நுட்பமாக சிந்தித்தால் என்ன நடக்கும்?

ஊக்கம்

[ ஊக்கம் ]

What happens when you think critically? - Encouragement in Tamil

நுட்பமாக சிந்தித்தால் என்ன நடக்கும்? | What happens when you think critically?

நம்முடைய உறுதியான, திடமான நம்பிக்கையான சிந்தனை மற்றும் அறிவு தான் செயலாக மலர்ந்து வெற்றி என்னும் அங்கீகாரம் கொடுத்து நம்மைப் பெருமைப்படுத்துகிறது.

நுட்பமாக சிந்தித்தால் என்ன நடக்கும்?.


நம்முடைய உறுதியான, திடமான நம்பிக்கையான சிந்தனை மற்றும் அறிவு தான் செயலாக மலர்ந்து வெற்றி என்னும் அங்கீகாரம் கொடுத்து நம்மைப் பெருமைப்படுத்துகிறது. ஆகவே, நாம் எதைச் சிந்தித்தாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நுட்பமாகச் சிந்திக்கப் பழகிக் கொண்டால்தான் நம் வாழ்வில் நாம் விரும்பும் முடிவுகளையும் வெற்றிகளையும் ஒவ்வொரு செயலிலும் சரியாக குறி பார்த்து தவறாது தக்க வைத்துக் கொள்ள முடியும்.

உங்கள் இலட்சியம் மற்றும் இலக்குகளை உங்கள் கற்பனை சக்தியின் மூலம் எவ்வளவு நே(தூ)ரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொண்டு மூளையில் சிந்தித்து மனதில் ஓர் உயர்ந்த வாழ்க்கையை நீங்களே உருவாக்கிக் கொண்டு வாழ்க்கையில் உயரலாம். அதே நேரத்தில், நீங்கள் அந்த உயர்வை அடைய, உங்களுடைய  அறிவைப் பயன்படுத்தி ஒவ்வொரு அடியாக தொடர்ந்து முயற்சி செய்கிறீர்கள் என்றால், நீங்கள் தான் உண்மையில் நுட்பமாகவும் ஆழமாகவும் சிந்திக்கும் மனிதர் ஆவீர்கள். ஏனென்றால், நாம் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் சிந்தித்து, அறிவின் வழியே தொடர்ந்து செயல்களை செய்து, செயல்களில் வெற்றி வாய்ப்பை உறுதி கொள்ளும் நீங்கள், வழியில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டால் அவற்றைச் சமாளிக்கத் தேவையான புதிய வழி, பொருளாதாரப் பாதுகாப்பு போன்றவைகளும் உங்களிடம் முன்கூட்டியே திட்டமிட்டு ரெடியாகவும் இருக்கவேண்டும். இந்தக் குணங்கள் இல்லையெனில் நாம் இனியாவது நம்மில் ஒவ்வொருவரும் இதை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டும்..

கோல்ஃப் விளையாட்டு வீரர்களும், கேரம் போர்டில் விளையாடுபவர்களும் கற்பனையில் பார்த்து பிறகு நன்கு உறுதிசெய்து கொண்டு விளையாடி பந்தையும், காயையும் குழிக்குள் தள்ளிவிடுகின்றனர்.

ஒவ்வொரு முறையும் நுட்பமாகச் சிந்தித்துத்தான் இந்த இரு விளையாட்டு வீரர்களும் விளையாடுகிறார்கள். நுட்பமாகச் சிந்தித்து பிறகு அதிலேயே மனதை உறுதிப்படுத்திக் கொண்டு விளையாடுகிறார்கள்.

நம்முடைய வாழ்க்கையிலும் மிகப் பெரிய இலட்சியமாக இருந்தாலும் சரி, எதிரில் குறுக்கிடும் தடைகளாக இருந்தாலும் சரி, இந்த விளையாட்டு வீரர்களைப் போலத்தான் கற்பனையில் சிந்தித்து விரும்பும் முடிவை அடைய அறிவின் வழியே முயற்சி செய்ய வேண்டும்.

கற்பனையில் நாம் விரும்பும் முடிவைக் காணும்போதே அதை அடைவதற்கான வழியை நுட்பமாக சிந்தித்தால் போதும். அப்போது தோன்றும் புதிய சிந்தனைகளும், புதிய வழிகளும் கற்பனையில் நாம் விரும்பிய முழுமையான வெற்றியை நிஜத்தில் பெற்றுத் தரும். இந்த வழியில் முயற்சித்தால் போதும்!

