ஆத்மா

அறிமுகம்

[ ஞானம் ]

soul - Introduction in Tamil

ஆத்மா | soul

விஞ்ஞானத்தின் பல புதிய கண்டுபிடிப்புகள், கட்டிடக் கலையின் சிறப்பைச் சுட்டிக்காட்டும், விண்ணை எட்டும் பல மாடிக்கட்டங்கள் என்று பல அதிசயங்கள் இன்றைய உலகில் மலிந்துள்ளன.

ஆத்மா

அறிமுகம்

விஞ்ஞானத்தின் பல புதிய கண்டுபிடிப்புகள், கட்டிடக் கலையின் சிறப்பைச் சுட்டிக்காட்டும், விண்ணை எட்டும் பல மாடிக்கட்டங்கள் என்று பல அதிசயங்கள் இன்றைய உலகில் மலிந்துள்ளன. ஆனால் இவை அனைத்தையும் விட மிக உயர்ந்த உலக மகா அதிசயமானது மனித மனம்தான். இந்த மனதின் விளையாட்டுதான் மனித சமுதாயத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதாரம் ஆகும். புதிதாக எந்த ஒன்றை உருவாக்குவதற்கும் முன்பாக முதலில் மனதில்தான் அது வடிவமைக்கப்படுகிறது. பின்னர்தான் அதுவே பஞ்சதத்துவங்களால், ஸ்தூலத்தில், விஞ்ஞானம், கலாசாரம், வியாபாரம் என பல வடிவங்களில் அது உருவெடுக்கிறது. உண்மையில் இக்காலத்தின் அறிவியல், பண்பாடு ஆகியவை மனித மனதில் எழுந்த எண்ணங்களின் நடைமுறை வடிவமே ஆகும். பஞ்ச தத்துவங்களைக் கொண்டு பல அதிசயங்களை உருவாக்கவல்ல சக்தி மிக்க மனம், நினைத்தால் எதை சாதிக்கமுடியாது!

 

இப்போது மனிதன், தான் உண்மையில் யார் என்பதை மறந்து விட்டதால் தான் இன்றைய உலகில் மிகுந்த குழப்பம், அச்சம் மற்றும் அமைதியின்மை காணப்படுகிறது. இதனால், மனம் ஓய்வின்றி, ஒரு குறிக்கோளின்றி, வீண் எண்ணங்களை உருவாக்கிய வண்ணம், நாள் முழுவதும் இங்குமங்குமாக அலைந்து திரிகின்றது. வாழ்க்கை என்பது என்ன என்பதை உணராத அறியாமை என்கிற தானே பின்னிக்கொண்ட வலையில், மனிதன் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான்.

 

இந்த வலையிலிருந்து விடுபட்டு மனிதன் எவ்வாறு ஒரு ஒப்பற்ற உயர்ந்த நிலையை அனுபவம் செய்யமுடியும் என்பதை நாம் இந்த கட்டுரையில் கூர்ந்து ஆராய்வோம்.

1. சூட்சுமமான ஆத்மாவிற்கும், ஸ்தூலமான தத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசம்.

 

2. ஆத்மாவின் அங்கங்கள்.

 

3. மிக உயர்ந்த எண்ணங்களை உருவாக்கி அவற்றை அனுபவம் செய்வதற்கான உபாயம்.

 

ஆத்மாவிற்கும், தத்துவத்திற்கும் (சரீரம்) இடையில் உள்ள வித்தியாசம்:

பல இக்கட்டான சூழ்நிலைகளில், அவற்றை சாதாரணமான முறையில் எதிர்கொள்ள இயலாத நேரத்தில், நாம் நமக்குள்ளேயே உள்ள உள் மனதிற்குள் நுழைந்து அவற்றின் தாத்பரியத்தை உணர எத்தனிக்கிறோம். அல்லது, சாஸ்திரங்கள் அல்லது பூஜை புனஸ்காரங்கள் ஆகியவற்றின் மூலமாக அவற்றை உணர்ந்து கொள்ள முயல்கின்றோம். இதனால், பற்பல எண்ணங்கள், உணர்ச்சிகள், பல தீர்மானங்கள் ஆகியவை இடைவிடாமல் நம்மை ஆக்கிரமித்து வருகின்றன. இவ்வாறு எண்ணங்களை வடிவமைப்பது, அவற்றை ஆராய்வது, அவை பற்றி தீர்மானம் செய்வது ஆகிய சக்திகள் சூட்சுமமானவை ஆகும். ஆனால் உண்மையானவை! (இவையாவும் வெவ்வேறு விதமாக அமைவதால், மனிதர்களின் குணங்களும் பல வேறுபாடுகளுடன் விளங்குகின்றன.) நாம் உணருகின்ற அனைத்தும் இரு வழிகளில் நம்மை வந்தடைகின்றன.

