சுவாமி நெல்லையப்பர் ஆலயம்

தாமிரசபை, கோயில் அமைப்பு, தீர்த்தங்கள்

[ ஆன்மீகம்: சிவன் ]

Swami Nellaiappar Temple - Tamirasabha, temple structure, tirthas in Tamil

சுவாமி நெல்லையப்பர் ஆலயம் | Swami Nellaiappar Temple

அருள் மிகுந்த நெல்லையப்பர் தெற்குப்பிரகாரம் மத்தியில், தட்சிணாமூர்த்தி கோயில் முன் சங்கிலி மண்டபத் தொடர்ச்சி வடக்கு ஓரத்தில் நடுக்கோபுரம் உள்ளது.

சுவாமி நெல்லையப்பர் ஆலயம்

அருள் மிகுந்த நெல்லையப்பர் தெற்குப்பிரகாரம் மத்தியில், தட்சிணாமூர்த்தி கோயில் முன் சங்கிலி மண்டபத் தொடர்ச்சி வடக்கு ஓரத்தில் நடுக்கோபுரம் உள்ளது. இதற்குத் தெற்கு பக்கமுள்ள மண்டபம் வடமலையப்ப பிள்ளையின் உடன் பிறந்தார் தருமம். வடக்குப் பிரகாரம், பிள்ளையின் மைத்துனர், திருமலைக் 'கொழுந்துப் பிள்ளையனாலும், பொது மக்களாலும் கட்டப்பட்டது. இப்பிரகாரம் சீபலி மண்டபப்பிரகாரம் எனப்படும். இப்பிரகார மண்டபங்கள் உயர்ந்து பருத்த கற்றூண்களால் தாங்கப்பட்டு, கற்றள வரிசையிடப்பட்டும் உள்ளன.

 

தெற்குப் பிரகாரம்

இதன் நீளம் 387 அடி. அகலம் 42 அடி. நடைபாதை 17 அடி ஆகும். தெற்குப் பிரகாரம் தென் பக்கம் கீழோர முதல் பேரால வட்டம், கொடி வாகனங்கள். தோரணங்கள் இவை வைக்கப்படும் அறைகள் விளங்கும். அறைகளுக்கு முன் நிற்கும் தூண்களில் பிள்ளையன் காலம் வரை அரசாண்ட நாயக்க மன்னர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மதுரை புது மண்டபச் சிற்பத்தை நினைவூட்டுகின்றது.

 

மேலப் பிரகாரம்

இதன் நீளம் 295 அடி. அகலம் 40 அடி, நடைபாதை 17 அடி ஆகும். இதன் நடுவில் மேலக்கோபுரம் இருக்கிறது. சுதைப் பிள்ளையார் பிரதிட்டையும் வெள்ளிக்கோரத மண்டபமும் குறிப்பிடத்தக்கவை.

 

வடக்குப் பிரகாரம்

இதன் நீளம் 387 அடி, அளவு அகலம் 42 அடி நடைபாதை 17 அடி ஆகும். இப்பிரகாரத்தில் நின்றசீர் நெடுமாறன் கலை அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.சுவாமி ஆறுகாலத் தீர்த்தக்குண்டம் இங்குள்ளது. ஈசானத்திக்கில் யானைக் கூடம் காணப்படுகிறது.

 

கீழப் பிரகாரம்

இதன் நீளம் 295 அடி, அகலம் 40 அடி. நடைபாதை 17 அடி ஆகும். இதன் வடக்குப் பக்கம் எழுபத்தி எட்டுத் திண்ணிய வருணத்தூண்களுடன் கூடிய சோமவார மண்டபம் விளங்குகிறது. இம்மண்டபத்தில் கோபுரத்தை ஒப்ப அமைக்கப்பட்டிருக்கும் அழகிய கற்றூண் காணத்தக்கது.

இம்மண்டபத்தில் புரட்டாசியில் நவராத்திரி விழாவும், கார்த்திகையில் சோமவார மண்டபப்படிகளும் நடைபெறும். இம்மண்டபத்தின் மேல் பக்கம் வன்னியடிச்சாத்தனார். வயிரவர் சந்நிதிகள், யாகசாலை ஆகியவை உள்ளன. சந்நிதி ரிஷப மண்டபத்திற்கு வடக்கே நவக்கிரக மண்டபம் உள்ளது.

