தீராத தலைவலிக்கு எளிய வழிகள்...

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Simple Remedies for Chronic Headaches - Medicine Tips in Tamil

தீராத தலைவலிக்கு எளிய வழிகள்... | Simple Remedies for Chronic Headaches

தலைவலி ஒரு வியாதியா...? அல்லது பல்வேறு வியாதிகளின் வெளிப்பாடா.? என்ன தலையை வலிக்கிறதா? இதோ பதிலைச் சொல்லிவிடுகிறேன்.

தீராத தலைவலிக்கு எளிய வழிகள்...

 

தலை உள்ளவர்களுக்கெல்லாம் தலைவலி நிச்சயம் இருக்கும். ஆனால் அது எதனால் வருகிறது என்று தெரியாமல் தவிப்பவர்கள், தலைவலிக்குத் தற்காலிக நிவாரணம் காண்பவர்கள் தான் அதிகமானவர் கள். சரி; உண்மை என்ன? தலைவலி ஒரு வியாதியா...? அல்லது பல்வேறு வியாதிகளின் வெளிப்பாடா.? என்ன தலையை வலிக்கிறதா? இதோ பதிலைச் சொல்லிவிடுகிறேன்.

தலைவலி பின்வரும் காரணங்களால் வரலாம் :

1. தீவிரமான மன உளைச்சலால் தலைவலி வரலாம்.

2. பாக்கு, புகையிலை, போதை என்று மிதப்பவர்கள், காலையில் தலைவலியோடு தான் எழுந்திருக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. எனவே இவர்களுக்கும் தலைவலி வருகிறது.

3. இரத்தக் கொதிப்பு (Blood Pressure) நோய்க்கு உட்பட்டவர்களுக்குத் தலைவலி வரலாம்.

4. தீவிரமான சிந்தனை, எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மை, உணவுப்பொருட்களின் ஒவ்வாமை இவற்றால் மைக்கிரேன் (Migraine) எனப்படும் தலைவலி வரலாம்.

5. அதிக பசியா....? தலைவலி வரலாம்.

6. மலச்சிக்கலா....? கண்டிப்பாய்த் தலைவலி வரும்.

7. சிறுநீரகத்தில் கல், பித்தப்பையில் கல், அஜீரணக் கோளாறு இவற்றாலும் தலைவலி வருகிறது.

8. முறையாக மாதவிடாய் வராத பெண்களுக்குத் தலைவலி தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

9. நரம்புவியாதிகளாலும் தலைவலி வரலாம்.

10. காரணமே இல்லாமல்கூட தலைவலி வரலாம்.

நவீன மருத்துவத்தில் தலைவலிக்கான மாத்திரைகள் நிறைய உள்ளன. அவற்றில் முக்கியமாய் ஆஸ்பிரின் (Aspirin), பினாசெட்டின் (Phenacetin) போன்ற மருந்துகள் பரவலாய்ப் பயன்படுத்தப்படுகிறது. இவை தலைவலியை அப்போதைக்குக் கட்டுப்படுத்துமே ஒழிய, உடனே தீர்க்குமேயொழிய, தலைவலிக்கான மூல காரணத்திற்கு (root of cause) மருந்தாகாது.

மாதவிடாய்க் கோளாறினால் வரும் தலைவலிக்கு ஆஸ்பிரின் மருந்தாகலாம். ஆனால் மாதவிடாய்க் கோளாறுக்கு ஆஸ்பிரின் மருந்தாகாது.

தலையை வலிக்கிறது. ஒரு ஸ்ட்ராங்கான மாத்திரை கொடு... என்று மெடிக்கல் ஷாப்பில் கேட்கும் பழக்கத்தை (Over the counter) உடனடியாகக் கைவிட வேண்டும்.

இங்கே நான் கூறப்போகும் சில மருந்துகள், உணவுகள், நவீன மருந்துகளைப் போல் உடனடியாக வேலை செய்யாது. ஆனால் தலைவலிக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து, குணப்படுத்தும் வல்லமை பெற்றது.

1. மன உளைச்சல், இரத்தக்கொதிப்பு - இதனால் உண்டாகும் தலைவலிக்கு மருந்துகள்.

துளசி இலை - 1 கைப்பிடி

ஆவாரம்பூ - 5 கிராம்

சீரகம் - 5 கிராம்

 திப்பிலி - 5 கிராம்

இவையனைத்தையும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துச் சாப்பிட, மன உளைச்சல் நீங்கும். இரத்த அழுத்தம் சீராகும்.