1. ஸ்தூல கர்மேந்திரியங்கள் மூலமாக.

2. சூட்சுமமான மேற்கூறிய சக்திகளின் பிரபாவத்தின் மூலமாக.

சரீரத்தின் (தத்துவத்தின்) மூலமாக நாம் காண்பது, கேட்பது, நுகர்வது சுவையை அறிவது, மற்றும் தொடு உணர்ச்சி ஆகியவை ஸ்தூலமானவை ஆகும். ஆனால், மனம், புத்தி, மற்றும் குணம் ஆகியவை சூட்சுமமான உணர்வு ஆகும்.

"தன் உணர்வு" என்பது "ஆத்மா" அதாவது உயிரையே குறிக்கிறது. "ஆத்மா" என்பது மிக சூட்சுமமானது. ஆத்மா அழிவற்றது. அதை துண்டிக்க முடியாது, எரிக்க முடியாது. அதை எந்தக் கருவியினாலும் அளக்க முடியாது. நான் என்று நாம் குறிப்பிடுவது இந்த ஸ்தூலமான உடலில் உறைந்துள்ள, கண்ணுக்குத் தெரியாத இந்த சூட்சுமமான ஆத்மாவைத்தான். இந்த ஆத்மாவை மனம் மற்றும் புத்தியால் மட்டுமே உணர முடியும்.

அழியாத சாசுவதமான ஆத்மாவைப் பற்றி சிந்தனை செய்வதற்கான சில வரிகள்:

நீ, நிலையான, அழிவற்ற ஆத்மா.

வண்ணங்களாலும், வடிவங்களாலும்...

மாறிக் கொண்டிருக்கும் உலகைப் பார்க்கும் கண்களே - ஜன்னல்கள்

நீ, மரணமில்லாதவன் வாழ்வை எலும்பு தசையாலான உடல் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பவன் நீ.

பறக்கக்கூடிய, ஆனால் கூட்டிலடைத்த... அந்தப்பறவை. எல்லைக்குள் நடமாடும் உடலுக்குள் நீ இருக்கின்றாய்!

ஆத்மா முதலில் உணர்வது, பகுத்தறிவது. புரிந்து கொள்வது ஆகிய சக்திகள் தன்னிடத்தில் இருப்பதை முதலில் உணர வேண்டும். அப்போதுதான் இந்த சக்திகளை சரிவர உபயோகிக்க முடியும். ஊனக் கண்களால் ஸ்தூலமானவற்றையே காணமுடியும். ஆனால், சூட்சுமமானவற்றைக் காண்பதற்கு இந்த தத்துவத்திற்கு அப்பாற்பட்ட போர்வை தேவை. இதை நாம் மூன்றாம் கண் என்கிறோம். இராஜயோகம், இந்த மூன்றாம் கண்ணை திறக்கச் செய்து, அதை துல்லியமாக்குவதால், நாம் ஆன்மாவை காண இயலுகிறது.மேலும் இதை நன்கு அறிந்துணர்ந்து பயிற்சி செய்து வரும்போது, நாம் இயற்கையான முறையில் காண முடிகிறது.

 

அணு மற்றும் ஆத்மா

உலகின் அனைத்து வஸ்துக்களும் மிக மிகத் துல்லியமான, அணுக்களின் ஆதாரத்தில்தான், உருவாகியுள்ளன என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உலகில் நாம் காணும் பல வகையான ஒளி, அதிர்வுகள் உடைய வஸ்துக்கள் யாவும் இந்த அணுக்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த அணு மிக சக்தி வாய்ந்தது. கிரேக்க மொழியில் அணு என்றால் துண்டிக்க முடியாத ஒன்று என்று பொருள். அவ்வாறே ஆத்மாவும் கண்ணுக்குத் தெரியாத மிகத் துல்லியமான, துண்டிக்க முடியாத ஒன்றாகும். இந்த அணுக்கள் இணைந்து உருவாகின்ற ஒன்று தான் இந்த உடலும் உடல் எவ்வளவு சிறந்ததாக இருந்தாலும், அதை இயக்கவல்லது இந்த மிகத் துல்லியமான சக்தி ஆத்மா தான். அணுக்கள் அடங்கிய வஸ்துக்கள் ஜடம். ஆனால், உடலுடன் இணைந்து செயல்படுகின்ற ஆத்மா ஜடம் அல்ல.

