தாயின் கருவறையில் வளர்கிறான். தாயின் வயிற்றுக்குள் வளர்ந்தவன் பூமித்தாயின் மடியில் விழுகிறான்.
மனித உறவுகளைப் பற்றி தெளிவான விளக்கம்:
தாயின்
கருவறையில் வளர்கிறான். தாயின் வயிற்றுக்குள் வளர்ந்தவன் பூமித்தாயின் மடியில்
விழுகிறான். அன்னையின் மடியில் புரள்கிறான். மல்லாந்து படுத்து கைகளை கால்களை
ஆட்டியபடி வானத்தை பார்க்கிறான். குப்புறப்படுத்து உருண்டு பூமியை பார்க்கிறான்.
எழுந்து உட்கார்ந்து உலகத்தை எட்டிப் பார்க்கிறான். தவழ்ந்து விளையாடி தரையில்
தாளம் போடுகிறான். எழுந்து நின்று எட்டும்வரை பார்க்கிறான். நடக்கும் போது
தள்ளாடியபடி நடனம் ஆடுகிறான். ஓடி விளையாடி மகிழ்கிறான். மழலைபேசி பிறரை மகிழ்ச்சி
கொள்ள வைக்கிறான். குறும்புகள் பல செய்து குழந்தையாய் பிறந்ததின் பலனை அடைகிறான்.
பள்ளிப்பருவம் வந்ததும் பள்ளி செல்கிறான். இளமைப் பருவத்தில் இனிய கனவு உலகில்
மிதக்கிறான். திருமணப் பருவம் வந்ததும் வாழ்க்கைத் துணைவியை தேடுகிறான். இல்லற
இன்பத்தில் மூழ்குகிறான். குழந்தையாக பிறந்தவன் தன் குழந்தைக்கு தகப்பனாகிறான்.
குழந்தையை கொஞ்சி மகிழ்கிறான். கட்டி அணைக்கிறான். குழந்தையின் மழலைச் சொல்கேட்டு
ஆனந்தத்தில் மகிழ்ச்சியடைகிறான். குழந்தை அப்பா என்று அழைக்கும் போது
ஆனந்தமடைகிறான். குழந்தையை வளர்த்து இளம் வயது வாலிபனாக்குகிறான். இப்போது அவன் ஒரு
இனிமையான இன்னிசை குரலை கேட்க ஆசைப்படுகிறான். அதுதான் மாமா என்று அழைக்கும்
இன்னிசைக்குரல். மருமகள் என்னும் மங்கல செல்வியை தேடுகிறான். மகனுக்கு திருமணம்
செய்கிறான். மருமகள் என்னும் புதிய உறவு பிறக்கிறது. மாமா மாமா என்று அழைக்கும்
மருமகளின் பாசக் குரலை கேட்டு மகிழ்ச்சி கொள்கிறான். இப்படியே குடும்ப வண்டி
குடுகுடுவென்று ஓடுகிறது. அவனுக்கு அடுத்து ஒரு ஆசை பிறக்கிறது. அதுதான் தாத்தா
என்னும் குரலை கேட்கும் ஆசை. அதையும் கேட்டு ரசிக்கிறான். அத்துடன் அவன் ஆசை
முடிவடையவில்லை. இன்னும் பல இயற்கை இன்பங்களை அனுபவிக்க ஆசைப்படுகிறான். அதனால்
அதிக காலம் வாழ விரும்புகிறான். மனிதனின் ஆசை மண்ணுக்குள் புதைந்த பின்பு தான்
முடிவடைகிறது. இதைத்தான் அன்னையின் மடியில் தொடங்கிய வாழ்க்கை மண்ணின் மடியில்
முடிகிறது என்கிறோம். இயற்கை அன்னையின் உண்மைத் தத்துவம் என்ன? மனிதா இயற்கை இன்பங்களை அனுபவிக்க
பேராசைப்படலாம். தேவையில்லாத ஆசைகளை விரும்பினால் பல துன்பங்களை நீ அனுபவிப்பாய்.
இன்று இயற்கை இன்பங்களை முழுமையாக அனுபவித்து வாழும் மனிதர்கள் எத்தனை பேர்?
