ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள் என்ன தெரியுமா?

குறிப்புகள்

[ ஆன்மீக குறிப்புகள்: சிவன் ]

Do you know the merits of going to Annamalai Krivalam just once? - Tips in Tamil

ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள் என்ன தெரியுமா? | Do you know the merits of going to Annamalai Krivalam just once?

உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்தது என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மீக ரகசியங்கள் எத்தனை தெரியுமா?

ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள் என்ன தெரியுமா?

 

உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்தது என்றால் அதற்குப் பின்னால் இருக்கும் ஆன்மீக ரகசியங்கள் எத்தனை தெரியுமா?

 

நீங்கள் இதுவரை அருள்மிகு உண்ணாமுலை சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலைச் சுற்றிலும் அமைந்திருக்கும் கிரிவலப் பாதையில் (14 கி மீ) ஒரே ஒரு முறை வலம் வந்திருந்தால்,அதுவே அண்ணாமலை கிரிவலம் என்று பெயர்; அது பவுர்ணமி அன்று சென்றிருந்தாலும் சரி; விடுமுறை நாளில் சென்று இருந்தாலும் சரி; எந்த நாளாக இருந்தாலும் சரி;

 

பகலில் கிரிவலம் சென்று இருந்தாலும், இரவில் கிரிவலம் சென்று இருந்தாலும், வெயிலில் கிரிவலம் சென்று இருந்தாலும், கொட்டும் மழையில் கிரிவலம் சென்று இருந்தாலும்; பனியில் கிரிவலம் சென்று இருந்தாலும் சரி;

 

உலகத்தின் அனைத்து ஜீவன்களுக்கும் அப்பா தான் இந்த அண்ணாமலை என்று எண்ணியவாறு கிரிவலம் சென்று இருந்தாலும் சரி; கொஞ்சம் கூட பக்தி உணர்ச்சியே இல்லாமல் ஒருவர் கூப்பிட்டார்; அதனால் கிரிவலம் வந்தேன் என்று கிரிவலம் சென்று இருந்தாலும் சரி; ஜோதிடர் சொன்னதால் பரிகாரத்திற்காக கிரிவலம் சென்று இருந்தாலும் சரி!!!

 

3000 முறை மனிதப் பிறவிகள் எடுத்தப் பின்னர் தான் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல ஒருவரால் முடியும்;

 

உங்களுடைய அப்பா, அம்மா மற்றும் அவர்களுடைய அப்பாக்கள், அம்மாக்கள், அவர்களுடைய அப்பாக்கள், அம்மாக்கள் என்று முன்னோர்கள் அவர்களுடைய இறப்பிற்குப் பிறகு, அவரவர் செய்த புண்ணியங்களுக்கு ஏற்றவாறு பித்ருக்கள் உலகத்திற்கு செல்கிறார்கள்;

 

அங்கே அவர்கள் பல கோடி முறை பூஜை செய்து, தவம் இருந்து பெற்ற வரத்தால் தான் உங்களால் ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்ல முடிந்திருக்கின்றது என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்?

 

அதுமட்டும் அல்ல; பல நூறு பிறவிகளாக நம்மைப் படைத்த அந்த ஈசனிடம் கோவிலுக்குச் சென்று உருகி, உருகி, அழுது, அழுது "அண்ணாமலைக்குச் செல்ல வேண்டும்; அண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்" என்று வேண்டியிருந்தால் மட்டுமே இப்பிறவியில் அருணாச்சலேஸ்வரர் என்ற அண்ணாமலையாரின் அருள் கிட்டும்; இதை நாம் உணர்வது கிடையாது;

பல விதமான விலங்குகள், செடி, கொடிகள் என்று 84,00,000 பிறவிகள் எடுத்துவிட்டு, இறுதியாக காளை பிறவி எடுக்கும் ஆத்மா, அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக ஆண் மனிதப் பிறவி எடுக்கும்; பசு பிறவி எடுக்கும் ஆத்மா, அதற்கு அடுத்த படியாக முதன் முறையாக பெண் மனிதப் பிறவி எடுக்கும்; அப்படி முதன் முறையாக மனிதப் பிறவி எடுக்கும் போது, அண்ணாமலையில் தான் ஈசன் பிறக்க வைக்கிறார் என்பது அகத்தீசர் நமக்கு போதிக்கும் அருணாச்சல ரகசியங்களில் ஒன்று!!!

