'கலிக்கும், கிலிக்கும் கந்தனை எண்ணு!...' என்பார்கள். (கலி என்றால் வறுமை, கிலி என்றால் பயம்)
வாட்டம் போக்கும் வட்டமலை முருகன்!
'கலிக்கும், கிலிக்கும் கந்தனை எண்ணு!...' என்பார்கள். (கலி என்றால் வறுமை, கிலி என்றால் பயம்)
கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவும்
குகனாகவும். பற்றற்ற வாழ்வின் பக்குவத்தை உணர்த்தும் தண்டாயுதபாணியாகவும், இல்வாழ்க்கைக்குத் தேவையான நலம், பலம், வளம் என்ற மூன்றையும் தருகின்ற கல்யாண
சுப்ரமணியராகவும், அழகு-
அறிவு - வலிவு புகழ் உறுதி உயர்வு தரும் ஆறுமுகனாகவும், ஞானமார்க்கத்திற்கு வழி காட்டும் கோவணாண்டியாகவும், பக்தர்களின் இதய கமலத்தில் ராஜாதி ராஜனாகவும்
விளங்கி வரும் வேலாயுதசுவாமியின் ஆலயம் வட்டமலை என்றழைக்கப்படும் சந்திரகிரி மலை மீது
மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது.
ஏழ் தலமும் புகழ்கின்ற காவிரியின் கிழக்கில், நாமக்கல் மாவட்டம், பவானிகுமாரபாளையம் நகரின் நுழைவுவாயிலாக, கத்தேரி கிராமத்தில் எதிர்மேடு வட்டமலை
என்ற முருகனின் இவ்வாலயம் பக்தர்களை ஈர்க்கும் காந்தமலையாகத் திகழ்கின்றது.
திருச்செங்கோட்டானைத் தரிசித்துப் பின், திருநணா என்று அழைக்கப்படும் பவானி
நகர் வழியாக அவிநாசி சென்ற ஞான மூர்த்திகள் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர்
மற்றும் அருணகிரி நாதர் சென்ற ராஜபாட்டையில் (தேசிய நெடுஞ்சாலையில்) இந்த வட்டமலை முருகனின்
குன்று அமைந்திருக்கிறது.
இந்தத் தொன்மையான, சுமார் முன்னூறு ஆண்டுகள் பழமையான திருக்கோயில்
இருந்த இடத்தில் பக்தர்களின் பக்தி வெளிப்பாடாகப் பல ஆண்டு காலப் பெருமுயற்சியால் முற்றிலும்
புதிதாகவும், சிற்ப ஆகம நெறிப்படியும் பழனி ஸ்ரீ
பழனி யாண்டவர் சன்னிதி போன்று மேற்கு நோக்கி அமைந்தவாறு மிகப் பொலிவுடன் இவ்வாலயம்
கட்டப்பட்டுள்ளது.
இந்தப் பிரசித்திபெற்ற வேலாயுத சுவாமி
திருக்கோயில் மேற்கு நோக்கிய சாளாகார திருநிலைகளோடு சுற்று மதிற்சுவருடன், படிகள் ஏறுமுகமாகவும் கொண்டு பூலோக
சொர்க்கமாக, பார்க்கப் பார்க்கப் பரவசம் தரும் விதத்தில், காண்பவர் தம் மனம் நிறையும் வண்ணம்
வெகு அழகான குன்றின் மீது அமைந்திருக்கிறது.
கலியுக வரதனாகிய வேலாயுத சுவாமியின்
இவ்வாலயம், மலையைச் சுற்றி கிரிவலம் வரும் விதமாகவும்
காணப்படுகின்றது
பக்தர்கள் வாரி வழங்கிய நிதிச் செல்வத்தை
முறையாக நெறிப்படுத்தி, கருவறை
- நடு மண்டபம் - சுற்றுப்புற வழியுடன் கூடிய மஹா மண்டபம் - மூன்று நிலை கோபுரம் ஆகியவை
வெகு நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கின்றன.
மேலும், கன்னிமூல கணபதி, ஸ்ரீ காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்மன், வள்ளி தெய்வானை உடனுறையும் கல்யாண சுப்ரமணியர், வனதுர்க்கை அம்மன், இடும்பன், நாகர், நவக்கிரகங்கள், துவார பாலகர்களின் திருவுருவங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
சுமார் முன்னூற்றைம்பது படிகளில் ஏறித்
தரைமட்டத்திலிருந்து மலையின் உச்சிக்கு வந்து சேர்ந்ததும் மேற்கு நோக்கிப் பிரம்மாண்டமாய்க்
காட்சி தரும் இராஜகோபுரம், மலை
ஏறி வந்த களைப்பையே மறந்திடச் செய்கின்றது. அழகே உருவான வண்ண வண்ண சுதைச்சிற்பங்கள்
கோபுரத்தில் இடம் பெற்றிருப்பது நமது ஆன்மீக உணர்வைத் தூண்டும் விதமாக இருக்கின்றது.