மனிதா நீ உன்னைப்
பற்றி சிறிது சிந்தித்துப்பார். பிறக்கும்போது உன் உடலுடன் உயிரையும் சேர்த்து சுமந்து
வருகிறாய், மரணமடைந்தபின்
உன் உயிரை காற்றில் கலந்து விட்டு வெறும் உடலை மட்டும் மண்ணுக்குள் கொண்டு
செல்கிறாய். மண்ணில் புதைக்கப்படும்போது உன்னால் எதையும் கொண்டு கொண்டு செல்ல
முடியவில்லை. இப்படி இருக்கும்போது வாழும் காலத்தில் ஏன் பணவெறி பிடித்து
அலைகிறாய்?
மனித உறவுகள்
மிகவும் புனிதமானவை. அன்பால் நிறைந்தவை.
வாழ்க்கையில் அன்பு பாதையும் வரும். வெறுப்பு பாதையும் வரும். அன்பு பாதையில் அன்பானவர்களும்,
வெறுப்பு பாதையில் விரோதிகளும், துரோகிகளும், வெருப்பானவர்களுமே வருவார்கள். அங்கே
மகிழ்ச்சி கேள்வி குறியாக தான் இருக்கும். மேலும் உறவுகளிலும் கூட மேம்போக்கான
உறவுகள் உண்டு. அந்த உறவை கூட நாம் நினைத்தால் நம் அன்பால் ஆத்மார்த்தகமாக மாற்ற
முடியும். இன்னும் சொல்லப் போனால் இரத்த உறவுகளை விடவும் மத்த உறவுகள் சிலர்
வாழ்க்கையில் முக்கியமானவர்களாக இருப்பதையும் நம்மால் காண முடிகிறது. இது எப்படி
சாத்தியம் என்றால் சத்தியமாக தூய அன்பை தவிர வேற எதுவும் இல்லை. நம் நாட்டின்
சுதந்திரமே இந்த அன்பை வைத்து தான் பெறப்பட்டது. நாம் எந்த ஆயுதம் எடுத்தாலும் அதை
விட பெரிய ஆயுதம் எடுத்து விடுவார்கள். ஆனால் நாம் எடுத்த அன்பு ஆயுதத்தின்
முன்னாடி எந்த ஆயுதமுமே எடுக்க முடியவில்லை என்று நம்மை எதிர்த்தவர்களே எடுக்க
முடிய வில்லை என்று அவர்களே சொன்ன கூற்றுகளும் நாம் கேள்வி பட்டு தான்
இருக்கிறோம். அப்பேற்பட்ட அன்பினால் பிணைக்கப்பட்ட உறவுகள் எப்படி தவறாக போகும்.
நம் துன்பத்தில் துவளும் போது எவர் கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் வருகிறதோ அந்த உறவு
ரத்த சொந்தமாயினும் இல்லை மற்ற எந்த உறவுகளாயினும் அந்த உறவு நம் வாழ்க்கையின்
வரம் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இரத்த உறவுகள்
என்பது தாய், தந்தை, தாத்தா, பாட்டி, பூட்டன், பூட்டி, ஒட்டன், ஒட்டி, கூடப்
பிறந்தவர்கள், அவர்கள் தொடர்பானவர்கள் ஆகியோர்களை சொல்லலாம். அதே மாதிரி மண உறவு
என்பது இரத்த உறவு அல்லாத ஒருவரை திருமணம் செய்துகொண்டு வருபவர்கள் ஆவார்கள்.
புனைவியல் உறவு என்பது சிலர் தத்து எடுத்து கொண்டு வருவதன் மூலம் கிடைக்கும் உறவுகள்
ஆகும். எடுத்து காட்டாக
நாம் முதல்
தலைமுறை
இரண்டாம் தலைமுறை
- தாய் தந்தையர்
மூன்றாம் தலைமுறை
– ஆச்சி, தாத்தா
நான்காம் தலைமுறை
– பூட்டி, பூட்டன்
ஐந்தாம் தலைமுறை –
ஒட்டன் ஒட்டி
ஆறாம் தலைமுறை –
சேயோன், செயோள்
ஏழாம் தலைமுறை –
பரன் பரை
ஏழு தலைமுறை, பரம்பரை
சொத்து இவைகளுக்கான தொடர்பு தெரிய வந்து இருக்கும்.
