நோயில்லாமல் வாழ ஆசையா?

ஆரோக்கிய குறிப்புகள்

[ ஆரோக்கிய குறிப்புகள் ]

Want to live disease free? - Health Tips in Tamil

நோயில்லாமல் வாழ ஆசையா? | Want to live disease free?

நாம் அனைவருமே நோய் என்ற எமனிடமிருந்து தொலைவில் இருக்கவே ஆசை படுவோம்.

நோயில்லாமல் வாழ ஆசையா?

 

நாம் அனைவருமே நோய் என்ற எமனிடமிருந்து தொலைவில் இருக்கவே ஆசை படுவோம். அப்படி ஆசை மட்டும் கொண்டால் எப்படி உடம்பை சரியாக வைக்கமுடியும். சில முறையான பழக்க வழக்கங்கள் மேற்கொண்டால் உடம்பும், மனமும் எப்போதும் சரிவர செயல்பட்டு புத்துணற்சியுடனேயே காணப்படும். நம்மில் சிலர் இரவு தூங்கி காலையில் எழுந்திருக்கும் போதே சுறுசுறுப்பு இல்லமால் இருப்பார்கள். அவர்களுடைய மனசு நினைக்கின்ற வேகத்திற்கு அவர்களுடைய உடம்பு செயல்படுவது கிடையாது. அதிலும் பலர் தினமும் அடிக்கடி டீ குடித்தே நாளினை ஓட்டுவார்கள். இதை பற்றி விற்பனை பிரதிநிதிகளிடம் கேட்டால் அவர்கள் சொல்லுவார்கள் என்னுடைய சாப்பாடே சிங்கிள் டீயில் முடிந்து விடும் என்று பெருமையுடன் பீத்துவார்கள். இது தவறான முறை என்று அனைவருக்குமே தெரிய வந்து இருக்கும். இந்த பழக்க முறை நாளடைவில் நம்மை பாதித்து நம் உடம்பை கெடுத்து விடும். சரி இப்படியே வைத்துக் கொள்வோம் இப்படி டீ, காபி குடிப்பது, சிகரெட் பிடிப்பது இவற்றினைத் தவிர்த்து விட்டு வேறு ஏதாவது நல்ல பழக்க வழக்கங்களை மேற்கொண்டு நம்மை நல்ல முறைகளில் தொடர்ந்தால் நம்மை சுறுசுறுப்பாக செய்து நாம் பார்க்கும் வேலைகளையும் சுறுசுறுப்பாக்கி விடும். சரி எப்படி என்று பார்ப்போம். எப்பவுமே சிலருக்கு எழுந்தவுடன் கொஞ்சம் கூடுதலா சிறிது நேரம் தூங்க வேண்டும் என்று ஆசைத் தோன்றும். அது பரவாயில்லை நீங்கள் தூங்குங்கள். 10-20 நிமிடங்கள் கழிந்தப் பிறகு நீங்கள் எழுந்து சுறுசுறுப்பாக ஆகி விடுவீர்கள். எழுந்த உடன் இருந்த சோர்வானத் தன்மை என்பது நம் உடலிலே கொஞ்சம் நீர் வற்றிய தன்மையின் காரணமாகக் கூட இருக்கலாம் என்றுச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே கொஞ்சம் கூட தூக்கம் அதிகம் வர வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே காலையில் பல் தேய்த்த உடனேயே முகத்தில் நன்கு நீர் அடித்து கழுவலாம். உடனே சுத்தமான இரண்டு டம்ப்ளர் தண்ணீர் அருந்துங்கள். உங்களால் முடிந்தால் டீ, காபியினை நாள் முழுவதுமே தவிர்த்து விட்டு அடிக்கடி சுத்தமானத் தண்ணீர் மற்றும் வாரங்களில் குறைந்தப்பட்சம் இரண்டு நாட்களாவது இளநீர் குடிக்கலாம். காலையில் உடம்பை தியானம் மற்றும் கொஞ்ச நேரம் யோகா பயிற்சிகள் செய்து உடலை இயல்பு நிலைக்கு கொண்டு வருதல் என்பது அவசியமான ஒன்றாகும். அப்புறம் குளிர்ந்த நீரில் நன்றாக 'ஷவர்' முறையில் குளிப்பது என்பதும் ஒருவரை சுறுசுறுப்புத்தன்மையின் அளவு விகிதத்தை அதிகரிக்கும். நாம் கண்டிப்பாய் காலையில் "பிரேக்பாஸ்ட்" எனப்படும் காலை உணவு மிக மிக அவசியம். காலை உணவை தவிர்த்தல் என்பது அனைத்து நோயையும் நாமே அழைப்பதற்க்குச் சமம் ஆகும். அப்பேற்பட்ட காலியா இருக்கும் வயிறில் காலை