மேற்கண்ட குறைபாடுடையோர், எண்ணெய் வறுவல், மாவுப்பதார்த்தங்கள், அசைவ உணவுகள், ஊறுகாய் போன்றவற்றை அறவே நீக்கினால் நோயிலிருந்து முழுமையாய் மீளலாம்.

புகை, போதையினால் தலைவலியின் பாதிப்புக்கு உள்ளானவர்கள் காலை வெறும் வயிற்றில் கீழாநெல்லி, அதிமதுரம், சோம்பு இவற்றைச் சம அளவாய் எடுத்து, விழுதாய் அரைத்துப் பாலுடன் கலந்து சாப்பிட, போதையால் வரும் தலைவலி தீரும். தொடர்ந்து சாப்பிட மது அருந்தும் பழக்கம் குறைய ஆரம்பிக்கும்.

2. 'மைக்கிரேன்' (Migraine) தலைவலிக்கு மருந்து:

ஒற்றைத்தலைவலி எனப்படும் மைக்கிரேன் குணமடைய முதலில் நோயாளிக்கு மன உறுதியை மேம்படச் செய்யவேண்டும். கண்டதை நினைத்துப் பயப்படும் மனோபாவத்தை மாற்ற வேண்டும். எதிர்மறை எண்ணம் மனதில் தோன்றாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒற்றைத் தலைவலிக்குப் பெரும்பாலும் காரணம் மனமாகும். ஓரளவு காரணம் உடல் பலவீனம், இரத்தக்குறைவு, ஒவ்வாமை (A1lergy) ஆகியவையாகும்.

சுக்கு- 5 கிராம்

அமுக்கரா - 5 கிராம்

 திப்பிலி - 5 கிராம்

 சதாவரி - 5 கிராம்

தாமரைப்பூ - 5 கிராம்

 மிளகு- 5 கிராம்

அக்கிரா - 5 கிராம்

சித்தரத்தை - 10 கிராம்

இவற்றைப் பொடித்து தூளாக்கி, அரை லிட்டர் தண்ணீரிலிட்டுத் தேவையான அளவு பனைவெல்லம் சேர்த்து, கொதிக்க வைத்துக் கசாயமாகத் தினசரி இருவேளை சாப்பிட ஒற்றைத்தலைவலி முழுமையாய்க் குணமடையும்.

3. மலச்சிக்கல் - ஜீரணக் கோளாறுகளால் வரும் தலைவலிக்கு மருந்து:

 நிலாவரை - 10 கிராம்

 ரோஜாப்பூ - 10 கிராம்

ஓமம்- 5 கிராம்

சோம்பு- 5 கிராம்

 மூன்றையும் தண்ணீர்விட்டு விழுதாய் அரைத்து, தினசரி இரவில் சாப்பிட்டு வர, காலையில் மலம் தாராளமாய் இறங்கும். இதனால் மேற்கண்ட அவஸ்தையினால் உண்டாகும் தலைவலி தீரும்.

4. சிறுநீரகக் கோளாறால் உண்டாகும் தலைவலிக்கு மருந்து.

) சிறுபசலைக்கீரையுடன், தேவையான அளவில் சோம்பு, பார்லி, சதகுப்பை, மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கொதிக்க வைத்து, கசாயமாகச் சாப்பிட சிறுநீரகக் கோளாறினால் உண்டாகும் தலைவலி குணமாகும்.

) சிறுகீரையுடன், தேவையான அளவில் இஞ்சி, பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து, சூப்பாகச் சாப்பிட தலைவலி தீரும்.

) சிறிதாக அரிந்த முள்ளங்கி, வாழைத்தண்டுடன் சுக்கு, சீரகம், ஓமம், பெருங்காயம், மஞ்சள் தூள் தேவையான அளவில் சேர்த்து, கொதிக்க வைத்து, சூப்பாகச் சாப்பிட தலைவலி தலை தெறிக்க ஓடும்.

தலைவலியா...? மருந்தே இல்லாமல் குணப்படுத்துங்கள்

தலைவலிக்கு மருந்து அவசியமில்லை . அதன் மூலகாரணத்தைக் கண்டறியுங்கள். உணவையே மருந்தாக்கிக் குணப்படுத்திவிடலாம்.

