வெற்றி அடைவதற்குத் தேவையான குணநலன்கள்

குறிப்புகள்

[ நலன் ]

Qualities required for success - Tips in Tamil

வெற்றி அடைவதற்குத் தேவையான குணநலன்கள் | Qualities required for success

பொதுவாக மனிதர்கள் இரண்டு வகை குணங்களைப் பெற்றிருப்பார்கள்.

வெற்றி அடைவதற்குத் தேவையான குணநலன்கள்

வெற்றி என்று நாம் வகுக்கும் நிலைக்கு என்னென்ன குணநலன்கள் அவசியம் வேண்டும் அல்லது தேவையான தகுதிகள் பற்றி இக்கட்டுரையில் விரிவாக படிப்போம். பொதுவாக மனிதர்கள் இரண்டு வகை குணங்களைப் பெற்றிருப்பார்கள். எந்தக் குணம் ஜெயிக்கும் அல்லது எந்தக் குணம் தோற்கும் அல்லது எந்தக் குணங்களை நாம் எப்படி அடைவது பற்றிய கேள்விகளுக்கு பதிலாகக் காண இருக்கிறோம்.

 

மனிதர்களுடைய இரண்டு வகைகள்:

“மனிதர்களுடைய குணங்களில் ஒருவரை Introvert, Extrovert என்று இரண்டு வகைகள் இருக்கிறார்கள்.” இந்த இரண்டு குணங்களும் நேர் எதிர் வரிசையில் இருக்கும். Introvert, குணநலன் கொண்டவர்கள் அடுத்தவர்களோடு அதிகமாக பேச ஆசைப்பட மாட்டார்கள். அவர்களுக்குத் தேவை ஏற்பட்டால் ஒழிய அடுத்தவரிடம் வாயைத் திறக்க மாட்டார்கள். தன்னுடைய மனதில் உள்ளதை அப்படியே மனதுக்குள்ளே வைத்து எப்போதும் அமைதியாகவே இருப்பார்கள். ஆனால் இரணடாவது வகை Extrovert குணநலன் கொண்டவர்கள் இதிலிருந்து அப்படியே எதிராக இருப்பார்கள். இந்த வகையினர்கள் மனதில் எதையுமே தங்க வைக்க மாட்டார்கள். அப்படியே அனைத்தையும் ஒன்னுவிடாமல் மற்றவரிடம் சொல்லியே தீருவார்கள். அப்படி வெளிப்படையாக இருப்பது அதாவது இந்த குணநலன்களின் வாழ்க்கையானது திறந்த புத்தகங்கள் போல எப்போதும் யாரும் இவர்களை அறிந்துக் கொள்ளலாம். பொதுவாகவே அமைதியாக இருந்தால் மற்றவர்களின் பலவீனம் தெரிய வரும். அதுவே சலசலன்னு பேசுபவர்களின் பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிய வரும் என்று சொல்வார்கள்.

 

எதன் அடிப்படையில் இந்த குணநலன்கள் ஒருவரிடம் ஏற்படுகிறது? வேறுபடுகிறது?

ஒருவருக்கு குழந்தைப் பருவத்திலேயே இந்த குணநலன்கள் ஏற்பட்டு விடுகிறது. அவர்களுடைய குழந்தைப் பருவத்தில் அவர்களைச்  சுற்றி உள்ள சூழல் மற்றும் சூழ்நிலை, வளர்ந்த விதம், பழகும் விதம் இன்னும் பல காரணங்கள் கொண்டு ஒரு மனிதருக்கு ஏற்பட்டு விடுகிறது. மரபியல் தொடர்பாகவும் இந்த குணங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு, பிள்ளைகளுக்கு தொற்றிக்கொள்கிறது.

 

ஒருவரை இன்ட்ரோவெர்ட், எக்ஸ்ட்ரோவெர்ட் என்று அடையாளம் அறிவது?

