உலகின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் என்ற பெயரை நிரந்தரமாக தக்கவைத்துக் கொண்டிருப்பவர் திருப்பதி ஏழுமலையான்.
அதிசயங்கள் நிறைந்த திருவனந்தபுரம் தங்க கோவில் உலகின் நம்பர் ஒன் பணக்கார கடவுள் என்ற பெயரை நிரந்தரமாக தக்கவைத்துக் கொண்டிருப்பவர் திருப்பதி ஏழுமலையான். அப்படிப்பட்ட காஸ்ட்லி கோவில்கள் வரிசையில் கோவில், சமீப நாட்களாக பரபரப்பாக பேசப்படுவது திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி சில நாட்களுக்கு முன்பு இக்கோவிலில் உள்ள ரகசிய அறைகளை திறந்தபோது, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள தங்க. வைர நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. 18 அடி நீளம் கொண்டிருந்த தங்கத்தால் ஆன மாலை வெகுவாக பிரமிக்க வைத்தது. இவற்றோடு வரலாற்றுச் சிறப்பும் கொண்ட அந்தக் கோவில் பற்றிய தகவல்கள் உங்கள் பார்வைக்கும்... விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்று திருவனந்தபுரம் கோவில். இங்கு விஷ்ணு அனந்த சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருவனந்தபுரம் என்ற பெயர் இங்கு அருள்பாலிக்கும் இறைவன் அனந்த சயனனின் பெயரில் இருந்து வந்ததாகும். திருவாங்கூர் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இந்த கோவில் கி.பி. 10ம் நூற்றாண்டிலேயே இருந்ததை நம்மாழ்வார்களின் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது. சேரமான் பெருமான் இக்கோவிலை முதன்முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும், திருவிழாக்களுக்கும். ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவான மார்த்தாண்ட வர்மாவால் இந்தக் கோவில் கடைசியாக புதுப்பிக்கப்பட்டது. அவர் தமது ராஜ்ஜியத்தை இறைவனுக்கு அர்ப்பணித்தார். மற்றும் அவரும், அவரது வம்சத்தினரும் பத்மநாப தாசர்களாக, அதாவது இறைவனின் தொண்டர்களாக பணியாற்றுவதாக வாக்களித்தார்கள். இதன் மூலம் கடவுளான பத்மநாப சுவாமியே திருவாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. 100 அடி உயரம் கொண்ட இந்த கோவிலின் ராஜகோபுரம் 7 நிலைகளைக் கொண்டது. தாமரை மலர்கள் நிறைந்த பத்ம தீர்த்தத்தின் அருகில் இக்கோவில் எழிலுற அமைந்துள்ளது. கருங்கல்லில் செதுக்கிய தூண்களை கேரள கோவில்களில் பெரும்பாலும் காண முடியாது. இந்தக் கோவிலின் முன்புறம் காணப்படும் பிரம்மாண்ட கற்றூண்கள் தமிழக கட்டிடக் கலையை நினைவுபடுத்துகின்றன. இக்கோவிலின் கிழக்கு பக்கமுள்ள முதன்மை வாசல் நாடகசாலை என அறியப்படுகிறது. மலையாள மாதங்களான மீனம் மற்றும் துலாம் மாதங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும் திருவிழாக் காலங்களின்போது இந்த நாடகசாலையில் கதக்களி போன்ற நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கோவில் கர்ப்பக்கிரகத்தில், அனந்தன் அல்லது ஆதிசேஷன் என்று அழைக்கப்படும் நாகப்பாம்பின் மீது சயனித்திருக்கும் நிலையில் இறைவன் பத்மநாபர் பள்ளி கொண்டுள்ளார். நாகத்தின் முகம் மேல்நோக்கிக் காணப்படுகிறது. மகா விஷ்ணுவின் இரு தேவியரான ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோர் அவருடைய இரு பாகங்களிலும் வீற்றிருக்கிறார்கள். பிரம்மதேவன். மகாவிஷ்ணுவின் நாபியில் இருந்து வரும் தாமரை மலரில் வீற்றிருப்பதை காண முடிகிறது. இங்கு சயன ரூபத்தில் காணப்படும் மகா விஷ்ணுவின் விக்கரகம் 10,008 சாளக்கிராமங்களினால் வடிவமைக்கப்பட்டது. நேபாளத்தில் உள்ள புனித நதியான கண்டகி நதியின் கரைகளில் இருந்து மிகவும் கவனமாக இந்த சாளக்கிராமங்களை தேர்வு செய்ததாக கூறுகிறார்கள். முன்னதாக, இந்த சாளக்கிராமங்களின் மீது காட்டு சர்க்கரை யோகம் என வழங்கப்படும் ஒருவித சிறப்பான ஆயுர்வேத மூலிகைகளின் கலவை பூசி திருவனந்தபுரம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த மூலிகைக் கலவை சுவாமியின் விக்கிரகத்தை பூச்சிகள் மற்றும் இதர உயிரினங்கள் அண்ட விடாமல் தடுக்கும் சக்தி கொண்டதாகும். பொதுவாக கோவில்களில் தெய்வ விக்கிரகத்திற்கு நடைபெறும் புனித