‘முடியும் முடியும்’ என்றே சிந்தித்தல்!!!

ஊக்கம்

[ ஊக்கம் ]

Thinking 'can do'!!! - Encouragement in Tamil

‘முடியும் முடியும்’ என்றே சிந்தித்தல்!!! | Thinking 'can do'!!!

யாரையும் குறை கூறாமல் நம்மைத் திருத்தி கொண்டு வாழவேண்டும்.

முடியும் முடியும்’ என்றே சிந்தித்தல்!!!

குறை காணாதே,

தீர்வை தேடு;

யார் வேண்டுமானாலும் குறை கூறலாம்.

- ஹென்றி


யாரையும் குறை கூறாமல் நம்மைத் திருத்தி கொண்டு வாழவேண்டும். இதன்மூலமே நமது அன்றாட கடமையை ஒவ்வொரு மணித்துளியிலும் செய்து முடிக்கும் அமைதியான ஆற்றல் நிறைந்த மனதை இயல்பாகப் பெறமுடியும். குறை கூறாமல் வாழக் கற்றுக் கொண்டால் ஒவ்வொரு நாளும் உற்சாகமாக வாழ்ந்து நமது இலட்சியத்தை குறுகிய காலத்திலேயே அடைந்துவிடலாம்.

'முடியும் முடியும்' என்றே மூளையில் சிந்தியுங்கள்! முடியாது என்பதை ஒரு மூலையில் வையுங்கள்.

 

மனதை வசப்படுத்துங்கள்!

நம்முடைய மனம் நமது முதலாளியாக இருக்கிறது. அதை நமது வேலைக்காரனாக மாற்ற வேண்டும். நமது மனம் நமது கட்டுப்பாட்டில் இருந்தால் நாம் செய்ய வேண்டிய அரிய பணிகளையும் செய்துவிடுவோம். இது மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் ஒய்வான மனநிலையும் நன்கு வாழ்ந்த திருப்தியும் கிடைக்கும்.

இதனால் மறுநாளும் கவனம் சிதறாமல் செயல்படத் தேவையான மனநலமும் சக்தியும் நமக்குக் கிடைக்கும். மனதை வசப்படுத்த மூன்று எளிய வழிகள் உள்ளன.

1. உங்கள் ஆசை, இலட்சியம் என்ன? இந்த மனித வாழ்வில் நீங்கள் முடிவாக எதை விரும்புகிறீர்கள்? அதை ஒரு தாளில் எழுதுங்கள்.

2. நேரம் தவறாமல் வாழ முடிவு செய்யுங்கள்.

3. எவரையும் குறை கூறாதீர்கள்.

இதில் மிகவும் முக்கியமானது நேரப்படி ஒவ்வொரு நாளும் வாழ்வது. நேரப்படி வாழும்போது மனதைக் கட்டுப்படுத்தி விடுகிறோம். இதனால் குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்துவிடுகிறோம். பிறகு கிடைக்கும் ஓய்வில் முழுமனதுடன் இலட்சியம், ஆசை பற்றிய பெரிய முயற்சிகளில் இறங்கலாம்.

இவ்வளவிற்கும் தேவை அமைதியான மனம். இதற்கு ஒரே வழி ஒவ்வொரு நாளும் நேரம் தவறாமல் வாழ்ந்து மனதை அமைதிப்படுத்தி நமது இலட்சியத்தை நோக்கிச் செல்ல தேவையான நேரத்தையும் மன அமைதியையும் பெறுவதே!

நேரம் தவறாமல் வாழ்ந்தால்தான் நம்முடைய மிகப் பெரிய இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள அமைதியான மனமும், ஆழ்ந்து சிந்தித்து முயற்சி செய்யும் பழக்கமும் ஒவ்வொரு நாளும் வலுப்பெறும்.

'போகாத வழியெங்கும் போகவேண்டாம்',

'ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்'

போன்ற வைர வரிகள் மிகவும் சக்தி படைத்தவை. நம்மைத் தூண்டிச் செயல்பட வைக்கும் மந்திர வாக்கியங்கள்.