 

உடலைவிட்டுப் பிரிந்திருக்கும் அனுபவம்

நான் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து, என்னை ஒரு ஆத்மாவாக, நெற்றியில் வீற்றிருக்கும் ஒரு சக்திமிக்க புள்ளி வடிவமாக கருதத் தலைப்படுகிறேன். சில நிமிடங்களுக்குப் பிறகு. எனது தேகத்தின் அங்கங்களிலிருந்து எனது கவனம் விலகி வருவதை உணர்கின்றேன், ஒரு எல்லையற்ற சக்தி என் நெற்றியில் பாய்வதை உணர்கின்றேன். இது அதிகரித்து வருகிறது. பிறகு திடீரென்று, எந்த பளுவுமற்ற அசரீரியாக என்னை உணர்கின்றேன். சுற்றிலும் உள்ள ஸ்தூலப் பொருட்களிடமிருந்து நான் விடுபட்டுள்ளதை அனுபவம் செய்கிறேன். அவை யாவும் என்னைச் சூழ்ந்திருந்த போதிலும், நான் ஒரு பற்றற்ற சாட்சியாக அவற்றை நான் காண்கின்றேன். நான் ஒரு மிகச் சிறிய ஒளிப் புள்ளி; என்னைச் சூழ்ந்துள்ள நடவடிக்கைகள், உருவங்கள், பலவகை நிறங்கள், மற்றும் ஒலி ஆகியவற்றிலிருந்து விலகி, நான் வேறு அவை வேறு என்பதை தெளிவாக அனுபவம் செய்கிறேன்.

 

ஆத்மா, உடல், மற்றும் மூன்றாம் கண்

ஜீவாத்மா என்றால், சாசுவதமான ஆத்மா, இந்த அழியக் கூடிய உடலின் மூலமாக, வாழ்க்கையை அனுபவம் செய்துவரும் மனிதன் என்று பொருள். இந்த உடல் அழியக் கூடியது, தற்காலிகமானது. ஆனால், ஆத்மா அழிவற்றது. அதற்கு ஸ்தூல வரம்புகள் கிடையாது. இயக்குபவர் ஆத்மா, இயக்கப்படுவது உடல்.

ஓட்டுனர் மற்றும் ஒரு கார் என இவற்றை ஒப்பிடலாம். ஆத்மா உடல் என்கிற விடுதியில் தங்கியிருக்கும் ஆத்மா ஒரு விருந்தினர். உடல் ஒரு உடை, அதைத் தரித்திருக்கும் ஆத்மா ஒரு நடிகர். உடல் ஒரு இசைக் கருவி, அதை இயக்கும் ஆத்மா ஒரு இசைக் கலைஞர்.

 

நான் ஒரு கத்தியால் ஒரு தக்காளிப் பழத்தையும் வெட்டலாம், ஒரு மனிதனையும் வெட்டலாம். ஆனால் அந்தக் கத்தி எதையும் நிர்ணயம் செய்வதில்லை, அனுபவமும் செய்வதில்லை. அதை நீரில் கழுவி சுத்தப்படுத்தலாம். அந்தக் கத்தியைப் பிடித்திருக்கும் விரல்களைப் பாருங்கள். அவை எந்தக் காரியத்தையும் நிர்ணயம் செய்வதில்லை; அனுபவமும் செய்வதில்லை. விரல்களையும் நீரில் கழுவி சுத்தப்படுத்தலாம். ஒரு கத்தியைக் கருவி எனக்கருதுவது மிக எளிது. ஆனால் விரல்களையும், கரங்களையும் கருவி எனக்கருதுவது கடினமான ஒன்றாகும். நடப்பதற்கான கருவி கால், காண்பதற்கு கண்கள், செவிமடுப்பதற்கு செவி, பேசுவதற்கு வாய், இவ்வாறே, நுரையீரல், மூலமாக சுவாசிப்பது, நாக்கின் மூலமாக சுவைப்பது, இரத்த ஓட்டத்திற்கு இதயம், ஜீரணம் செய்ய குடல் போன்று பல அங்கங்கள் செயல்பட்டுவருகின்றன. இவ்வாறே மூளையும் எண்ணங்களை உருவாக்கவும், உடலின் மூலமாக பேசுவதற்கும், செயலாற்றுவதற்கும் அனுபவம் செய்வதற்கான ஒரு கருவியே ஆகும். ஆக உடலின் ஒவ்வொரு அங்கமும் கருவி என்றால், அவற்றை இயக்குவது எது? அது நான் என்கிற ஆத்மாதான். நான் என்றால் ஆத்மா, என்னுடையது என்பது என் அங்கங்களைக் குறிக்கின்றது. என்னுடைய கை என்னுடைய மூளை இத்தியாதி இத்தியாதி. ஆனால் நான் என்பது என்னுடையது என்று குறிப்பிடப்படுகின்ற அங்கங்களிலிருந்து தனிப்பட்டது ஆகும்.

