பெண்களைத் துரத்தும் மாதவிடாய்க் கோளாறுகள் - அதற்கான தீர்வுகளைப் பற்றிக் காண்போம்.
பெண்களின் பெரும் சிக்கலுக்கு எளிய தீர்வுகள்
இன்றைய வாழ்வியல் சூழலில் நோயில்லா மனிதரே இல்லை எனலாம். நாளொரு பொழுதும் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஈடாக, நோய்களும் வளர்ந்து கொண்டுதான் வருகிறது. திட்டமிடாத உணவு முறைகள், நாவின் ருசிக்கு அடிமையாகிவிடுதல், முறையற்ற பழக்கவழக்கங்கள், நெருக்கடியான வாழ்க்கைப் பாங்கு இவையே நோய்களுக்குக் காரணமாகிறது.
பெண்களைத் துரத்தும் மாதவிடாய்க் கோளாறுகள் - அதற்கான தீர்வுகளைப் பற்றிக் காண்போம்.
பெண்களின் பூப்பெய்தும் தன்மையைக் கொண்டாடி மகிழும் பண்பாடு, இந்தியர் அனைவருக்கும் உள்ள தனிச்சிறப்பாகும். தன் மகள், ‘பூப்பெய்தவில்லையே' என ஏங்கும் பெற்றோர் மனநிலை மிகவும் ஏக்கத்துக்கு உரியது.
பூப்பெய்தும் பெண்களுக்குத் தனியாக உணவுகளைப் பட்டியலிட்டு, அவர்களுக்கு ஊட்டமான உணவுகளைக் கொடுத்து நல் ஆரோக்கியத்திற்கு வித்திட்டு, மாதாந்திர சுழற்சிப்படி, மாதவிடாய்த் தொடர்ந்து ஏற்பட, வழி ஏற்படுத்திக் கொடுக்கும் பெற்றோர்கள் போற்றலுக் குரியவர்களே.
குமரிப் பருவமுற்ற மங்கையருக்கு மாதவிடாயானது 28 நாட்களுக்கு ஒரு முறை வெளிவந்து, தொடர்ந்து சுழற்சி கொண்டிருக்கும். மாதாந்திரச் சுழற்சி . திடீரென நின்றுவிடுவதையே, மாதவிலக்கற்ற நிலை (Secondary menorrhoea) என்கிறோம்.
பெண்கள் கருத்தரிக்கின்ற வேளையில் மாதவிடாய் முற்றிலும் நின்றுவிடும். ஆனால் கர்ப்பமில்லாமல் மாதவிடாய் நின்று விடுவதே நோய்க்குறைபாடாகும்.
நோயுற்ற சில பெண்களுக்கு மிகவும் குறைந்த அளவில் மாதவிடாய் வெளியேறும். இன்னும் சிலருக்குச் சில துளிகள் மட்டுமே வெளியேறும். வேறுசிலருக்கோ, மாதவிடாயில் ஒரு துளிகூட உதிரப்போக்கு இராது. இன்னும் சில பெண்களுக்கு மாதவிடாய் அதிக அளவில் வெளியேறும். ஐந்து முதல் பத்துநாட்கள் கூட உதிரம் படும். சில பெண்களின் மாதாந்திரச் சுழற்சி (Menstrual Cycle) மாதம் இருமுறை கூட இருப்பதுண்டு .
மாதவிடாய் அதிக உதிரப்போக்குடைய பெண்களுக்குக் கர்ப்பப்பை சரியாக வளர்ச்சியடையாமலோ, கருப்பை முனையில் நார்க்க ழலைக் கட்டிகள் (Submucos Fibroid) வளர்ந்தோ அல்லது கருப்பையில் புற்றுநோய் (Utrine cancer) பாதிப்போ இருக்கக்கூடும்.
1. நாளமில்லா சுரப்பிகள் பாதிப்படைவதனால், மாதவிலக்கு நின்றுவிடலாம்.
2. கர்ப்பப்பை கோளாறுகளினால் மாதவிலக்கு நின்று போகலாம்.
3. கருமுட்டைகள் பாதிப்படைந்து, மாதவிடாய் வராமல் இருக்கலாம். 4. தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு, உடல் ஊட்டம் குறைந்து விடுவதாலும், அடிக்கடி பட்டினி கிடத்தலாலும் மாதவிடாய் வராமல் இருக்கலாம்.
