சிறப்பு இயற்கை மூலிகைகள்

சித்தா மருத்துவம்

[ சித்தா மருத்துவம் ]

Special natural herbs - Siddha medicine in Tamil

சிறப்பு இயற்கை மூலிகைகள் | Special natural herbs

இந்தியாவில் இருந்து மூலிகைச் செடிகளையும், மூலிகைகளையும், மூலிகை மருந்துகளையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், ஆண்டு தோறும் சுமார் ரூ. 15,000 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

சிறப்பு இயற்கை மூலிகைகள்

இந்தியாவில் இருந்து மூலிகைச் செடிகளையும், மூலிகைகளையும், மூலிகை மருந்துகளையும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம், ஆண்டு தோறும் சுமார் ரூ. 15,000 கோடி அளவுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கிறது. ஆண்டு தோறும் மூலிகைகளின் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கியமான சில மூலிகைகளின் பட்டியல் இதோ:

 

1. கண்வலிக்காய் விதை

சங்க இலக்கியங்களில் செங்காந்தள் என்று அழைக்கப்படும் கண்வலி மலரின் விதை, மருந்துக்குப் பயன்படுகிறது. ஆண்டு தோறும் சுமார் 200 டன் வரை விதைகளும், அதன் மருந்தும் ஏற்றுமதி ஆகின்றன. தமிழ் நாட்டில் சுமார் 2500 ஏக்கர் பரப்பளவில் இச்செடி பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்படும் முதல் ஆண்டில் செலவு போக 50,000 வரையும் பின்னர் ஏக்கருக்கு 1,00,000 வரையும் லாபம் கிடைக்கும் மூலிகை இது. இதில் இருந்து, புற்றுநோய் மற்றும் மூட்டு வலிக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

 

2. சோற்றுக் கற்றாழை

இதில் இருந்து எடுக்கப்படும் 'அலோய்ன்' என்ற மருந்து மலம் இளக்கியாகவும்; உடல் எடை குறைக்கவும், தோலுக்கு பளபளப்பு அளிக்கவும், தோலின் வறட்சி நீக்க வும்; புண்களை ஆற்றும் மருந்துகளிலும்; பெண்களின் நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

3. அமுக்கரா கிழங்கு

இதை அசுவகந்தா' என்றும் சொல்வார்கள். இது மிகச்சிறந்த உடல் தேற்றி, வலி நிவாரணி. நோய் எதிர்ப்புச் சக்தியை உண்டாக்கி, உடலை பலமாக்கும் தன்மை உடையது. பல்வேறு சித்த மருந்துகளின் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

4. கோலியஸ்

இதில் இருந்து எடுக்கப்படும் ஃபோர்ஸ்கோலின்' என்னும் மருந்து அதிக ரத்த அழுத்தம், கண்ணின் உள் அழுத்தம் அதிகரித்தல், இரைப்பு, இதய நோய்கள், சிலவகை புற்று நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

 

5. வேம்பு

வேம்பில் இருந்து 'நிம்பிடின்', 'அசாடிராக்டின்' என்ற இரண்டு மருந்துப் பொருள்கள் எடுக்கப்படுகிறது. இவை, புண்களை ஆற்றவும், தோல் நோய்களைக் குணப்படுத்தவும் வாந்தி, வாயில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

 

6. நிலவேம்பு

கசப்புகளின் அரசன் என்று அழைக்கப்படும் நிலவேம்பு . நல்ல உடல் தேற்றி. செரியாமை, சீதக்கழிச்சல், மஞ்சள் காமாலை, ரத்த சோகை இவற்றுக்குப் பயன்படுகிறது.

 

7. கீழாநெல்லி

சித்த மருத்துவத்தில் காலம் காலமாக கல்லீரல் நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் கீழாநெல்லி, ஹெபடைடிஸ் வகை நோய்களுக்குச் சிறந்த மருந்து. மேலும், நீரிழிவு, இரைப்பைப் புண்கள், தோல் நோய்களுக்கும் வழங்கப்படுகிறது. கீழாநெல்லியில் ஃபில்லாந்தின் என்ற மருந்துப் பொருள் உள்ளது.

 

8. நீர்பிரமி

இந்த மூலிகை, நரம்புகளுக்கு வலுசேர்க்கும். காக்கை வலிப்பு , மன நோய்கள், மூட்டு நோய்கள், ஞாபக மறதி, தொண்டை நோய்கள் போன்றவற்றைக் குணமாக்கும்.