நீராட்டல் இங்கு கிடையாது. மலர்களால் மட்டுமே இங்குள்ள இறைவன் அர்ச்சிக்கப்படுகிறார். அதேநேரம், அபிஷேகத்திற்கு உற்சவ விக்ரகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பத்மநாபசுவாமியின் திருமேனியில் சூட்டப்பட்ட மலர்களை கைகளால் அப்புறப்படுத்துவதில்லை. மாறாக மயில் இறகை வைத்தே ஒவ்வொரு நாளும் வாடிய மலர்கள் நீக்கப்படுகின்றன. சுவாமியின் மீது படிந்திருக்கம் காட்டு சர்க்கரை யோகம் அழிந்து விடாமல் இருக்கவே இவ்வாறு செய்கிறார்கள். இக்கோவிலின் கர்ப்பக்கிரகம் ஒரே கருங்கல்லால் செதுக்கப்பட்டது. அதனால் இதனை ஒற்றைக்கல் மண்டபம் என்றும் அழைக்கிறார்கள். பிரம்மாண்டமான திருவுருவம் கொண்ட பத்மநாபசுவாமியை மூன்று வாயில்களில் இருந்து நாம் தரிசிக்கலாம். முதல் வாயில் வழியாக இறைவனின் அழகிய திருமுகம் மற்றும் அவர் கையின் அடியில் வீற்றிருக்கும் சிவலிங்கத்தையும் காணலாம். இரண்டாவது வாயில் வழியாக பத்மநாபசுவாமியின் நாபியில் இருந்து தாமரை மலரில் எழுந்தருளும் பிரம்மதேவனையும். ஸ்ரீதேவி மற்றும் பூதேவியையும் மகா விஷ்ணுவின் உற்சவ மூர்த்திகளையும் இதர விக்ரகங்களையும் தரிசிக்கலாம். மூன்றாவது வாயில் வழியாக இறைவனின் திருவடிகளை காணலாம். இங்கு பெருமாளுக்குப் படைக்கப்படும் முக்கிய நைவேத்தியம் அரிசியால் ஆன பிரசாதமாகும். மேலும், பல வகை பாயாசங்கள், உண்ணி அப்பம், மோதகம், வெல்லத்துடன் கூடிய அவல் பிரசாதம் ஆகியவையும் நைவேத்தியம் செய்யப்படுகின்றன. இந்தக் கோவிலின் சிறப்பு நைவேத்தியம் உப்பு மாங்காய். பழுக்காத மாங்காய்த் துண்டுகள் உப்புக் கரைசலில் ஊறவைத்து தரப்படுவதே இந்த பிரசாதம். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நடைபெறும் லட்ச தீபத் திருவிழா புகழ்பெற்றது. அந்த விழாவில் நூறாயிரம் அதாவது ஒரு லட்சம் எண்ணெய் விளக்குகளால் இக்கோவில் ஜொலிக்கும் அற்புதத்தை காணலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோவிலில் நடைபெறும் இரு உற்சவங்கள் புகழ்பெற்றவை. உற்சவம் முடியும் நாள் அன்று இக்கோவிலின் மூன்று மூலவர்களான பத்மநாபசுவாமி. நரசிம்ம சுவாமி மற்றும் கிருஷ்ணர் ஆகியோர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகன சேவையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவார்கள். தொடர்ந்து கடற்கரையில் ஆராட்டு எனப்படும் புனித நீராட்டுதல் வைபவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் பூர்வீக வரலாறு பற்றிய பல செவிவழிக் கதைகள் கூறப்படுகின்றன. அதுபோன்ற ஒரு கதை: ஒருமுறை திவாகர முனிவர், ஸ்ரீகிருஷ்ணரின் தரிசனம் பெற ஏங்கினார். அவரிடம் திருவிளையாடல் புரிய ஆசைப்பட்ட கிருஷ்ணர், மிகவும் குறும்புக்கார பாலகன் ரூபத்தில் அவர் முன் தோன்றினார். முனிவர் பூஜைக்காக வைத்திருந்த ஒரு சாளக்கிராமத்தை சிறுவனாக வந்த கிருஷ்ணர் எடுத்து விழுங்கி விட்டார். இதைக் கண்ட முனிவர் கோபம் கொண்டார். தப்பியோடிய சிறுவனை துரத்தினார். ஓரிடத்தில் மரத்தின் பின்னால் சென்று ஒளிந்து கொண்டான் சிறுவன். அக்கணமே மரமும் கீழே விழுந்தது. முனிவர் பதறிப்போனார். சிறுவனுக்கு என்ன ஆயிற்றோ என்று அஞ்சினார். அப்போது, கீழே விழுந்த மரம் அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் விஷ்ணுவின் உருவத்தில் காட்சியளித்தது. முனிவரும், அந்த மரம் விஷ்ணுவின் ரூபமாகும் என்பதை புரிந்து கொண்டார். கீழே சரிந்து அனந்த சயனத்தினாலான விஷ்ணுவின் திருவுருவத்தில் காட்சித் தந்த அந்த மரம் மூன்று மடங்காக அளவில் சுருங்கி தனக்கு காட்சி தர வேண்டும் என்று முனிவர் வேண்டினார். மகாவிஷ்ணுவும் முனிவரின் கோரிக்கையை ஏற்று அவ்வாறு காட்சித் தந்தார். அவரே பத்மநாபசுவாமி ஆவார். மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம். - தமிழர் நலம்தலபுராணம்:
ஆன்மீக குறிப்புகள் : அதிசயங்கள் நிறைந்த திருவனந்தபுரம் தங்க கோவில் - ஆன்மீக குறிப்புகள், தலபுராணம் [ ஆன்மீகம் ] | Spiritual Notes : Thiruvananthapuram Golden Temple full of wonders - Spiritual Notes, Mythology in Tamil [ spirituality ]