ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி

[ சாய்பாபா ]

Sri Sai Nath Sthavan Manjari - in Tamil



எழுது: சாமி | தேதி : 29-01-2026 08:13 pm
ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி | Sri Sai Nath Sthavan Manjari

அதிகம் பாடப்படும், பக்தர்கள் அறிந்த version

ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி

1. ஸ்ரீ கணேசனை வணங்குகிறேன். எல்லாவற்றுக்கும் ஆதாரமானவனே, மயூரேஸ்வரா,எல்லாவற்றுக்கும் சாக்ஷியாக விளங்குபவனே, கௌரியின் மகனே. ஓ எண்ணங்களுக்கு எட்டாதவனே, பெருத்த வயிறனே, ஸ்ரீ கணபதி என்னைக் காப்பாற்று.

2. நீ எல்லா கணங்களுக்கும் முதல்வனும் தலைவனும் ஆவாய்.எனவே உன்னைக் கணேசன் என்பர்.எல்லா சாஸ்திரங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவன் நீ.

3.ஓ சாரதா வாக்கின் தெய்வமே,நீ ஒளி வடிவமாக பிறக்கும் பதங்களின் தலைவி.உன்னுடைய இருப்பினால் தான் உலகத்தில் எல்லா நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

4.நீ எழுத்தாளர்களின் தேவதை.நீ எப்போதும் தேசத்தின் அணிகலனாக விளங்குகிறாய்..உனது எல்லையற்ற சக்தி எல்லாவாற்றிலும் விளங்குகிறது.ஓ ஜகதம்பா உன்னை வனங்குகிறேன்.

5.ஓ பூர்ணப்பிரம்மா(தெய்வீகதோற்றத்தின் மிக வுயர்ந்த இறுதி நிலையில் உள்ளவனே)மஹான்களுக்குப் பிரியமானவனே,குணங்களோடு கூடிய உருவம் எடுத்தவனே, பண்டரீராயா,கருணைக்கடலே,எல்லையற்ற கருணை உடையவனே,பாண்டுரங்கா.ஓ நரஹரி

6. நீ எல்லாவற்றின் ஸூத்ரதாரி (எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் கயிற்றைத் தாங்கியவன்) நீ ஜகமெங்கும் வியாபித்துள்ளாய்.எல்லா சாஸ்திரங்களும் உன்னுடைய உண்மையான உருவத்தை பற்றி ஆராய்ச்சி செய்கின்றன.

7. வெறும் புத்தக அறிவு மட்டுமே பெற்றவர்களுக்கு நீ காணப்படுவதில்லை.ஓ சக்ரபாணி, அத்தகைய அறிவிலிகள் யாவரும் வெறும் வாதப்ரதி வாதங்களிலேயே உழல்கிறார்கள்.

8. மஹான்கள் மட்டுமே உன்னை அறிகிறார்கள்.மற்றவர்கள் (குழப்பத்தில் மூழ்கியவர்களாக ) மயங்கியவர்களாக உள்ளார்கள். உனக்கு பக்தியோடு கூடிய எனது நமஸ்காரத்தை சமர்ப்பிக்கிறேன்.

9.ஓ ஐந்து முகங்களுடையவனே,சங்கரா மனித மண்டையோடுகளாலான மாலையணிந்தவனே,நீல நிறமுடைய கழுத்தனே திகம்பரா,ஓங்காரரூபா,பசுபதி. 10.எவருடைய உதடுகளில் உனது நாமம் விளங்குகிறதோ அவர்களது துன்பங்கள் உடனடியாக விலகி விடும். ஓ தூர்ஜடீ.உன் நாமத்தின் மஹிமை அத்தகையது.

11.உனது பாதங்களை வணங்கி நான் இந்த துதியை எழுத முற்படுகிறேன்.நீலகண்டா.இதற்கு உனது முழுமையான உதவியை எல்லாவிதத்திலும் எனக்கு அளிப்பாய்.

12. இப்போது அத்ரி மஹரிஷியின் குமாரனான தத்தரையும் லஷ்மிதேவியின் குலதெய்வமான விஷ்ணுவையும் ஸ்ரீ துகாராம் முதலான எல்லா மஹான்களையும் பின்னர் பக்தர்கள் அனைவரையும் வணங்குகிறேன்.

13. சாயி நாதா உமக்கு வெற்றியுண்டாகுக.பாவிகளை உய்விப்பவரே,அருள் நிறைந்தவரே இப்போது உமது பாதத்தில் எனது சிரத்தை வைக்கின்றேன்.எனக்கு பயமற்ற நிலையை(உமது பாதுகாப்பை) கொடும்.

14. நீ பூரணமான ப்ரஹ்மஸ்வரூபம்,சுகங்களின் இருப்பிடம்.மனிதர்களிற்

சிறந்தவனே, நீயே விஷ்ணு, எவருடைய பாதி உடலாக உமா தேவி இருக்கிறாளோ அந்தக் காமனை எரித்த சிவனும் நீயே.

15. நீ மனித உருவெடுத்த பரமேஸ்வரன்.நீ ஞான வானத்தின் கதிரவன்.நீ கருணைக் கடல்,நீ பிறப்பிறப்பாகிய பிணிக்கு மருந்து.

16. நீ ஏழை எளியவர்களின் சிந்தாமணி.நீ உனது பக்தர்களைத் தூய்மை படுத்தும் கங்கா நதி.சம்சாரக் கடலில் மூழ்குபவர்களுக்கு நீ ஓடம்.அஞ்சுபவர்களுக்கு புகலிடம் நீ.

17. இந்த பிரபஞ்சத்தின் மூலகாரணமாக எந்த பரிசுத்தமான சைதன்யம் விளங்குகிறதோ.ஓ கருணைக்கடலே அது நீயே.இந்த பிரபஞ்சம் உனது ஒரு விளையாட்டு.