 

9. வெள்ளை முசலி

இதில் சபோனின்' என்ற மருந்துப் பொருள் சத்து அதிகமாக உள்ளது. ஆண்மைக் குறைவு, மூட்டுவலி, உடல் பலவீனம் போன்றவற்றுக்குச் சிறந்தது.

 

10. பெருநெல்லி

மிக அதிக மருத்துவக் குணம் உள்ளது. வைட்டமின் - சி மிக அதிகமாகக் கொண்டுள்ள மருத்துவ மூலிகை இது. நூறு கிராம் நெல்லிக்கனியில் 700 மி.கி. வைட்டமின் - சி இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது கல்லீரல் நோய்களையும் குணப்படுத்தும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகளில் முக்கிய மூலிகையாகக் சேர்க்கப்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யக் கூடியது. முடி உதிர்தலைத் தடுக்கும் தைலங்கள், முகத்தில் பூசிக்கொள்ளும் 'பூச்சு'களிலும் (Cream) சேர்க்கப்படுகிறது. இம் மூலிகையில் இருந்து தயாரிக்கப்படும் நெல்லிக்காய் லேகியம், எய்ட்ஸுக்கு முக்கிய மருந்தாகும்.

 

11. காட்டுச் சீரகம்

இந்த மூலிகையில் உள்ள சொராலென்' மற்றும் ஐசோ சொராலென்' என்ற இரண்டு மருந்துப் பொருள்களும் வெண் குஷ்டம், சோரியாஸிஸ், தொழுநோய் போன்றவற்றுக்குச் சிறந்த மருந்தாகும். எய்ட்ஸ் நோய்க்கான மருந்து ஆராய்ச்சியில் இம்மருந்தும் உள்ளது.

 

12. கரிசாலை - கரிசலாங்கண்ணி

எக்லிப்டின்' என்ற மருந்துப் பொருள் உள்ள இம்மூலிகை, கல்லீரல் நோய்களுக்கும், உடலைத் தேற்றும் செயலுக்காகவும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தோல் நோய்களுக்கும், மண்ணீரல் நோய்களுக்கும், சுவாச நோய்களுக்கும், மூட்டு நோய்கள், கருப்பை நோய்கள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு, தலை முடி வளர்ச்சிக் காகவும், பொடுகில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

 

13. கருஞ்சீரகம்

இந்த மூலிகையில் இருந்து எடுக்கப்படும் விதை, பசியை அதிகமாக்கவும், ஜீரண சக்தியை அதிகமாக்கவும், தாய்ப்பால் பெருக்குவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள கார்வோன்', 'டி - லிமோனின்' என்ற சத்துப் பொருள்களும் சைமீன்' என்ற மருந்துப் பொருளும், மேலே கூறிய நோய்களைத் தீர்க்க பயன்படுகின்றன.

 

14. பூனைக்காலி

கொடி வகையைச் சேர்ந்த இந்த மூலிகையின் விதையே மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா முழுவதிலும் மற்றும் அந்தமான் - நிகோபார் தீவுகளிலும் விளைகிறது. இதன் விதையில் உள்ள 'எல் - டோபா' என்ற மருந்துப் பொருள் பார்க்கின்சன் நோய்' என்னும் நடுக்கவாத நோய்க்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. மேலும், நீரிழிவு, மாத விடாய்க் கோளாறுகள், விந்தணு குறைபாடு போன்ற நோய்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

 

15. குங்கிலியம்

குங்கிலிய மரத்தின் பட்டையைக் கீறி அதில் இருந்து வடியும் பிசின் போன்ற பொருளை மருந்தாகப் பயன்படுத்துவார்கள். அந்த பிசின்தான் குங்கிலியம் என்று அழைக்கப்படுகிறது. இது மணமூட்டியாகவும் நிறமூட்டியாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. இது மிகச்சிறந்த கொழுப்பைக் கரைக்கும் மருந்து என்பதால் உலகம் முழுவதும் இதன் தேவை அதிகமாக உள்ளது. மேலும், வயிற்றுப்புண், சிறுநீர் நோய்கள், பெண்கள் நோய்கள், வெள்ளைப்படுதல் இவற்றுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

 

16. இசப்புகோல்

இம்மூலிகை, குஜராத், பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மிகச் சிறந்த பணப் பயிர்களில் ஒன்று. - உலகிலேயே, இம்மூலிகை ஏற்றுமதியிலும் உற்பத்தியிலும் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. இதன் விதை, நாள்பட்ட மலச்சிக்கல் நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. மேலும், சிறுநீர் நோய்கள், மூலம், வயிற்றுப்புண் இவற்றுக்குச் சிறந்த மருந்தாகும்.

