திருவாரூர் - திருத்துறைப் பூண்டி பிரதான சாலையில் 15 கி.மீ தூரத்தில் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது
திருக்காரவாசல்: கடுக்காய் பிள்ளையார்!
திருவாரூர் - திருத்துறைப் பூண்டி பிரதான
சாலையில் 15 கி.மீ தூரத்தில் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது திருக்காரவாசல் அருள்மிகு.
கண்ணாயிரநாதர் ஆலயம். இங்கே நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சி தருகிறாள் அன்னை ஸ்ரீ
கைலாசநாயகி.
திருக்காரவாசலில் காணப்படும் விநாயகர், கடுக்காய் பிள்ளையார் என்றழைக்கப்படுகிறார்.
வணிகன் ஒருவன் விற்பனைக்காக ஜாதிக்காய்
மூட்டைகளை வண்டியில் ஏற்றி வந்து இரவில் இங்கு தங்கினான். அப்போது இத்தலத்தில் உள்ள
விநாயகர், ஓர் சிறுவனாக வந்து மூட்டையில் என்ன
இருக்கிறது என்று கேட்டார். ஜாதிக்காய்களுக்கான அதிக சுங்கவரியைக் கட்ட விரும்பாத அந்த
வணிகன், எல்லாமே கடுக்காய்கள்தான் எனப் பொய்
பகன்றான். அவனது பொய்க் கூற்றுப் படியே ஜாதிக்காய்கள் எல்லாம் கடுக்காய்களாக மாறி விட்டன,
மூட்டைகளைப் பிரித்தபோது, அவற்றுள் கடுக்காய்கள் இருப்பது கண்டு
அதிர்ந்த வணிகன், இத்தல
விநாயகரை வணங்கி வேண்ட, மீண்டும்
அவை ஜாதிக்காய்களாக மாறின. அது முதல், இந்த விநாயகர் கடுக்காய் பிள்ளையார் என்று போற்றப்படலானார் இவ்வாலயம்
பிரம்மாவால் உண்டான பிரமம் தீர்த்தக் குளத்தின் கரையில் அமைந்துள்ளது. மேலும் இங்குள்ள
சிவாலயம் நாட்டுக் கோட்டை நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்பட்டு, சிறப்புற பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இங்கு காணப்படும் கொடி மர விநாயகரை
வணங்கி, கொடி மரம் - பலி பீடம் நந்திதேவரைக்
கடந்து செல்ல, கலைச் சிற்பங்கள் கொண்ட மூன்று நிலை
ராஜகேரபுரம் நம்மை வரவேற்கிறது.
கோயிலினுள்ளே இறைவனாகக் கண்ணாயிரநாதர்
நம் கண்களை நிறைக்கின்றார். சுவாமி சன்னிதிக்கு அடுத்து, தனிச் சன்னிதியில் அம்பாள் வீற்றருள்கிறாள்.
இங்கு தென் கோஷ்டத்தில் ஞான தட்சிணா மூர்த்தி காணப்படுகிறார்.
ஸ்வர்ணாகர்ஷண காலபைரவர் இங்கு விசேஷம்.
முதலாம் ராஜராஜ சோழனது நான்கு கல்வெட்டுக்கள் இங்கே ஆலயப் பிரகாரத்தில் காணப்படுகின்றன.
வைகாசி பிரம்மோற்சவம் இங்கு வெகு விசேஷமாக நடத்தப்படுகிறது.
மூலவர் கண்ணாயிர நாதர் மீது சாற்றி
எடுத்துத் தரும் கரிசலாங்கண்ணித் தைலம், பொன்னாங்கண்ணித் தைலம், தேங்காய் எண்ணெய் ஆகிய முக்கலவையான மூலிகைத் தைலத்தை தலைக்குத்
தேய்த்து நீராடி, சுவாமிக்கு
நிவேதிக்கப்படும் தேனில் ஊறிய அத்திப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வ்ந்தால், தீராத கண்நோய்கள் தீரும் என்பது பக்தர்களின்
நன்னம்பிக்கை!!.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
விநாயகர் : திருக்காரவாசல்: கடுக்காய் பிள்ளையார்! - விநாயகர் [ விநாயகர் ] | Ganesha : Thirukaravasal: Mustard Pillaiyar! - Ganesha in Tamil [ Ganesha ]