18. நீர் பிறவியற்றவர்;உமக்கு இறப்பும் இல்லை.நன்கு ஆழ்ந்து விசாரித்து பார்த்து இறுதியில் அடையப்பட்ட முடிவு இது.

19. பிறப்பு இறப்பு இவையிரண்டும் அஞ்ஞானத்தினால் தோன்றியவை.ஓ மஹாராஜா நீர் அவை இரண்டினின்றும் கொஞ்சம் கூட பற்றற்றவராக உள்ளீர்.

20. நீர் ஓடையில் வெளிப்பட்டது என்றால் அது அங்கேயே தோன்றியதாக ஆகுமா?முன்பே நீர் நிரம்ப உள்ளது. உள்ளேயிருந்து வெளியே வந்தது.அவ்வளவே.

21. படுகையில் நீர் வந்த போது அதற்கு ஓடை என்று பெயர் ஏற்பட்டது.நீரில்லாவிடில் அது வெறும் படுகையே.

22. பெருகுவது, வற்றி விடுவது பற்றி நீர் சற்றும் பொருட்படுத்துவதே இல்லை.நீர் படுகைக்கு கொஞ்சமேனும் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

23. படுகை மட்டும் நீர் நிறைந்துள்ள போது பெருமை கொள்கிறது.நீர் வற்றும் போது மிகவும் வருந்தும் நிலையை அடைகிறது.

24. மனித உடல் நீர் படுகை போன்றது.சுத்த சைதன்யமே பரிசுத்தமான நீர் ஊற்று.நீர் படுகைகள் எண்ணற்றவை.இருப்பினும் நீர் மட்டும் வேறுபடுவதில்லை.

25. பிறப்பற்றவரான அருட் கடலே, உமது வஜ்ராயுதம் என் அஞ்ஞானமாகிய மலையை அழிக்கட்டும் என்று வேண்டுகிறேன்

26. இத்தகைய எண்ணற்ற தோற்றங்கள் இதுவரை பூமியில் ஏற்பட்டுள்ளன. இப்போதும் இருந்து வருகின்றன; காலக்கிரமத்தில் இனிமேலும் ஏற்படப் போகின்றன.

27. அந்த ஒவ்வொரு தோற்றத்துக்கும் ஒரு தனிப் பெயரும் குலமும் கிடைக்கிறது.அதன் மூலம் உலகத்தில் அவற்றை பிரித்தறிகிறார்கள்.

28. சைதன்யத்தை பொறுத்த வரை நான் நீ என்று கூறுவது பொருந்தாது.இருமை என்பதே எங்கு இருப்பதற்கு இடமில்லையோ அதே உண்மையில் சைதன்யம் எனப்படுவது.

29. மேலும் உண்மையில் சைதன்யம் பிரபஞ்ச முழுதையும் வியாபித்து உள்ளது.பின் நான் நீ என்ற பாவனை எவ்வாறு பொருந்தும். 

30. மேகத்திலிருந்து பிறக்கும் நீர் ஒரே தன்மையானது. பூமியின் மேல் இறங்கிய பிறகு அதற்கு பற்பல வேறுபாடுகள் ஏற்படுகின்றன

31. கோதாவரி நதிப்படுகையில் விழுந்த நீர் கோதாவரி என்று அழைக்கப்படுகிறது.கிணற்றில் விழுந்த நீருக்கு அத்தகைய மேன்மை இல்லை.

32. மஹான்களின் உருவமாகிய கோதாவரியில் உள்ள நீர் நீங்கள்.நாங்கள் குளம்,குட்டை,கிணறு போன்றவர்கள் நம்மிடையே உள்ள வேறுபாடு இதுவே.

33. எங்களுடைய வாழ்வின் உண்மையான குறிக்கோளை அடைய நாங்கள் உங்களிடம் வர வேண்டும்.எப்போதும் கரங்கூப்பி உங்களைச் சரணடைய வேண்டும்.ஏனெனில் நீங்கள் புனிதத்தின் உறைவிடம்.

34. கோதாவரி நதிக்கு பாத்திரத்தினால் (படுகையினால்) புனிதம் ஏற்பட்டது.வெறும்

நீரை மட்டுமே நோக்குவோமாகில் அது எங்கும் ஒரே விதமானது.

35. கோதாவரி நதிப் படுகை புனிதம் வாய்ந்ததென்பது தீர்மானிக்கப்பட்ட

உண்மை. அதனை தீர்மானிப்பதற்கு பூமியின் நல்ல தன்மை,தீய தன்மை ஆகியவையே உதவி செய்கின்றதென்பதை நோக்கவும்.

36. மேகத்தினின்று வந்த நீரின் புனிதத்தை எந்தப் பூமிப்பாகம் மாற்றவில்லையோ அந்தப் பாகத்தை சாஸ்திரமறிந்தவர்கள் கோதா என்று அழைத்தார்கள்.

37. மற்ற இடங்களில் விழுந்த நீர் அந்தந்த மண்ணின் குணத்தை ஏற்றுக் கொண்டது.தோற்றத்தின் போது இனிமையாய் இருந்த நீர் அசுத்தமாகவும்,கசப்பாகவும், உப்பாகவும் ஆயிற்று.

38. அவ்வாறே ஓ குருவரா,எந்த சரீரத்தில் ஆறு வைரிகளின் மாசு ஏற்படவில்லையோ அந்த புனிதமான சரீரத்துக்கு மஹான் என்ற பெயர் பொருந்தும்.