பொதுவாகவே மிகப் பெரிய அறிவியல் அறிஞர்கள், ஓவியர்கள் எழுத்தாளர்கள், சினிமா கலைஞர்கள் மற்றும் பிற துறைகளில் சிறப்பாய் சிந்தித்து பணிபுரியும் நிபுனத்துவர்கள், வல்லுநர்கள் இது போன்ற  Introvert குணநலன்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியர்கள் மற்றும் பேராசியர்கள், பயிற்சியாளர்கள், மார்க்கெட்டிங் நபர்கள், விளம்பரம் செய்பவர்கள், ஊடகத்துறை மனிதர்கள் மற்றும் ஒரு குழுவை வழி நடத்தி செல்பவர்கள் இன்னும் இது போலத் திறமைகள் இருப்போர்கள் Extrovert குணநலன் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

 

Introvert குணங்களோடு இருப்பதால் பிரச்சனைகள் ஏற்படுமா?

Introvert குணநலன் கொண்டவர்கள் தங்களது உடல் நிலை மற்றும் மன நிலை சார்ந்து எந்த பிரச்சனைகளையும் அடுத்தவர்களுக்குத் தெரிவிக்காததால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது. உதாரணமாக, பெற்றோர்களில் சிலர் அவர்களின் உடல், மனநலம் மற்றும் அவர்களுடைய பொருளாதார பிரச்சனைகள் பற்றித் தங்களது  குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு என்று யாருக்கும் சொல்லாமல் தங்கள் மனதுக்குள்ளேயே ரகசியமாக வைத்துக் கொள்வதால் சிலப் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புகள் இருக்கத் தான் செய்கிறது. இதனால் மன அழுத்தம், மனச்சோர்வு, மனப்பதற்றம்  மற்றும் பெரிய அளவிலான உடல்நலப் பிரச்சனைகளுக்கு அவர்கள் உட்படுத்த நேரிடுகிறது. இன்னும் சொல்லப்போனால் சில சமயங்களில் இதனால் ஏற்படுகிற பெரிய மன அழுத்தங்களினால் தற்கொலை செய்யும் அளவுக்குக் கூட தூண்டப்படுகிறார்கள்.

 

Extrovert குணங்களோடு இருப்பதால் பிரச்சனைகள் ஏற்படுமா?

இந்த Extrovert குணநலங்கள் கொண்டவர்கள் தங்களது பிரச்னைகளில் எதை யாரிடம் சொல்ல வேண்டும் என்று சரிவரத் தெரியாமல் இருப்பார்கள். அனைவரிடமே அதைப் பற்றி பகிர்ந்து கொள்வதும் உண்டு. அப்படி சிலத்  தவறான நபர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது சிலப் பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. உதாரணமாக, இளைஞர்களில் சிலர் தாங்கள் வேலைக்கான முயற்சியின் போது, அந்த வேலை வாய்ப்பு சரியாக உறுதியாகாத நிலையில் கூட அதை அனைவரிடமும் சொல்லி தங்களது வாய்ப்புகளைக் கூட இழக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதனால் அந்த வேலை கிடைக்காத சூழ்நிலையால் விரக்திகள் ஏற்பட்டு ஏமாற்றமடையும் போதோ அல்லது அதை அவமானமாகக் கருதும் போதோ அவர்களுக்கு மனநல நோய்கள் ஏற்படக் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இன்னும் சிலர் இந்தக் காரணங்களினால் சில சமயங்களில் சிலர் தற்கொலை செய்வதற்கு முயற்சியும் செய்ய வாய்ப்புகள் உள்ளது. அனைவரிடமும் பேசிப் பழகும் பழக்கமுடையவர்களாக இருப்பதால் சில தப்பான குழுவுக்குள் மாற்றி விடுகிறார்கள். மேலும் அவர்கள் மற்றவர்களின் தூண்டுதல்களில் அடிமை ஆகி புகைப்பழக்கம், மதுப் பழக்கம் மற்றும்  இதுப் போன்ற பிற தீய பழக்கங்களுக்குக் கூட ஆளாக வாய்ப்புகள் இருக்கிறது.

 

இந்த வேறுபட்ட குணநலன்களை எப்படிக் கையாள்வது?

