சுறுசுறுப்பின்மை என்பது சோம்பலின் நண்பன். நெருங்கிய தோழன்.
சுறுசுறுப்பின்மை போக்க வழிகள் இனி உங்கள் வாழ்க்கையில் வலிகள் இல்லை
சுறுசுறுப்பின்மை
சுறுசுறுப்பின்மை என்பது சோம்பலின் நண்பன். நெருங்கிய தோழன். இவனை நம் தோளில் தொங்க இடம் கொடுத்தால் அவனுடைய நண்பர்கள் ஆகிய சோம்பல், நேரத்தை வீணாக கழித்தல், ஒழுக்கமில்லாமல் வாழ்கையை நடத்துதல், நாம் எந்த புது செயலையும் செய்ய விடாமல் தள்ளி போட்டு கொண்டே இருக்கும் தன்மை, எதிலும் ஆர்வம் இல்லாமல் வெந்ததை தின்னுபோட்டு சாவு வந்தால் போயிடலாம் என்ற நினைப்பை மனதில் ஏற்படுத்தும் தன்மை, எதிலும் நம்பிக்கை இல்லமால் சும்மாவே இருப்பதை விரும்பும் மனதை கொண்டு வரும் நிலைத்தன்மையையும், அசையாநிலையை விரும்பும் மனதையும், தன்னம்பிக்கை என்றால் என்னவென்று கேட்கும் நிலைக்கு கொண்டு வந்து விடும். ஆனால் தன்னம்பிக்கை இல்லாமல் எவரும் உயர்ந்தவரும் கிடையாது. அடுத்தவர்களை உயர்த்தியவரும் இந்த உலகில் தன்னம்பிக்கை இன்றி ஒருவர் கூட உயர்ந்தது கிடையாது, வாழ்ந்ததும் இல்லை. தன்னுடைய எல்கை என்னவென்று தெரிந்த பந்தயக் குதிரை பந்தய ஓட்டத்தில் மற்ற குதிரையைக் கூட பார்க்காது கடிவாளம் கட்டிய கண்ணில் தான் அடைய வேண்டிய கோட்டை மட்டுமே பார்த்துக் கொண்டு தனக்கு தேவையான பக்கத்தில் இருக்கும் புல்லையும், கொல்லையும் கூட கண்டுக்காமால் சீறிப் பாயும் குதிரையின் வேகத்தை நீங்களும் அடைய வேண்டுமா? சோம்பல் கொண்ட மனிதன் எப்படி சுறுசுறுன்னு ராக்கெட் வேகத்தில் ஓட வைக்க கூடிய சூத்திரங்கள் எவை எவை என்பதை பற்றிய கட்டுரை தான் இன்றைய கட்டுரையாய் வழங்க இருக்கிறோம்.
தள்ளிபோடுதல்
நாம் எல்லாரும் பல நேரங்களில் சில முக்கியமான தருணங்களில் நம்முடைய சௌகரியத்திற்காகவோ அல்லது வேறு பல சுகத் துக்கத்திற்காகவோ, தன்னுடைய சுயநலத்துக்காகவோ அல்லது பிறர் மற்றும் பொது நலனுக்காகவோ அந்தந்த நேரத்தில் கண்டிப்பாக செய்ய வேண்டிய வேலைகளை கொஞ்சம் நாழிகை தள்ளி வைப்போம். இது எல்லாருடைய வாழ்க்கையிலும் அனுபவ பூர்வமாக உணர்ந்து இருப்போம். இப்போ இதை படிக்கும் போதே நமக்கு மனக்கண்ணில் நாம் நமக்கோ அல்ல பிறருக்காகவோ தவற விட்ட சில வாய்ப்புகள் வந்து போகும். அந்த தவறவிட்ட சில நிமிடங்கள், ஏன் சில நொடிகள் கூட இன்றைய நிலையில் வைத்து பார்த்தால் பல வருடங்களை தின்னு விட்டு போயிருக்கும். அந்த வாய்ப்பை பற்றிக்கொண்டால் இன்றைக்கு நான் உலகையே ஆளுகை செய்வேன் என்று கூட சொல்பவர்களும் இருக்கத் தான் செய்வார்கள் என்று அனைவரும் யாராவது உங்களுக்கு தெரிந்த, தெரியாத