சுயமரியாதை என்றால் என்ன?

குறிப்புகள்

[ ஊக்கம் ]

What is self-esteem? - Tips in Tamil

சுயமரியாதை என்றால் என்ன? | What is self-esteem?

‘மரியாதையாகப் பேசு’ ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ இவை போன்ற சொற்றொடர்களை நமது அன்றாட வாழ்வில் கேட்டு இருக்கிறோம்.

சுயமரியாதை என்றால் என்ன?


சுயமரியாதை_வாழ்வே_சுகவாழ்வு...

 

‘மரியாதையாகப் பேசு’ ‘மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு’ இவை போன்ற சொற்றொடர்களை நமது அன்றாட வாழ்வில் கேட்டு இருக்கிறோம்.

 

சரி, மரியாதை என்றால் என்ன?

 

நம்முடைய நற்குணங்கள் நற்செயல்கள் நன்னடத்தை நமக்குச் சமுதாயத்தில் தேடித் தரும் நன்மதிப்பு தான் மரியாதை ஆகும்.

 

பணம், பதவியினால் வரும் மதிப்பு நிலையானதன்று; பணமும், பதவியும் நம்மை விட்டுச் செல்லும் போது, மதிப்பும், மரியாதையும் நம்மை விட்டுச் சென்று விடும்.

 

ஒருவர் உடல்நலம் குன்றி ஓய்வு எடுக்கும் போது, நாம் அவரை மரியாதை நிமித்தமாக நலம் விசாரிப்பது மனித நேயம் மிக்க செயல். மனிதப் பண்பாடும் அது தான்.

 

ஆனால் செல்வமும், செல்வாக்கும் உடையவரை சிலர் அடிக்கடி சந்திப்பதை நாம் பார்க்கிறோம்.

 

ஒரு சாதாரண மனிதரை அப்படி யாரும் சந்திப்பது இல்லையே ஏன் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

பணம், பதவி படைத்தோரை மரியாதை நிமித்தமாக சந்திப்பதில் ஒரு சுயநலம் இருக்கிறது.

 

இன்று ஒரு வணக்கம் போட்டு வைத்தால், நாளை ஒன்றுக்குப் பயன்படும் என்னும் நினைப்பில் தன்னலம் இருக்கிறது அல்லவா.?

 

காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுவதை ஒரு கலையாகக் கற்று ஒரு நிறுவனத்தில் பெரிய பதவிக்கு ஒரு நண்பர் வந்து விட்டார்.

 

உனது உயர்நிலையை எண்ணியாவது இனிமேல் காலில் விழுவதைக் கைவிடுக என்று அவருடைய நண்பர் அறிவுரை அவருக்குக் கூறினார்.

 

நான் இப்படி விழுந்து, விழுந்து தான் இந்த உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறேன். அதை மட்டும் என்னால் கைவிட முடியாது’ என்று மறுமொழி சொன்னார்.

 

காலமாறுதலில், எதிர்பாராதவை சில நடக்கக் கூடும். இப்படிக் காலில் விழுந்து கிடப்பவர்களை சிலர் விரும்பி வரவேற்று மகிழலாம்.

 

ஆனால் காலப்போக்கில் காலைத் தொட்டுத் தொழுது கிடப்பவன், காலை வாரி விடவும் தயங்க மாட்டான்.

 

காலில் விழுந்து கிடப்பவனை அவனது உண்மையான பண்பு அறிந்தவர்கள் ஒதுக்கி விடுவதும் ஒரு கட்டத்தில் நடக்கக் கூடும்.

 

நடிப்பும் நயவஞ்சகமும் நீண்ட நாள் வெற்றி பெற முடியாது அல்லவா?

 

சுயமரியாதை இழந்து, குனிந்து கும்பிட்டுக் கிடப்பவர்கள் வாழ்வில் ஒருநாள் கூனிக்குறுகி நிற்கும் நிலை ஏற்படும்.

 

நாம் ஒருவருக்கு அளவுக்கு அதிகமாக மரியாதை கொடுத்து நமது சுயமரியாதையைக் காயப்படுத்தி விடக்கூடாது.

 

நம்முடைய நற்செயல்கள், நன்னடத்தை குறித்து நாம் பெருமையும், பெருமிதமும் கொள்வது நமக்குச் சுயமரியாதை உணர்வை உருவாக்கும்; அடிமை மனத்தை அகற்றும்.

 

சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு, எழிலார்ந்த ஏற்றம் மிகு வாழ்வு.

 

உயிரனைய உரிமை வாழ்வு என்பதை மனதில் நிறுத்தி மாண்புற வாழ்வோம்.

 

தன்மானத்தோடு தலைநிமிர்ந்து தொண்டறம் செய்து மனிதநேயத்தோடு வாழ்வோம்.

 

பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!

 

தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள்.

முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!    

 

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!  

 

வாழ்த்துகள்.

 

வாழ்க_வளத்துடன்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஊக்கம் : சுயமரியாதை என்றால் என்ன? - குறிப்புகள் [ ஊக்கம் ] | Encouragement : What is self-esteem? - Tips in Tamil [ Encouragement ]