Introvert அல்லது Extrovert குணநலன்கள் அதி தீவிரமடைந்து மனநல பிரச்னைகளுக்குரிய நிலையில் இருப்பவர்கள், தனக்கு நம்பிக்கைக்கு உரித்தவர்களிடம் தன்னுடைய பிரச்சனைகளைச் சொல்லி அதற்குரிய தீர்வுகளைக் காண முயற்சித்தல் வேண்டும். மாறாக மற்றவர்களை வீணாக தொந்தரவு செய்கிறோம் என்ற தேவையற்ற எண்ணங்களை மனதில் இருந்துத் தூக்கி எரிய வேண்டும். அப்படி நினைப்பதை Introvert குணநலன் கொண்ட நபர்கள் தவிர்த்தல் வேண்டும். அதேமாதிரி, Extrovert குணநலங்கள் கொண்ட நபர்கள் அனைவரிடமும் தங்களுடைய பிரச்சனைகளைப் பகிர்ந்து கொள்வதை நிறுத்தி விட்டு தனது நம்பிக்கைக்கு உரியவர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளப் பழக வேண்டும். இந்த இரண்டு வெவ்வேறு குணநலன்களைக் கொண்டவர்களும் தங்களுடைய நிலைமைகளை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களுடைய குணநலன்களுக்கு ஏற்ற அல்லது சரியானப் பணிகளை மேற்க்கொண்டு வருதலே இதற்குத் தீர்வாகும். சரியான நேரத்தில் மனநல மருத்துவரை அனுகுதல் சிறந்தப் பலன்களை கொடுக்கும்.

நமது மனதில் நல்ல எண்ணங்களோ, அல்லது தீய எண்ணங்களோ ஒரு குறிப்பிட்ட எண்ணமானது தொடர்ந்து நீடிக்கும் போது, அந்த எண்ணங்கள் அம்மனிதனின் குணநலன்களை பாதிக்காமல், ஏன் ஒரு விளைவை ஏற்படுத்தாமல் விடாது என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

ஒரு மனிதனுக்கு தன்னுடைய விருப்பத்துக்கு  ஏற்ற சூழ்நிலைகளை  தானே தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், நம் மனதில் தோன்றும் எண்ணங்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் நம்மிடம் தான் இருக்கிறது. அந்த எண்ணங்களை நல்ல முறையில் நேர் மறையுடன் செலுத்தினால் எந்த விதப் பாதிப்புகளும் ஏற்படாது எனபதே சத்தியமான உண்மை. அதற்குரிய வாய்ப்புகள் நம் கையில் தான் இருக்கிறது. அந்த வாய்ப்புகளை பயன்படுத்துதல் அவரவர் திறமைகளின் வெளிப்பாடு ஆகும்.