சாமி சந்நிதி வழியாகக் கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள் முதலில், நெல்லையம்பலத்தில் உள்ள பிள்ளையார், முருகன் இவர்களைக் கைதொழுது கோபுர வாசலில் நுழைந்ததும், திருவாசி தொழுது தென்புறம் சைவசமயக் குரவர்களுடன் சேக்கிழாரையும் வழிபட்டு, சர்வ நல்வாத்திய மண்டபத்தில் அமர்ந்து பாசம் என்னும் பலிபீடம் பின்னதாகவும், பசுவாம் இடபம் இடையதாகவும், பதி என்னும் சிவம் முன்னதாகவும் உள்ள, தத்துவக் குறியை நினைத்துப் பெரிய இடபத்தை வழிபட்டுச் சுவாமி சந்நிதியில் புகுதல் மரபு.

இந்த இடபக்க மண்டபம் கி.பி. 1654-இல் சிவந்தியப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இதன் முன்னுள்ள பெரிய கொடிமரம் கி.பி.1555-இல் காளயுக்தி வைகாசித் திங்களில் பிரதிட்டை செய்யப்பட்டது. நந்திதேவரை வழிபட்டுச் சிறிய கொடிமரத்தையும் சூரியதேவரையும் வணங்கி மணிமண்டபம் காண்போம்.

இம்மணி மண்டபம் ஒரே பெருங்கல்லில் 64 தூண்கள் அமையும்படியும், ஒவ்வொரு சிறு தூணையும் சிறிது தட்டினால் வேறு வேறு இசை வெளிப்படும்படியாகவும் அமைந்திருப்பது நம்மை வியப்புறச் செய்கிறது. இம்மண்டபம் அமைத்தவர் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் விளங்கிய கூன் பாண்டியன் என்னும் நின்றசீர் நெடுமாறரேயாவார்.

மணி மண்டபத்திலிருந்து மேற்கில் உள்ள மகாமண்டபம் வழியாக நேரே சென்று, வேணுவன நாதரை வழிபடலாம். இவர் தான் மூங்கில் முளையில் தோன்றி முழுது கண்ட இராமக்கோனுக்கு முக்தி அளித்த வேணுவன நாதர். மன்னர் முழுது கண்ட இராமபாண்டியன் வேண்ட, பீடம் ஒவ்வொன்றாய் இருபத்தொரு பீடம் உள்ளடக்கி மென்மேல் வளர்ந்ததனால், வேண்ட வளர்ந்த மகாலிங்கம் என அழைக்கப்படும். இவரே அருள்மிகு நெல்லையப்பரும் ஆவார். இந்நாதருக்கு வடபால் திருமால் நெல்லைக் கோவிந்தரும், வெளியில் நடுமண்டபத்தில் உள்ள பிள்ளையார் சந்திரசேகர், உட்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி தாருகா முனிவரின் பிறப்பு ஈடேற இறைவன் எடுத்த பிட்சாடண வடிவம், சண்டேசுவரர் இவர்களை வழிபட்டுச் சென்றால், வட பிரகாரத்தில் பள்ளத்தில் வேணுவன நாதர் வெளிப்படுவதற்கு முன்தோன்றிய திருமூல நாதர் என்ற நாமம் விளங்க வீற்றிருப்பவரைத் தரிசிக்கலாம்.

பின் நடேசர் துர்க்கை, பாலவயிரவர் தென்புறமுள்ள நெல்லையப்பர் காந்திமதி உற்சவ மூர்த்திகள், தெற்குப் பிரகாரத்தில் உள்ள சைவசமயக்குரவர் சந்தானா சாரியார் ஏழு கன்னியர், ஏழு முனிவர் மெய்யடியார் அறுபத்துமூவர் இவர்கள் சிலை, பொன் மூர்த்திகளையும் பொல்லாப் பிள்ளையார், இராவணேசுவரர் தாங்கி நிற்கும் முறையில் உயர்ந்த பீடத்தில் விளங்கும் திருகையிலாய மணக்கோலக்காட்சி, இவையாவையும் கண்டு மகிழ்ந்து வழிப்பட்டுப் பயனடையலாம்.