39. எனவே மேன்மையும்,புனிதமும் பொருந்திய மஹான்களை அந்த கோதாவரி என்றே கூறுகிறேன்.எல்லா ஜீவர்களிலும் உங்களது தகுதி மிகச் சிறந்ததாக உள்ளது.

40. பிரபஞ்சத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே கோதாவரி ஏற்பட்டு உள்ளது.நீரும்

முழுமையாக நிரம்பி உள்ளது.இன்று வரை அதற்குக் குறைவு ஏற்படவில்லை. 41. ராவணனுடைய வைரி கோதாவரியின் கரைக்கு வந்த போது இருந்த அதே நீர் இன்று வரை எவ்வாறு இருக்கும் என்று பாருங்கள்.

42. படுகை மட்டும் அதே;நீர் கடலை அடைந்தது நீர் படுகையின் புனிதத்தன்மை

மட்டும் இன்றுவரை நிரந்தரமாக உள்ளது.

43. ஒவ்வொரு ஆண்டும் பழைய நீர் சென்று புதிய நீர் படுகையின் உள்ளே வருகிறது.பாபா அதே நியாயம் உங்களுக்கும் பொருந்தும்.

44. ஒவ்வொரு நூற்றாண்டும் ஓர் ஆண்டைப் போலவும்,அந்த நூற்றாண்டில் தோன்றிய சாதுக்கள் நீரைப் போலவும் அவர்களுள் மிகப் பெரிய மஹான்கள் அலைகள் போலவும் உவமிக்கப்படுகிறார்கள்.

45. இந்த மஹான்களின் உருவமாகிய கோதாவரியில் முதல் ஆண்டில் ஸனத ஸனக ஸநந்தனர் முதலியோரின் வெள்ளம் ஏற்பட்டது.

46. பின்னர் நாரதர்,தும்புரு,ப்ரஹ்லாதன்,பலிராஜா,சபரீ,அங்கதன்,வாயு குமாரன், விதுரர், கோபர்களும், கோபிகைகளும் தோன்றினர்.
47. இவ்வாறு,இன்று வரை ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒன்றன் பின் ஒன்றாக (மஹான்களின்) வெள்ளம் ஏற்பட்டு வந்துள்ளது..நான் அதனை வர்ணிப்பதற்கு இயலாதவனாக உள்ளேன்.

48. ஓ சாயி நாதா இந்த நிகழும் நூற்றாண்டில் மஹான்களின் தோற்றமாகிய கோதாவரியில் நிச்சயமாக உமது வெள்ளம் வந்துள்ளது.

49. எனவே உமது திவ்ய சரணாரவிந்தங்களுக்கு வந்தனை செய்கிறேன்.மஹாராஜா, எனது துர்குணங்களைக் கொஞ்சம் கூட பொருட்படுத்த வேண்டாம்

50. நான் ஏழை, எளியவன், அஞ்ஞானி,பாவிகளுக்குள்ளே தலை சிறந்தவன்,எல்லா துர்குணங்களும் பொருந்தியவன்.ஆனால் என்னை நிராகரிக்க வேண்டாம்.

51. பரிசக்கல் இரும்பினுடைய குறைகளைப் பொருட்படுத்துவதில்லை. கோதாவரி நதி தன்னையடைந்த கிராமத்து சிறு ஓடைகளைத் திருப்பி அனுப்புவதில்லை.

52. உங்களுடைய அருள் நோக்கை செலுத்தி என்னிடமுள்ள எல்லாத் தீய குணங்களையும் விரைவாக அழித்து விடுங்கள்.அடியேனுடைய வேண்டுதல் இதுவே.

53. பரிசக்கல்லின் தொடர்பு ஏற்பட்டும் இரும்பின் இரும்புத்தன்மை அழிக்கப்படா விட்டால் குருவரா, அது பரிசக்கல்லின் பெருமைக்கு இழுக்கு.

54. என்னைப் பாவியாகவே இருக்கும்படி வைக்காதீர்,தாங்கள் தாழ்வும் அடைய வேண்டாம்.நீங்கள் பரிசக்கல்.நான் இரும்பு.எனது அவமானம் உமதே என்பதைப் பாருங்கள்.

55. குழந்தை எப்போதும் தவறுகள் செய்கிறது.ஆனால் தாய் சினம் கொள்வதில்லை.இதை நினைவிற் கொண்டு எனக்கு உங்கள் அருளாகிய பிரசாதத்தை அளிப்பீராக.

56. ஓ சத்குரு சாயிநாதா,நீயே எனது கற்பகத் தரு.சம்சார சாகரத்தைக் கடக்க உதவும் சிறந்த படகு நிச்சயமாக நீயே.

57. நீ காமதேனு, சிந்தாமனி,நீ ஞான வானத்தின் கதிரவன். நீ நற்குணங்களின் பெரும் சுரங்கம்.ஸ்வர்க்கத்திற்குச் செல்ல உதவும் படிக்கல்லும் நீயே.

58. ஓ புண்ணியங்களின் இருப்பிடமே,சுத்திகரிப்பவரில் சிறந்தவரே,ஓ சாந்தமூர்த்தி,ஆனந்தத்தின் உறைவிடமே,ப்ரம்மஸ்வரூபா,பரிபூரணனே, வேறுபாடு அற்றவனே,ஞானக் கடலே.

59. ஓ ஞானத்தின் உருவமே,மனிதர்களில் சிறந்தவனே,பொறுமை,சாந்தி ஆகியவற்றின் உறைவிடமே,பக்தர்களின் இளைப்பாருமிடமே.என்பால் மகிழ்வு நிறைந்த உன் அருள் நோக்கைச் செலுத்து.