இன்றைய உணவு முறைப் பழக்கங்கள், மன அழுத்தம் மிகுதியாகிப்போன வாழ்வியல் சூழல், உணவு முறைகளில் விழிப்புணர்வில்லாமை ஆகிய காரணங்களால், பெண்கள் பெரும்பாலும் இக்குறைபாட்டிற்கு உள்ளாகின்றனர்.
மாதவிடாய் குறைவு, மாதவிடாயின் போது ஏற்படும் வலி, வயிற்றுப்பொருமல், அதிக இரத்தப்போக்கு ஆகிய குறைகளை நீக்க கீழ்க்கண்ட உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்! (மாதவிடாயின் போது)
1. மாதவிடாயின் போது, உணவில் எண்ணெயில் வேகவைத்த, வறுத்த உணவுகளை அறவே நீக்க வேண்டும்.
2. வாயுவை மிகுதிப்படுத்தும் நொறுக்குத் தீனிகளான வடை, போண்டா , பஜ்ஜி, மிக்ஸர், கடலைப் பருப்பு, காராமணி, மொச்சைக் கொட்டை, உருளைக்கிழங்கு, வாழைக்காய், கருணையுடன் கூடிய அனைத்துக் கிழங்குகளுக்கும் மொத்தமாய் ஒரு 'தடா' போடுங்கள்.
3. ஊறுகாய், புளிசாதம், தக்காளிசாதம், எலுமிச்சைப்பழம், சப்பாத்தி, மைதாவில் செய்யப்படும் உணவுகள் கூடாது.
4. மாதவிடாயின்போது, முட்டை உட்பட அனைத்து அசைவ உணவுகளையும் அறவே நீக்கவேண்டும்.
5. மாதவிடாயின் போது உடல் களைப்புறுவதால் உடலுறவைக் கண்டிப்பாய் நீக்க வேண்டும்.
1. மாதவிடாயின் முதல் நாளிலிருந்து 3 நாள்களுக்கு உப்பு சேர்த்து, பால் அல்லது மோர் சாதம், கறிவேப்பிலை, புதினா, மல்லி இவற்றில் ஏதேனும் ஒரு துவையலுடன் சாப்பிடலாம்.
2. சிறுபருப்பு சேர்த்த சாம்பாரில், இஞ்சி, பூண்டு, பெருங்காயம் அதிக அளவில் சேர்த்து, அரை உப்புடன் சாதம் சாப்பிடலாம்.
3. பச்சை சுண்டைக்காயுடன் சிறுபருப்பு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து, உப்பு குறைத்து, குழம்பு செய்து உட்கொள்ளலாம்.
4. மாதவிடாயின் போது, மாதுளம்பழம், சாத்துக்குடி, திராட்சை இவற்றின் ஜூஸ் ஒன்றினை ஒரு வேளை உணவாகக் கொள்ளலாம்.
5. மாதவிடாயின்போது வெள்ளரி, வெள்ளைப் பூசணி, சுண்டைக்காய், வெண்டைக்காய், பீட்ரூட், கோவைக்காய், கேரட், முள்ளங்கி, சிறுகீரை, பொன்னாங்கண்ணி, கரிசாலை, பொடுதலை, முடக்கத்தான் ஆகியவற்றை உணவில் பக்குவமாய்ச் சேர்த்துக் கொள்ளலாம்.
மாதவிடாயில் வயிற்று வலியா? கீழ்க்கண்டபடி வெண்பூசணி ஜூஸ் தயார் செய்யுங்கள்; சாப்பிடுங்கள்; வலி பஞ்சாய்ப் பறந்து போகும்.
வெள்ளைப் பூசணி - 100 கிராம்
வெள்ளரி விதை - 10 கிராம்
சாம்பார் வெங்காயம் - 2 எண்ணிக்கை
வெள்ளை மிளகு - 5 கிராம்
பனங்கற்கண்டு - 100 கிராம்
பூண்டு - 2 பல்
இவையனைத்தையும் ஒன்றாக்கிச் சாறெடுத்துக் காலை-மதியம்-இரவு மூன்று வேளையும் 50 மி.லி. அளவில் சாப்பிட, மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்றுவலி தீரும்.
கல்லுப்பு - 10 கிராம்
பிரண்டை - 1 துண்டு ( 25 கிராம்)
இந்துப்பு - 10 கிராம்
சுக்கு - 10 கிராம்
ஓமம் - 10 கிராம்
பூண்டு - 20 கிராம்
பெருங்காயம் - 10 கிராம்
பனைவெல்லம் - 50 கிராம்
இவையனைத்தையும் ஒன்று சேர்த்து மைய அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் பட்டாணி அளவு மூன்று வேளையும் சாப்பிட, வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல் ஆகியன தீரும்.