 

தாமிரசபை

மேற்புறப் பிரகாரத்தில் தாமிரசபை கல்வளைவு மண்டபச் சிறப்புடன் விளங்குகிறது. மார்கழித் திருநாளில் நடேசர் இதில் திருநடனம் புரிந்தளுவார். தாமிரசபையின் பின்னுள்ள சந்தனச் சபாபதியை வழிபட்டு, வடக்குப் பிரகாரத்தில் அட்ட இலட்சுமியை வணங்கி, சனிபகவான். சகசரலிங்கம் கண்டு அபிடேக நீர்தெளித்துப் பின்னர், தைல அறைக்கு வடக்கேயுள்ள காரைக்கால் அம்மைக்கு அருள் புரிந்த பெரிய நடராசரையும் காண வேண்டும்.

குபேரலிங்கம் சுந்தரமூர்த்தியை வணங்கி, நவக்கிரக மண்டபம் வலம் வந்து கும்பாபிசேக சிறு மண்டபத்தில் இருந்து தெற்கே சென்றால், மேற்கு நோக்கிய சைலப்பர் கோயில் காணப்படும். எண்ணெய் அறையை அடுத்த கீழ்ப்பக்கம் அனவரநாதர் காந்திமதி அம்மை ஆலயம் அமைந்துள்ளது.

 

கோயில் அமைப்பு

நகரின் மத்தியில் விளங்கும் இக்கோயில் மொத்தத்தில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட எல்லையுள் அமைந்துள்ளது. அம்மன் கோயில் சுவாமி கோயில் என்ற இரு சமமான பிரிவைக் கொண்டது. ஒவ்வொரு கோயிலுக்கும் கீழ்ப் பக்கத்தில் பெரிய கோபுரங்கள் இருக்கின்றன. அம்மன் கோவில் தென்பக்கம் ஒரு வாயிலும் வடபக்கம் சங்கிலி மண்டபத்திறுதியில் ஒரு வாயிலும் இருப்பதைப் போலவே சுவாமி கோயிலில் வடபுறம் ஒரு வாயிலும் மேல்புறம் ஒரு வாயிலும் இருக்கின்றன.

 

தீர்த்தங்கள்

இத்தலத்தில் மொத்தம் 32 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் 9 தீர்த்தங்கள் முக்கியமானவை. இவற்றில் பொற்றாமரை கருமாறி வயிரவதீர்த்தம், சர்வ தீர்த்தம் இந்நான்கும் இக்கோவிலும் அமைந்தவை. கம்பை தெப்பக்குளம், சிந்துபூந்துறை, துர்க்கைத் தீர்த்தம், குறுக்கு துறை ஆகிய ஐந்தும் கோவிலுக்கு வெளியில் இருப்பவை.

தல விருட்சம் மூங்கிலாகும். இந்த ஆலயத்திற்கு சுவமி ரதம், அம்மன் ரதம், விநாயகர் ரதம், சுப்பிரமணியர் ரதம், சண்டேசுரர் ரதம் என ஐந்து ரதங்கள் இருக்கின்றன.

 

ஆறு சபைகள்

1. சிந்துபூந்துறையில் தீர்த்தசபை

2. சங்கரன்கோவில் சாலையில் பத்து மைல் தூரத்தில் உள்ள மானூரில் - ஆச்சரிய சபை

3. அம்பிகை கோயில் முன்னிடம் வடபால் சிவன் ஆனந்த நடனம் புரியும் சவுந்திர சபை

4. அம்பிகை ஆலயத்து விலாபுறம் கல்யாண சபை (திருக்கல்யாண மண்டபம்)

5. சுவாமி கோயில் முன்னுள்ளது - அழகிய ராஜசபை

6. சுவாமி கோவிலுள் வாயுத் திக்கில் இருப்பது - தாமிர சபை.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீகம்: சிவன் : சுவாமி நெல்லையப்பர் ஆலயம் - தாமிரசபை, கோயில் அமைப்பு, தீர்த்தங்கள் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Swami Nellaiappar Temple - Tamirasabha, temple structure, tirthas in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை








தொடர்புடைய தலைப்புகள்