பாண்டியநாட்டின் தலைநகர். தமிழ்ச் சங்கங்கள் திகழ்ந்த தலம்.
திரு ஆலவாய் (பாண்டிய நாடு) பாண்டியநாட்டின் தலைநகர். தமிழ்ச் சங்கங்கள் திகழ்ந்த தலம். சிவபெருமான் 64 திருவிளையாடல்கள் செய்த தலம். அங்கயற் கண்ணியம்மையார் அவதாரம் செய்து பாண்டியன் திருமகளாக வளர்க்கப்பெற்று, சோமசுந்தரராக வந்த சிவபெருமானைத் திருமணம் செய்துகொண்டு அரசுபுரிந்த பழம்பதி. மும்மையால் உலகாண்ட மூர்த்தி நாயனார், நின்றசீர் நெடுமாற நாயனார், மங்கையர்க்கரசியார், குலச்சிறை நாயனார் முதலியோர் வரலாற்றுத் தொடர்புடைய வளநகர். திருஞான சம்பந்தர் அனல்வாதம், புனல் வாதம் முதலியன செய்து சமணர்களைத் திருத்திச் சைவம் பரப்பிய திருநகர். ஒரு பாண்டியனுக்காகக் காலை மாற்றி ஆடிய கூத்தப்பிரான் கற்சிலையுருவில் வெள்ளியம்பலத்துள் காட்சி அளிக்கிறார். புலவர்கள் "பொன்னுக்கு வெள்ளி கால்மாற்று அதிகம்'' என்று தில்லையோடு ஒப்பிட்டு, இக்கால் மாறிய திருவிளையாடலை நயம்பெறக் கூறுவர். அங்கயற்கண்னரி அம்மையார் கோயில் வெளிப்பிராகாரத்தில் திருமலை நாயக்க மன்னர் தமது தேவியரோடு சிலையுருவிலுள்ளார். அம்மையின் சந்நிதிக் கெதிரில் பொற்றாமரைத் தீர்த்தம் உள்ளது. இத் திருக்குளத்தின் பெருமை சங்ககாலத் தொடர்புடையது. சங்கப் பலகை மிதந்து தக்க புலவர்களையும் அவர்கள் நூல்களையும் தாங்கி, ஏனையோரையும் அவர் நூல்களையும் கவிழ்த்துவிடும் அற்புதம் சங்ககாலத்தில் இந்தத் திருக்குளத்தில் நிகழ்ந்தது. "நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே" என்ற நக்கீரர் தமது பிழையை உணர்ந்து இக்குளத்தில் மூழ்கிக் "கோபப்பிரசாதம்" என்ற நூலை இயற்றியதும் இத்தலமே. இப்பொற்றாமரைத் தீர்த்தத்திலேதான் தருமபுரத் தாபனர் கையில் அவ்வாதீன வழிபடுமூர்த்தி ஆகிய சொக்கலிங்கக் கடவுள் திருவுருவம் திருவருளால் கிடைத்தது. குமரகுருபர சுவாமிகள் "மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்'' பாடி அரங்கேற்றியபோது அம்மை ஓர் இளம்பெண்ணாக வந்து தமது கழுத்திலிருந்த முத்துமாலை ஒன்றைக் கழற்றி அவருக்குப் பரிசாக அளித்ததும் இத்தலத்தில் சில நூற்றாண்டுகட்கு முன் நிகழ்ந்த திருவிளையாடல். சித்திரைப் பெருவிழாவில் மீனாட்சியம்மன் திக்குவிஜயம், திருக்கலியாணம் முதலியனவும், பாண்டியன் ஜ்வரம் தீர்த்தது, சமணரைக் கழுவேறச் செய்தது, ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்தது முதலியனவும், ஏனைய மாதங்களில் வெவ்வேறு திருவிளையாடல்களும் உற்சவங்களாக நடைபெறுகின்றன. இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பாண்டிதுரைத் தேவர் முதலிய பெரியோர் வெளிப் களால் நான்காவது தமிழ்ச் சங்கம் நிறுவப் பெற்றுத் தமிழ்த் தொண்டாற்றி வருகின்றது. திருக்கோயில் பிராகாரத்தில் சங்கப்புலவர்கள் கற்சிலையுருவில் காட்சியளிக் கின்றனர். சுவாமி சந்நிதிக்கெதிரில் இரு கற்றூண்களில் துர்க்கையும், வீரபத்திரரும் பெரிய சிலையுருவில் வெண்ணெய் சாத்தப்பெற்றுக் காட்சியளிக்கின்றனர். வாதவூரடிகள் வரலாற்றுத் தொடர்பும் இத்தலத்துக்குண்டு. வீமநாத பண்டிதர் இயற்றிய கடம்பவன புராணம், பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம், பெரும்பற்றப்புலியூர் நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், குமரகுருபரர் இயற்றிய மதுரைக்கலம்பகம், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் முதலிய நூல்கள் இத்தலத்தைக் குறித்து எழுந்த நூல்கள். சுவாமி : சொக்கநாதர், சோமசுந்தரர். அம்பிகை : மீனாட்சி. தீர்த்தம்: பொற்றாமரை. விருட்சம் : கடம்பமரம் ஸ்தல விநாயகர்: சித்தி விநாயகர். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திரு ஆலவாய் (பாண்டிய நாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiru Alawai (Pandya Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]