சர். ரோலண்ட் ஹில் என்பவர் பிரிட்டனில் வாழ்ந்தவர் தான் தபால் தலையை முதலில் கண்டுபிடித்தார் ஆவார். அதற்கு முன்பெல்லாம் கடிதத்தை எழுதி தபால் பெட்டியில் போட்டுவிட்டால், அந்தக் கடிதத்தைப் பெறுபவர் தான் தபால் தலைக்கான கட்டணங்களை செலுத்தி தபால் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இருந்தது. அதனால் பலர் தங்களுக்கு கடிதமே வேண்டாம் என்றனர். சிலர் கடிதத்தைப் படித்துவிட்டு வேண்டுமென்றே இது எங்களுக்கு வந்த கடிதம் அல்ல என்றனர். இதைத் தவிர்க்கவே தபால்தலை யோசனையை இவர் சொன்னார்.

தபால்துறைக்கு நஷ்டம் வரக்கூடாது. அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் சிரமம் வரக்கூடாது என்பதற்காக ஒரு நாட்டிற்குள் எந்த இடத்திற்குக் கடிதம் அனுப்பினாலும், ஒரே கட்டணம்தான் பெறவேண்டும். அதற்கும் இந்தத் தபால்தலை ஒட்டி அனுப்பும்முறையானது மிகவும் சிறந்தது என்றார். தபால்தலை ஒட்டி அனுப்புவது என்பதை நுட்பமாகச் சிந்தித்துச் சொன்னதற்காகவே இவருக்கு சர்.பட்டம் அளித்தது அரசு என்பது குறிபிடத்தக்கது. இவருடைய நுட்பத்துடன் சிந்தித்ததன் பலனே தபால் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் செயற்கைக் கோள்களைச் செலுத்திவிட்டுப் பூமிக்குத் திரும்பும் விண்வெளி ஓடங்களின் தொழில் நுட்பத்தை இந்தியாவிற்குத் தர மறுத்தன. அதனால் என்ன? நமது விஞ்ஞானிகள் நுட்பமாக சிந்தித்து உருவாக்கிய எஸ்.ஆர்.இ.1 என்ற ஸ்பேஸ்கேப்சூல் ரெகவரி எக்யூப்மென்ட் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி விட்டு 22.1.2007 அன்று பத்திரமாகப் பூமிக்குத் திரும்பி விட்டது. இந்த செயற்கைக் கோள்களை உருவாக்க ரூ.30 கோடி செலவானது. அடுத்தமுறை இந்த ரூ.30 கோடி ரூபாயும் மிச்சமாகும். இந்திய விஞ்ஞானிகளுக்கு வெளிநாடுகள் உதவாத சூழ்நிலையிலும் கூட அவர்களுடைய நுட்பமாகச் சிந்திக்கும் திறனே அவர்களின் வெற்றிக்கும் காரணம் ஆகும்.

நுட்பமாகச் சிந்தித்து செயல்பட்டதால் வந்த மகத்தான சாதனை அல்லவா இது!


சாக்கடை நீரிலும் நிலவைக் காணும் திறமையை ஒருவர் பெற்றிருக்கிறார் என்றால் அவர் எல்லா இடங்களிலும் உண்மையாகவும், உணர்ச்சி வசப்பட்டாலும் நுட்பமாகச் சிந்திக்கும் மனிதர் என்றே சொல்லலாம். எனவே, நாம் கற்பனையில் காண்கின்ற நிலையை அல்லது அந்த உயர்வை அடைய நாம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிபோல இரு பக்கங்களிலும் நுட்பமாகச் சிந்தித்து, செயல்பட்டு, தொடர்ந்து விடா முயற்சியுடன் உழைத்தால் போதும் நண்பர்களே! இதன்மூலம் வெற்றி மட்டுமல்ல, அனைத்து செல்வ செழிப்புக்களும், அமைதியான மகிழ்ச்சிகரமான வாழ்வும் எப்போதும் நம்மை தொடரும் என்பது சத்தியமாகச் சாத்தியம் ஆகும்.

யாரெல்லாம் தங்களுக்கு மிகவும் அதிகமான சொந்தப் பிரச்சினைகள் ஆயிரம் இருந்தாலும், மற்றவர்களுக்கு எப்போதும் உதவும் மனப்பான்மையுடன், பிறருடன் அன்பாகவும், ஆதரவுடனும், கருணை காட்டுபவர்களாகவும் வாழ்கிறார்களோ, அவர்களே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மனிதர்கள் ஆவார்கள். ஏனென்றால் அவர்கள்தான் உண்மையிலேயே இந்த உலகத்திற்கு கிடைத்த பரிசு. அன்பையும், உதவியையும் 'காம்போ ஆபர்என்று உலகத்திற்கு கொடுங்கள். உங்கள் பின்னால் உலகம் நிற்கும். உலகம் உங்கள் கைகளில் தான். 


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஊக்கம் : நுட்பமாக சிந்தித்தால் என்ன நடக்கும்? - ஊக்கம் [ ஊக்கம் ] | Encouragement : What happens when you think critically? - Encouragement in Tamil [ Encouragement ]