 

உடலின் எந்தப் பகுதியில் ஆத்மா இருக்கின்றது?

ஸ்தூலம், சூட்சுமம், அழியக்கூடியது, அழிவற்றது. என இரு வேறுபட்ட குணங்களுடன் இருக்கின்ற ஜீவாத்மாவை அதாவது உடலில் உறைந்துள்ள ஆத்மாவை நீங்கள் இப்போது நன்கு அறியலாம். ஆத்மா மூன்று முக்கியமான செயல்களைச் செய்கின்றது;

1. உடலுக்கு உயிரூட்டி, அதைக் காப்பாற்றி வருகிறது.

2. ஆத்மாவின் தான் ஏற்றிருக்கும் பாகத்தை அனுபவம் செய்கிறது.

3. ஆத்மாவின் பல பழைய பிறவிகளின் கர்மக் கணக்குகளை அனுபவம் செய்கிறது.

 

இச்செயல்கள் யாவும் நரம்புமண்டலம் மற்றும் சுரப்பிகள் உடலை இயக்குவதன் மூலமாக நடைபெற்றுவருகின்றன. இதற்கான அங்கங்களான மூளை, தலாமஸ், பிட்யூட்டரி, பினியல் சுரப்பி ஆகிய முக்கியமானவை தலையில் மூளையின் ஒரு பிரத்யேகமான இடத்தில்தான், இடம்பெற்றுள்ளன. இந்த இடத்தை நாம் ஆத்மா (சூட்சுமமாய்) இருக்கும் இருக்கை என்று குறிப்பிடுகிறோம். இது மூன்றாம் கண் என்றும் கூறப்படுகிறது. இத்தகைய ஸ்தூலம் மற்றும் சூட்சுமத்திற்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவது சிந்திக்கும் சக்தியே ஆகும். பல தர்மங்கள், சித்தாந்தங்கள் இந்த மூன்றாம் கண் அதாவது மனக்கண் என்பதற்கு முக்கியத்துவம் தருகின்றன.

 

ஆத்மா முன்நெற்றியின் நடுவில் இரு புருவங்களுக்கு மத்தியில் இடம் பெற்றிருக்கிறது. இதனால்தான் இந்துக்கள், தம் நெற்றியின் மத்தியில் இரு புருவங்களுக்கு இடையில் சந்தனம் அல்லது குங்குமப் பொட்டு வைக்கும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். கிறிஸ்துவர்களும் இந்த இடத்தைத் தொட்டு தொழுகின்றனர். ஏதாவது ஒரு தவறு செய்யும்போதோ, அல்லது களைப்படையும்போதோ, நாம் இந்த இடத்தையே விரலால் குறிப்பிடுகிறோம். தவறு செய்வது உடல் அல்ல, ஆத்மாதான் என்பதை உள்ளுணர்வு உணர்த்துவதே இதன் காரணம் ஆகும். ஆழ்ந்து சிந்திக்கும் போதும் முன் நெற்றியில்தான் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

 

ஆத்மாவின் உருவம்

ஆழ்ந்த தியானத்தில் ஒருவர் மூழ்கியிருக்கும்போது, ஒரு சூட்சுமமான, மிக சக்தி பொருந்திய மிகச் சிறிய ஒளிப்புள்ளியாக ஆத்மாவை உணரலாம். ஆத்மாவைச் சுற்றி முட்டைவடிவில் ஒளிக்கோளத்தையும் (ஓஃரா) அனுபவம் செய்யலாம். உடலின் சூட்சுமமான பிரதிபிம்பம் அல்ல ஆத்மா. ஆத்ம சக்தி எண்ணங்கள், மற்றும் உணர்ச்சிகள் மூலமாக தன்னை வெளிப்படுத்துகிறது. ஆத்மாவுக்கு ஸ்தூல வரம்புகள் ஏதும் கிடையாது. ஸ்தூல உருவம் இல்லாத எந்த ஒன்றையும் அழிக்கமுடியாது.