உணவை தவிர்த்தால் நாம் காலி. முக்கியமாக காலை உணவில் நல்ல உணவுகளை அதாவது முழு தானியம், புரதம் சேர்ந்த உணவுகள், கொட்டை வகைகள், பழங்கள் எடுத்துக் கொள்வது சிறப்பாகும். நம்மில் இன்னும் சிலர் காலை உணவிலேயே பல எண்ணெய் பலகாரங்களை மற்றும் கேசரி, சர்க்கரைப் பொங்கல் என கட்டு கட்ட ஆரம்பித்து விடுவார்கள். இவர்களும் எளிதில் சோர்வடைந்து விடுவார்கள். நாம் பொங்கலை எடுத்துக் கொன்று எதாவது முக்கிய கூட்டங்களில் இருக்க நேரிட்டால் சும்மா கொட்டாவி விடுவதோடு தூக்கம் கண்களை இருட்டும். பொதுவாகவே பகலில் தூக்கம் வந்தால் உடம்பு சரி இல்லை என்றும், அதே இரவில் தூக்கம் வர வில்லை என்றால் மனது சரி இல்லை என்றும் சொல்வார்கள். நாம் உணவுகளை சரிவர மேற்கொண்டாலே நமக்கு ஆரோக்கியம் சொத்தாக அமையும். நாம் மத்தியானம் வரையிலாவது இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளாது இருப்பது இந்த மாதிரியான காலைச் சோர்வுகளை போக்க வல்லது. காலையில் மெது ஓட்டம். நாமே மார்கெட்டுக்குப் போயி காய்கறிகளை வாங்குதல், மற்றும் கடைகளுக்குப் போய் மளிகை சாமான் வாங்குதல் இது போன்ற வேலைகளுக்கு நடந்து செல்லுதல் நம் உடம்பை நல்ல ஆரோக்யமாக வைத்து இருக்க உதவும். நல்ல சுகாதாரமான வாழ்க்கை முறை, நல்ல காற்றை சுவாசித்தல், தேவையான அளவு மனிதருகேற்ற வயதின் அடிப்படையில் தூக்கம் இது போன்ற பழக்க வழக்கங்கள் அவசியம் ஆகும். ஆரோக்கியமான வழி முறைகளை மட்டுமே எப்போதும் எதிலுமே மேற்கொள்ளுங்கள். உணவு முறைகள், நம்முடைய பேச்சுக்கள், எண்ணங்கள், செயல்கள் அனைத்திலுமே ஆரோக்கியம் முக்கியமாக இருக்கும்படியும் ஆக்கப்பூர்வமான செயல்கள் இருக்குமாறும் இருத்தல் உடம்பு மற்றும் உள்ளத்திற்கு புத்துணர்வைக் கொடுக்கும். ஒரு பழக்கத்தினை சாதாரண மனிதன் தின  வழக்கத்திற்கு கொண்டு வர சுமார் ஒரு மண்டலம் 48 நாட்கள் அல்லது குறைந்தப் பட்சம் 21 நாட்களாவது தொடர்ந்து செய்ய வேண்டும் என்று ஆய்வாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். தொடர் முயற்சி என்பது நாம் செய்யும் செயல்களில் இருக்க வேண்டும். என்றைக்குமே நாம் உணவுகள் சமைப்பதை விட அதே சமையல் குறிப்பினை கொண்டு அடுத்தவர் செய்து உண்ணும் போது தான் அதை கூடுதல் சுவை போல உணர்வர் என்பது உளவியல் சொல்கிறது. அதே மாதிரி அறிவுப்பூர்வமான கேள்விகள் ஒன்றினை கேட்க நேரிடும் போது மனமானது ஆக்கப்பூர்வமான ஒரு ஐந்து நினைவுகளை மறந்து விடுகிறது என்றும் சொல்கிறார்கள். நாம் உணவுகளைப் பாதுகாப்பதற்க்கு வேண்டி சில பொருட்களை சேர்க்கும் பழக்கம் நம்மிடமே உள்ளது. பொதுவாக நாம் எளிதாக உப்புகளை கூட கூடுதல்  சேர்ப்போம். இவ்வாறு செய்யாமல் அந்தந்த நேரத்தில் அப்பப்ப புதியதாக செய்து சாப்பிடும் முறை மூலமாக ஒருவவருடைய மூளையானது கூர்மை கூடுதல் திறன் பெறுகிறதாம். மேலும் நாம் பெண் பார்க்கும் படலத்தில் கூட மணப்பெண்ணுக்கு சமையல் செய்யத் தெரியுமா? என்று கேட்பது கூட ஒருவித கவனத்தின் திறன்களை சோதித்தல் தானாம். சங்கோஜ குணம் கொண்டவர்கள் தன்னைப் பற்றி குறைவாகவே தன் மதிப்புகளை குறைத்தே