மூன்று வேளை உண்ணும் மனிதன், ஒரு வேளை மலம் கழிக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி.
சிக்கலற்ற கழிவு சீரான வாழ்வு
மூன்று வேளை உண்ணும் மனிதன், ஒரு வேளை மலம் கழிக்க வேண்டும் என்பது இயற்கையின் நியதி. நாவின் ருசிக்கேற்ப, மூக்குப் பிடிக்க உண்டு, கடைசியில் மலம் மந்தப் படும்போது, மனமும் மந்தப்பட்டுவிடுகிறது. அதாவது, மன ஓட்டமும் தடைப்பட்டு விடுகிறது.
தினசரி மல ஜலம் குறைவில்லாமல் கழிக்கும் மனிதனே ஆரோக்கியமானவன் ஆவான். அவனுடைய உடல் தெளிவானால் மனத்தெளிவு தானே அமையும். அவனால் தெளிவாய்ச் சிந்திக்க முடியும். செயல்படவும் முடியும்.
தொடர்ந்து வரும் மலச்சிக்கலே பல்வேறு நோய்களின் படிக்கல்லாய் அமைகிறது. கீழ் கண்ட நோய்கள், மலச்சிக்கலால் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
1. தொடரும் மலச்சிக்கலால், உடம்பில் வாயு மிகுந்து, வயிறு உப்ப ஆரம்பிக்கலாம்.
2. மலச்சிக்கலால் பசியின்மை ஏற்பட்டு, இரத்தக் குறைவு நோய் (anemia) உண்டாகலாம்.
3. நீடித்த மலச்சிக்கல் குடற்புண் நோய்க்குக் காரணமாகலாம்.
4. நாள்பட்ட மலச்சிக்கலால் குடல்வால் நோய் (APPENDICITIS) உண்டாகலாம்.
5. மலச்சிக்கலே மூலநோய்க்கு முன்னுரையாய் (PILES) இருக்கலாம்.
6. தாமதித்த மாதவிடாய் ஏற்பட, மலச்சிக்கலும் காரணமாகலாம்.
7. மலச்சிக்கலால் உறவு வேட்கை, உடல் இச்சை அதிகமாகலாம்.
8. மலச்சிக்கலால் புத்தி மந்தம் உண்டாகலாம்.
9. மலச்சிக்கலால் வாய் நாற்றம், உடல் நாற்றம் உண்டாகலாம்.
ஆக, மலச்சிக்கலே பல சிக்கலுக்கும் காரணம் என்பதைப் பட்டயம் எழுதிச் சொல்லலாம். மலச்சிக்கலற்ற நிலை என்பது, மலமானது ஆசன வாய்ப்பகுதியில் ஒட்டாத நிலையைக் குறிப்பதாகும். ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள் கூட மலச்சிக்கலற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே மலச்சிக்கலுக்கு உட்பட்டு வாழ்ந்து வருகிறான். ஆடு புழுக்கை போடுவதைப் பார்த்திருக்கிறீர்களா.....? கொஞ்சம் கூட அதன் புழுக்கை, ஆசன வாய்ப் பகுதியில் ஒட்டுவதில்லை. ஆனால் விலங்கினங்களையும் இன்று நாம் கெடுத்து விட்டோம்.
நாம் உண்ணும் உணவுகளைக் கொடுத்து, அவற்றையும் கழியச் செய்துவிட்டோம். ஆடு, மாடு, காகம், நாய் போன்ற மனிதனை அண்டிப் பிழைப்பை நடத்தும் அனைத்தும் கழிய ஆரம்பித்து விட்டன.
முதலில் மனிதன் தன் உண்ணும் பழக்கத்தை மாற்ற வேண்டும். மூன்று வேளையும் சமைத்த உணவுகளையே உண்ணும் மனிதன் ஒரு வேளையாவது இயற்கை உணவுகளை உண்ண வேண்டும். இயற்கை உணவில் அளவான அளவில்
உப்புச் சுவையும், ஓரளவு காரச்சுவையும், பெருமளவு நார்ச்சத்தும் உள்ளதால், மலம் தாராளமாய்ப் பிரியும். மலச்சிக்கலற்ற நிலையில் எந்நோயும் உடனடியாகக் கட்டுப்படும்.
பத்து பைசா செலவில்லாமல் மலச்சிக்கலை விரட்டும் உணவுகளை வகைப்படுத்துகிறேன். உங்கள் நெஞ்சில் பதித்துக் கொள்ளுங்கள்.
நாம் உண்ணும் உணவில் அளவுக்கு அதிகமாய் மாவுப் பொருட்கள், புளிப்பு உணவுகள், துவர்ப்பு உணவுகள் சேரும் பொழுது மலச்சிக்கல் உண்டாக ஆரம்பித்து விடுகிறது. எனவே இவற்றைத் தவிர்த்தல் வேண்டும்.
அதிக அளவில் அரிசி உணவுகள், எண்ணெயில் வறுத்த உணவுகள், ரசம் மற்றும் கடலைமாவில் தயாரித்த பஜ்ஜி, சொஜ்ஜி வகையறாக்கள், வாழைப்பூ போன்றவற்றை அளவோடு சேர்த்து மலச்சிக்கலில் இருந்து விடுபடுவது உத்தமம்.