தலைவலி... சில ஒற்றட மருந்துகள்

) நெற்றியில் இதமாய்த் தேய்த்துவிடுவதும், தலையின் உச்சியில், சிறிது அழுத்திவிடுவதும், கழுத்தின் பின்பகுதியில் வருடி விடுவதும், காதுகளின் பின்னால் இதமாய்த் தேய்த்துவிடுவதும், உடனடியாகத் தலைவலியின் தீவிரத்தைக் குறைத்துவிடும். நீங்கள் விருப்பப்படும் நபர் உங்களுக்கு உதவி செய்கையில் தலைவலி மருந்தே இல்லாமல் மலையேறிவிடும்.

) நீலகிரித் தைலத்தை நெற்றியில் தேய்த்து, பின்னர் தலை உச்சி, காதுகளின் பின்புறம், கழுத்தின் பின்புறம் தேய்க்கவும். ஒரு துணியில் சிறிது மஞ்சள் தூளைப் பந்துபோல் கட்டி, சட்டியிலிட்டு சூடு செய்து, இதமான சூட்டில் தைலம் தேய்த்த இடங்களில் ஒற்றடமிடத் தலைவலி பஞ்சாய்ப் பறந்துபோகும்.

) பறங்கி சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள், ஓமம் மூன்றையும் சமஅளவு எடுத்து, ஒரு துண்டு பச்சைக் கற்பூரம் சேர்த்து, வெற்றிலையுடன் சேர்த்து விழுதாய் அரைத்து நெற்றியில் பற்றிட, தலைவலி தீரும்.

) தைவேளை என்னும் மூலிகையின் வேர், தண்டு, இலை, பூ, காய், விதை இவற்றைச் சமஅளவு எடுத்து (மொத்தம் 12 கிராம்), 20 கிராம் பனைவெல்லம் சேர்த்து விழுதாய் அரைத்து, காலை வெறும் வயிற்றில் சாப்பிட, வருடக்கணக்காய் தொடரும் அனைத்துவகை தலைவலியும் குணமாகும்..

தலைவலியா...? தள்ள வேண்டிய உணவுகள்

அடிக்கடி தலைவலி அவஸ்தைக்கு உட்படுபவர்கள் கீழ்க்காணும் உணவுக்கட்டுப்பாடுகளைக் கையாண்டால் தலைவலியை அடித்து விரட்டலாம்.

1. புளிப்பு உணவுகளான எலுமிச்சை, தக்காளி, புளி ஆகியவற்றை நீக்க வேண்டும்.

2. மந்த உணவுகளான, தேங்காய் சட்னி, உருளைக்கிழங்கு, வாழைக்காய் பொறியல், வடை, போண்டா போன்ற எண்ணெய்ப் பலகாரங்கள் ஆகியவற்றை உடனே நீக்கவேண்டும்.

3. உப்பில் ஊறிய பண்டங்களான ஊறுகாய், வற்றல், வடாம் போன்றவற்றை கண்டிப்பாய் நீக்குங்கள்.

4. இரவு வேளை உணவைச் சீக்கிரமாய் எடுத்துக் கொள்ளுங்கள். உணவு நன்கு செரித்தபின் படுக்கைக்குச் செல்லுங்கள்.

5. இரவு உணவில் மலத்தைக் கட்டும் மாவுப்பொருட்கள், எண்ணெய்ப் பதார்த்தங்கள், வாழைப்பூ, குருமா வகைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

6. மது, புகை, போதைக்கு அடிமையாதல், இவற்றை அடியோடு விட்டாலொழிய தலைவலியிலிருந்து முழுவதுமாய்த் தப்ப முடியாது.

அடிக்கடி பசி காண்பவர்கள், அதனால் ஏற்படும் தலைவலிக்கு உடலுக்கு ஊட்டமான உணவுகளை எடுத்தாலே தலைவலி குணமாகிவிடும்.

மாதவிடாய்க் கோளாறினால் உண்டாகும் தலைவலிக்கு, மணத்தக்காளி, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் தேவையான அளவில் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மிளகாய் வற்றல் சேர்த்து, கொதிக்க வைத்து, சூப்பாகச் சாப்பிட, தொடர்ந்து வரும் தலைவலிக்கு முடிவுரை எழுத இயலும்.

இங்கு சொல்லப்பட்ட மருந்துகள் அனைத்தும் தலைவலியை முற்றிலும் குணப்படுத்தும் மூல மருந்துகளாகும். ஒரு வேளையில் பலன் தெரியாது. தொடர்ந்து சாப்பிட நற்பலன் நாடி வரும்.

 

மருத்துவ குறிப்புகள் : தீராத தலைவலிக்கு எளிய வழிகள்... - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Simple Remedies for Chronic Headaches - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்