எண்ணங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளலாம் என சில மனிதர்கள் நினைப்பது உண்டு. ஆனால் அந்த எண்ணங்களை மறைப்பது என்பது கஷ்டமான விஷயம் ஆகும். ஏனென்றால் எண்ணம் தான் முதலில் உருவாகி, செயலாகி, பழக்கமாகி, நாளடைவில் கலாச்சாரமாகி அடுத்த தலைமுறைகளை உருவாக்கவும் இந்த தனிப்பட்ட எண்ணம் அதாவது சிந்தனை தான் முக்கிய காரணமாக இருக்கிறது. அப்பேற்பட்ட தலைமுறை வளர்ச்சிக்கு காரணகர்த்தவாக செயல்படும் சிந்தனை எப்படி இருக்க வேண்டும் என்பதை உங்கள் கையிலே அதாவது உங்கள் சிந்தனைகளிலே செலுத்தி விடுகிறேன். நாளைய நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய குணநலன் என்ன என்பது இப்போது தெரிய வந்து இருக்கும். ஆம் சிந்தனை, எண்ணம் தான் வாழ்க்கை. வாழ்க்கையில் எல்லாம் பெற வேண்டும் என்றால் சிந்தித்து செயல்படுங்கள். இவ்வுண்மையை ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்க்கையில் சோதித்துப் பார்க்க முடியும். நம்மைப் பற்றி நாமே ஆழமாகச் சிந்தித்து சுய சோதனை செய்து கொள்வதன் மூலம் தன்னுடைய சுய மதிப்பை கண்டு கொள்ளலாம். உதாரணமாக தாழ்ந்த எண்ணங்கள் கொண்டவர்கள் அந்த எண்ணங்களாக எதை நினைக்குறார்களோ  அதுவாகவே ஆகி விடுகிறார்கள். அதேபோல் எதிலும் பயம், எதிலும் சந்தேகம், எந்த செயலிலும் முடிவெடுப்பதில் தயக்கம் போன்ற எண்ணங்கள் பலவீனமான ஆண்மையற்ற, உறுதிகள் குலைந்து, குழப்பமாகி நிலைத்தன்மை அற்ற பழக்கங்களை உண்டாக்குகிறது என்பது உண்மை. பின் அந்த பழக்க வழக்கங்களே அவர்களுக்குத் தோல்வி, வறுமை, அடிமையாக பிறரையே சார்ந்திருத்தல், தைரியம் இல்லாமை, நம்பிக்கை இல்லாமை இது போன்ற பல எதிர்மறை குணங்களை அவர்களுக்குள் சென்று அவர்களை, அவர்களின் வாழ்க்கையை  கேள்வி குறிகளாகி விடுகிறது. மேலும் சோம்பேறித்தனமான எண்ணங்களையும், அசுத்தமான பழக்க வழக்கங்களையும், நாணயமற்ற குணங்களையும் ஏற்படுத்துகிறது. பின் அதுவே பிச்சை எடுக்கும் நிலைக்குக் கூட தள்ளி விட வாய்ப்புகள் இருக்கிறது. எண்ணங்களில் கவனம் வையுங்கள் அந்த எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை கவனம் செய்யும். எதிலும் தோற்றுப் போகின்ற சூழ்நிலையையும் உங்களுக்கு உருவாக்கி கொடுக்கும். நீங்கள் தோல்வியிலும் எண்ணங்களில் கவனம் செலுத்தினால் எங்கே தோற்கடிக்க பட்டோம் என்றும், எங்கே விழுந்தோம், வழுக்கினோம் என்றும், குறிப்பாக எங்கே கவனத்தைச் சிதற விட்டோம் என்றும் அறிந்து விடுவீர்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் முன்னாடி தோல்விகள் தோற்று விடும். வெற்றிகள் உங்கள் காலடியில் மண்டியிடும். எத்தனை முறை விழுந்தாலும் கவலை படாதீர்கள்! விழும் வேகத்தை விட உங்களது எழும் வேகம் பல மடங்கு இருக்கட்டும். விழுங்கள் ! மறுபடியும் விழுங்கள் !! மறுபடி மறுபடியும் விழுங்கள் !!! இங்கே விழுவது கணக்கில்லை. எழுவது தான் கணக்கு. விழத் தெரிந்த உங்களுக்கு எழத் தெரியாதா என்ன? விழும் போது தானே உங்களை கை தூக்கி யார் விடுகிறார்கள் என்றும் யார் தள்ளி விட்டார்கள் என்றும் தெரிய வரும். முடியாத விசயத்தை கடவுளிடம் விட்டு விடுங்கள்! கடவுள் கை விட்டு விட்டார் என்று மட்டும் நினைக்காதீர்கள். அந்த கஷ்டத்தை கொடுத்த கடவுளுக்கு ஒரு நொடி போதுமே. உங்களை தள்ளி விட்ட, உங்களது துரோகிகளை உங்களுக்கு தெரிய