மலச்சிக்கலை நீக்க மருந்துகள் தேவையில்லை. உங்கள் உணவைச் சீர்படுத்துங்கள். மலச்சிக்கல் தானே மறையும். மலச்சிக்கலை உடனடியாக நீக்க இயற்கை உணவுகளே மிகச் சிறந்த மருந்தாகும்.
சுத்தம் செய்த பொடுதலை - 1 கைப்பிடி.
இஞ்சி- 1 துண்டு
. பூண்டு- 3 பற்கள்.
புளி - தேவையான அளவு.
உப்பு
- தேவையான அளவு.
பொடுதலையைத் தேவையான அளவு எண்ணெயிட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு, புளி சேர்த்து அரைத்து, தேவையான அளவில் உப்பு சேர்த்துப் பயன்படுத்தவும். இத்துவையல் உடல் சூட்டைத் தணிக்கும். மலச்சிக்கலை ஓட ஓட விரட்டும்.
தோல் நீக்கிய கடுக்காய் - 100 கிராம்.
இந்துப்பு- 25 கிராம்.
இரண்டையும் தூள் செய்து சேர்த்து, இரவு உணவுக்குப்பின் 5 கிராம் அளவில் சாப்பிட்டு வர, மலம் தாராளமாய் இறங்கும். வயிறு சுத்தியாகும். குடற் புண் தீரும்.
நீலாவரை- 100 கிராம்.
ஓமம்- 10 கிராம்.
பெருங்காயம்- 10 கிராம்.
ரோஜாப்பூ - 50 கிராம்.
இவையனைத்தையும் ஒன்றாக்கித் தூள் செய்து கொள்ளவும். இதில் இரவு உணவுக்குப்பின் 5 கிராம் அளவில் சாப்பிட்டு வெந்நீர் அருந்த, மலச்சிக்கல், வாயு, வயிற்று உப்புசம் தீரும். குடற் பூச்சிகள் சாகும்.
கொட்டை நீக்கிய கடுக்காய் - அரை கிலோ.
புளித்த மோர்- ஒன்றரை லிட்டர்.
பெருங்காயத்தூள்- 50 கிராம்.
இந்துப்புத்தூள் - 100 கிராம்.
இவையனைத்தையும் ஒரு பாத்திரத்தில் வைத்து, ஒரு வாரம் வரை வெயிலில் வைக்கவும். பின்னர் கடுக்காயை மட்டும் தனியாக எடுத்து, குறைந்த அளவில் காரம், எண்ணெய்ச் சேர்த்து பத்திரப்படுத்தவும்.
இந்த ஊறுகாயில் இரண்டு துண்டுகள் இரவு உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். மலச்சிக்கல் தானே நீங்கும்.
ஓரளவு பழுத்த கொய்யா - 3 எண்ணிக்கை(150 கிராம்).
வாழைப்பழம்- 1.
ஓமத்தூள் - 5 கிராம்.
ஏலக்காய் தூள் - 3 சிட்டிகை.
திராட்சை பழச்சாறு - 200மிலி.
முதலில் திராட்சையைச் சாறெடுத்து, அதில் ஓமம், ஏலக்காய் சேர்த்து, பின்னர் வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும். பின்னர் கொய்யாப்பழத்தைச் சிறுதுண்டுகளாக அரிந்து இத்துடன் சேர்த்துப் பயன்படுத்தவும்.
இதை இரவு உணவுக்குப்பின் 50 கிராம் அளவில் சாப்பிட மலச்சிக்கல் முற்றிலும் நீங்கும். உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள், இதனையே இரவு உணவாகக் கொண்டால் ஒரே மாதத்தில் மிகச்சிறந்த பலனைப் பெறலாம்.
அகத்திக் கீரை - ஒரு கைப்பிடி.
வெந்தயக் கீரை - ஒரு கைப்பிடி.
ஓமம் - 5 கிராம்
. மிளகு - 5 கிராம்.
சீரகம் - 5 கிராம்
பூண்டு - 5 பற்கள்.
காய்ந்த மிளகாய் - 3 எண்ணிக்கை.
உப்பு - தேவையான அளவு.
பெருங்காயம் - தேவையான அளவு.
தண்ணீர் - அரை லிட்டர்.
உப்பு, பெருங்காயம் தவிர அனைத்தையும் தண்ணீர்விட்டு நன்கு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்து, தேவையான அளவில் உப்பு, பெருங்காயம் சேர்த்துச் சாப்பிட, மலச்சிக்கல், வாயு, வயிற்று உப்புசம், குடற்புண் ஆகியன தீரும்.
மலச்சிக்கலே பல சிக்கலுக்கும் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஒருவேளை இயற்கை உணவே மலச்சிக்கல் நீக்கும் மா மருந்தாகும். இங்குக் கூறப்பட்டுள்ள உணவு முறைகளில் ஏதேனும் ஒன்றை முறையாய்ப் பயன்படுத்துங்கள். சிக்கலில் இருந்து விடுபடுங்கள்.
ஆரோக்கிய குறிப்புகள் : சிக்கலற்ற கழிவு சீரான வாழ்வு - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Uncomplicated waste balanced life - Health Tips in Tamil [ Health ]