 

17. அதிமதுரம்

கொடி வகையைச் சேர்ந்த இந்த மூலிகையின் வேர், மருந்தாகப் பயன்படுகிறது. இதில் 'கிளைகிரிசின்' உள்பட பல்வேறு மருந்துப் பொருள்கள் உள்ளன. இந்த மூலிகை, தொண்டை நோய்கள், இருமல், வயிற்றுப்புண், வாய்ப்புண், சிறுநீர் நோய்கள், தசைவலி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையின் தேவை அதிகமாக இருந்தாலும், உள்நாட்டு உற்பத்தி குறைவாக இருக்கிறது. அதனால், பெருமளவு இறக்குமதி செய்யப்படுகிறது.

 

18. திப்பிலி

கொடி வகையைச் சேர்ந்த இந்த மூலிகையின் காய், மருந் தாகப் பயன்படுகிறது. இதில் பைப்பரின்', பிப்லார்டின்' என்ற மருந்துப் பொருள்கள் உள்ளன. இதன் காய்கள் முக வாதம், மூட்டுவலி, இடுப்புவலி, இருமல், சுவாச நோய் களுக்குப் பயன்படுகிறது. இதன் வேர், ஆண்மை பெருக்கியாகவும், பசியைத் தூண்டுவதற்காகவும், கல்லீரல் நோய்கள் மற்றும் கர்ப்பத்தைச் சிதைக்கவும் பயன்படுகிறது.

 

19. சிறுகுறிஞ்சான்

சர்க்கரைக் கொல்லி' என்றழைக்கப்படும் இந்த மூலிகை, கொடி வகையைச் சேர்ந்தது. நீரிழிவு, மூட்டு நோய்கள், மூச்சிரைப்பு, மலச்சிக்கல், மஞ்சள் காமாலை மற்றும் பூச்சிக் கடியால் ஏற்படும் ஒவ்வாமைக்குப் பயன்படுத்தப்படுகிறது.

 

20. வல்லாரை

நீர்நிலைகளிலும், நீர் தேங்கும் பகுதிகளிலும் வளரக் கூடிய மூலிகை. இந்த மூலிகை, தோல் நோய்கள், வயிற்றுப் போக்கு, மாதவிலக்குத் தடை, வயிற்றுப்புண், ஆகிய நோய் களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.

 

21. பாப்பி - அபின்

மத்திய அரசினாலும், மத்திய அரசின் நேரடிப் பார்வையிலும் மட்டுமே வளர்க்கப்பட வேண்டிய இந்த மூலிகை, பல்வேறு நோய்களைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டாலும், தவறான பயன்பாடுகளுக்காக அதிகக் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படுகிறது. இந்த மருந்து கழிச்சல் நோய்க்குப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, பிற மருத்துவ முறைகளால் குணமாக்க முடியாத கழிச்சல் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் இதுவே மருந்தாகிறது. எய்ட்ஸ் நோயின் பிற்பட்ட நிலையில் ஏற்படும் கழிச்சலுக்கு, இந்த மூலிகையைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் 'கபாட மாத்திரை' பயன்படுகிறது.

 

22. சென்னா

பொதுவாக இந்த மூலிகை, இந்திய சென்னா அல்லது திருநெல்வேலி சென்னா என்றே அழைக்கப்படுகிறது. இதன் இலைகளும், பிஞ்சுக் காய்களும் 'செனோசைட்ஸ்' என்னும் மருந்துச் சத்தை கொண்டுள்ளன. இம்மருந்து சிறந்த மலம் இளக்கியாக, பக்க விளைவுகளற்ற மருந்தாக எல்லா முறைகளிலும் உள்ள மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

 

23. சர்பகந்தா

நவீன மருத்துவர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மூலிகையின் வேர்ப்பட்டை, வலிப்பு நோய், அதிக ரத்த அழுத்தம், பாம்புக்கடி, மனநோய்க்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தூக்கத்தை உண்டாக்கும் தன்மையும் இதற்கு உண்டு.