வைப்பவரே அந்தக் கடவுள் தான். நீங்கள் எதிர் பார்த்ததை, நீங்களே எதிர் பார்க்காத பல மடங்கில் உங்களுக்கு தாமதமாக கொடுத்தாலும் தரமான விதத்தில் தரும் வல்லமை சக்தி இந்த பிரபஞ்சத்திற்கு உண்டு. இந்தப் பிரபஞ்சத்தை நடத்தும் அந்தக் கடவுளுக்கு உண்டு. கவலை கொள்ளாதீர்கள். மனம் மட்டும் தளர்ந்து விடாதீர்கள். ஏனென்றால் இந்த மனதுக்குத் தான் இழந்த அனைத்தையும் பல மடங்கில் திருப்பி எடுக்கும் சக்தி இருக்கிறது. அப்பேற்பட்ட மனதில் நல்ல எண்ணங்களை நிரப்புங்கள். பிறரைப் பழிக்கும் எண்ணங்ககளும், பிறரை வெறுக்கும் குணங்களும்,   பிறரைக் குறை சொல்லும் பழக்கங்களை கொண்டும் எப்போதும் அடுத்தவரின் குறைகளை சொல்லியே, சுட்டி காட்டியே இருக்காதீர்கள்! அப்படி செய்தால் உங்களிடம் உள்ள குறை உங்களுக்குத் தெரியாமலே வளர்ந்து விட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.  வன்முறையில் ஈடுபடும் குணத்தை அறவே விட்டு விடுங்கள். உங்களை தேவை இல்லாமல் எதிர்ப்பவர்களிடம் வாக்கு வாதமோ, சண்டைகளோ போட்டு காலத்தை விரயம் செய்யாதீர்கள். அவர்களை அந்தக் காலத்திடமே விட்டு விடுங்கள். காலத்தைப் போல் கவனிக்கும் சக்தி எதற்கும் கிடையாது. காலம் அதன் வேலையை கட்சிதமாகச் செய்து அவர்களை ஒரு காட்டு காட்டிவிடும். அவர்களே வந்து உங்களை மண்டி இடும் அளவுக்கு வைத்து விடும். அதனால் தான் வெற்றி பெற முக்கியத் தகுதியே நேரத்தை பயன்படுத்துதல் தான். அதனால் உங்களிடம் சண்டையிடும் நபர்களிடம் தள்ளி நில்லுங்கள். நாயிடம் நாம் கடி படுவதை காட்டிலும் அதற்க்கு வழி விடுதல் நல்லது. அதே மாதிரி உங்களை சீண்டும் நபர்களிடமோ அல்லது அவமானம் படுத்தும் மனிதர்களிடமோ ஒதுங்கி, அவர்களை ஒதுக்கி விடுங்கள். அவர்கள் அப்படி செய்யும் பொழுது நாய்கள் குறைப்பது போன்று மனதில் நினையுங்கள். உங்களுக்கே சிரிப்பு வரும். கோவம் வராது. கோவம் யாருக்குத் தான் வருவது இல்லை. ஏன் நாய்க்கு கூட கோபம் வரத் தான் செய்யும். நாம் யார் என்பதை நாம் தான் காமிக்க வேண்டும். மாறாக அழகான எண்ணங்களை வைத்து இருந்தால் தானாகவே அன்பு, ஆதரவு, கருணை, இரக்கம் போன்ற குணங்கள் தானாகவே தொற்றி விடும். அதனால் சுமுகமான சூழ்நிலைகள் உருவாகும். புத்துணர்ச்சியூட்டும் சூழ்நிலைகளும் உருவாகும். தூய்மையான எண்ணங்கள் சுயகட்டுப்பாடு, சுய ஒழுக்கம், அடக்கம், தன்னடக்கம் போன்ற நல்ல பழக்கங்களை ஏற்படுத்தும். பின் அந்தப் பழக்கங்களே அமைதியும், சாந்தமும் நிறைந்த சூழ்நிலையை உங்களுக்கு  அமைத்துக் கொடுக்கும். மனதில் சந்தோசம், அமைதி இருக்கும் வாழ்க்கை மட்டுமே அதிக மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மேலை நாடுகளில் தான் இருப்பவர்களும், எடுப்பவர்களுமே வரலாறில் இடம் பிடிக்கிறார்கள். ஆனால் நம் நாடுகளில் கொடுப்பவர்ளே வரலாற்றில் தடம் பதிக்கிறார்கள். பல அரசியல் தலைவர்களும், பெரும் மனிதர்களும் தங்களிடம் உள்ளதை கொடுத்ததினால் தான் இன்னும் நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். கொடுக்கும் கைகள் என்றுமே உயர்ந்துத் தான் இருக்கும். உலகத்திலேயே மிகப் பெரிய மகிழ்ச்சி என்பது யாதெனில், முகம் தெரியா நபர்களுக்கு உதவுவது தானாம். அடுத்தவர்களிடம் உதவிகளை கேட்காதீர்கள். மாறாக உதவி செய்யும் நபர்களாக உங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