பெண்களே! மாதவிடாயில் தேவையான அளவில் இரத்தம் வெளிப்பட சில டிப்ஸ்:
மாதவிடாயில் குறைவான இரத்தப்போக்கு உடையவர்கள், இரத்தத்தை மிகுதிப்படுத்தும் உணவுகளையும், இரத்தச் சுழற்சிக்கு உகந்த உணவுகளையும் மிகுதியாக உட்கொள்ள வேண்டும்.
மாதவிடாய் கண்ட 22-வது நாளிலிருந்து, கீழ்க்கண்ட உணவுகளை மிதமாக உண்டுவர மாதாந்திரச் சுழற்சியில் உதிரப்போக்கு சீராக இருக்கும்.
1. முருங்கைக்கீரை 2. அகத்திக்கீரை 3. மணத்தக்காளி 4.பசலைக்கீரை 5. பிரண்டை , 6. ஆவாரம்பூ, 7. பாகற்காய், 8.கொத்துமல்லி, 9. சுண்டைக்காய், 10. முருங்கைக்காய், 11.பப்பாளிப்பழம் 12. அன்னாசிபழம், 13. பேரீச்சம்பழம் 14 அத்திப்பழம்
போன்றவற்றைத் தேவையான அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள 28 முதல் 30 நாட்களுக்குள் மாதவிலக்கு ஏற்பட்டு, சீரான அளவில் உதிரப்போக்கு காணப்படும்.
மாதவிலக்கை ஒழுங்குப்படுத்த கீழ்க்கண்ட கசாயம் செய்து சாப்பிடுங்கள்.
அசோகப்பட்டை - 20 கிராம்
மருதம் பட்டை - 10 கிராம்
ஆவாரம்பூ - 10 கிராம்
திரிகடுகு - 10 கிராம்
திரிபலா - 10 கிராம்
இவையனைத்தையும் தூள் செய்து, 1 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்கவைத்து, பாதியாக சுண்டவைத்து, காலை - மதியம் - இரவு சாப்பிட மாதவிலக்கு சீராக வரும்.
மாதவிடாய் அதிக இரத்தப்போக்கா...? கீழ்க்கண்ட குறிப்புக்களைப் பாதுகாத்து வைக்கவும்.
1. 3 கிராம் மாம்பருப்பைப் பாலில் அரைத்துச் சாப்பிட, அதிக உதிரப்போக்கு நீங்கும்.
2. 3 கிராம் நாவல் கொட்டையைப் பாலில் அரைத்துச் சாப்பிட உதிரம் கட்டுப்படும்.
3. மாதுளம் பழத்தோலை 5 கிராம் அளவில் அரைத்து, புளிப்பு மோரில் கலந்து சாப்பிட உதிரம் நிற்கும்.
4. கொய்யா துளிர் இலை - 1
மாதுளம் துளிர் இலை - 1
மாந்துளிர் இலை - 1
மூன்றையும் ஒன்றாய் அரைத்துப் புளிப்பு மோரில் சாப்பிட மாதவிலக்கில் அதிக இரத்தப்போக்கு நிற்கும்.
5. மாம்பூ, மாதுளம்பூ, வாழைப்பூ மூன்றையும் சம அளவு எடுத்து சிறிது உப்பு, புளி, மிளகாய், பூண்டு, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து அரைத்து, உணவுடன் துவையலாகச் சாப்பிட உதிரப்போக்கு நிற்கும்.
6. மாதவிடாய்க் கண்ட மூன்றாம் நாளில் வாழைப்பூ, பச்சை சுண்டைக்காய், வெண்டைக்காய் ஆகியவற்றைக் காரமில்லாமல் சேர்த்துக் கொண்டால் உதிரப்போக்கு நிற்கும்.
பெண்களின் வெள்ளைப்படுதல் நோய்களுக்கும் மேற்கண்ட அனைத்து உணவு முறைகளும் பொருந்தும்.
ஆகவே மங்கையரே ! உங்கள் நலம் உங்கள் கையில். சரியான உணவைத் தேர்ந்தெடுங்கள். அதுவே நோய்நீக்கும் மருந்து
ஆரோக்கிய குறிப்புகள் : பெண்களின் பெரும் சிக்கலுக்கு எளிய தீர்வுகள் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Simple solutions to women's biggest problem (Menstruation) - Health Tips in Tamil [ Health ]