வாட்டம் போக்கும் இந்த வட்டமலை முருகன்
மேற்குப் பார்த்து, கையில்
தண்டம் பிடித்து தண்டாயுதபாணியாக நின்ற திருக்கோலத்தில் அருள்கிறார். பழனிமலை மேல்
காட்சி தரும் முருகனும் மேற்கு நோக்கியே பக்தர்களுக்கு அருள்வதால் இக்காட்சி மிகவும்
அபூர்வமானது என்கிறார்கள். மேற்கு நோக்கி அருள்கின்ற தன்மை மிகவும் சக்திவாய்ந்தது
என்றும் கருதப்படு கின்றது. ஆகவே இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
வளர்ந்து வருகிறது!.
இவ்வாலயத்தின் மஹாகும்பாபிஷேகம் 1 -2-2009 தை மாதம் 19ஆம் தேதியன்று காலை 9 மணிக்கு நடந்தேறியது. அன்று ஆயிரக்கணக்காண பக்தர்களின் வருகையால்
சந்திரகிரி எனப்படும் எதிர்மேடு - வட்டமலை சொர்க்க பூமியாக, தேவலோகம் போன்று காட்சி அளித்தது!.
இந்த வட்டமலை முருகனின் சிறப்பு அம்சமாகக்
கூறப்படுவது. ஊமைகளைப் பேச வைத்ததும், பலருக்கு மழலைச் செல்வங்கள் அளித்துக் குடும்பத்தில் மகிழ்ச்சி
அலை ஏற்படுத்தியதும் தான். மருத்துவரால் தீர்க்க முடியாத பெருவியாதிகள் கூட இந்த வேலாயுதசுவாமியின்
பார்வைபட்டு நீங்கி இருக்கின்றன. ஜாதகப் பொருத்தம் சரியாக இருந்தும் திருமணம் ஆன முதலிரண்டு
ஆண்டிலேயே மனவேறுபாடு கண்டு தனித்தனியே பிரிந்து வாழும் தம்பதிகளின் ஒற்றுமை மேலோங்கவும்
இங்கே வந்து பிரார்த்தித்துச் செல்கிறார்கள். அப்படிப் பிரார்த்தித்த ஓரிரு மாதங்களிலேயே
அந்தத் தம்பதிகள் மனவேறுபாடுகள் நீங்கி, இல்லறத்தில் நிறைவான மகிழ்ச்சியைக் காண்கிறார்கள்.
இவ்வாலயத்திலுள்ள ராகு - கேது முன்னூறு
ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு வந்து பிரார்த்திப்பவர்களின் ராகு - கேது தோஷங்கள்
அகன்று, நவக்கிரகப் பீடைகளும் நீங்கிவிடுவதாக
ஐதீகம்!. கோயிலின் சுற்றுப் பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும் இந்த ராகு
- கேதுவைத் தரிசித்தால், விபத்துக்களின்
கோரப்பிடியில் சிக்கி உடற்சேதமோ, பொருட்சேதமோ
ஏற்படாமல் தடுத்துக் கொள்ளலாம் என்று அனுபவப்பட்ட பக்தர்களால் சொல்லப் படுகிறது. ஏழரைச்
சனியால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் குறைவதாகவும் கோவில் அர்ச்சகர் தெரிவித்தார்!.
இங்குள்ள ஸ்தல விருட்சம் வன்னி மரம் மிகவும் பழமையானது. இந்த வன்னிமரத்தை விசேஷ நாட்களில்
குழந்தை பாக்யம் வேண்டி நிறையப் பெண்கள் பக்தி சிரத்தையோடு சுற்றி வந்து வணங்குவதைக்
காணலாம்!.
வட்டமலை வேலாயுதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும்
திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன. இங்கு வந்து திருமணம் செய்து கொள்ளும் தம்பதியருக்கு
முதல் குழந்தை ஆண்குழந்தை யாகப் பிறக்கிறது என்பது அதிசயமான, ஆச்சரியம் தரும் செய்தியாக இருந்து
வருகிறது!!.