இந்த உறவுகளுக்குள்
உள்ள பயணம் மிகவும் மகிழ்ச்சியானது. உறவுகளுக்குள் பரஸ்பர உணர்வு விலை மதிப்பு
இல்லாதது. இந்த உறவுகள் இல்லாமல் பணம் எவ்வளவு வைத்து இருந்தாலும் அவர்கள்
அனாதைகள் தான். பணம் இருந்தும் அவர்கள் பரம ஏழைகள் தான். உறவுகள் சூழ்ந்து ஒருவர்
இருந்தால் அவர் பணம் இல்லாதவராயினும் செல்வந்தரே ஆவார். சொந்தக்காரர்களால்
சூழ்ந்து வாழ்பவரே தான் உச்ச கட்ட மகிழ்ச்சிக்கு சொந்தக்காரர். சொந்தங்கள் துன்பங்களும்
தரும். அவை தற்காலிகமானவை. எந்த உறவுகளிலும் பிரிவு ஏற்பட்டாலும் அன்பால் சமாதானம்
ஆகி விடலாம். அவ்வளவு சக்தி அன்பிற்கு உண்டு. இந்த அன்பினாலே தான் சில கெட்டதும்
நடக்கிறது. அதையும் நாம் புரிந்து கொண்டு அவர்களை திருத்தினால் அந்த கெட்டதும்
விலகி போய் விடும் என்பதே உண்மை. உறவுகளில் விட்டுகொடுக்கும் தன்மை, மன்னிக்கும்
பக்குவம், தானாக வந்து உதவிகள் செய்யும் குணங்கள், ஊக்கத்தை கொடுக்கும்
வார்த்தைகள், ஆதரவு காட்டுகின்ற அக்கறைகள், தேவைப்படும் நேரங்களில் சரியான
சமயத்தில் பணம் கொடுக்கும் தன்மை, அன்பை வெளிபடுத்தும் ஆத்மார்த்தமான வார்த்தைகள்,
எப்போதுமே உறவுகளிடம் இழிவு படுத்தாது, மட்டம் படுத்தி பேசாதது, தரம் தாழ்த்தி
பார்க்காதது போன்ற குணங்கள் மேலோங்கி
நிற்கும்.
தகப்பன் மகன்
உறவுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. தாய் இடத்திற்கு கூட மனைவி பூர்த்தி செய்யலாம்.
ஆனால் தந்தை இடத்தை நிரப்ப எவராலும் முடியாது. நம்பிக்கைக்கு அர்த்தம் ஒரு
வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அதன் பெயர் அப்பா தான். பணத்தால்
வாங்க முடியாதது இந்த அன்பும், மகிழ்ச்சியும் தான். நல்ல நண்பர்களிடம் சந்தோசமாக
பேசுகின்ற நேரங்கள் போல, அது தரும் மகிழ்ச்சி போல வேற எதுவும் கிடையாது
என்கிறார்கள். அப்பேற்பட்ட உயர்ந்த மகிழ்ச்சி தரும் நண்பர்கள் நம் வாழ்க்கையின்
வரங்கள்.
உறவுகளுக்குள்
பாராட்டுங்கள், நன்றி சொல்லுங்கள், ஊக்கப்படுத்துங்கள், ரொம்ப பிடித்து இருக்கு
என்று சொல்லுங்கள், சிரித்து பழகுங்கள். சிரிக்க வைத்து அழகு பாருங்கள். உங்களால்
முடிந்த சின்ன சின்ன பரிசை பரிமாறுங்கள். உங்களை விட வயது குறைந்தால் பெயர் சொல்லி
அழையுங்கள். ஒரு நாள் வயது கூடினாலும் மரியாதையுடன் கூப்பிடுங்கள். இப்போதய காலங்களில்
மரியாதை என்பது வசதியை பார்த்து தான் வருகிறது. முன் காலங்களில் வயதை பார்த்து
வந்தது. பணம் இப்போ பிரதானமாக காட்சி அளிக்கிறது.
‘குணத்தால் ஆகாதெனினும் அச்சடிச்ச பணம்
எச்செயலையும் ஆகச் செய்துவிடும்.’