மற்றவர்களிடம் சொல்வதுன்று. இந்த இடங்களில் நீங்களே உங்களால் உங்களுக்கு மதிப்பு கொடுக்க வில்லை என்றால் பிறர் எப்படி உங்களை மதிப்பர். தனிமையில் இருப்பது என்பது நாமே விரும்பி நாமே தனிமையை எடுத்துக் கொண்டால் அது இனிக்கும். சுகமாகும். ஏன் தனிமையில் தான் பல ஆரோக்யமான சிந்தனைகள் சில ஐடியாக்கள் வருவதும் இந்த தனிமையில் தான். ஆனால் தனிமையை பிறர் நமக்கு கொடுத்தால் வேதனைகள் தான் மிஞ்சும். அதுவும் வயதானவர்களின் தனிமை இன்னும் கொடுமை. அதுவே அந்த வேதனையே அவர்களின் நோய்க்கு முக்கிய காரணமாக அமையும். அதுபோல ஒரு செயலை செய்வதற்கு பலர் 'பிளான் ஏ', 'பிளான் பி' என்று தயாராக வைத்து இருப்பார்கள். 'பிளான் பி' என்ற ஒன்று உருவாகும் போதே 'பிளான் ஏ' என்பது சற்று வலிமை குறைந்து விடுகிறது. மேலும் உளவியல் படி பெண்களிடம் நாம் ஒரு கேள்விக்கு பதிலாகப் பொய் சொல்வது என்பது கடினமே. ஏனெனில் அதற்க்கும் ஒரு காரணம் இருக்கிறது. அநேக பெண்கள் நம்மை பற்றிய உண்மை அறிந்த பிறகே  கேள்விகளை கேட்க்க ஆரம்பிக்கிறார்களாம். இசைகளை கேட்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். அது நம்மை நம்முடைய மனநிலையை மாற்றுகிறது. மேலும் நான் நன்றாக தூங்குகிறேன். மற்றும் நன்றாக ஓய்வு எடுக்கிறேன் என்று நமக்கு நாமே சொல்லிப் பாருங்கள். நம் மூளையும் அதன் படியே புத்துணர்ச்சியாகவே இருக்கும். எப்போதுமே மனதில் மகிழ்ச்சியாய் இருப்பவர்களோடு நாம் இருந்தால் நாமும் மகிழ்ச்சியாகவே இருப்போம். மகிழ்ந்து மகிழ்விப்போம். மகிழ்வித்தும் மகிழ்வோம் என்பது சத்தியமான உண்மை. தினமும் சிறிதளவு மஞ்சளினை உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் போக்க ஏன் வராமல் இருப்பதற்கே உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றது. சிறிது நேரம் ஒரு 10 நிமிடமாவது அமைதியாக கண்களை மூடி அமர்ந்தால் நம்முடைய உடல் நல பாதிப்பினை பற்றி நம்மாலே உணர முடியுமாம். மேலும் நாம் மூச்சு பயிற்சியின் போது நாம் உடம்பின் அனைத்துப் பகுதிகளுக்குச் செலுத்தினால் பாதிப்பு அடைந்தப் பகுதிகளும் வலிமை பெற வாய்ப்புகள் இருக்கறது. மேலும் அமைதியாய் இருந்தாலே இங்கே பல விஷயங்களுக்கு பிரச்சனைகள் வராது. பிரச்சனைகள் வந்தாலும் தீர்வுகள் பிரச்சனைகளிலேயே இருந்து கிடைத்து விடும். படபடப்பின்றி பயமின்றி இருந்தாலே உலகத்தில் அதிகமாக உயரலாம். நிறைய சம்பாதிக்கலாம். சாதிக்கலாம். இந்த உடலை நோயிலில் இருந்து காப்பாற்ற, உள் உறுப்புகளை பாதுகாக்க, புதுசு புதுசாக வரும் நோய்களில் இருந்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள இந்த மருத்துவ உலகம் 'விழிப்புணர்வாக' பல செய்திகளை தினம் தினம் தொடர்ந்து அறிவுறுத்தி மக்களை காக்கத் தான் செய்கிறது. ஆனால் நமது உடல் கூட நமக்கு ஏதேனும் பெருசா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னே  பல நேரங்களில் அறிகுறிகளைக் காட்டி விடுகிறது. நாம் தான் அதன் மொழியினை கேட்பதற்கும், கவனிப்பதர்க்குமே தவறி விடுகிறோம். கவனித்தாலே நோய் குணமாக பாதி மருந்துக்கு சமம் ஆகும். 