நபர்களிடம் இருந்து உங்கள் காதுகள் கேட்டு இருக்கும். இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்றால் சிலருக்கு தவற விட்ட வாய்ப்பைப் பற்றி அதன் பலனைப் பற்றி நல்ல முறையில் முன்னரே நன்கு தெரிந்து இருக்கும். இருந்தாலும் அவர்களது லத்தாஸிக் போக்கு மற்றும் பல காரணங்களினால் ஏன் காரணமே இருக்காது ஆனால் அதை ஒரு காரணம் என்று கூட சொல்லி தவற விட்டதைக் கண் குருட, இப்பொழுது நினைத்தால் உண்மை தான் கண்கள் குருடாகி தான் போய்விட்டது என்று சொல்வார்கள். ஆனால் உண்மை அது அல்ல. அவர்கள் கண்ணுக்கு நேராகவே கையில் அல்வா மாதிரி இருந்ததை சாப்பிடாமல் இன்று வரைக்கும், இன்னும் அதற்காகவே ஓடிக்கொண்ட மனிதர்கள் பலர் உள்ளனர் என்பது நாம் அனைவரும் மறுக்க, மறைக்க முடியாத உண்மையான ஒன்றாகும். நன்கு கவனித்தால் இதற்க்கு மூலக்காரணம், மூலாதாரம், ரிஷிமூலம், நதிமூலம், ஆணி வேர் என்று எந்த விதத்தில் பார்த்தாலும் ஒன்றே ஒன்று தான். அந்த ஒன்று என்னவென்று யோசனை செய்கிறீர்களா? செய்யுங்கள்.
நான் உதாரணத்தோடு உறுதியாக, அருதியூட்டு சொல்கிறேன். அந்த ஒன்று அவர்களுடைய பழக்க வழக்கங்கள் தான். ஆச்சர்யமாக இருக்கலாம். இவ்வளவு சின்ன விஷயமா அப்படி ஒரு மிகப் பெரியப் பாதிப்பை ஏற்படுத்த முடியும். உளவியல் முறைப்படி அது தான் உண்மையும் கூட. ஆனால் அந்த பழக்க வழக்கத்தை கைவிட, நம்முடைய முயற்சி எப்படி இருக்க வேண்டும் என்றால் அந்த வாய்ப்பைக் கூட மறுபடியும் பெற்று விடலாம். ஏன் இன்னும் அழுத்தமாக சொன்னால் வாய்ப்பை பெறுவது மட்டுமில்லமால் வாய்ப்பைத் திறம்பட, சிறப்பாகச் செய்து வெற்றிக் கொடியை நாம் நினைக்காத, ஏன் எவருமே எட்டமுடியா எல்கையை கூட தொட்டு விடலாம். நான் சொல்ல வருவது என்னவெனில், அழுத்தம் கொடுத்து சொல்வதற்கு காரணம் தீய பழக்க வழக்கங்களை கைவிட பல மடங்கு மனது பக்குவப் பட வேண்டும். அதுமட்டுமல்ல மிகப் பெரிய முயற்சி செய்ய வேண்டும். முயற்சி தோற்றால் தொடர் முயற்சி செய்தல் வேண்டும். தொடர் முயற்சியும் தோற்றால் விடா முயற்சி வேண்டும். விடா முயற்சி என்பது என்னவெனில் தீய பழக்கங்களை கைவிடும் எண்ணத்தை ஆழ்மனதுக்குள் நுழைய விட்டு, கெட்ட பழக்கங்களை விட வேண்டும் என்ற எண்ணத்தை விடாமல் சதா எண்ணி விட்டு விடுவதே, அதாவது அந்த தீய பழக்கத்தை விடுவதே விடா முயற்சி ஆகும். விடா முயற்சிகள் எப்போதுமே எந்த சூழ்நிலையிலும், எந்த செயலிலும் விஸ்வரூபமான வெற்றித் தரும் என்பதை ஆழ்மனதுக்குள் பதிவதற்கே இந்தப் பதிவு பதிவிடப்படுகிறது. சரி. எப்படி நிவர்த்தி செய்வது?
