நாரசிங்கள்பேட்டை இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே 1 மைல் தொலைவில் உள்ளது இத்தலம்.
திருஆவடுதுறை: (சோழநாடு) நாரசிங்கள்பேட்டை இரயில்வே நிலையத்திலிருந்து கிழக்கே 1 மைல் தொலைவில் உள்ளது இத்தலம். திருமூல நாயனார் திருமந்திரம் அருளிய தலம். சம்பந்தர் தமது தந்தையார் வேள்வி செய்யும் பொருட்டு இறைவனைப்பாடி ஆயிரம் பொற்காசு பெற்றுக் கொடுத்ததைத் தேவாரம் கூறுகின்றது. திருவிசைப்பா பாடிய திருமாளிகைத் தேவர் தொடர்பும் இத்தலத்துக்குண்டு. திருவாவடுதுறை ஆதீனத் தலைமைத் திருமடம் இங்குளது. பசுவடிவுடன் உமாதேவி பூசித்ததால் ஆவடுதுறை. தருமதேவதை பூசித்ததலம். தியாகராஜ சந்நிதி இருக்கிறது. கிழக்கே சித்தர்காடு என்ற ஊர் இருக்கிறது. நிருதிமூலை: சாத்தனூர். உற்சவம் கொள்பவர் சோமாஸ்கந்தர். துவஜாரோகணம் செய்பவர்: தியாகர். தீர்த்தம் கொடுப்பவர் அணைத்தெழுந்த நாயகர். மூவரும் பாடிய தலம். திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் தம் தந்தையார் செய்த வேள்விக்காக ஆயிரம் பொன் சிவபெருமானிடம் இருந்து இத்தலத்தில் பெற்றனர். அதனால் இங்கே உள்ள தியாகராசமூர்த்திக்குச் சுவர்ணத்தியாகர் என்ற பெயர் வழங்கும். ஒருமுறை அம்பிகை சிவாக்ஞையால் இங்கே பசு வடிவத்துடன் வந்து இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி அப்பசு வடிவம் நீங்கப் பெற்றமையின் இத்தலத்திற்கு கோமுக்தி, கோகழி என்னும் பெயர்கள் வழங்கும். அம்பிகை தன் சுயரூபம் பெற்ற காலத்து அப்பிராட்டியைச் சிவபெருமான் அணைத்தெழுந்தார் என்பது புராண வரலாறு. அதற்கு அடையாளமாக அணைத்தெழுந்த நாயகர் என்ற திருநாமத் தோடு ஒரு மூர்த்தி எழுந்தருளியிருக்கிறார். உற்சவத்தில் தீர்த்தம் கொடுக்க எழுந்தருளுபவர் அம்மூர்த்தியே. இத்தலத்தின் ஆலயத்தில் பல அரசமரங்கள் உள்ளன. அவை படரும் அரசு. மண்டபத்தின் மதிலின் மேலும் படர்ந்திருக்கும் தலவிருட்சம் அந்த அரசே; அதனால் அதற்கு அரசவனம் என்ற காரணப் பெயர் உண்டாயிற்று. சிறந்த சித்தரும் நாயன்மார்களுள் ஒருவருமாகிய திருமூலர் இத்தலத்தில் தவம்புரிந்து திருமந்திரத்தை அருளிச் செய்தனர். ஆலயத்தினுள் அவர் எழுந்தருளியிருக்கும் கோயில் ஒரு குகையைப் போன்ற தோற்றமுடையது. மடத்தைச் சார்ந்த ஓரிடத்தில் திருமாளிகைத் தேவர் என்னும் சித்தருடைய ஆலயம் உண்டு. போகரின் சிஷ்யரும் திருவிசைப்பா பாடியவரும் ஆகிய அவர் ஒரு சமயம் அக்கோயில் மதில்களின் மேலுள்ள நந்தி உருவங்களை யெல்லாம் உயிர் பெறச் செய்து ஒரு பகையரசனோடு போர் புரிய அனுப்பினார் என்பது பழைய வரலாறு. அதுமுதல் இவ்வாலய மதிலின் மேல் நந்திகள் இல்லாமல் போயினவாம். இங்கே சுவாமி சந்நிதியிலுள்ள ரிஷபம் மிகப் பெரியது. இவ்வாலயம் திருவாவடுதுறை