60. சத்குரு மச்சீந்திரரும் நீயே,மஹாத்மா ஜாலந்தரரும் நீயே.நீயே

நிவிருத்தினாதரும்,ஞானேஸ்வரரும் ஆவாய்.கபீர்.ஷேக் மஹம்மது, யேசு நாதர் ஆகியோரும் நீயே.

61. நீயே போதலாவும்,சாவதாமாளியும், உண்மையில் ராமதாசரும் நீயே.சாயிநாதா நீயே துகாராம்,சகாராம் மஹாராஜும் மாணிக்கப்பிரபுவும் நீயே.
62. உமது இந்த அவதாரம் உண்மையில் அறியமுடியாத விதமாக உள்ளது.தங்களுடைய ஜாதியைப் பற்றி எவரும் அறிந்து கொள்ளும் படித் தாங்கள் விடவில்லை.

63. சிலர் உங்களை முஸ்லிம் என்கின்றனர் சிலர் அந்தனர் என்கின்றனர்.கிருஷ்ணனுக்குச் சமமான லீலைகளைத் தாங்கள் செய்கிறீர்கள்.

64. ஸ்ரீ கிருஷ்ணனைப் பார்த்து பலரும் பலவித மாகப் பேசினர்.சிலர் யது குலத்து அரிய ஆபரணம் என்றனர்.சிலர் இடையன் என்றனர்.

65. யசோதை மென்மையான குழந்தை என்றாள்.கம்ஸன் மஹாகாலன் என்றான்.உத்தவர் அன்பு வடிவானவன் என்றார்.அர்ஜுனன் பூர்ணஞானி என்றான்.

66. அவ்வாறே தங்களைப் பற்றியும் தத்தமது மனத்தில் நிச்சயப்படுத்தியதற்குத் தக்கபடியவரவர்கள் அழைக்கின்றனர்.

67. மசூதி உங்களது இருப்பிடம்.உமது காதுகள் குத்தியிருக்கப் படவில்லை. உங்களது பாதியா சடங்கையும் பார்த்து விட்டு உங்களை முஸ்லிம் என்று கூறுவது பொருத்தமாகவே உள்ளது.

68. அவ்வாறே,கருணை வடிவான உமது அக்னி வழிபாட்டைப் பார்த்து,நீங்கள் ஹிந்து தான் என்று எங்கள் மனத்தில் நிச்சயம் ஏற்பட்டது

69. ஆனால் வெளி விவகாரங்களில் உள்ள இத்தகைய வேறுபாடுகளைத் தர்க்கவாதிகளே விரும்புவார்கள். உண்மையான ஞானத்தில் ஆர்வமுள்ள பக்தர்கள் அவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள்.

70. நீங்கள் பிரஹ்மத்தின் நிலையில் விளங்குகிறீர்கள். உங்களுக்கு ஜாதியும்,கோத்திரமும் இல்லை.நீர் எல்லோர்க்கும் குருமூர்த்தியாயும்,ஆதிகாரணமாகவும் உள்ளீர்.

71. முஸ்லிம் இந்துக்களிடையே பகைமை ஏற்பட்டதால் அவர்களை ஒற்றுமைபடுத்துவதற்காக மசீது அக்னி இரண்டையும் ஏற்று பக்தர்களுக்கு உங்கள் லீலையைக் காட்டினீர்கள்.

72. தாங்கள் ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர். நீங்கள் பிரஹ்மமே.உண்மையில் நீங்கள் அது(தத்வமஸி).நீங்கள் உண்மையில் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவர்.

73. உங்கள் முன்னால் எவ்வளவோ தர்க்க விதர்க்கங்கள் நிகழ்ந்தன.அங்கே எனது சாதாரண மொழிகள் எப்படி ஏற்படும்?

74. ஆனால் உங்களைப் பார்க்கும் போது என்னால் மௌனமாக இருக்க முடியவில்லை.துதி செய்வதற்கு உலக வழக்கில் பதங்களே சாதனமாக உள்ளன. 75.எனவே உங்கள் அருளாசியுடன் பதங்களால் என்னென்ன வர்ணனைகள் ஏற்படுகின்றனவோ அவற்றை எப்போதும் செய்வேன்.

76. மஹான்களின் தகுதி கடவுளின் தகுதியைவிட வேறுபட்டதும் மிகவுயர்ந்ததும் ஆகும்.ஸாதுக்களின் அருகில் 'எனது, உனது' என்ற வேறுபாடுகளுக்குச் சிறிதேனும் இடமில்லை.

77. ஹிரண்யகசிபுவுக்கும் ராவணனுக்கும் கடவுளை வெறுத்ததன் மூலம் மரணம் ஏற்பட்டது.இத்தகைய சம்பவம் ஒன்று கூட மஹான்களின் கரத்தால் நிகழவில்லை.

78. அரசன் கோபிசந்தன் ஜாலந்தரரைச் சாணக் குவியலில் புதைத்தான். ஆனால் அந்த மஹான் மனம் வருந்தவில்லை.

79. மாறாக அந்த அரசனைச் சம்சாரச் சுழலிலிருந்து விடுவித்து அமரனாகச் செய்துவிட்டார். இத்தகைய மஹான் களின் மேன்மையை எவ்வாறு வர்ணிப்பேன்?

80. மஹான்கள் சூர்யனைப் போன்றவர்கள்.அவர்களின் கருணை ஒளிமயமானது.மஹான்கள் சுகம் தரும் சந்திரனைப்

போன்றவர்கள். அவர்களுடைய அருள் சந்திரனுடைய ஒளி போன்றது.

81. மஹான்கள் இதமளிக்கும் கஸ்தூரி போன்றவர்கள்.அவர்களின் அருள் அதன் நறுமனம் போன்றது. மஹான்கள் ரசம் நிரம்பிய கரும்பு போன்றவர்கள்.. அவர்களது அருள் அதன் இன்சுவை போன்றது.