 

இனி நீங்க தான் உங்க உடம்புக்கு டாக்டர்.

நமது உடம்புக்குள்ளே பல்லாயிரக்கனக்கான நோய்கள் தோன்றி நமக்குத் தெரியாமலே உள்ளேயே அழிந்து போகின்றன. அல்லது உடம்புக்குள்ளே இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி அவற்றை அழித்து விடுகின்றன. எப்போதாவது ஒருமுறை நோயை எதிர்த்துப் போராட முடியாமல் நோய் எதிர்ப்புச் சக்தி பின்வாங்கும் போதுதான் நோய் நமக்குத் தெரிய வருகிறது. உளவியலார் எல்லாவற்றுக்கும் மனோதைரியம் வேண்டும் என்று திருப்பி திருப்பிச் சொல்கிறார்கள். இந்த மனோ மனோதைரியத்தில் மிகச் சிறந்தது எது தெரியுமா? நமக்குள் தோன்றும் நோயை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைத்து விடுவது தான். இது அத்தனை எளிதான காரியம் அல்ல. ஏன்?

மனிதன் ஏதாவதொரு விதத்தில் பிறருடைய அனுதாபத்தைப் பெற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறான். இந்த அனுதாபம் ஒருவர்க்கு நோய் ஏற்பட்டிருக்கும் போது பிறரிடமிருந்து மிக எளிதாகக் கிடைத்துவிடுகிறது. அதனால் சின்ன தலைவலி என்றால் கூட ஒரு கலவரத்தை குடும்பத்தில் ஏற்படுத்தி விடுவார்கள். அப்படி ஒரு குணமும் அவர்களிடம் எப்போதுமே கூட வரும். அதில் அப்படியே இருப்பது கூட ஒரு அற்ப சொற்ப மகிழ்ச்சி எனக் கருதுவார்கள். உடல் ஆரோக்கியம் என்பது நோய் வராமல் இருப்பதல்ல. உடம்பு என்று இருந்தால் ஏதாவது ஒரு நோய் வந்து போய்க் கொண்டேதான் இருக்கும். ஆனால் நமக்குத் தோன்றுகின்ற நோயை பிறருக்குத் தெரியாமல் மறைத்துவிடும் மனோதைரியமும், நோயை முற்றவிடாமல் துவக்கத்திலேயே கிள்ளி எறிந்து விடுகிற புத்திசாலித்தனமும் எவருக்கு இருக்கிறதோ அவரே ஆரோக்கியமானவர் ஆகும். இந்த ஆரோக்கியம், மன வலிமை மிகப் பெற்ற ஞானிகளுக்கே வாய்க்கப் பெறுவதாகும். இந்த மன வலிமை உள்ள மனிதர் மிகச் சாதாரணமானவர் என்று நாம் கருதப்படுபவராக இருந்தாலும் அவர் ஞானிதான். சந்தேகம் தேவையில்லை. ஆனால், பிற துறைகளில் மனவலிமையால் வெற்றி பெற்றவர்களால் கூட இது சாத்தியமில்லை. அதனால்தான் நோயை பிறருக்குத் தெரியாமல் மறைத்துவிடுவது மிகப்பெரிய மனவலிமை என்று கருதப்படுகிறது. ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவருக்கு விடுறை எடுக்க இயலாத நிலை ஏற்படுகிறது. அவர்க்கு ஒதுக்கப்பட்ட விடுமுறை முடிந்து விட்டது. அல்லது விடுமுறை எடுத்தால் சம்பளம் 'கட்' ஆகிவிடுகிற சூழ்நிலை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அவருக்கு ஜலதோசம் பிடித்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அவர் வேலை பார்க்கும் போது பிறர் கானும்படி தேவையில்லாமல் முக்கைச் சிந்துவதும், உடலை நெட்டி முறித்து வளைத்து நெளிப்பதும் எதற்காக? உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கூட வேலைக்கு வந்துள்ளார் என்ற அனுதாபத்தையும், நல்ல பெயரையும் சக ஊழியர்களிடம் இருந்தோ, மேலதிகாரிகளிடம் இருந்தோ தட்டிச் செல்வதற்காகத் தானே? இந்தச் சூழ்நிலையில் "உடம்புக்கு என்ன செய்கிறது? என்று யாராவது கேட்கமாட்டார்களா?" என்ற எதிர்பார்ப்பு ஏராளமாக இருக்கும்.

