எண்ணங்கள்

மனதின் விளையாட்டுக்கள்

[ ஞானம் ]

Thoughts - Mind games in Tamil

எண்ணங்கள் | Thoughts

சமஸ்காரம், மற்றும் ஆழத்தில் உள்ள பல உள்ளுணர்வு களின் பதிவுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் ஆசைகளாக உருவாகின்றன.

எண்ணங்கள்

எண்ணங்கள் எவ்வாறு உருவாகின்றன?

சமஸ்காரம், மற்றும் ஆழத்தில் உள்ள பல உள்ளுணர்வு களின் பதிவுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் ஆசைகளாக உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் எண்ணங்களை புத்தி ஆராய்ந்து சில சமயங்களில் அந்த எண்ண உருவத்தில் இருக்கும்போதே அது சரியல்ல எனக்கருதி அழித்து விடலாம். அல்லது அது சரி எனக்கருதினால், அதை செயல்படுத்தலாம். இவ்வாறு புத்தி நிர்ணயம் செய்வதற்கு ஆதாரம், ஆத்மாவின் சமஸ்காரம்தான். நாம் செயல்படும்விதம், செயல்களின் பலன்கள், மற்றும் ஐம்புலன்களின் வாயிலாக வெளி உலகத்திலிருந்து நாம் அடையும் அனுபவங்கள் ஆகியவை புதிய சமஸ்காரங்களை உருவாக்குகின்றன அல்லது பழைய சமஸ்காரங்களை உறுதிப்படுத்துகின்றன; அல்லது பழைய சமஸ்காரங்களை அழிக்கின்றன. ஒரு செயல் பலமுறை செயல்படுத்தப்படும்போது, அதுவே ஒரு ஆழமான சமஸ்காரம் ஆகிவிடுவதால், அந்த சமஸ்காரம் மீண்டும் ஒரு சமயத்தில் தலை தூக்க சந்தர்ப்பம் ஏற்படுகிறது. இதையே பழக்கம் என்கிறோம். ஆனால் பெறும்பாலான செயல்கள் மேலோட்டமாகவே பதிவாவதால், அதை ஆத்மா உணர்வதில்லை. ஆழமாகப் பதிவாகும் பதிவுகள், கடந்த கால நினைவுகளாக காப்பாற்றப்படுகின்றன.

 

எண்ணத்தின் தன்மை

சில அனுபவங்கள் உயர்ந்தவையாகவும், ஆத்மாவுக்கு நன்மை அளிப்பவையாகவும் இருக்கும்போது, வேறு சில அனுபவங்கள் தீமை விளைவிப்பவையாக அமைகின்றன. இதன் ஆதாரத்தில் தான் எண்ணங்களின் தன்மை அமைகிறது. ஒரு கெட்ட எண்ணம் என்னிடத்தில் தோன்றும்போது, இது என்னுடைய தீய சமஸ்காரத்தின் காரணமாகத் தோன்றுகிறதா என்று என்னையே நான் வினவுகிறேன். இந்த எண்ணத்தை செயல்படுத்தினால் ஆத்மாவுக்கு தீமை ஏற்படுமா? ஆத்மா அமைதியிழந்து விடுமா? இது மற்றவர்களுக்கு துக்கம் அளிக்கவல்லதா? அல்லது இந்த எண்ணம் ஒரு நல்ல சமஸ்காரத்தின் அடிப்படையில் எழுகின்றதா? இது மற்றவர்களுக்கும் எனக்கும் சுகம் அளிக்கவல்லதா? என்று பல சந்தேகங்கள் தோன்றுகின்றன.

 

எந்த எண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது?

செயலுக்கும் அனுபவத்திற்கும் ஆதாரம் எண்ணங்கள்தான். ஒரு தூய்மையான அனுபவத்தை அடைய ஆசை அத்துடன், எண்ணத்தின் தரம் பற்றிய முக்கியத்துவத்தின் அறிவு இருந்தால், இத்தகைய நற்பலனை அளிக்கக்கூடிய உயர்ந்த எண்ணமே மனதில் எழும். இதனால், செயலால் விளையும் பலனும் உயர்ந்ததாகவே இருக்கும்.