82. மஹான்கள் நல்லவரிடமும் தீயவரிடமும் ஒரே விதமாக நடந்து கொள்கிறார்கள்.மாறாக,பாவிகளிடமே எல்லையற்ற அன்பு உள்ளவர்களாக உள்ளார்கள்.

83. கோதாவரி நதியின் நீரில் அழுக்கடைந்த துணிகளே துவைப்பதற்காக வருகின்றன.சுத்தமானவை கோதாவரியினின்று வெகு தொலைவில் பெட்டியிலேயே தங்குகின்றன.

84.பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அந்தத் துணியும் ஒரு முறை கோதாவரியின் படுகையில் நன்றாக துவைப்பதற்காக வந்தது.

85. இந்த உவமையில் பெட்டி தான் வைகுண்டம், நீங்களே கோதாவரீ,நம்பிக்கையே படித்துறை.ஜீவாத்மாக்களே துணிகள்.ஆறுவித விகாரங்களே அவைகளைப் பற்றியுள்ள அழுக்கு.

86. உங்களது பாதார விந்தங்களை தரிசிப்பதே கோதாவரி ஸ்நானம் ஆகும்.எல்லா

அழுக்குகளையும் போக்கி சுத்தப் படுத்துவதில் நீர் மிகுந்த சாமர்த்தியசாலி.

87. சம்சாரத்தில் உழலும் ஜனங்களாகிய நாங்கள் மேலும் அழுக்கு படிந்தவர்களாக உள்ளோம். எனவே மஹான் களின் தரிசனம் பெறுவதற்கு உரிமை பெற்றவர்கள் நாங்கள்.

88. கோதாவரி நதியில் நீர் நிரம்பி உள்ளது. படித்துறையில் துவைப்பதற்கான அழுக்குத் துணிகள் உள்ளன.அவை அப்படியே (துவைக்கப்படாமல்) கிடந்தால் அது உண்மையில் கோதாவரிக்கு இழுக்கு ஆகும்.

89. நீங்கள் அடர்ந்த நிழழும் குளிர்ச்சியும் தரும் சிறந்த மரம்.நாங்கள் உண்மையில் பாதசாரிகள்.கதிரவன் தாபத்திரங்களாகிய வெயிலால் எங்களைச் சுட்டெரிக்கிறான்.

90. அவனுடைய தாபத்திலிருந்து கருணை கூர்ந்து ஓ குருராயா எங்களைக் காப்பாற்றும்.. உங்கள் நல்லருளின் குளிர் நிழல் இவ்வுலகிற்கப்பாற்பட்ட தன்மையது.

91. மரத்தின் அடியில் அமர்ந்ததும் ஒருவன் மேலிருந்து வெயிலை உணர்வானாகில் அந்த மரத்தை எவர் நிழல்தரும் மரம் என்று கூறுவர்?

92. உமது அருளின்றி உலகில் நன்மை என்பது ஏற்படுவது இல்லை.தர்மத்தை நிலைநிறுத்துவதற்காக சேஷசாயி அர்ஜுனனுக்கு நண்பன் ஆனான்.

93. விபீஷணனன் சுக்ரீவனுடைய அருளினாலேயே அரசன் ஸ்ரீ ராமனின் அருகாமையை அடைந்தான்,மஹான் களின் மூலமாகத் தான் ஸ்ரீ ஹரி மேன்மை அடைந்தார்.

94. எந்த ப்ரஹ்மத்தை பற்றி வேதங்களில் கூட வர்ணிக்கப்படவில்லையோ அத்தகைய பிரம்மத்தை உலகத்தில் சகுணமாகச் செய்து வெட்க வைத்தார்கள் மஹான் கள்.

95. தாமாஜி என்ற பக்தர், வைகுண்டபதியும் ருக்மிணீ வரனுமாகிய இறைவனை ஒரு மஹார் (தாழ்ந்த குலத்தவன்) ஆக உருவெடுக்கும் படிச் செய்தார்.சோகாமேளா என்ற பக்தர் ஜகதாத்மா ஆன இறைவனைத் தமது எருமைகளின் சவத்தை எடுக்கும் படிச் செய்தார்.

96. மஹான்களின் பெருமையை உணர்ந்த ஜகஜ்ஜீவனாகிய இறைவன் அவர்களுக்காக தண்ணீரும் சுமந்தான்.உண்மையில் மஹான்கள் சச்சிதானந்தப் பிரபுவாகிய இறைவனின் எஜமானர்களாவார்கள்.

97. இப்போது அதிகம் சொல்வதற்கு எனக்கு வரவில்லை. நீயே எங்களுடைய தாயும் தந்தையும்;ஓ சத்குரு சாயிநாதா,ஷீரடி கிராமத்தில் வசிப்பவரே.

98. பாபா உமது லீலைகளின் உண்மையான பொருளை எவரும் அறிய வில்லை.அவ்வாறிருக்க எனது வெற்று வார்தைகள் எவ்வாறு அவற்றை விளக்க முடியும் சொல்லுங்கள்.

99. ஜீவன்களுக்கு உய்வளிக்கும் பொருட்டு தாங்கள் ஷீரடியில் வந்தீர்கள்.அகல்களில் நீரூற்றி விளக்கேற்றி நீங்கள் எரிய வைத்தீர்கள்.

100. ஏழு சாண் நீளமுள்ள குறுகிய மரப்பலகையை நீங்கள் படுத்துக் கொள்ளும் கட்டிலாக்கி,உங்கள் யோக சாமர்த்தியத்தின் சக்தியைப் பக்தர்களுக்குக் காட்டினீர்கள்.