கணவன் அலுவலகத்தில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் மனைவி தலையைப் பிடித்துக் கொண்டு, இடுப்பைப் பிடித்துக் கொண்டு உடல் நலம் சரியில்லாததை சைகை காட்டுகிறாள். எதற்காக? கணவனிடமிருந்து பொறுப்புள்ள மனைவி என்று பேர் வாங்குவதற்காகத்தான். தன் கணவன், "உடம்புக்கு என்ன?" என்று கேட்கமாட்டானா என்ற எதிர்பார்ப்பு மனைவியிடம் இருக்கத்தானே செய்யும்? இதுபோலவே உடல்நலம் சரியில்லாதபோது யாராவது நம்மைப் பார்த்து உடம்புக்கு என்ன என்று கேட்கமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது இயல்புதான். உடல் நலம் சரியில்லாதபோது பிறர், "உங்க உடம்புக்கு என்ன?" என்று கேட்டுவிட்டால் உள்ளம் குளிர்ந்து போகிறது.

யாருடைய கவனத்தையாவது நீங்கள் கவர வேண்டியிருக்கிறதா? அருமையான வழி ஒன்று இருக்கிறது. அவர் என்றாவது ஒருநாள் தலை கலைந்தோ, அல்லது சுறுசுறுப்பில்லாமல் எதையாவது சிந்தித்துக் கொண்டு ஓய்வாக அமர்ந்திருந்தாலோ, "ஏங்க, உடம்புக்கு முடியலையா?" என்று கேட்டுப் பாருங்கள். மனிதர் அப்படியே குளிர்ந்துபோய் விடுவார். ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியதைவிட அதிகமான மகிழ்ச்சி அவரிடம் காணப்படும். இப்படி நீங்கள் கேட்டது உண்மையான நண்பராக இருந்தால் சாகும் வரைகூட இதை மறக்காமல் நினைவில் வைத்திருப்பார். ஆனால் ஒன்று, உங்கள் கேள்வி இயற்கையாக அமைந்திருக்க வேண்டும். துளிக்கூட செயற்கை இழையோடக்கூடாது. ஆத்மார்த்தமாக உள்ளன்புடன் கேட்டல் அவசியம். அது அவர்களுக்கே தெரிந்து விடும். கடமைக்குனே கேட்குக்கிறீகளா? அல்லது அவரைப் பார்ப்பது போல வேறு எந்தக் கடமையும் உங்களுக்கு இல்லை என்ற நினைப்பில் கேட்குக்கிறீர்கள் என்பது வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிய வரும். நாம் கேட்கும்போது உள்ள ஆர்வத்திலும், கவனத்திலும் இது தெரிந்து விடும். மனைவி காலையில் சோர்வாக அமர்ந்திருக்கும் போது, "என்ன உடம்புக்கு சரியில்லையா? பரவாயில்லை சற்று ஓய்வெடு. டிபன் கடையில் சாப்பிட்டுக் கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டால் போதும். மனைவிக்குப் பட்டுச் சேலை எடுத்துக் கொடுப்பதைவிட பரபரப்பை ஊட்டும். அதைவிட, "பழைய சோற்றில் கொஞ்சம் தயிரை ஊற்றி, ஊறுகாய் வைத்துவிடேன்" என்று சொல்லிப் பாருங்கள். ஒரு நெக்லஸ் வாங்கிக் கொடுத்ததைவிட கூடுதலாக நெஞ்சம் நெகிழ்ந்து போவாள். நமக்கு நாமே மருத்துவர் ஆவதற்கு முன்பாக ஆங்கில மருத்துவர்கள் அறியாமையால் செய்கிற வைத்தியம் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல் நலம் சரியில்லாதபோதுதான் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மீது எவ்வளவு பிரியமாக இருக்கிறார்கள் என்பதைக் கணிக்க முடிகிறது. அதனால் "உங்க உடம்புக்கு என்ன?" என்று கேட்பதைப் பலரும் விரும்பவே செய்கிறார்கள். ஆனால், இந்தக் கேள்வியை உடல்நலம் இல்லாமல் மருத்துவரை நாடிச் சென்று, ஒரு மணிநேரம் வரிசையில் அமர்ந்து நெளிந்து வளைந்து உள்ளே போய் உட்கார்ந்தவுடன் மருத்துவர் கேட்கலாமா என்பதுதான் விவாதத்திற்குரிய விசயம். அதை அடுத்தக் கட்டுரையில் பார்ப்போம். மருத்துவர் கேட்கக் கூடாத கேள்விகள், கேட்ககூடிய கேள்விகள் என்னென்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம். நாம் இந்தக் கட்டுரையில் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ வேண்டும் என்றால் நமக்கு நாமே வைத்தியராகிக் கொள்ள வேண்டும்.