மடத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இயல்பாகவே சிறப்புள்ள இவ்வாலயம் ஆதீன சம்பந்தத்தால் பின்னும் சிறப்புடையதாக விளங்குகிறது. திருவாவடுதுறை மடத்துப் பெரிய பூசையிலுள்ள உடையவர் திருநாமம் வைத்தியநாதர் என்பது. இத்திரு மடத்தில் வழிபடப் பெற்றுவரும் மூர்த்தி ஸ்ரீ நடராஜப் பெருமான். குருபூசை நடைபெறும் காலத்தில் இவ்வாலயத்திலும் ரதோற்சவம் நடைபெறும். உற்சவம் பத்துநாள் மிகவும் விமரிசையாக நிகழும். ரதசப்தமி அன்று தீர்த்தம். பெரும் பாலும் ரதசப்தமியும் குருபூசையும் ஒன்றையொன்று அடுத்தடுத்தே வரும். சில வருஷங்களில் ஒரே நாளில் இரண்டும் வருவதும் உண்டு. ஆதீனகர்த்தர் பரிவாரங்களுடன் வந்து உற்சவம் ஒழுங்காக நடைபெறும்படி செய்விப்பார். தியாகராச மூர்த்தியின் நடனமும் உண்டு. அதற்குப் பந்தர்க்காட்சி என்று பெயர். ஆலயத்தில் உற்சவமும் மடத்தில் குருபூசையும் ஒருங்கே நடைபெறுவது ஒரு சிறப்பாகவே இருக்கும். தலவிநாயகர்கள் இருவர்: 1 துணைவந்த விநாயகர்; இவர் அம்பிகை பசுவடிவங் கொண்டு வந்தபொழுது துணையாக வந்தவர். 2. அழகிய விநாயகர்; இவர் அகத்திய முனிவருக்குப் பஞ்சாக்ஷர உபதேசம் செய்தவர். கவாமியின் திருநாமங்கள்: ஸ்ரீ ஸ்வயம் வியக்தேசுவரர், பிரகாசமணிநாதர், மாசிலா மாணியீசர், கோமுத்தீசர், கோகழிநாதர், அணைத்தெழுந்த நாயகர், பூகைலாஸேசுவரர், புத்திரத்தியாகர், போதிவன நாதர், போதியம்பலவாணர், மகாதாண்டவேசுவரர், அர்த்தத்தியாகர், முத்தித்தியாகர், சிவலோகநாயகர் என்பனவும் இவற்றின் வேறு பரியாய நாமங்களுமாம். தேவியாரின் திருநாமங்கள்: அதுலகுச நாயகி, ஒப்பிலா முலையம்மை, ஒப்பிலாள். தலத்தின் திருநாமங்கள்: கோமுத்தி, கோகழி, திருவாவடுதுறை, பூகைலாசம். நந்திநகர், தியாகபுரம், போதிவனம், அரசவனம், மகா தாண்டவபுரம், வேதபுரம், சித்தபுரம், நவகோடிசித்தபுரம், முக்திக்ஷேத்திரம், சிவபுரம் என்பனவும் இவற்றின் பரியாய் நாமங்களுமாம். தீர்த்தங்கள் மூன்று: 1. முத்தி தீர்த்தம் அல்லது கோமுத்தி தீர்த்தம், 2. கைவல்ய தீர்த்தம், 3. பத்மதீர்த்தம் என்பன. இவை முறையே திருக்கோயிலின் எதிரிலும், திருக்காவிரியிலும், ஸ்ரீகொங்கணேசுவரர் கோயிலின் பக்கத்திலுமுள்ளன. விருட்சம் : திருவரசுகள் படர்ந்து விளங்குதலால் இவை படர்ந்த அரசுகள் என்றும் நிலவரசுகள் என்றும் வழங்கப்படும். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள்: திருத்தலங்கள் : திருஆவடுதுறை: (சோழநாடு) - திருத்தலங்கள் - ஆன்மீக குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual Notes: Correctional facilities : Thiruavaduthurai: (Chola Nadu) - Correctional facilities - Spiritual Notes in Tamil [ spirituality ]