101. அநேக பெண்மணிகளின் மலட்டுத்தன்மையை நீக்கியருளினீர்கள். எத்தனையோ வியாதிகளை உதியின் மூலம் குணப்படுத்தினீர்கள்.

102. இவ்வுலக சம்பந்தமான துன்பங்களை நீக்குவது உமக்கு ஒரு பொருட்டே அன்று.யானை ஒன்று எறும்பை ஒரு சுமையாக எவ்வாறு கருதும்?

103. இப்போது,குருராயா இந்த எளியவன் பால் கருணை காட்டுவீராக.நான் உமது பாதங்களை அண்டியுள்ளேன்.என்னைத் திருப்பி அனுப்பி விடாதீர்கள். 104.நீர் அரசர்க்கெல்லாம் அரசர் குபேரனுக்கும் குபேரர். வைத்தியர்க்கெல்லாம் வைத்தியர்..உங்களை விடச் சிறந்தவர் எவரும் இலர்.

105. மற்ற தெய்வங்களைப் பூஜிப்பதற்கு அதற்குத் தகுந்த சிறப்பு உபகரணங்கள் உள்ளன.ஆனால் உம்மை பூஜிப்பதற்கு உலகில் பொருட்களே இல்லை. 106.சூரியனுடைய இல்லத்தில் தீபாவளிப் பண்டிகை வந்ததென்றால், எப்பேர்ப்பட்ட பொருட்களைக் கொண்டு அதைக் கொண்டாடுவோம்?

107. சமுத்திரத்தின் தாகத்தை தீர்க்க இப்புவியிடத்தில் நீர் இல்லை. நெருப்பை உஷ்ணப்படுத்த எங்கிருந்த அக்னி கொண்டு வருவது?

108. ஓ ஸ்ரீ சமர்த்தா,குருராயா,பூஜைக்குரிய பொருட்கள் யாவும் உண்மையில் உமது ஆத்மாவின் அம்சமாய் உள்ளன.

109. மேற்கூறப்பட்டவையெல்லாம் தத்வத்ருஷ்டியால் கூறப்பட்ட பேச்சுக்களேயன்றி என் மனதில் அநுபவத்தால் ஏற்பட்டவையன்று.அநுபவம் இன்றிக் கூறப்படும் பதஜாலங்கள் வீணேயாகும்.

110. போகட்டும், உலக வழக்கத்தின் படி உமக்கு நான் பூஜை செய்யலாம் என்றால் அதனைச் செய்வதற்குத் தேவையான திறமை எனக்கு இல்லை.எனது குருராயனே.

111. பலவித கற்பனைகள் செய்து உமக்கு பூஜை செய்கிறேன்.அருள் மிகுந்தவரே.அடியேனுடைய அத்தகைய பூஜையை ஏற்றுக் கொள்வீராக.

112. இப்போது அன்புக் கண்ணீரால் உமது பாதங்களைக் கழுவுகிறேன். உண்மையான பக்தியாகிய சந்தனத்தை அரைத்து உமக்கு பூசுகிறேன்.

113. எனது அழகிய பதங்களாகிய இந்தக் கபனியை உமக்கு அணிவிக்கிறேன். ப்ரேமை என்ற மலராகிய மாலையை உமது கழுத்தில் அணிவிக்கிறேன்.

114. எனது துர்குணங்களாகிய தூபத்தை உமக்கு முன்பு எரிய விடுகிறேன்.அது மிக தீய பொருளாயினும் அதனின்று தீய வாசனை எழுவதில்லை.

115. ஸத்குருவுக்கு முன்பு அன்றி வேறு எங்கெங்கு தூபம் எரிய விடப்படுகிறதோ அங்கெல்லாம் தூபப் பொருளுக்கு ஏற்படும் நிலை வருமாறு.

116. தூபத்திரவியத்துக்கு அக்னியின் ஸ்பர்சம் ஏற்பட்ட மாத்திரத்தில்,அதனது நறுமணம் என்ற நல்ல குணம் அதனை விட்டுவிட்டுச் சென்று விடுகிறது.

117. உமது எதிரே இதற்கு மாறாக நிகழ்கிறது.தீய தன்மைகள் அக்னியில் உரிந்து விடுகின்றன.உலகம் பார்த்து மகிழும் படி சத்குணம் எவ்விதக் குறைவுமின்றித் தங்கிவிடுகிறது.

118. மனதினுடைய தீய குணங்கள் யாவும் எரிந்த பின் மனம் மாசற்றதாகிறது.கங்கையிலுள்ள மாசுகள் நீங்கியவுடன் அவள் இயல்பாகவே புனிதமடைகிறாள்.

119. மாயை, மோகம் என்ற தீபத்தை உனக்குச் சுற்றுகிறேன்.அதன் மூலம் எனக்கு வைராக்கியம் என்ற ஒளி கிடைக்கும்.

120. உனக்கு அமருவதற்கு சுத்தமான நம்பிக்கை என்ற சிம்மாசனத்தை அளிக்கிறேன்.அதனை ஏற்று பக்தி என்ற நைவேத்தியத்தையும் எடுத்துக் கொள்வாயாக.

121. பக்தி நைவேத்தியத்தை நீ உண்டு விட்டு அதனது ரசத்தை எனக்குக் கொடு. ஏனெனில் நான் உனது பச்சிளம் குழந்தை. உனது பாலில் எனக்கு உரிமை உண்டு.

122. எனது மனதை உமக்கு தக்ஷிணையாக அர்ப்பணிக்கிறேன். அதனால் கர்த்ருத்வம் என்பது எந்த விதத்திலும் என்னிடம் இருக்காது.

123. இப்போது பிரார்த்தனையோடு உனக்கு சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்கிறேன்,ஓ புண்யஸ்லோகா,சாயிநாதா அதனைத் தாங்கள் ஏற்றுக் கொள்வீராக.