• சொந்தக் காலிலே நிற்க விரும்பும் எண்ணங்கள், எதையும் செய்யத் துணியும் தைரியம், முடிவெடுக்கும் உறுதித் தன்மை இதுப் போன்ற எண்ணங்கள் ஆண்மை நிறைந்த பழக்க வழக்கங்களை மனிதனுக்கு உருவாக்கி கொடுக்கிறது. அதனால் அவர்களின் வாழ்வு வளமாகவும், எப்போதும் எதிலும் வெற்றிகளைப் பரிசாகவும், எதிலும் சுதந்திரம் போன்ற தனிப்பட்ட உணர்வுகள் கொண்ட சூழ்நிலைகளை ஏற்படுத்தித் தரும்.

• துடிப்பு நிறைந்த எதையும் சாதிக்கும் எண்ணங்கள், தூய்மையான பழக்க வழக்கங்கள், கடினமாக உழைக்கும் எண்ணங்கள் உண்டு பண்ணுகிறது. பிற்காலங்களில் அதுவே இனிமையான சூழ்நிலையாக மாறி வேற லெவலில் அவர்கள் வாழ்க்கை வளமுடன் செல்லும்.

• சாந்தமான அமைதியான எண்ணங்கள், மன்னிக்கும் விட்டுக் கொடுக்கும் எண்ணங்கள் அமைதியான பழக்க வழக்கங்களில் ஈடுபட செய்கிறது. அதுவே அவர்களுக்கு சண்டையில்லா, வன்முறையில்லா, பாதுகாப்புத் தரும் சூழ்நிலையில் வாழ்வதற்கு அவர்களை தயார்படுத்துகிறது.

• அன்புக்குரிய எண்ணங்கள், சுயநலமற்ற பொதுநல எண்ணங்கள், மற்றவருக்காகத் தன்னையே தியாகம் செய்யும் அளவுக்கு அவர்களை மாற்றி விடும். இதன் காரணமாக நிரந்தரமான வளம் நிறைந்த வாழ்வும் அனைத்துச் செல்வங்களும் ஒரே இடத்தில் அவர்களுடைய இல்லத்தில் சிவப்பு கம்பளம் போட்டு என்றுமே நிம்மதியான வாழ்வை அள்ளித் தரும்.

• ஒரு செயல் வெற்றி அடைய வேண்டுமா? அதீத கவனம் இருந்தால் போதும். அதீத கவனம் என்றால் இலக்கு பற்றிய தெளிவானப் பார்வை துல்லியமாக இருத்தல் வேண்டும். உதாரணத்துக்கு நரேந்திரன் ஜி அவர்கள் மேலை நாடுகளில் சென்ற பொழுது அன்பர் ஒருவர் கோல்ஃப் விளையாட்டில் பங்கேற்க சொல்லி குழியில் விழுந்தால் சில டாலர்கள் வெகுமதி தருவதாகவும் சொன்னார். அப்போது அவரும் சரி என்று சொல்லி குழியில் உடனே போட்டுவிட்டார். அதற்கு எப்படி சாத்தியம் என்று கேட்கையில் அவர் சொன்ன பதில்கள்: முதலாவதாக குழியை நோக்கி முதலில் கவனம் செலுத்தினேன். இரண்டாவது குழிக்கு எனக்கும் உள்ள தூரத்தை கண்ணாலே அளந்து எவ்வளவு விசை கொடுக்க வேண்டும் என முடிவுச் செய்தேன். மூன்றாவதாக வெகுமதியை எண்ணிக்கொண்டேன். மூன்றிலும் கவனம் செலுத்தி செயல்பட்டேன். முடிவு நினைத்த மாதிரி நடந்தது. இதில் கவனிக்கப் பட வேண்டிய விசயமே கவனம், அதீத கவனமே. ஏன் வில் வித்தையில் சிறந்த அர்ஜுனனும் இதேயே தான் சொல்லி இருக்கிறார்கள்.

• முடிவுகளை மனதில் அடிக்கடி நினைத்து மகிழுங்கள். எப்போதுமே முடிவுகளை விட அதற்கான முயற்சி தான் மிகவும் அழகானது. வெற்றியைவிட வெற்றியை நோக்கிய பயணம் தான் மிக்க மகிழ்ச்சியை கொடுக்கும். மாறாக அந்த செயல் நடக்காமல் போனால், வேற ஏதாவது தவறாக நடந்து விட்டால் என்ன செய்வது என்றெல்லாம் நினைத்தால் அந்த செயல் அதோ கதி தான். பிறகு விதி என்று புலம்ப வேண்டியது தான். வெற்றியாளர்கள் புலம்பலை தவிர்ப்பார்கள். மாறாக மாற்றுத் திட்டத்தை வலுவாக தீட்டுவார்கள். விதி விலக்கு என்று ஒன்று உண்டு அவர்களுக்குத் தான் தெரியும். செய்தும் காட்டுவார்கள்.