நிவர்த்தி செய்யும் முறைகள்:
முக்கியமாக தள்ளிப்போடுதல் எண்ணம் உள்ளவர்கள் எதற்கெடுத்தாலும் எதிர் மறை எண்ணங்களை மனதில் ஓட விட்டே இருப்பார்கள். உதாரனத்திற்க்கு நாம் அனைவரும் பூமியில் இருந்து வானில் உள்ள நிலவைக் காட்டி சோத்து உருண்டை சாப்பிட ஆசைப்படுகிற நேரத்தில், அந்த நிலவுக்கே போய் தடம் பதிக்க ஆசைப்பட்ட மனிதர்களும் இவ்வுலகில் உளர் என்பது எல்லாருக்கும் தெரியும். அப்படிப்பட்ட வாய்ப்பு ஒரு குழுவுக்கு கிடைத்தது. அது தலைமை நடத்திச் செல்பவருக்கே முதலில் கட்டளை பிறப்பிக்கப் பட்டது. அந்த கட்டளை வந்த உடனேயே அவர் பயத்தினாலோ இல்லை தயக்கத்தினாலோ வேற இன்னும் ஏதோ காரணத்தினால் வாய்ப்பைத் தவற விட்டார். உண்மைதான் தள்ளி போடுதல் எண்ணம் கொண்டவர்கள் முடிவை எடுக்க நேரம் கடத்தவும், சரி வர எடுக்கத் தெரியாமலும், குறிப்பாகத் இன்னும் சிலர் தவறாக முடிவு எடுப்பதிலும் கைத் தேர்ந்தவர்களாக இருப்பார். அதனால் தான் என்னவோ முதன் முதலாக கால் தடம் பதிக்கத் தவற விட்டார். வாய்ப்பைக் கைவிட்டார். அவரை வரலாறு கைவிட்டது. அடுத்தவருக்கு கட்டளை பிறப்பிக்கப் பட்டது. அடுத்த வினாடியே கால் தடம் பதித்து வாய்ப்பை நல்ல முறையில் வசப்படுத்தி வரலாற்றையே தன் வசப்படுத்தி விட்டார். இன்னும் அவர் பெயரே வரலாற்றுப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. அவரிடம் நீங்கள் எப்படி தடம் பதித்தீர்கள் என்று கேட்கும் போது அவர் சொன்ன பதில் தான் இன்னும் நம்மிடையே முன்னிலை படுத்திகிறது. நான் கட்டளை வரும் போது என் மனதில், நம் கால் தடம் பதித்தால் நான் தான் முதன் முதலில் நிலவில் தடம் பதித்தவன் என்ற எண்ணம் மட்டும் தான் முன்னிலையாக இருந்தது. மேலும் வரலாற்று சாதனைப் புத்தகத்திலே நம் பெயர் பொறிக்கப்படும் என்ற தீப்பொறி என் மனதில் கொழுந்து விட்டு எரிந்தது என்று சொன்னார். இதையே தான் உயர்ந்த மலையான எவரெஸ்ட் சிகரத்தை உச்சியில் தொட்டு அதன் மேல் நின்று அந்த மலையின் உயரத்தை விட நான் தான் உயரம் என்று சாதனை செய்து சிகரத்தின் உயரத்தை கூட பார்த்து, அஞ்சி, பயப்படாமல், போராடி சரித்திர நூலில் இணைத்துக் கொண்டாரே. எப்படி? அவரிடமும் கேள்வி கேட்டபோது சொன்ன பதில். என்னுடைய மலை ஏறும் பயணத்தில் கடைசி வரை என் இலட்சியத்தை அடையும் வரை முடியாது என்ற வார்த்தையை கூட வாயில் அல்ல மனசிலே வரமுடியாத அளவுக்கு திடமாக, தன் முடிவில் நின்றதே இன்றும் நம் முன் வரலாற்றில் நின்று ஜொலிக்கிறார். நாமும் சாதனை படைக்க வேண்டுமென்றால் இந்த சோம்பலை, சுறுச்சுறுப்பின்மையை விரட்ட வேண்டாமா?
