
எப்போதும் எதற்கும் எந்த சூழ்நிலை வந்தாலும், வாய்த்தாலும் கவலை மட்டும் படாதீர்கள்.
கவலைப்பட்டால்
என்னவெல்லாம் நடக்கும்?

எப்போதும் எதற்கும் எந்த சூழ்நிலை வந்தாலும், வாய்த்தாலும் கவலை
மட்டும் படாதீர்கள். காரணம், கவலைப்படுவதால் எந்த
ஒரு பிரச்சனையும் தீராது. கவலைப்பட்டுக் கொண்டே இருப்பதால் நாம் என்ன செய்வோம்?
கவலை மீது மனதை குவிப்போம். அதனால் செய்ய வேண்டிய முக்கியமான காரியங்களை கூடத் தள்ளிப்
போட்டு விட்டு அதற்க்கு அப்புறமாக வேக வேகமாக, அவசரம் அவசரமாகப் பலர் செய்வதைப்
பார்த்து இருப்போம். அப்படிச் செய்வதால் மனதானது
அழுத்த நிலைக்குத் தள்ளப்பட்டு, கவலையும் கூடக் கொஞ்சம் அதிகரித்து, உடலானது களைப்பாகி
உடம்பும் சோர்ந்து கவலை நிரந்தரமாகத் தொடர்கிறது. கவலையும் எதிர்மறையான எண்ணங்களும்
உடலில் இன்டர்லூகின்-2 என்ற பொருளை அதிகம்
சுரக்க வைத்து இதய நோய்களுக்கு ஆதாரக் கற்களை பலமாகப் போட்டு விடுகின்றன என்பதை ஆதாரபூர்வமாக
நிரூபித்துள்ளனர்.
பிரச்சனைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத்
தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள் தான் புதுப்பித்துக் கொள்ள
வேண்டும். இதன்மூலம் ஏற்படும் மன அமைதி மற்றும் மகிழ்ச்சியே புது வழிகள் மற்றும்
தீர்வுகளை எல்லா விதமான பிரச்னைகளுக்கும் சரியானதை நமக்கு காட்டி கொடுத்து விடும்.
உங்களுக்கு எதிர்மரையாகப் பேசி உங்கள் மன உறுதியைக் குறைக்கும்
நண்பர்களை குறைத்து விடுங்கள். அதே மாதிரி எதிர்மறை தாக்கம் விளைவிக்கும் எந்த சக்திகளையும்
உங்கள் இதயத்துக்குள் அனுமதி அளிக்காதீர்கள். எப்போதும் மனதை நல்லவைக்கு
பழக்கப்படுத்தி, நல்லதை மட்டுமே எண்ணி, நல்லதை மட்டுமே செய்வது என்பதில் மட்டுமே உறுதியாக மனதை
வைத்து இருங்கள். சில பிரச்சனைகளுக்கு நாம் அமைதியாக இருந்து காரியங்களைச் செய்து கொண்டே
இருந்தால் போதும். அந்தப் பிரச்சனை தானாகவே விலகிவிடும்.
கவலை தலைதூக்கினால், மனதை குடைந்தால் ஒன்று செய்யுங்கள்.
அதாவது வலப்பக்க மூக்கினால் மூச்சை இழுத்து கொண்டு பின்னே இடப் பக்க மூக்கினால் அந்த
மூச்சுக் காற்றை வெளியே விடுங்கள். பிறகு அதே சுழற்சியை இடப் பக்க மூக்கினால் மூச்சை
இழுத்து கொண்டு, வலப்பக்க மூக்கினால் வெளியே விட்டு மூச்சு பயிற்சியை தொடருங்கள்.
இது ஒரு வகை தியானம் தான். இந்தப் பயிற்சியானது ஒரு சுற்று. இதை மாதிரியே உங்களால்
முடிந்த எண்ணிக்கையில் பத்து சுற்றுக்குள் வரை செய்யுங்கள். இதனால் மூளையானது ஒரு
வித புத்துணர்வு பெற்று திருப்தியான ஒரு மன நிலையை தரும். அதுமட்டுமல்லாமல் நல்ல தீர்வுகளையும்
நமக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும். இதனால் மிகவும் திறமையுடன் செயல்படுவீர்கள். தைரியம்
அதிகரிக்கும். ஆழ்ந்து சிந்திக்கும் மனப் பக்குவமும் கிடைக்கும். இந்த மூச்சு
பயிற்சியை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்யும் போது நமக்கு செய்யும் மூச்சுப்
பயிற்சியால் இரவு படுத்ததும் உடனே துங்கி விடுவோம். பகலில் உழைப்பின் போதும், இரவில்
தூக்கத்தின் போதும் கவலைப்பட நேரம் ஒதுக்காமல் பாதுகாத்துக் கொள்கிறது இந்த மூச்சுப்
பயிற்சி. இரவில் தூக்கம் வராமல்
தவித்தால் இந்த மூச்சுப் பயிற்சியை பத்துச் சுற்று என்ற எண்ணிக்கையில் செய்யுங்கள்.
இப்போது அமைதி கிடைக்கும். எந்தப் பிரச்சனை தீரவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அது
தீர்ந்துவிடும் என்று நூறு சதவிகித நம்பிக்கையுடன் தூங்க ஆரம்பியுங்கள். இதேபோல ஒரு
மாதம் நம்பிக்கையுடன் பகலிலும் இரவிலும் மூச்சுப் பயிற்சியின் உதவியுடன் முக்கியமான
காரியங்களைச் செய்து முடிப்பதில் கவனத்தைச் செலுத்தினால் வெற்றி மேல் வெற்றி தான்!