அன்பு, அமைதி, ஞானம், சக்தி, ஆனந்தம், திருப்தி உயர்ந்த அனுபவம் ஆகிய எந்த உயர்ந்த ஒன்றையும் அடையும் ஆசை ஏற்படும்போது, இதற்கு மாறாக துன்பம், அமைதியின்மை, திருப்தியின்மை ஆகியவற்றை ஏற்படுத்தவல்ல தீய சமஸ்காரங்களை அழிக்கவைண்டும். மனதில் உருவாகும் எந்த எண்ணத்தை செயல்படுத்தலாம் என்று நிர்ணயம் செய்வது புத்திதான்.

 

புத்தி (வில் பவர்) சுயக் கட்டுப்பாடு

நமது நன்மைக்காக சில சித்தாந்தங்களை நடைமுறையில் கொண்டுவருவதற்காக, அல்லது தீமை விளைவிக்கவல்ல செயலை தடுத்து நிறுத்துவதற்காக, (வில் பவர்) மனோபலம் அதாவது சுயக் கட்டுப்பாட்டை கையாள வேண்டியிருக்கிறது. இது ஆத்மாவின் சக்தியைப் பொறுத்துள்ளது. ஆத்மாவின் சக்தி அல்லது பலவீனம் பற்றி குறிப்பிடும்போது, புத்தியையே நாம் குறிக்கிறோம். ஒரு பலவீனமான ஆத்மாவின் புத்தியானது, மனதில் எழுகின்ற எண்ணங்களைக் கட்டுப்படுத்த இயலாது வாளாவிருக்கிறது. சமஸ்காரம் காரணமாக மனதில் பல எண்ணங்கள் கட்டுப்பாடின்றி எழுகின்றன. அல்லது சூழ்நிலையின் காரணமாகவோ, அல்லது மற்றவர்களின் மனோபாவனைக்கு ஏற்றவாறோ எண்ணங்கள் எழுகின்றன. ஆனால் சக்தி நிறைந்த ஆத்மா வெளி உந்துதலினால் பாதிக்கப்படாமல், தான் விரும்புவதை அனுபவம் செய்ய இயலுகிறது.

இராஜயோகம் மூலமாக புத்தியைக் கட்டுப்படுத்த இயலுகின்ற சக்தியை ஆத்மா அடைகிறது. ஒரு கலவரம் நிறைந்த சூழ்நிலையிலும், ஒரு இராஜயோகி நிலைகுலையாமல், அமைதியுடன் காணப்படுவார். அவருடைய அமைதி மற்றவர்களுக்கும் ஆறுதல் அளித்து அமைதியுடன் இருக்க ஊக்கம் அளிக்கும். பலவீனமான ஆத்மா புயல் காற்றில் சுழலும் இலை போல நிலை குலையும்போது, சக்திமிக்க ஆத்மா, கவலை ஏதுமின்றி நிலையாக இருப்பார்.

 