உடல் நலத்தில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டுமே தவிர உடம்பு உடம்பு என்று எதற்கெடுத்தாலும் மாயக்கூடாது. அப்படி அதீத அக்கறை எடுத்துக் கொண்டோமானால் கொஞ்ச நாளிலேயே ஒரு கெட்ட முதலாளிபோல் நம்மைப் படாத படுத்திவிடும். உடம்பை வேலைக்காரன் போல் வைத்திருந்தாலும் அது சொன்னபடி கேட்காது. ஒரு வேலைக்காரன் தன் முதலாளிக்குப் பயப்படுவது போல் கையைக் கட்டிக் கொண்டு பாசாங்கு செய்வான். அவன் மனமோ அவரைக் கண்டபடித் திட்டிக் கொண்டிருக்கும். இப்படிப்பட்ட வேலைக்காரன் போல் நம் உடம்பு பல சமயங்களில் நமக்குப் பயப்படுவதைப் போல நடிக்கும். சரியான சமயத்தில் நம்மைச் சிக்கலில் மாட்டி விடும்.

உடம்பை ஒரு சின்னக் குழந்தைக்கு ஈடாக ஒப்பிடலாம். ஒரு குழந்தை கடையில் இருக்கும் விலை உயர்ந்த பொம்மை ஒன்றை வேண்டும் என்று கேட்கிறது அதை வாங்கித் தரும் அளவுக்கு வசதி இல்லை. அதனால் அம்மா, அதை வாங்கிக் கொடுக்க முடியாது என்று அதட்டி வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விடுகிறாள். அந்தக் குழந்தை ஆத்திரத்தை எல்லாம் அம்மா சோறு ஊட்டும் போது காட்டி விடும் தட்டைத் தூக்கி தூர எறிந்துவிடும்

குழந்தை விலை உயர்ந்த காரைக் கேட்டு அடம் பிடிக்கும் போது "என் செல்லக்குட்டிக்கு அல்வான்னா பிடிக்குமே" என்று ஏமாற்றி ஸ்வீட் கடையில் ஐந்து ரூபாய்க்கு அல்வா வாங்கிக் கொடுத்து விட்டால் விலை உயர்ந்த காரை மறந்து விடும். இதுபோல் ஒரு விலை உயர்ந்த ஓட்டலைப் பார்த்ததும் அங்கே சாப்பிட வேண்டும் என்று வயிறு அடம் பிடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்... என்ன செய்வது? "சரி, என்னைக்கும் டீ தான சாப்பிடுவேன். வா... இன்னைக்கி மெரண்டா வாங்கித் தர்றேன்' என்று சமாதானம் சொல்லிவிட்டால் அடங்கிவிடும். உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறது. சீனி சாப்பிட வேண்டும் என்று உடம்பு அடம் பிடிக்கிறது. என்ன செய்வது?