 

24. தண்ணீர்விட்டான் கிழங்கு

கொடி வகையைச் சேர்ந்த இந்த மூலிகையின் கிழங்கு, மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. வடமொழியில் சதாவரி என்றழைக்கப்படும் இந்த மூலிகை, மிகச்சிறந்த உடல் தேற்றும் தன்மை உடையது. இதற்கு தாய்ப் பாலைப் பெருக் கும் தன்மையும் அதிகமாக உள்ளது. இது, காசநோயால் ஏற்படும் உடல் மெலிவை குணமாக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் எடையை அதிகரிக்கவும், விந்தணு உற்பத்தி மற்றும் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது முக்கிய மருந்தாகப் பயன்படுகிறது.

 

25. சீந்தில்

அமிர்தவல்லி என்று தமிழிலும், குடுச்சி, அமிர்தா என்று வடமொழியிலும் அழைக்கப்படும் இந்த மூலிகை ஒரு மிகச் சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மருந்தாகும். துவர்ப்பும் கசப்பும் சேர்ந்த சுவை உடைய இம்மூலிகை, இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் அதிகமாக விளைகிறது. கார்டிபால், டைனோஸ்போரிடின்' போன்ற மருந்துப் பொருள்கள் இதில் உள்ளன. ஏராளமாக உலர்ந்த மூலிகையாகவும், மூலிகைச் சத்து பிரித்து எடுக்கப்பட்டும் அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த மூலிகை தோல் நோய்களையும், ஜுரம், உடல் பலவீனம், நீரிழிவு, மஞ்சள் காமாலை, மூலம் இவற்றுக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

மேற்கூறிய மூலிகைகள் தவிர, ஏராளமான பிற மூலிகைகளின் தேவையும் பெருகிக்கொண்டே இருக்கிறது. பல்வேறு முன்னணி நிறுவனங்கள் - நல்ல விவசாய முறைகள் மூலம் வளர்க்கப்பட்டு, முறையாக நிழலில் உலர்த்தி, பூஞ்சைகளில் இருந்து பாதுகாக்கப்பட்டு, முறையாகப் பதப்படுத்தப்பட்ட மூலிகைகளுக்கு நல்ல விலை தருகின்றன. இவ்வாறு வாங்கும் மூலிகைகளை மருந்துகள், வாசனைப் பொருள்கள், சோப்புகள், அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றன.

 

அழிந்து வரும் அரிய மூலிகைகள் :

கல்தாமரை, பழுதார வள்ளி, பொன் குறண்டி, அழுகண்ணி, தொழுகண்ணி ,வெண்தாமரை போன்ற பல அரிய மூலிகை கள், பயிரிட்டு வளர்த்து மருந்துகளாகப் பயன்படுத்தாமல் மலைகளிலும், காடுகளிலும் சென்று அவற்றைச் சேகரிக்க வேண்டி இருப்பதால், அவை வெகுவேகமாக அழிந்து வருகின்றன. இதே காரணங்களால் பல்வேறு மூலிகைகள் அழிந்தும் விட்டன. அழிந்து வரும் மூலிகைகளைப் பாதுகாப்பதில், நவீன அறிவியல் வளர்ச்சியில், திசு வளர்ப்பு முறை (TISSUE CULTURE) பெரும் பங்கு வகிக்கிறது.

விதையில் இருந்து மீண்டும் விதையை உற்பத்தி செய்து, மூலிகைத் தாவரங்களை வளர்க்கத் தேவைப்படும் காலத்தைச் சேமிப்பதோடு, எண்ணற்ற மூலிகைகளை ஒரே நேரத்தில் வளர்க்க இந்த முறை உதவுகிறது. திசு வளர்ப்பு முறையில், ஒரு மூலிகையின் இலை, குருத்து, தண்டு, வேர் போன்ற எந்தச் சிறு பகுதியில் இருந்தும் பல்வேறு எண்ணிக்கையில் மூலிகை நாற்றுகளை உருவாக்கி வளர்க்க முடியும். இத்தகைய நாற்றுகள், எந்தச் சூழலிலும் நன்கு வளரும் தன்மை வாய்ந்தவை.

 

அழகுக்குப் பயன்படும் மூலிகைகள் :

1. முகப்பொலிவு

அ. ஆவாரம் பூவைப் பொடித்துப் பாலில் கலந்து முகத்தில் பூசிக் கழுவ வேண்டும்.