 

நாம் கிரிவலம் செல்லும் போது இதுவரை நாம் எத்தனை முறை மனிதப் பிறவி எடுத்திருந்தோமோ அத்தனை பிறவிகளும் நம்முடன் கூடவே ஆவி வடிவில் கிரிவலம் வரும்; அதனால் தான் யார் இந்த பிறவியில் 1008 முறை அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்கிறார்களோ, அவர்களுக்கு மறுபிறவி இல்லாத முக்தி கிடைக்கும் என்று அகத்தீசர் உபதேசித்து இருக்கிறார்;

 

1008 முறை கிரிவலம் முடிக்கும் போது நமது அனைத்து முற்பிறவி பாவங்களும், புண்ணியங்களையும் அண்ணாமலையார் ஈர்த்து நம்மை பரிசுத்தமான ஆத்மாவாக மாற்றிவிடுகிறார்; நமது அனைத்து முற்பிறவிகளின் மொத்த கர்மாக்களும் அக்னி மலையான அருணச்சலம் என்ற அண்ணாமலையார் எரித்துவிடுகிறார்;

 

ஒருவேளை, இப்பிறவியில் ஒரே ஒரு முறை கூட அண்ணாமலை கிரிவலம் வராமல் வாழ்ந்துவிட்டால், நமது வாழ்க்கையில் என்ன நடக்கும்?

 

போன நான்கு பிறவிகளில் செய்த பாவ புண்ணியத்தை மட்டுமே அனுபவிக்க இப்பிறவி செலவாகிவிடும்; போன நான்கு பிறவிகளில் செய்த புண்ணியங்கள் தான் பெற்றோர், உடன் பிறந்தோர், வாழ்க்கைத்துணை, வாரிசுகள், சொத்துக்கள், படிப்பு, புகழ், வருமானம், லாபம், பெருமை, பிரபல யோகம் என்று கிடைக்கின்றன;

 

அதே போன நான்கு பிறவிகளில் செய்த பாவங்கள் தான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி காலத்தில் எதிர்கொள்ளும் நோய், அவமானங்கள், கடன், வம்பு வழக்குகள், மாந்திரீகத்தால் எவனுக்காவது/எவளுக்காவது அடிமையாக இருத்தல், விரக்தி மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், ஏமாறுதல், துரோகத்தால் துவண்டு போகுதல், பணம் இருந்தும் சாப்பிட முடியாமல் தவித்தல், சுய இன்பத்தால் உடல் நலத்தைச் சீரழித்தல், ஆங்கில மருத்துவத்தினால் உண்டாகும் பக்கவிளைவுகள், விபத்துக்களால் உண்டாகும் உடல் உறுப்புச் சேதாரம், தெய்வங்களைப் பழித்துப்பேசுதல் அல்லது கேலி செய்தல்=அதன் மூலமாக மேலும் பல கொடூரமான பாவவினைகளை உருவாக்கிடுதல் போன்றவைகள் உண்டாகின்றன;

 

பல கோடி கர்மவினைகள் ஒரே ஒரு அண்ணாமலை கிரிவலத்தினால் தீர்கின்றன; அதே சமயம், இன்னும் பல ஆயிரம் கோடி கர்மவினைகளை நாமே முற்பிறவிகளில் உருவாக்கி வைத்திருக்கிறோம்;

 

உங்களில் சிலருக்கு இந்த கிரிவலம் எளிமையானதாக இருக்கும்; பலருக்கு கடினமானதாக இருக்கும்; சிலருக்கு கிரிவலம் செல்லும் போதே வயிற்று உபாதைகள், காலில் அடிபட்டு ரத்தம் வருதல், தொடர்ந்து நடக்க முடியாத அளவுக்கு மயக்கம் வருதல் போன்றவைகள் ஏற்படும்; இவையெல்லாம் இனி வரும் காலங்களில் உங்களுக்கு வர இருக்கும் விபத்து, அறுவை சிகிச்சை போன்றவைகளுக்கு மாற்றாக அருணாச்சலேஸ்வரர் தரும் பரிகாரம் ஆகும்;