என்கிற அளவுக்கு பணம்
தான் பாசத்தை, உறவை தக்க வைக்க உதவுகிறது. பாசத்தின் அளவை கூட பணம் தான்
அளக்கிறது. ஆனால் பணம் நாம் கண்டுபிடித்தது. பாச உணர்வுகள் இயற்கை கொடுத்தது. இது
நிரந்தரம். மனித உறவுகளுக்கு எவ்வளவு பண மதிப்பு என்று வரையறுக்க கூடாது. மாறாக அதை
நமக்கு கிடைத்த பொக்கிசமாக பாதுகாத்து பத்திரமாக கையாளுவது என்பது ஒரு கலை. அதை
அனைவருமே மேற்கொள்ள வேண்டும். உறவுகளுக்குள் பிளவு ஏற்படுவது என்பது உடைத்த
கண்ணாடி போல, அதை மீண்டும் ஓட்ட வைக்க முடியாது. அதனால் உறவுகளை மதியுங்கள். உறவுகள்
முறையை அடிக்கடி சொல்லி சொல்லி அழையுங்கள். அழைக்கும்போதே பிடிக்காத உறவுகளும்
பிடித்து கொள்ளும். அணைத்துக் கொள்ளும். தழுவிக் கொள்ளும். உறவுகளுக்குள் அடிக்கடி
பேசிக் கொள்ளுங்கள். இங்கு பேசாத உறவுகள் பெயரை கூட மறந்து விடுகிறது. அவர்கள் பேசினால்
நாம் பேசுவோம் என்று எதிர் பார்க்காதீர்கள். நீங்களே முன் வந்து பேசுங்கள்.
அடுத்தவர் மனதை நோகடித்து பார்க்காதீர்கள். அலட்சியம் செய்யாதீர்கள். வீண் சண்டை, வீண்
விவாதம் தவிருங்கள். எதிர் மறையாகவே சில உறவுகள் இருக்கும். அவர்களிடம் கவனமாக
பழகுங்கள். முடிந்தவரை அவர்களை விட்டு தள்ளி இருத்தல் உத்தமம். நேசிக்கும்
உறவுகளிடம் பழகினாலே வெறுக்கும் சில சொற்ப உறவுகள் உங்களுக்கு பெரிதாக தெரியாது.
வெறுக்கும் உறவுகளை நீங்கள் வெறுக்காதீர்கள். அவர்களை நேசித்து அன்பு செய்ய
முயற்சி செய்யுங்கள். முடியவில்லை எனில் விட்டு தள்ளுங்கள். மலர்ந்த பூக்களில்
தான் தேனீக்கள் தீனிக்காக தேடி வரும். மொட்டாக மூடி இருந்தால் வராது. அது போலத்
தான் உறவுகளும் மகிழ்ச்சியுடன் புன்னகைத்து வரவேற்று பாருங்கள். அழையா
விருந்தாளிகளும் அலை அலையா உங்களிடம் வருவார்கள். இனிப்பாகவே எப்போதும் பேசினால் விழுங்கி
விடுவார்கள். அதே நேரத்தில் வெறுப்பாக பேசியும் கசப்பாக இருந்து விடாதீர்கள். துப்பி
விடுவார்கள். உப்பு போல பழகி வாருங்கள். நீங்கள் இல்லாமல் அவர்களுக்கு மகிழ்ச்சி
இருக்காது. கண்டிப்பாய் தேவைப்படுவீர்கள். உங்கள் உறவும் முக்கியமாக கருதப்படும்.