மனதின் விளையாட்டுக்கள்

ஆத்மாவினுள் என்ன நடைபெறுகிறது என்பதைப் பார்ப்போம். மனம் ஒரு கால்பந்து விளையாட்டு மைதானம் போன்றதாகும். ஒருபுறம் சமஸ்காரத்தின் கட்சி; அதன் விளையாட்டு வீரர்களாவது: பழக்கங்கள், நம்பிக்கை, நினைவுகள், குணநலன்கள் மற்றும் உள்ளுணர்வு. மறுபுறம், புத்தியின் கட்சி. அதன் விளையாட்டு வீரர்களாவது; நிர்ணய சக்தி, பகுத்தறியும் சக்தி, உணரும் சக்தி, சுயகட்டுப்பாடு என்கிற சக்தி ஆகியவை யாகும். ஒரு பலவீனமான ஆத்மாவிற்குள், சமஸ்காரம் என்கிற கட்சி, மிகுந்த பலசாலியாக இருப்பதால், அது பலவிதமான ஏமாற்று வித்தைகளைக் கையாண்டு, புத்தியின் கட்சியைத் தோற்கடிக்க எத்தனிக்கிறது. புத்தியின் கட்சி பலவீனமாக இருப்பதால், இந்த விளையாட்டை எவ்வாறு விளையாடுவது என்பது புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. இக்கட்சியின் கோல் கீப்பர், வில் பவர். (மனசாட்சி) சமஸ்காரத்தின் கட்சியின் விளையாட்டு வீரர்களான பழக்கங்கள் மற்றும் பலவீனங்கள் இதுவரை பலமுறை வெற்றிக்கு அடிகோலியுள்ளனர். இந்த முறையும் அக்கட்சி வெற்றி பெற்றால் தப்பு ஒன்றுமில்லை என்று கோல் கீப்பரான வில் பவர் மனம் தளர்ந்து கருதுகிறது. சமஸ்காரத்தின் கட்சி நல்ல கட்சியாக இருந்தால், அதனால் தவறு ஏதும் இல்லை. ஆனால், அது பொய் புரட்டு, அபவித்திரம் நிறைந்த கட்சி ஆகவே ஒவ்வொரு முறை அது அடையும் ஒவ்வொரு வெற்றியும் புத்தியின் கட்சியை மேன்மேலும் பலவீனமாக்கி வருகிறது. இவ்வாறு நடைபெறும் விளையாட்டினால் உண்டாகும் பல உணர்ச்சிகள், தாழ்ந்த எண்ணங்கள், அமைதியின்மை ஆகியவற்றால் மனம் துக்கம் அடைகிறது. இப்போது, மனம் அமைதியை அனுபவம் செய்ய விழைகிறது. தனக்கு துக்கம் தரும் விளையாட்டு வீரர்களை களத்திலிருந்து அகற்ற விரும்புகிறது. மனதின் மீது கவனம் இருக்கும்போது, அங்கு விளையாட்டு வீரர்கள் இல்லாததால், மனம் ஓரளவு அமைதியுடன் இருக்கிறது. ஆனால் அதன் கவனம் குறையும்போது, அதே விளையாட்டு வீரர்கள் மீண்டும் களத்தில் இறங்கி விளையாட ஆரம்பிக்கும்போது மீண்டும் அமைதியை இழக்கிறது. ஆகவே விளையாட்டு வீரர்கள் ஒருபோதும் களத்தில் இறங்காதவாறு பாதுகாப்பதற்காக ஒரு மந்திரம், அல்லது விளக்கொளியை உபயோகித்தால், மனதில் அமைதி நிலவும். ஆனால் இவற்றை உபயோகிப்பதில் கவனம் குறைந்தால், மீண்டும் அமைதியைக் குலைக்க அதே விளையாட்டு துவங்கிவிடும். ஆகவே இத்தகைய தாற்காலிகமான பாதுகாப்பு உசிதமானதாகத் தெரிவதில்லை. ஆகவே நிரந்தரமான அமைதியை மனம் நாடினால், இந்த விளையாட்டு வீரர்களை நிரந்தரமாக மாற்றிவிட வேண்டும். இதற்கு மனதிற்கு அறிவும் (ஞானம்), சக்தியும் தேவை. அப்போது தான் சமஸ்காரத்தின் பழைய விளையாட்டு வீரர்களுக்கு சரியானபடி விளையாடுவதற்கு பாடம் கற்பித்தால்தான், அவர்கள் மீண்டும் ஏமாற்றி வெற்றி அடைய எத்தனிக்க மாட்டார்கள். அப்போதுதான் களத்தில் அதாவது மனதில் நிரந்தரமான அமைதி நிலவும். ஆகவே இத்தகைய அமைதியை ஏற்படுத்துவதற்காக, புத்தியின் கட்சியையும் பலப்படுத்துவதற்காக, அதற்கு அறிவையும் சக்தியையும் அளிக்கவேண்டும். அறிவும் சக்தியும் இணையும் போது அமைதி தானாகவே உருவாகும். உண்மையில் தான் யார் என்பதை உணர்ந்து, பரமாத்மாவுடன் இணைப்பை ஏற்படுத்தும் போது, அதன் சக்தி பெருகுகிறது. அந்த சக்தி புத்தியைப் பலப்படுத்தி, பழைய அபவித்திரமான சமஸ்காரங்களைத் தூய்மைப்படுத்தி மனதில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்துகிறது. இந்த தியானத்தை ஒரு சில நிமிடங்கள் செய்தாலும்கூட பல அரிய மாற்றங்களை நீங்கள் உணரலாம். 


ஆன்மீக பணியில்!

தமிழர் நலம்

நன்றி...🙏

ஞானம் : எண்ணங்கள் - மனதின் விளையாட்டுக்கள் [ ஞானம் ] | Wisdom : Thoughts - Mind games in Tamil [ Wisdom ]