 

மிகவும் அபரிதமான தெய்வீக சக்திகளை ஒரே ஒரு முறை கிரிவலம் சென்றாலே பெற முடியும்; அதை முறைப்படி பாதுகாப்பது நமது சுய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது;

 

பகலில் கிரிவலம் செல்பவர்கள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம் வரையிலும் பசுக்கள் இருப்பதைக் காணலாம்; அதற்கு வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை தானமாகத் தருவது இன்னும் பல கோடி புண்ணியத்தை அள்ளித் தரும்; நமது ஊரில் இருக்கும் கோவில் பகுதியில் அல்லது நமது தெருவில் இருக்கும் ஒரே ஒரு பசுவுக்கு (நாட்டுப் பசு தான் புண்ணியம் தரும்; ஜெர்ஸிப்பசுவால் ஒரு ஆன்மீக நன்மையும் ஒரு போதும் கிடையாது) ஒரு வாழைப்பழம் தானம் செய்தாலே பெரும் புண்ணியம்; அப்படிப் பட்ட சூழ்நிலையில் அண்ணாமலை கிரிவலப் பாதையில் ஒரே ஒரு பசுவுக்கு தானம் செய்தால் அது எப்பேர்ப்பட்ட புண்ணியம் என்பதை இக்கணத்தில் புரிந்து கொள்ளுங்கள்:

 

இரவில் கிரிவலம் செல்பவர்கள் கிரிவலப் பாதை முழுவதும் பைரவர்களை (நாய்களை) பார்க்கலாம்; அவைகளுக்கு உணவு பொருட்கள் தானம் செய்வது ஒரே நேரத்தில் பைரவரின் அருளையும், அண்ணாமலையாரின் ஆசிகளையும் அள்ளித் தரும் என்பதை மறக்காதீர்கள்;

 

நீங்கள் கிரிவலம் செல்லும் போது திடீரென மழை வந்தால், உடனே கட்டிடத்திற்குள் ஒதுங்க வேண்டாம்; விடாப்பிடியாக கிரிவலம் செல்லுங்கள்; மழை வரும் சமயத்தில் சில பல வருண சித்தர்கள் அப்போது கிரிவலம் வருவார்கள்: அதை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் உணர முடியாது; ஆனால், அவர்கள் நம்மை ஒரே ஒரு விநாடி பார்ப்பார்கள்; அதன் மூலமாக பெருமளவு கர்மாக்கள் நம்மிடம் இருந்து அருணாச்சலேஸ்வரரின் அருளால் ஈர்த்துக் கொள்வார்கள்;

 

மழை பொழியும் போது சுவாமி தரிசனம் செய்வது நமது ரகசியக் குற்றங்களை மன்னித்து அரிய பெரிய வரங்களை அள்ளித் தரும்;மழை பொழியும் போது கிரிவலம் சென்றாலே அருணாச்சலேஸ்வரராகிய அண்ணாமலையார் நமது உணர்ச்சி மேலீட்டால் செய்த பாவங்களை மன்னிக்கிறார் என்று தான் அர்த்தம்; ஆனால், இது எப்போதாவது யாருக்காவது மட்டுமே அருளாக கிடைக்கும்;

 

இந்த வரிகளை வாசித்துவிட்டு, மழை நாட்களாக தேர்வு செய்து கிரிவலம் சென்று கொண்டே, மீண்டும் உணர்ச்சி பூர்வமான தவறுகளைச் செய்தால் ஒரு போதும் அருணாச்சலேஸ்வரர் மன்னிக்க மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்;

 

ஓம் அகத்தீசாய நமஹ

 

ஓம்_அருணாச்சலாய_நமஹ


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

ஆன்மீக குறிப்புகள்: சிவன் : ஒரே ஒருமுறை அண்ணாமலை கிரிவலம் செல்வதால் உண்டாகும் புண்ணியங்கள் என்ன தெரியுமா? - குறிப்புகள் [ ] | Spiritual Notes: sivan : Do you know the merits of going to Annamalai Krivalam just once? - Tips in Tamil [ ]