இன்றைய பண
நெருக்கடியில் குடும்பத்திற்காக பணத்தை சம்பாதிக்க ஓடுகிறோம் என்ற பெயரில்
அனைவருமே குடும்பத்தை விட்டே ஓடுகிறோம். இன்னும் சிலர் மறுபடியும் குடும்பத்திற்கு
வராமலேயே போய் விடுவது அதை விட கொடுமை. வருங்காலங்களில் அண்ணன், தம்பி, அக்கா,
தங்கச்சி, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், கடைசி தம்பி, கடைக்குட்டி பிள்ளை, மாமா
பையன், அத்தை பொண்ணு, கொழுந்தனார், பெரியப்பா, சித்தப்பா, தாய் மாமன், மச்சான், மாப்ளை,
மச்சினி, கொழுந்தியா, அண்ணி இன்னும் உறவுகள் கூப்பிட்டு மகிழ்ச்சியுடன்
இருந்தார்கள். இப்போ அது குறைந்து அந்த வார்த்தைகளே காதில் விழுவது கூட குறைந்து
விடும் அச்சம் தான் இருக்கிறது. அதற்க்கு காரணமும் நாம் தான். ஒன்றே ஒன்று என்று
நிறுத்தி விடுவது மட்டுமல்லமால் பாதி உறுவுகளை அந்த குழந்தைக்கு தெரியாமல் போவது
தான் முக்கிய காரணம். அனைத்து உறவுகளுமே அந்த குழந்தைக்கு அங்கிள் தான். மேலும்
கூட்டு குடும்பம் என்பதும் குறைந்து விட்டது. வருங்காலங்களில் சீர் வரிசை செய்ய,
பந்தக்கால் நட, பட்டுச் சேலை எடுத்து தர, மொட்டை போடும் போது தாய் மாமன் மடியில்
உக்கார, பிரச்சனை என்றால் துணை நிற்க அண்ணன் தம்பிகள், மாமன் மச்சினன் எப்படி
இருக்க போகிறார்கள் என்பதும் ஒரு கேள்வி குறியாகி விடும். தற்காலங்களில் சுக,
துக்க நிகழ்ச்சிகள் பங்கு பெறுபவர்கள் எண்ணிக்கையும் குறைகிறது. அப்படி பங்கு
பெற்றாலும் அது அந்த அரை நாள்களில் முடிந்து விடுகிறது. அதற்க்கு அப்புறம்
அவர்களிடம் தொடர்பு மிகவும் குறைவாக இருக்கிறது. அனைவரும் இயந்திரம் மாதிரி தனது
தேவைக்கு மட்டும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். முன்பெல்லாம் சொந்தம் விட்டுப்
போகக்கூடாது என்று பையனையோ, பெண்னையோ சொந்தங்களுக்குள் திருமணம் முடித்து
விடுவார்கள். ஒரு கஷ்டக் காலத்தில் கூட மருத்துவமனையில் கூட தங்கி பார்த்துக்
கொள்ள உறவுகள் இல்லை என்பதும் வேதனையிலும் அதிக வேதனையை கொடுக்கும்.
நமது வாழ்க்கையே
இந்த உறவுகள் தான் அதிக வசந்த நொடிகளை, நிமிடங்களை, வருடங்களை வாரி வழங்கும்
என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. உறவுகள் இன்றி அமையாது உலகு என்பதும்
உண்மையே. தற்காலங்களில் ஒரே வீட்டில் கூட பேசுவதும் குறைந்து தான் போகிறது. காரணம்
அனைவரும் மொபைல் உலகத்தில் மதி மயங்கி தலை குனிந்து உலகச் செய்திகளை தெரிவதற்காக
முழு நேரமும் செலவு செய்து உலகை தெரிந்தவர்களுக்கு, வீட்டில் நடக்கும் செய்திகள்
தெரியாமல் போவது தான் கொடுமையிலும் கொடுமை. இனியாவது அடிக்கடி மொபைல் போனை கையில்
வைக்காமல், கீழேயும் கொஞ்ச நேரம் வைக்க பழகுங்கள். வீட்டின் நிலவரம் முழுதாக தெரிய
வரும். சுருக்கமான பேச்சுகள் மீண்டும் வலுப்பெறும். நேற்று என்பது உடைத்த பானை. ஒன்றும்
செய்ய முடியாது. நாளை என்பதும் கூட மதில் மேல் பூனை. நாளை வந்தால் உண்டு இல்லையெனில்
அவ்வளவு தான். கதம் கதம். ஆனால் இன்று மட்டுமே கையில் இருக்கும் வீணை. அழகாக வாசியுங்கள்
உங்கள் விருப்பப்படி. நமக்கு கிடைத்த வாழ்க்கை அரிது. அப்பேற்பட்ட வாழ்கையில்
வரும் உறவுகளை பேணி காத்து, உணர்வுகளுடன் சங்கமித்து, சந்தோசத்துடன் மகிழ்ச்சியாக
வாழ்ந்து மற்றவரையும் மகிழ்ச்சி படுத்தி அந்த மகிழ்ச்சியில் பேரானந்தம் அடைதலே
உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : மனித உறவுகளைப் பற்றி தெளிவான விளக்கம் - குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Welfare : A clear description of human relations - Tips in Tamil [ Health ]