சுறுச்சுறுப்பின்மை என்பது செடி என்றால், அதன் ஆணிவேர் தான் இந்த தீய பழக்கங்களாகிய எதிர்மறை எண்ணம், தள்ளி போடுதல் எண்ணம், பொறுப்புகளை தட்டி கழிக்கும் எண்ணம், தன் வேலையை பார்க்காது மற்றவர்களை பார்த்து குறை கூறுவதும், வயிறு எறிவதும், மற்றவர்களோடு ஒப்பீடு செய்துக் கொண்டே இருப்பதும் இன்னும் சொல்லி கொண்டே போகலாம். அவ்வளவு அழுக்கான தேவை இல்லாத ஆணிகள். இந்த ஆணிகளை பிடுங்கி தூக்கி வீசி எரிய வேண்டும். இந்த ஆணிவேரை அடியோடு அடுத்து வளராதவாறு வலித்து ஆழமாக சுற்றி பக்கத்திலும் பரவா வண்ணம் களை எடுக்க வேண்டும். களை எடுக்க இன்றே ஆரம்பியுங்கள். இதற்கும் தள்ளிபோடுதல் கூடவே கூடாது. முதலில் சும்மா இருக்கும் எண்ணத்தை மனதில் எடுத்து விடுங்கள். பொதுவாகவே நாம் இப்போது ஓடி கொண்டே உழைப்பது கூட முதுமை காலத்தில் சும்மா இருக்கலாம் என்கிற எண்ணம் தான். சொல்வது என்னவெனில் இந்த சும்மா இருத்தல் எண்ணம் ஏற்கனவே நம் மனதுக்குள், ஆழ்மனதுக்குள் ஆழமாக ஆலமரம் வேர் போல பலமாக, உறுதியாக வளர்ந்து விட்டது. அதனால் தான் என்னவோ அதன் விழுதுகளாய் இன்னும் தொற்றி கொண்டே நம்முடன் வருகிறது. அதை விரட்டாமல் நம்மிடம் எதுவும் வராது. விரட்ட வழிகள் இதோ...
சோம்பேறி தனம் தற்போதைய காலங்களில் பணத்தை அடிப்படையாக வைத்து கூட சொல்வதை பார்ப்பதுண்டு. அதிகம் பணம் படைத்தவன் அவனுடைய வெற்றி உச்சியிலிருந்து தனக்கு கீழே உள்ளவர்களை சோம்பேறிகளாக பார்ப்பது கூட பணத்தை வைத்து தான். ஒரு ஏழை குறிப்பிட்டு சொல்ல பிடிக்க வில்லை. அவனுடைய ஓட்டமும் பணக்காரன் ஓடுவதும் ஒரே வேகம் தான். அவர்கள் ஓட்டத்தில் வேறுபாடு இல்லை. ஆனால் ஓடுகிற பாதையின் பயணத்தில் வேறுபாடு இருக்கிறது. நாம் அனைவருமே குறிப்பிட்ட தூரத்தை அடைவதற்கு குறுக்கு வழிகள் இருந்தால் அதை தான் தேர்ந்தெடுப்போம். ஒரு ஓட்டுனர் அவர் அடைய கூடிய இடத்துக்கு சீக்கிரம் செல்வதற்கு வழிகள் இருந்தால் அதில் தான் செல்வார். அவருக்கு நேரம் சேமிக்கப்படுகிறது. அது தான் தற்காலங்களில் புத்திசாலித்தனமான வேலையாக பார்க்கப்படுகிறது.