124. சாந்தமான மனமுடையவரே,சிறந்த அறிவுடையவரே,சாயிநாதா,அருள் நிறைந்தவரே, கருணைக்கடலே, சத்தியஸ்வரூபமானவரே, மாயையாகிய இருளை அழிப்பவரே.

125. ஜாதி மதங்களுக்கப்பாற்பட்டவரே, ஸாதனையின் முடிவை அடைந்தவரே, எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவரே,கருணைக்கு உறைவிடமே, ஷீரடி கிராமத்தில் உறைபவரே. ஓ நாதா, என்னைக் காப்பாற்றும், என்னைக் காப்பாற்றும்.

126. ஞானமாகிய கதிரவனே.ஞானத்தை அளிப்பவரே,எல்லாவித நன்மைகளையும் செய்பவரே,பக்தர்களின் இதயத்தில் உலவும் அன்னமே, உமது பாதங்களை அடைந்தவரைக் காப்பவரே.

127. சிருஷ்டி செய்யும் பிரம்மா நீ.காக்கும் தெய்வமான லக்ஷ்மியின் கணவன் விஷ்னுவும் நீயே, உண்மையில் மூவுலகங்களையும் லயமடையச் செய்யும் ருத்ரனும் நீயே.

128. நீர் இல்லாத இடம் இவ்வுலகத்தில் எங்கும் இல்லை.சாயிநாதா நீர் எல்லாமறிபவர்.எல்லோரின் இதயத்திலும் உறைபவர்.

129. எனது எல்லா குற்றங்களையும் மன்னிக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.பக்தியின்மை,சந்தேகங்கள் போன்ற அலைகளை விரைவில் நீக்குவீராக.

130. நீர் பசு;நான் பச்சிளங்கன்று,நீர் சந்திரன்,நான் சந்திரகாந்தக்கல்.உங்கள் பாதங்கள் கங்கா நதியின் ஸ்வரூபம் ஆனவை.அவற்றை நான் பக்தியோடு வணங்குகிறேன்.

131. இப்போது உமது அடைக்கலமளிக்கும் அருள்மயமான கரங்களை எனது சிரத்தின் மேல் வைப்பீராக.எனது வருத்தங்களையும், கவலைகளையும் நீக்குவீராக.இந்தக் கனு தங்கள் பணியாளன்.

132. இந்த ப்ரார்த்தனாஷ்டகத்தைக் கூறி நான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறேன். எனது பாவங்களையும், துன்பங்களையும், ஏழ்மையையும் உடனடியாக நீக்குவீராக.

133. நீர் பசு, நான் கன்று, நீர் தாய். நான் குழந்தை. என் விஷயத்தில் மனதில் கடினம் கொள்ள வேண்டாம்.

134. நீர் மலயகிரியிலுள்ள சந்தன மரம்.நான் முள்ளடர்ந்த புதர் நீர் புனிதமான கோதாவரி நீர் நான் பெரும் பாவி.

135. ஓ, குருராயா,உமது தரிசனம் ஏற்பட்ட பிறகும் என்னிடத்திலுள்ள துர்குணம் என்ற மாசு அவ்வாறே தங்கி இருக்குமாகில் உம்மைச் சந்தனம் என்று எவர் கூறுவர்?

136. கஸ்தூரியின் அண்மையை அடைந்த மண்ணும் உயர்வாக மதிக்கப்படுகிறது. மலர்களின் அண்மையால் நாரும் தலையில் உயர்ந்த இடத்தை பெறுகிறது.

137. மஹான்களின் தன்மையும் இத்தகையதே.அவர்கள் எந்தெந்த பொருட்களை ஏற்றுக் கொள்கிறார்களோ அவற்றை உயர்ந்த நிலைகளை அடைவிக்கிறார்கள்.

138. சிவபெருமான் விபூதி, கோவணம். நந்தி ஆகியவற்றை ஏற்றுக் கொண்டதால், எல்லாத்திக்குகளிலும் அந்தப் பொருட்களுக்கு மிகவும் மதிப்பு ஏற்பட்டுள்ளது.

139. இடையர்களை மகிழ்விக்கும் பொருட்டு பிருந்தாவனத்திலும் யமுனை நதிக்கரையிலும் ஜகத்துக்கெல்லாம் இறைவனானவன் தஹிகாலா என்ற விளையாட்டை விளையாடினான். ஞானிகள் அவ்விளையாட்டையும் உயர்வாக மதிக்கிறார்கள்.

140. அவ்வாறே நான் துராசாரியாயினும் உம்மை அடைந்துள்ளேன். ஓ.குருராயா, எனவே இதைப் பற்றி உம் உள்ளத்தில் எண்ணிப்பாரும்.

141. ஓ குருராயா, இகத்திலும், பரத்திலும் எந்தெந்த பொருட்களைச் சுகம் என்று என் மனம் சந்தேகமறக் கருதுகின்றதோ அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேண்டும்.

142. உமது கருணையினால் இவ்வாறு செய்து விடும். எனது மனத்தை அடக்கி விடும். சமுத்திரத்தை இனிமையாகச் செய்து விட்டால் பிறகு உப்புத் தன்மையை பற்றிய பயம் இல்லை.

143. சமுத்திரத்தை இனியதாக்கும் சக்தி உண்மையில் உமக்கு உண்டு.எனவே தாஸ்கணுவின் இந்த வேண்டுதலை நிறைவேற்றுவீர்.

144. என்னிடம் என்னென்ன குறைகள் உள்ளனவோ அவையைனைத்தும் உமதே.சித்தர்களுக்கெல்லாம் அரசனான உமக்குக் குறை என்பது பொருந்தாதது.

