தலை விதியை மாற்றும் விதிகள்

குறிப்புகள்

[ நலன் ]

Rules that replace the head rule - Tips in Tamil

தலை விதியை மாற்றும் விதிகள் | Rules that replace the head rule

ஒரு மனிதருடைய மகிழ்ச்சி ஆகட்டும்! சலிப்புகள் ஆகட்டும்! இரண்டும் அவனே உருவாக்கி கொள்வது ஆகும்.

தலை விதியை மாற்றும் விதிகள்:

 

இன்றைய காலங்களில் நாம் சாக்குப் போக்கு அதிகமாக சொல்கிறோம் என்ன என்று கேட்குகிறீர்களா? நாம் நம்முடைய இலக்கை அடைய முடியா விட்டால், மனதளவில் துவன்று, செயல்களையும் நிறுத்தி, இலக்கிலிருந்து பின் வாங்குகிறோம் அல்லவா? பின் வாங்குகின்ற அவர்களிடமே கேட்டுப் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். எளிதாக சொல்லிவிடுவார்கள் நம் தலை எழுத்து  அவ்வளவுத் தான் என்று. ஆனால் உண்மையில் உங்கள் தலை எழுத்து என்ன எழுதப் பட்டிருக்கிறது தெரியுமா? இன்னும் கொஞ்சம் முயன்றால், உங்கள் மதி கொண்டு மேலும் கடுமையுடன் உழைத்தால் நீங்கள் எதிர்பார்க்குற இடத்தில் உங்கள் இலட்சியத்தை அடைந்து இருப்பீர்கள். அனைவருக்கும் தெரியுமே! தங்கப் புதையல் கதை! அதில் முதலில் தோண்டுபவன் முயற்சிகள் செய்து பல அடிகள் தோண்டி விரக்தி அடைந்து ஓய்ந்து விடுகிறான். ஆனால் அடுத்து வருபவனுக்கு முதல் அடியிலே தோண்டும் போது, புதையலை தொட்டு விடுகிறான். சற்று ஆராய்ந்துப் பாருங்கள்! அத்தனை அடிகள் தோண்டுபவனுக்கு ஒத்த அடி தோண்ட முடியாதா என்ன? விஷயம் அதுவல்ல. விடா முயற்சியை விட அவரிடம் விடும் முயற்சி தான் முன்னோக்கி நின்றது அவர் மனதில். தனக்கு வாய்த்தது, கொடுத்து வைத்தது, நம்மால் முடிந்தது, நம்மால் முடியும் வரை முயற்சி செய்தது என்று பல முறைகளில் வழிகளில் சொல்லி விடலாம். கடைசியில் என்ன நடந்தது? யாருக்குக் கிடைத்தது? அவருடைய முயற்சிகள் தவறில்லை. ஆனால் அவர் காரியம் அதாவது புதையல் கிடைக்கும் வரை முயற்சி செய்யவில்லை என்பதே தவறு. அவர் தோல்வி அடையவில்லை. மாறாக வெற்றிக்கு மிக அருகாமையில் உள்ளார் என்பதே உண்மை என அனைவராலும் உணர முடிகிறது. சரி இந்த வெற்றியை அனைவரும் அடைய வேண்டும். நம் தலை விதியை மாற்ற வேண்டும். கண்டிப்பாக வெல்ல வேண்டும் என நினைக்குறீர்களா? இதற்க்கு விதிகள் இருக்கிறது மாற்றி எழுதி விடலாம். ஏன் இன்னும் கூடுதல் சொல்ல வேண்டுமென்றால் வரலாற்றுப் புத்தகத்தில் கூட உங்கள் பெயரை எழுத வைத்து விடலாம். என்ன விதிகள் என்று விரிவாகப் பார்ப்போம்.

 

ஈர்ப்பு விதிகள் 

(காட்சிப்படுத்துதல்: visualization)