 

ஆத்மாவின் அங்கங்கள்

உடலில் இருக்கும்போது, ஆத்மா மூன்று வகைகளில் செயல்படுகிறது. இம்மூன்றும் வேறுபட்டவையாக இருப்பினும், இவற்றின் மூல ஆதாரமான ஆத்மாதான் இவ்வாறு வித்தியாசமாக செயல்படுகிறது. மனம், புத்தி, மற்றும் சமஸ்காரங்கள்தான் (சுபாவம்) அவை.

ஆத்மாவின் எண்ணங்களை உருவாக்குவது மனம். மனம்தான் கற்பனை செய்கிறது: பலவிதமான எண்ணங்களை உருவாக்குகிறது. இந்த சிந்திக்கும் திறன்தான், உணர்ச்சிகள், ஆசைகள், மற்றும் அனுபவங்களுக்கு ஆதாரம் ஆகும். இந்த சிந்திக்கும் திறனின் மூலமாகவே, எண்ணங்களை வெகு தூரத்தில் உள்ள ஒரு இடத்திற்குச் செலுத்த இயலுகிறது; முன்காலத்திய அனுபவங்கள், மற்றும் உணர்வுகளை மீண்டும் உணர இயலுகிறது; அல்லது எதிர் காலத்தையும் உணர இயலுகிறது. பல வேறுபட்ட மனநிலைகளை மனம்தான் அனுபவம் செய்கிறது. மனம் சூட்சும மானது. இதை ஸ்தூலமான மூளை அல்லது இதயத்துடன் ஒப்பிட்டு குழப்பம் அடையக்கூடாது.

 

புத்தி, மனதில் உற்பத்தியாகும் எண்ணங்களை ஆராய்கிறது. ஒரு எண்ணத்தை செயல்படுத்துவதா அல்லது கூடாதா, செயல் படுத்தவேண்டுமானால், அதை எப்போது எங்கு எப்படி செயல்படுத்தவேண்டும் என்பதை நிர்ணயம் செய்யும் மிக உயர்ந்த திறன் உடையது இந்த புத்தி. ஞானம் தெளிவாக உணரப்படும் போது, புத்தி விசாலம் அடையும்போது, சரிவர நிர்ணயம் செய்வது புத்திக்கு மிக சகஜமானதாகிவிடுகிறது. எந்த ஒன்றையும் சரியா அல்லது தவறா என நிர்ணயம் செய்து, பிறகு புத்தி அதை செயலில் கொண்டுவருகிறது.

சமஸ்காரம் என்பது ஒருவருடைய இயற்கையான குணம், அல்லது உள்ளுணர்வு ஆகும். ஆத்மாவின் இப்போதைய மற்றும் பல முற்கால பல பிறவிகளில் செய்த செயல்களின் பதிவேடுதான் சமஸ்காரம் ஆகும். பழக்கவழக்கங்கள், திறமைகள், நம்பிக்கைகள், முன்னறிவு, குணநலன்களின் மூலமாக சமஸ்காரம் வெளிப்படுகிறது. ஒவ்வொரு அனுபவமும் ஒரு புதிய சமஸ்காரத்தை உருவாக்குகிறது அல்லது பழைய சமஸ்காரத்தை உறுதிப்படுத்துகிறது. சகல அனுபவங்களும் ஆத்மாவில் பதிவாகி வருகின்றன. ஒருவருடைய பலவீனம் அல்லது சிறப்பு பற்றி குறிப்பிடுகையில் ஆத்மாவின் ஒரு அங்கமான சமஸ்காரத்தையே குறிப்பிடுகிறோம். ஒவ்வொருவரின் தனித்தன்மைக்கும் ஆதாரம் இந்த சமஸ்காரம் தான்.


ஆன்மீக பணியில்!

தமிழர் நலம்

நன்றி...🙏

ஞானம் : ஆத்மா - அறிமுகம் [ ஞானம் ] | Wisdom : soul - Introduction in Tamil [ Wisdom ]