• முடியாது என்று முதலிலேயே முட்டுக்கட்டை போடமாட்டார்கள். மீறியும் தன்னால் முடியாது என்று மனதின் ஓரம் எண்ணம் இருந்தாலும் முயற்சி செய்துப் பார்ப்பார்கள். அவர்கள் முயற்சிகள் தோற்றாலும் முயற்சிக்க அவர்கள் தவறுவதே கிடையாது. மறுபடியும் விடா முயற்சி செய்து வெற்றி காண்பார்கள். விடா முயற்சி என்றால் அதற்கு ஒரு உதாரணக் கதை சொல்கிறேன். ஒரு கிராமத்திற்கு மட்டும் இறைவன் மழையேப் பெய்யாது என்று சாபம் விட்டுவிட்டார். அனைவருமே முயற்சி செய்து விவசாயத்தை விட்டு விட்டார்கள். அதில் ஒருவர் மட்டுமே தினமும் களைப்பையை எடுத்துக் கொண்டு தன வேலைகளை செய்து கொண்டே இருப்பார். இன்னும் பெரிய அழகு என்னவெனில், களைப்பையுடன் கையில் குடை வேற எடுத்துச் செல்வார். அனைவரும் எள்ளி நகையாடி, அவமானம் படுத்துவார்கள். அதை அவர் கண்டு கொள்வதே இல்லை. அதற்க்கு செவி சாய்க்காமல் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஆளில்லா கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறாய் என்ற நக்கல் வேற அவர் காதுகளில் விழுந்தது. ஆனால் அவர் கலப்பையோ உழுவதற்காக வயலில் விழுந்தது. முடிவில் கடவுளே நேரில் வந்து ஏன் உன்னுடைய முயற்சி இப்படி இருக்கிறது. தண்ணி வராத இடத்தில எத்தனை அடிகள் தோண்டினாலும் வராது. அது போல மழை பெய்யவே பெய்யாத இடத்தில் உன் உழைப்பு வீண் தானே. வீண் முயற்சி தானே என்று சொன்னார். அதற்க்கு அந்த விவசாயி சொன்னது தான் அழகின் அழகு. என்றாவது மழை பெய்யும் நம்பிக்கை என்னில் இருக்கிறது. அது மட்டுமல்ல இந்த விவசாயக் கருவிகளும் துருப்பிடித்து போய்விடும் என்று சொன்னார். அந்த ஆண்டவன் தன் கையில் உள்ள சங்கை எடுத்து துருப்பிடிக்காமல் இருப்பதற்கு தானும் எடுத்து ஊதினார். கடவுளே மழைக்கு உத்தரவு தந்துவிட்டார் என்று வர்ண பகவான் மழையைப் பொழிந்தான். அவர் நம்பிக்கையுடன் வைத்து இருந்த குடைக்கும் வேலை வந்து விட்டது. அதாவது கடவுளே கை விட்டாலும் காரியத்தை கை விட மாட்டார்கள் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற வெறி கொண்ட வேங்கைகள். காரியத்தில் இருந்து பின் வாங்கவும் மாட்டார்கள். அப்படி பின் வாங்கினாலும் அந்த வெற்றி வேங்கைகள் அசுரப் பாய்ச்சலுக்குத் தான் இருக்குமே ஒழிய இழைப்பாற அல்ல. காரியங்கள் நடக்காததற்கு காரணங்கள் சொல்ல மாட்டார்கள். ஏன்னென்றால் காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்ய மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும் காரணங்களை மட்டுமே அவர்கள் கண்டுபிடிப்பார்கள். காரியங்கள் முடிப்பதற்கான காரணங்களை ஒருபோதும் கண்டு பிடிக்க மாட்டார்கள். அவர்களது தகுதியை, செயலுக்கு ஏற்ற திறமைகளை வளர்த்துக் கொண்டே இருப்பார்கள். பல்முனை நோக்கிலும், பல பணி செய்வதில் திறமை பெற்று மிகவும் தேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

நலன் : வெற்றி அடைவதற்குத் தேவையான குணநலன்கள் - குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Welfare : Qualities required for success - Tips in Tamil [ Health ]