"இங்க பாரு... தப்புச் செய்றவங்களுக்கு தண்டனை உண்டு. கொஞ்சம் சீனி வேண்ணா சாப்பிட்டுக்கோ..... அதச் சாப்பிட்டுட்டு ரெண்டு பச்ச மிளகாயையும் தின்னிறணும் சம்மதா" என்று கேட்டால் சுதி அடங்கிப் போகும். உடம்பை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்பதற்கு நான் ஒரு உண்மை நிகழ்ச்சியைச் சொல்கிறேன். ஒருமுறை மதுரைக்கு ஒரு வேலை விசயமாக திருநெல்வேலியிலிருந்து வந்தேன். வேலை முடிந்து கிளம்பலாம் என்று எண்ணும்போது பையில் பார்த்தால் நூற்றி முப்பது ரூபாய்தான் இருந்தது. கட்டணம் போக குறைவான தொகை தான் மீதம் உள்ளது. இன்னும் செலவுகள் இருக்கிறது. எப்படி செல்ல வேண்டும். என்ன செய்வது? சில இடங்களில் குறைந்த தொலைவில் உள்ள பயணச் செலவுகளுக்கு நடந்தே செல்வது என்று முடிவு செய்தேன். வழியில் பத்து ரூபாய்க்கு கடலைப் பருப்பை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கொறித்துக் கொண்டே நடந்தே சென்றேன். வழியில் ஒரு டீக்கடையில் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்ததும் வயிறு திம்மென்று ஆகிவிட்டது. கடலைப் பருப்பை அரை மணி நேரம் கூடி சாப்பிட்டதால் நான் நிறைய noiசாப்பிட்டிருப்பதாக வயிறு ஏமாந்து விட்டது. நானும் அப்படியே செலவுகளை குறைத்து மினிமலிசம் என்றுச் சொல்வார்களே அதை மனதில் பின்தொடருகிறோம் என்ற நினைப்பில் ஊர் போய்ச் சேர்ந்தேன். கையில் ஆறு ரூபாய் மிச்சம் வேற இருந்தது. இதுபோல் வயிற்றை ஏமாற்றத் தெரிந்தால் நோய் நம்மை லேசில் அண்டாது. முன்பு நான் என் வயிற்றை வேலைக்காரன் போல் அடிமையாக வைத்திருந்தேன். அதனால் கார்த்திகை அன்று விரதம் இருக்கும்போது, "இன்னைக்கி சாப்பாடெல்லாம் கேக்கப்படாது" என்று உத்தரவு போட்டு விடுவேன். ஆனால், என் வயிற்றை நான் நட்பாக்கிக் கொண்ட பிறகு, "இன்னைக்கி கார்த்திகையாமே... சாப்பாடு..." என்று நான் முடிக்கும் முன்பாகவே வயிறு, "பரவாயில்ல..." என்று எனக்குச் சமாதானம் சொல்லிவிடும். இதுபோல் ஆரோக்கியமானவராகத் திகழ வேண்டும் என்றால் முதலில் வயிற்றை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடம்பில் தோன்றுகிற நோய்களில் தொன்னூறு சதவீதம் வயிற்றைக் கட்டுப்படுத்தாததால் தான் வருகிறது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டாலே போதும். வயிறு பசிக்கும் போது சமாதானம் சொல்லி விடலாம். நோய் வந்து விட்டால் வயிறு நம்மைப் படாத பாடுபடுத்திவிடும். அதைச் சாப்பிடலாமா, இதைச் சாப்பிடலாமா என்று எதையாவது சாக்கடையில் ஊற்றுவதுபோல் ஊற்றிக் கொண்டே இருக்கச் சொல்லும். இதைவிடக் கொடுமையானது என்னவென்றால் நோய் வந்து விட்டால், அந்த மாத்திரையைச் சாப்பிடு.... இந்த டாக்டரிடம் போ..... நல்ல டானிக் இருந்தால் வாங்கிச் சாப்பிடு... என்று உடம்பும் வயிறும் படாத பாடு படுத்திவிடும். அதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் - உங்களுக்கு நீங்களே மருத்துவராக வேண்டும் என்றால் - வயிற்றைப் பக்குபவப்படுத்தி நட்பாக்கிக் கொள்ளுங்கள். வயிறு வசமாகிவிட்டால் உடம்பும் வசப்பட்டு விடும். எந்த அளவுக்கு உங்களுக்கு நீங்களே வைத்தியராகிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் வாழ முடியும்.

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

 

ஆரோக்கிய குறிப்புகள் : நோயில்லாமல் வாழ ஆசையா? - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Want to live disease free? - Health Tips in Tamil [ Health ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்