாடசாமிக்கு கொடுத்த வரமாகும்.
இந்தக் கோவில் தோன்றிய
நாளில் இருந்து இதுவரை இருவேளை ஜீவநதியான தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து
வரப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1ந் தேதி
எந்த கிழமையானாலும் இந்த கோவில் கொடை விழா சிறப்பாக நடைபெறும். இந்தக் கோவிலில்
வழங்கப்படும் விபூதி,
மயானக்கரை பகுதியான கழுவன்திறடு என்ற இடத்தில் இயற்கையாகவே
உற்பத்தியாகிறது. அங்கிருந்து அந்த மண்ணை எடுத்து வந்து பக்தர்களுக்கு விபூதியாக
வழங்குகின்றனர். அந்த மண் விபூதி அந்த இடத்தில் அள்ள அள்ள குறையாமல் விளைந்து
கொண்டே இருக்கிறது.
இந்த கோவிலில்
செய்யப்படுகின்ற சத்தியபிரமாணம் சிறப்பு மிக்கதாகும். சீவலப்பேரி சுடலை மீது
சத்தியம் என்று சொல்லிவிட்டால் மக்கள் அப்படியே நம்பி விடுவார்கள். பொய்சத்தியம்
செய்தால் சுடலைமாட சுவாமி அவர்களை தண்டித்து விடுவார் என்பதும் நம்பிக்கையாக
உள்ளது.
கோவில் கொடைவிழாவில்
நையாண்டி மேளம், வில்லிசை,
கணியான்கூத்து ஆகியவை முக்கியபங்கு வகிக்கும். கணியான் தனது கையை
கத்தியால் வெட்டி சுவாமிக்கு ரத்தம் கொடுக்கும் நிகழ்ச்சியும், சுவாமி சுடுகாட்டிற்கு சென்று பிணத்தை உண்ணும் நிகழ்ச்சியும், சோற்றில் ஆடு,
பன்றி ரத்தத்தை கலந்து வானத்தை நோக்கி விசுகின்ற திரளை பலி என்ற
நிகழ்ச்சியும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
திருநெல்வேலி, தூத்துக்குடி,
கன்னியாகுமரி,
விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் சுடலை மாடசுவாமி கோவில் இல்லாத ஊரே
கிடையாது.
சீவலப்பேரி
சுடலைமாடசுவாமி கோவில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில்
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊருக்கு செல்வதற்கு திருநெல்வேலி
சந்திப்பில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன
ஆன்மீக குறிப்புகள் : சத்தியம் காக்கும் சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில்.!! - குறிப்புகள் [ ] | Spiritual Notes : Sathyam_Kakum_Sivalapperi Sudalimadaswamy_Temple.!! - Tips in Tamil [ ]