ஆ. சோற்றுக் கற்றாழை சோறு, சந்தனம் மூன்றையும் சேர்த்து முகத்தில் பூசிக் கழுவலாம்.

இ. மஞ்சள், திருநீற்றுப் பச்சிலை, சந்தனம் சேர்த்து அரைத்து முகத்தில் பூசிக் குளிக்கலாம்.

ஈ. வெந்தயத்தைத் தயிரோடு அரைத்து பூசிக் குளிக்க முகம் பொலிவு பெறும்.

 

2. மங்கு

அ. திருநீற்றுப் பச்சிலையைத் தேனில் அரைத்துப் பூசி, பிறகு முகம் கழுவ வேண்டும்.

ஆ. சோற்றுக் கற்றாழையின் சதைப் பகுதியை நேரடியாகப் பூசலாம்.

இ. பாதாம் பருப்பையும் குங்குமப்பூவையும் தேனில் அரைத்துப் பூசி முகம் கழுவ வேண்டும்.

 

3. முகப்பரு

அ. துத்தி வேர் பட்டையைப் பாலில் அரைத்து முகத்தில் பூசிக் கழுவலாம்.

ஆ. மாசிக்காயைப் பாலில் அரைத்துப் பூசலாம்.

இ. திருநீற்றுப் பச்சிலையை அரைத்துப் பூசலாம்.

ஈ. சங்கு, சந்தனம் அரைத்து, இரண்டையும் சேர்த்து சாதாரண தோல் உடையவர்கள் பன்னீரிலும்; எண்ணெய்ப் பசையின் தோல் உடையவர்கள் எலுமிச்சம் பழச்சாற்றிலும்; வறட்சியான தோல் உடையவர்கள் பாலிலும் பூச வேண்டும்.

 

4. பொடுகு

அ. பொடுதலை இலைகளை அரைத்துப் பசையாக்கி, தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.

ஆ. வெண்மிளகை அரைத்துப் பாலில் கலந்து, தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

இ. புதினா, வேப்பிலை, துளசி இவற்றை அரைத்துத் தலையில் பூசிக் குளிக்கலாம்.

ஈ. சீத்தாப்பழக் கொட்டையை அரைத்துத் தலையில் பூசிக் குளிக்கலாம்.

 

5. முடி உதிரல்

அ. கரிசாலை இலைச்சாற்றை, தேங்காய் எண்ணெய்யோடு சேர்த்துக் காய்ச்சி, ஆறிய பிறகு பூசிக் குளிக்கலாம்.

ஆ. தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலை, முருங்கை இலை போட்டுக் காய்ச்சி ஆற வைத்துப் பூசிக் குளிக்கலாம்.

இ. செம்பருத்திப்பூ, கரிசாலை இலை, வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.

 

6. புழுவெட்டு

அ. ஆற்றுத்தும்மட்டி, கண்டங்கத்திரி இவற்றில் ஒன்றைத் தேய்த்துக் குளிக்கலாம்.

ஆ. வேப்பிலை, மஞ்சள், சீமையகத்தி அரைத்துப் பூசிக் குளிக்கலாம்.

 

7. தேமல்

அ. துளசி இலை, படிகாரம் அரைத்துப் பூசிக் குளிக்கலாம்.

ஆ. பூவரசங்காய் பாலில் அரைத்துப் பூசலாம்.

இ. சீமையகத்தி, மஞ்சள் அரைத்துப் பூசலாம்.

ஈ. குப்பைமேனி இலையை அரைத்துப் பூசிக் குளிக்கலாம்.

 

குறிப்பு : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வனத்துறை அலுவலகங்களில், மூலிகைகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். ஒருசில அலுவலகங்களில் மூலிகைகளும் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதுதவிர, அரசினர் மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், தாலுகா அல்லாத அரசு மருத்துவமனைகள், வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவப் பிரிவில், எல்லா மூலிகை மருந்துகளும் மூலிகைகளும் கிடைக்கும். வீடுகளில் மூலிகைச் செடிகளை வளர்க்க விரும்புகிறவர்கள், மேற்கண்ட இடங்களில் இருந்து மூலிகை நாற்றுகளையும் விதைகளையும் வாங்கிக் கொள்ளலாம்.

 

சித்தா மருத்துவம் : சிறப்பு இயற்கை மூலிகைகள் - சித்தா மருத்துவம் [ ஆரோக்கியம் ] | Siddha medicine : Special natural herbs - Siddha medicine in Tamil [ Health ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்