சோம்பேறித்தனம் என்பது சிலருக்கு அந்த வழி தெரியாமல் கூட இருக்கலாம். அவர்கள் வீணாக உலகப் பார்வையில் சோம்பேறியாக பட்டம் பெற வாய்ப்பாகிறது. இவர்களுக்கு முதலில் வழிகளைத் தேட ஓட வேண்டும். நாம் மற்றவர்களின் வெற்றி ஆட்டத்தை பார்த்துக் கொண்டே இருந்தால் நாம் கடைசி வரை பார்க்க, கைத்தட்ட மட்டும் தான் முடியும். நாம் எப்போது பாராட்டு, கைத்தட்டல் பெறுவது. நம்முடைய சோம்பேறித்தனம் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? தோல்வி பயம், நம்பிக்கை இன்மை, தாழ்வு மனப்பான்மை இது போல பலக் காரணங்கள், ஏன் அவர்களிடம் கேட்டால் காரணம் மட்டும் தான் சொல்வார்கள். தேடுதல் என்று ஒன்று இருக்கிறதே என்று சொல்லி பாருங்கள். அதற்கும் அங்கு பதில் காரணம் தான் வரும்.
வழிகள்
• எவ்வளவு மனம் அழுத்தம் இருந்தாலும் அதை பற்றிய எண்ணத்தை மனதில் ஏத்தாமால் கவனமாக செயலில் மட்டுமே குறி வைத்து, சிறப்பாக வேலை செய்கிறேன் என்ற சூழ்நிலையை நமக்கும், பிறருக்கும் தெரியுமாறு பணி புரிதல் மிகப் பெரிய தாக்கத்தை வெற்றியை நோக்கி ஏற்படுத்தும்.
• எப்போதும் உற்சாகமான வார்த்தைகளைப் பேசிப் பழகி வாருங்கள்.
• உற்சாகமான சூழ்நிலையும், நபர்களையும் எப்போதும் கூடவே வைத்து இருங்கள்.
• தேவைப்படும் போது சின்ன சின்ன இளைப்பாறுதல் எடுக்கத் தயங்காதீர்கள்.
• மிகவும் களைப்புடன் இருந்தால் உற்சாகமான பானங்கள், மற்றும் உணவுகளை சாப்பிட்டு வாருங்கள். தேயிலை, புதினா தேனீர் அடிக்கடி அருந்தாமல் அப்பப்ப பருகி வாருங்கள்.
• மெது ஓட்டம், உடற் பயிற்சி, நடை பயிற்சி செய்து பழகுங்கள்.
• 5 நிமிட தியானம் கூட தெளிவான சிந்தனையை கொடுக்கும். முயற்சி செய்துப் பாருங்கள்.
• தன்னம்பிக்கை தரக்கூடிய புத்தகங்களை படித்து வாருங்கள். நிறைய சாதனையாளர்களின் வரலாற்றை கேளுங்கள், படியுங்கள். முதலில் நம் அருகில் உள்ள வெற்றி பெற்ற நபர்களிடம் பழகி, வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களை வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளுங்கள். எவரும் குரு இல்லாமல், அவர்கள் வழிகளைப் பின்பற்றாமல் எந்த ஒரு சிஷ்யரும் உயருவதில்லை. இன்றைய சிஷ்யர்கள் நாளைய குருமார்கள்.
முடிவு மற்றும் தெளிவு:
எந்த ஒரு நபரும் பிறரின் தூண்டலினால் மட்டும் தான் உயர முடியும் என்ற எண்ணம் இருந்தால் மனதில் அழித்து விடவும். புத்தகங்களோ, உற்சாகத்தை தூண்டுபவர்களோ 1% தான். மீதி அனைத்தும் நம்முடைய மனம் தான். அதுவே வெற்றி பாதையை தொடும். வச்ச குறி தப்பாமல் சுட வேண்டுமா? உங்கள் கையில், மனதில். வாழ்த்துக்கள்......
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நாளை ஒரு நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆரோக்கிய குறிப்புகள் : சுறுசுறுப்பின்மை போக்க வழிகள் இனி உங்கள் வாழ்க்கையில் வலிகள் இல்லை - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Ways to Get Rid of Inactivity No more pains in your life - Health Tips in Tamil [ Health ]