ஏற்கெனவே நம்மால் ஜெயிக்க முடியாத செயல்கள் மற்றும் பிரச்சனைகளுக்குக்
கூட நமது வெற்றிகள்தான் மீண்டும் மீண்டு அந்த செயல்களை, பிரச்சனைகளை ஜெயிக்க வைக்கும்.
புதிய வெற்றிகள் என்பது நமக்கு உத்வேகத்தை கொடுக்கும். அந்த உத்வேகமானது பழைய தோல்விகளை
கூட வெற்றி அடையச் செய்யும் புதிய வழிகளைக்
நமக்கு காண்பித்து வெற்றி அடையச் செய்யும். ஆகையால், எப்போதும் மன உறுதியுடன் காரியங்களைச்
செய்பவராக, பின்வாங்காத மனமுடன் உங்களை நீங்களே தயார் படுத்திக்கொண்டும், முயற்சி செய்து
உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ளுங்கள். மேலும் காரியங்களைத் தொடர்ந்து செய்யும் விடா
முயற்சி மன உறுதியிலிருந்து மட்டுமே ஒவ்வொரு மனிதனும் நீதிநெறியிலும், ஒழுக்க
உணர்வுடனும், நியாய உணர்விலும், பக்குவப்பட்ட மனதுடனும் விளங்கி மாபெரும் மனிதனாக உயர்ந்துக்
காட்டுகிறான்.
நமக்கு தெரிந்த விஷயம் தான் அதாவது கலர் பிலிமைக் கண்டுபிடித்த
ஈஸ்ட்மன் என்பவர் (1854-1932)
தான் கோடாக் கேமராவையும், ரோல் பிலிமையும் கண்டுபிடித்தவர் ஆவார்.
அவர் இந்த உற்பத்தியில் அதிக லாபம் கொட்டியதால் அவருடைய தொழிலாளர்களுக்கு லாபத்தில்
ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் போனஸாகக் கொடுக்க ஆரம்பித்தவர் முதலில் இந்த ஈஸ்ட்மன் அவர்கள்
தான். இந்த மாபெரும் நல்லக் குணத்தை அவருடைய வெற்றி மற்றும் வெற்றிக்கான தொடர் உழைப்புதான்
கொடுத்து இருக்கிறது. எனவே கவலைப்படாமல், பிரச்சனைகள்
அதிகம் இருந்தாலும் தொடர்ந்து உழையுங்கள். தொடர் விடா முயற்சி உழைப்பினால் மட்டுமே
தான் கவலைகள் கரைந்து ஒன்னுமில்லமால் போகும். நம்முடைய அறிவும் விருத்தியாகி மகிழ்ச்சியும் பொங்கும். இன்று வெற்றி
பெற்ற அனைவருமே கவலையை மறந்து, முயற்சியில் கவனம் செலுத்தி, தொடர் உழைப்பில்
கவனத்தை திருப்பியவர்கள் மட்டுமே வெற்றி இருக்கையில் அமர்ந்து இருக்கிறார்கள்.
முகமது அலியின் ஒன்பது குழந்தைகளுள் ஒரு குழந்தை லைலா அலி மட்டும்
தான் சர்வதேச அளவில் அவரைப் போன்று குத்துச்சண்டைப் போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை
வென்று சாதனை படைத்து வருகிறார். பெண் சிறுத்தை என்று புகழப்படுகிறார் லைலா. இவர் தன்னுடைய
முன்னால் தவறு பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே இருந்தால் நினைத்துப் பாருங்கள். நாம்
அவரைப் பற்றி இப்போது நினைத்து இருப்போமா? உண்மையாகச் சொன்னால் அன்றே காணாமல் போயிருப்பார்!
காரணம்,
இவர் தன்னுடைய சிறு வயதுக் காலங்களில் திருட்டுக் குற்றத்திற்காக
தண்டனை கொடுக்கப்பட்டு சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டவர் ஆவார். வெளியே வந்த
லைலா நல்லதை மட்டுமே சிந்திப்பதில் அக்கறையாக இருந்து அப்பாவைப் போலவே குத்துச்சண்டையில்
புகழ் பெறத் தீர்மானித்து, வேறு எதிலும் மனம்
விழுந்து விடாமல் பயிற்சியிலேயே கவனமாக இருந்து ஜெயித்து விட்டார்.
ஆகவே, எப்படிப்பட்ட தீராதக்
கவலைகளையும், தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் நம் மனம் கவனம் சிதறாது, தொடர் உழைப்பு
மட்டும் விடா முயற்சியுடன் செயல்படுத்தினால் போதும். நாம் எதையும் வென்று விடலாம். மாறாக கவலை
பட்டால், கவலைக்கு இடம் கொடுத்தால் நாம் கவலைக்கிடமாகி, முடங்கி, முடியாமல் நம்
வாழ்கை முடிந்து விடும். கவனம் நண்பர்களே! கவலை வேண்டாம்! கவலை என்ற வலைக்குள் விழ
வேண்டாம். மாறாக கவலை என்ற வார்த்தையில் உள்ள ‘வ’ நீக்கினால் வரும் கலையைத்
தெரிந்து கொண்டு கவலையும் நீக்குங்கள்! முகம் களையாகும். கவலை மறப்பதும் ஒரு கலையே!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்
ஊக்கம் : கவலைப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும்? - ஊக்கம் [ ஊக்கம் ] | Encouragement : What happens if you worry? - Encouragement in Tamil [ Encouragement ]