"ஸநாதன தர்மம்" என்றால் என்ன?
இச்சொல் எக்காலத்திலிருந்து புழக்கத்தில் உள்ளது? ‘ஸநாதன தர்மம்’ என்ற சொல்லின் பொருள் என்ன? இவற்றை வெறும் திருக்குறள் வைத்தே விளக்கலாம். இருந்தாலும் ஸநாதன தர்மம் என்ற பெயர் இன்று இந்துமதம் என்று அழைக்கப்படும் பெயருக்கு பதிலாக முற்காலங்களில் வழங்கப்பட்ட பெயர்தான் என்பதையும் மறுக்க முடியாது.
ஸநாதன தர்மம் என்ற சொல்லாடல் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஸ்ரீ மகாபாரதத்தில் உண்டு. அதோடு 18 புராணங்களில் ஒன்றான சிவபுராணத்திலும் உண்டு. மகாபாரதத்தில் "ஞான வழியையும் கர்ம வழியையும் காட்டும் வழியாக" கண்ணன் காட்டியதே சநாதன தர்மம் என்ற பொருளில் வருகிறது. அதாவது,
"யேச வேதவிதோ விப்ரா: யே சாத்த்யாத்ம விதோ ஜநா: I தே வதந்தி மஹாத்மாநம் கிருஷ்ணம் தர்மம் ஸநாதநம் II
- மகாபாரதம் (சாந்தி பர்வம்)
சிவபுராணத்தில் சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும்போது நானே சநாதன தர்மம் என்கிறார். அதாவது சிவபெருமான் கூறும் தர்ம நெறிகளே, அற நெறிகளே சநாதன தர்மம் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. அதுபோல மனு ஸ்மிருதியில் உண்மையை பேச வேண்டும். உண்மையை மட்டுமே பேச்வேண்டும் என்பதுதான் சநாதன தர்மம் என்ற பொருளில் வருகிறது. அதாவது மனுதர்மத்தின் நான்காவது அத்தியாயம் 138 ஆவது வசனம் இவ்வாறு கூறுகிறது,
"உண்மையை பேச வேண்டும். அன்பாகப் பேச வேண்டும். தீங்கு விளைவிக்குமாயின் உண்மையையும், அன்பாக இருக்கும்போது பொய்யையும் பேசாதே. இதுவே சநாதன தர்மமாகும்"
- மனுதர்மம் - 4.138.
இப்படி மனுதர்மம், மகாபாரதம், சிவபுராணம் போன்ற நூல்களில் ஸநாதன தர்மம் பற்றிய குறிப்புகள் உள்ளன. தர்மம் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தமிழில் அறம் என்பது பொருள். இதைத்தான் கண்ணன் காட்டும் வழியே ஸநாதன தர்மம் (அறம்) என்கிறது மகாபாரதம். சிவபுராணத்தில் நான் காட்டுவதே அறம் என்கிறார் சிவபெருமான். மனுஸ்மிருதி உண்மையை பேசுவதையே அறம் என்கிறது. இத்தகு தொன்மையான அறத்தை திருவள்ளுவர் மிகத்தெளிவாக கூறுகிறார். உதாரணமாக,
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"
- திருக்குறள்.
பொருள் : ஒருவன் தன்மனதில் குற்றம் இல்லாதவானாக இருக்க வேண்டும். அறம் அவ்வளவே: மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.
"அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்"
பொருள் : பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.
"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்"
பொருள் : ஒருவன் அறம் செய்ய தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தை செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.
"சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு"
பொருள் : அறம் சிறப்பையும் அளிக்கும்: செல்வத்தையும் அளிக்கும்: ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தை விட நன்மையானது வேறு யாது?
இவ்வாறாக திருவள்ளுவர் கூறும் அறமே மகாபாரதத்தில் கண்ணன் கூறும் ஸநாதன தர்மம் என்றும், சிவபுராணத்தில் சிவபெருமான் கூறும் அறமே மனுதர்மம் குறிப்பிடும் சனாதன தர்மம் என்றும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். சநாதனத்தை வேரறுப்போம் என்று கூறும் கும்பல்களுக்கு, சநாதன தர்மம் என்றாலே நிலையானது, தொன்மையான அழிவில்லாத அறம் என்றுதான் பொருள் என்பதை கூறிக்கொண்டு நீங்கள் அதை ஒழிக்க வேண்டுமெனில் அதன் ஆதி எங்குள்ளது என்பதை அறிய வேண்டும். அதாவது குறைந்தபட்சம் அதன் தொடக்கம் எங்குள்ளது என்பதை அறிந்தால்தான் முடிவு எது என்பதை அறிந்து சநாதன தர்மத்தை ஒழிக்கவே முடியும்.
சநாதன தர்மம் என்றாலே ஆதி அந்தமில்லாமல் நிலைத்திருக்கும் அறமே ஆகும் என்பதை உணரும்வரை நீங்கள் ஒழித்துக்கொண்டே இருங்கள். இந்த முயற்சி நம்மை, நம் பண்பாட்டு கலாச்சாரங்களை சிதைக்க நினைத்து முடியாமல் அயலவர்கள் விழிபிதுங்கிய காலம் முதலே நடந்து வருகிறது. இன்றும் ஒழித்துக்கொண்டுதான் உள்ளனர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. நீங்களும் ஒழித்துக்கொண்டே இருங்கள். நீங்கள் ஒழிக்க ஒழிக்க அது ஆலமரம் போல் படர்ந்து வளரும். அவ்வளவு ஏன் என்னையும் என்னைப் போன்றோர்களையும் வளர்ப்பதே உங்கள் சனாதன எதிர்ப்புதான் என்பதை உணர்க!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்