கொங்கு நாட்டின் குன்றுதோறாடும் குமரனின்
திருத்தலங் களில் ஒன்றாக விளங்கி வரும் வட்டமலை பக்தர்களை வெகு வாகக் கவர்ந்த மலை.
பிரதி செவ்வாய், வெள்ளி, ஞாயிறுகளில் இங்கே முருகனின் அருள்பெறப்
பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக வருவதைக் காணலாம்!.
முருகப்பெருமானால் உபதேசம் பெற்றவர்கள்
சிவபெருமானும், அகத்திய மாமுனியும்!. அகத்தியர், முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும்
தலங்களுக்கெல்லாம் பாத யாத்திரை சென்றார். ஒரு முறை அவர் கத்தேரி கிராமம் எதிர்மேடு
அருகேயுள்ள வட்டமலைக்கு வந்தார். அகத்தியருடன் நாரத முனிவர் உள்ளிட்ட பலரும் வந்தனர்.
அகத்தியர் இறைவன் முருகப் பெருமானுக்கு பூஜை, நைவேத்தியம் செய்ய நீரின்றித் தவித்தார்!. அவருக்கு தாகமும்
ஏற்பட்டது. தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் அகத்தியரின் மனக் குறையை உணர்ந்து, அவருக்குக் காட்சி தந்து மலையில் தம்
வேலை ஊன்றி ஓர் ஊற்று உண்டாக்கினார். உடனே நீர் பெருகிற்று!!. அகத்தியர் அனுஷ்டானங்களை
முடித்து, வழிபாடும் மிகச் சிறப்புடன் செய்தார்
என்று வரலாறு உள்ளது. முருகனின் கூர் வேலால் மலையில் ஏற்பட்ட ஊற்று, இன்றும் வற்றாமல் சுரந்து கொண்டிருக்கிறது!!.
மலை மேல் கம்பீரமாகக் காணப்படும் இராஜகோபுரம்
பேரழகு மிக்கது. அதன் முன்னர் தீபஸ்தம்பம். கோயிலுக்குச் செல்ல மலையின் கீழிருந்தே
விசாலமான படிக்கட்டுகள் அமைந்து இருக்கின்றன. படியேறிச் செல்லும்போது இருபுறமும் பச்சைப்
பசேலென்ற கண்ணுக்கினிய குளிர் மரங்களின் தோற்றம் மனதில் ரம்மியமான ஆன்மீக உணர்வை உண்டாக்குகிறது!
நாகதோஷம் அல்லது வேறேதேனும் தோஷங்களால்
திருமணம் தடை படுவோர்களும், மனதுக்குப்
பிடித்த வாழ்க்கைத் துணை அமையவேண்டும் என்று விரும்புபவர்களும் இத்தலத்திற்கு வந்து, வேலாயுதசுவாமியையும், இங்கே தனிச் சன்னிதியில் காட்சி தரும்
ராகு - கேதுவையும் வழிபட்டு, கோவிலில்
கொடுக்கும் அருட்பிரசாதத்தை வாங்கி உண்டால் மனம் போல் நல்வாழ்வு அமையும் என்று பக்தர்களால்
சொல்லப்படுகிறது!. இங்குள்ள வனதுர்க்கை அம்மனை வணங்குவது, தடையை நீக்கி வளம் சேர்க்கும், வரமளிக்கும் என்பது கண்கூடு.
இவ்வாலய கும்பாபிஷேகத்தைக் காணும் பேறு
வேண்டி கண்ணிழந்த பெண்ணொருத்தி வேலாயுத சுவாமியை மனமுருகப் பிரார்த்தித்தாள். நிஜமான
பிரார்த்தனைக்கு இந்த வட்டமலை முருகனின் அருள்பார்வை நிச்சயம் கிடைக்கும் என்பதற்குச்
சாட்சியாய், அப்பெண்ணின் கண்களுக்கு ஒளிகிடைத்த
சம்பவம் இப்பகுதியில் பெரும் வியப்பேற்படுத்தியிருக்கிறது!.
முருகனுக்கு உகந்த விசேஷ நாட்களான கந்த
சஷ்டி, மாதாந்திர கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், தமிழ் புத்தாண்டு போன்றவை இங்கே ரொம்ப
விசேஷம். மேற்குப் பார்த்த இந்த முருகனுக்கு, பங்குனி உத்திரத் திருவிழாவின் போது
சுமார் ஐநூறு பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு அன்னதானமும் நடைபெறுகின்றன.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
முருகன் : வாட்டம் போக்கும் வட்டமலை முருகன்! - முருகன் [ முருகன் ] | Murugan : Vattamalai Murugan is dying! - Murugan in Tamil [ Murugan ]