நம்முடைய வலிமையான எண்ணங்கள்தாம் நாம் விரும்பும் உயர்வைத் தருகின்றன. எனவே, நம்முடைய மிகப் பெரிய இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள நமது மனதையும் முயற்சியையும் அதை நோக்கியே செலுத்த வேண்டும். இதற்கு அமைதியான மனம்தான் மூலதனம்!

கடுமையாக உழைத்து குறைந்த ஊதியம் பெறுபவர்கள் நேரப்படி வாழ ஆரம்பித்தால் நிறைய நேரமும் ஆழ்ந்து சிந்தித்து முயற்சி செய்தால் அமைதியான மனமும் ஒருங்கே கிடைத்துவிடும். இதை வெற்றி பெற்றுவரும் ஒவ்வொருவரும் பின்பற்றுகின்றனர். நாமும் பின்பற்றினால் நம்முடைய மனமும் மிகப் பெரிய காரியங்களைச் செய்ய நம்மைத் தயார்படுத்தி விடும். மிகப் பெரிய இலட்சியங்களைப் பணமாகவோ, வீடாகவோ மனதில் படமாகப் பார்த்துப் பார்த்து உங்கள் இலட்சியத்தை வலிமைப்படுத்துங்கள்.

நமது மனம் மனப்படங்களின் மூலமாக அபாரமாக வேலை செய்து நாம் விரும்புவதைக் கவர்ந்து இழுத்துக் கொண்டு வந்து சேர்த்து விடுகிறது. வாய்ப்புகளையும் காட்டுகிறது. இதனால் மிகுந்த தைரியத்துடன் முன்னோக்கியே சென்று வெற்றி பெற்று விடுகிறோம்.

எல்லோரும் பாராட்டையே எதிர்பார்க்கிறார்கள். நன்றி கூறுபவர்களாக எல்லாச் சூழ்நிலைகளிலும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். 'ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்' என்பதை அடிக்கடி நினைத்துக் கொண்டால் போதும். உங்கள் பணியை மட்டுமே பார்க்க உங்கள் மனதைப் பலமாகத் தயார்படுத்திவிடுவீர்கள்.

எல்லோரையும் நண்பர்களாகப் பெறமுடியாது. ஆனால், ஒருவரையும் தமது எதிரியாக மாற்றிவிடக் கூடாது. அதற்கு ஒரே வழி, யாரையும் குறை கூறாமல் நம்மைத் திருத்தி கொண்டு வாழவேண்டும். இதன்மூலமே நமது அன்றாட கடமையை ஒவ்வொரு மணித்துளியிலும் செய்து முடிக்கும் அமைதியான ஆற்றல் நிறைந்த மனதை இயல்பாகப் பெற்றுவிடுகிறோம். நாம் சரியாக இருந்தால்தான் நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நம்மைப் போலவே அமைதியும் ஆற்றலும் நிறைந்த மனிதர்களாக மாறுவார்கள்.

எனவே, உங்கள் வயது, வசதி, குறைகள் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மிகப் பெரிய, நீங்கள் நம்பும் இலட்சியத்தை ஒரு தாளில் இக்கணமே எழுதி உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். மனதை வசப்படுத்த உங்கள் கடமையை நேரப்படி ஒவ்வொரு நாளும் செய்து முடியுங்கள். இதன்மூலம் கிடைக்கும் ஓய்வான மனதையும் நேரத்தையும் உங்களின் முக்கிய இலட்சியத்தை அடையத் துடிப்புடன் பயன்படுத்திக் கொள்ளுங்கள். குறை கூறாமல் வாழக் கற்றுக் கொண்டால்தான் நமது ஊக்கத்தைச் சோர்வான மனநிலையும் மற்றும் பிற மனிதர்களும் இடையில் புகுந்து கெடுக்க மாட்டா! இதனால் ஒவ்வொரு நாளும் உற்சாகமாக வாழ்ந்து நமது இலட்சியத்தை குறுகிய காலத்திலேயே அடைந்துவிடலாம்.

 

கற்போம் கற்பிப்போம்!

நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கட்டும்!


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஊக்கம் : ‘முடியும் முடியும்’ என்றே சிந்தித்தல்!!! - ஊக்கம் [ ஊக்கம் ] | Encouragement : Thinking 'can do'!!! - Encouragement in Tamil [ Encouragement ]