145. இப்போது அதிகமாக சொல்வது எதற்காக? நீரே எனக்கு ஆதாரம்.தாயினுடைய இடுப்பில் உள்ள குழந்தை இயல்பாகவே பயமற்று இருக்கிறது.

146. ஓ மஹாராஜா. இந்தத் துதியை எவரெவர்கள் அன்புடன் படிக்கிறார்களோ அவரவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுவீர்.

147. இந்தத் துதியைப் படிப்பவர்களின் மூன்று வித தாபங்களும் ஓர் ஆண்டுக்குள் விலகிவிடும் என்பதே இந்தத் துதியின் மேல் உமது நிரந்தரமான அருளாசியாக இருக்கட்டும்.

148. (ஸ்நானம் முதலியவற்றைச் செய்து) சுத்தமாக ஆன பின் உங்கள் மனதில் சுத்தமான பக்தியோடு தினமும் இந்தத் துதியைப் படிக்கவும்.

149. இவ்வாறு செய்ய முடியாவிட்டால் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மனத்தில் ஸத்குரு மூர்த்தியை இருத்திப் படிக்கவும்.

150. அதுவும் கூட இயலாவிடில் ஏகாதசி தோறும்.அதன் விளைவுகளைப் பார்ப்பதற்காக இந்த துதியைப் படியுங்கள்.

151. துதியைப் படிப்பவர்களுக்கு இறுதிக்கணத்தில் உயர்ந்த நிலையை குருமூர்த்தி அளிப்பார்.(நான் சொல்வதைக்) கேட்டுக் கொண்டிருப்பவர்களே, இவ்வுலகியல் ஆசைகளை அவர் விரைவில் நிறைவேற்றுவார்.

152. இந்தத் துதியைப் பாராயணம் செய்வதால்(மீண்டும் மீண்டும் படிப்பதால்) முட்டாள்கள் அறிவாளிகள் ஆவார்கள். எவருக்காயினும் வாழ்நாள் குறைவாக இருப்பின் அவர்கள் இதைப் படிப்பதால் நூறாண்டு ஆயுள் உள்ளவராவார்கள்.

153. இந்தத் துதியைப் படிப்பதால் செல்வத்துக்குக் குறைவு இருந்தால்,குபேரன் அவர்களது இல்லத்துக்கு வந்து பணி செய்வான். இது சத்தியம் என்று மும்முறை உரைக்கின்றேன்.

154. சந்ததி அற்றவர்களுக்கு இந்தத் துதியைப் படிப்பதால் குழந்தைச் செல்வம் கிட்டும்.இதனைப் படிப்பவர்களின் ரோகங்கள் முற்றிலும் நீங்கி விடும்.

155. தினந்தோறும் இந்தத் துதியைப் பாராயணம் செய்வதால் பயமும், கவலைகளும் நீங்கிவிடும். மதிப்பும், மரியாதையும் உயரும். அழிவற்ற பிரம்மத்தை உணர்வார்கள்.

156. ஓ அறிவாளிகளே, உங்களது மனத்தில் இந்தத் துதியைப் பற்றி நம்பிக்கை கொள்ளுங்கள். தர்க்கங்கள் தவறான எண்ணங்கள் ஆகியவற்றுக்குக் கொஞ்சம் கூட இடம் கொடுக்க வேண்டாம்.

157. ஷீரடி ஷேத்திரத்துக்கு கிரமமாக யாத்திரை செல்லுங்கள். பாபாவின் திருவடிகளை மனதில் இருத்துங்கள். அவர் அனாதைகளின் உறவினர். பக்தர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் கற்பகத் தரு.

158. அவருடைய ப்ரேரணையினாலேயே இந்தத் துதியை எழுதினேன். இல்லாவிடில் பாமரனாகிய என்னால் இத்தகைய படைப்பு எவ்வாறு ஏற்பட முடியும்?

159. சக ஆண்டு 1840ல் பாத்ரபதம் மாதம் சுத்த பக்ஷத்தில் கணேச சதுர்த்தி திதியன்று திங்கட் கிழமை இரண்டாவது ப்ரஹரத்தில்(ப்ரஹரம் = 3 மணி நேரம்).

160. புனிதமான நர்மதா நதி தீரத்தில் உள்ள மஹேஷ்வரர் என்ற ஷேத்திரத்தில் ஸ்ரீ அகல்யா தேவி சந்நிதியில் ஸ்ரீ சாயி நாதஸ்தவன மஞ்சரி நிறைவடைந்தது.

161. மஹேஸ்வரம் என்ற புகழ் பெற்ற ஷேத்திரத்தில் இந்தத் துதி நிறைவடைந்தது.ஸ்ரீ சாயிநாதர் என் மனதுட் புகுந்து ஒவ்வொரு பதத்தையும் என்னைக் கூற வைத்தார்.

162. தாமோதரன் என்ற சீடன் இந்தத் துதியை எழுதினான்.தாஸ்கணுவாகிய நான் எல்லா மஹான்களுக்கும் பணியாள்.

163. ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி சம்சார சாகரத்தை கடக்க உதவட்டும்.ஓ.பாண்டுரங்கா இதுவே தாஸ்கணுவின் பக்தி மிகுந்த பிரார்த்தனை.

**ஜெய் சாய் ராம்** 🌸
ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாயிநாத மகராஜ் கி ஜேய்

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

தமிழர் நலம்

சாய்பாபா : ஸ்ரீ சாயிநாத ஸ்தவன மஞ்சரி - [ ] | saibaba : Sri Sai Nath Sthavan Manjari - in Tamil [ ]



எழுது: சாமி | தேதி : 01-29-2026 08:13 pm