ஒருவருடைய புதியக் கருவி ஒன்று எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது? அது திட்டம் ஆகட்டும், புதிய பொருள், இயந்திரம், கருவிகள், யோசனைகள் ஆகட்டும் எப்படி சாத்தியம் ஆகிறது என்பதை மட்டும் நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். கண்டிப்பாக அது ஒருவருடைய கற்பனைகளால், கனவுகளினால் மட்டுமே முதலில் தொடங்கியிருக்கும். மேலும் ஒரு சாதனைகள் எப்படி சாத்தியம் ஆகிறது என்பதையும் சிந்தித்துப் பாருங்கள். அதுவும் ஒருவருடைய கற்பனையால், கனவுகளால் தான் தொடங்கியிருக்கும் என்னும் இரகசியம் நமக்குப் புரிய வரும். அனைத்து விதமான நம்முடைய புதிய கண்டுபிடிப்புகளும் நமது கற்பனையில் தான் தொடங்கி நம்முடைய தொடர் உழைப்புகளால் மட்டுமே கண்டுப்பிடிக்கப்பட்டு இருக்கும் என்பதே உண்மை. அந்த கற்பனைகளின் ஒரு வடிவம் தான் ஒரு சின்னப் பகுதி தான் இந்த ஈர்ப்பு விதியின் 'காட்சிப்படுத்துதல்’ என்னும் ஒரு கனவுச் செயல் ஆகும். நம்முடைய மனதானது ஒன்றை முழுமையாக நம்புகின்ற பொழுது அந்த ஒன்று உண்மையாகவே நடந்து விடுகிறது. நாம் செய்யப் போகும் எந்தவொரு செயல்களாக இருந்தாலும் சரி அதை காட்சிப்படுத்தி நம்முடைய மனக் கண்களால் பார்த்த பிறகு செய்து பாருங்கள். நீங்கள் நினைத்தால் எதை வேண்டும் என்றாலும் காட்சிப் படுத்தலாம். உங்கள் கண்களில் அமெரிக்கா எப்படி இருக்கும் என்று நீங்களே ஒரு யூகத்தில் நினைத்துப் பாருங்கள். ஏன் ஒருவர் கதை சொல்லும் போது கூட நம்மில் பலர் அந்தக் காட்சிகளை மனக் கண்ணில் அவர் சொல்கிற போதே மனக்கண்ணில் பார்க்கிறோம் பார்த்தீர்களா அது மாதிரி தான். அது மிக மிக அலாதி மகிழ்ச்சியை கொடுக்கும். உங்கள் இலக்கும் நடந்ததை போல, நிறைவேரியதைப் போல, பலர் பாராட்டைப் பெறுவது போலக் காட்சிப் படுத்த தெரிய வேண்டும் அதுவும் 200% நம்பிக்கையுடன் எதிர் மறை எண்ணமே மனதில் உதிக்கக் கூடாது. பிறகு என்ன வெற்றி உதிக்காமலா போய் விடும். விரைவில் நீங்கள் நினைத்த படியே நடக்கும். அதே மாதிரி இந்தக் காட்சிப் படுத்தலுக்கு இன்னொரு கெட்டக் குணம் உண்டு. நாம் நினைக்கும் கெட்ட விசயங்களும் அப்படியே நடக்கும். இப்போது சொல்லுங்கள் இலக்கு அடைவதும், அடையாமல் போவதற்கும் யார் காரணம் என்று நினைத்துப் பாருங்கள். தங்கப் புதையல் ஏன் கிடைக்க வில்லை என்று இப்போது கொஞ்சம் புரிந்து இருக்கும்.  நீங்கள் எப்படி காட்சிப்படுத்திப் பார்த்தீர்களோ அப்படியே அந்த செயல் நடக்கும்‌ அற்புத நிகழ்வை உங்களால் கண்டிப்பாகக் காண முடியும். மேலும் காட்சிப்படுத்தல் என்பது உங்கள் பழக்க வழக்கமாக மாறும் பொழுது அதன் வழியாக பல பல அற்புதங்களை உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் நிகழச் செய்ய உங்களால் முடியும்.

ஒரு மனிதன் என்பவன் ஒரே தடவையில், ஏன் ஒரு நாளைக்கு 70000க்கு மேல் எண்ணங்கள் வந்து போகிறது என்று உளவியல் அறிஞர்கள் சொல்கிறார்கள். பலதரப்பட்ட விசயங்களை பல கோணங்களில் சிந்திக்கும் பொழுது, அவனது சிந்தனைகளில் ஆராய்ச்சிகள், தனக்கான தேவைகளைத் தேடுதல், எதிர்கால திட்டம் பற்றி வகுத்தல் அல்லது தான் கடந்து வந்த பாதைகள் பற்றிய நினைவலைகள், அந்த காலப்பகுதிகளின்  முன்னோக்கி நடந்தவைகளையும், பின்னோக்கி நடந்தவைகளையும்  நல்லவைகள், கெட்டைவைகள் இன்னும் பல பல சிந்தனைகள் எல்லைகளைக் கடந்து சென்றுக் கொண்டிருக்கும். சிந்தனைகள் எதற்கும் தடைகள் கிடையாது. இப்போது நம்முடைய வீட்டில் உள்ள டீவியில் நல்ல சேனல்களும் இருக்கும், கெட்ட சேனல்களும்  இருக்கும். ஆனால் நாம் விரும்பினால் மட்டும் அவைகளை பார்க்க முடியும். ஆனால், நமது மூளையில் ஏற்படும் சிந்தனைகளை நிறுத்தவோ ரீமோட் கன்ட்ரோலில் கட்டுப்படுத்தவோ முடியாத காரியம். நாம் அந்த சிந்தனைகளுக்கு கட்டுப்பாடுகள் நிறுவ முயற்சி செய்வதே கிடையாது. ஆனால் நமது சிந்தனைகளை முறைப்படி ஒழுங்குப்படுத்தினால் வாழ்க்கையில் பல வெற்றிகளை குவிக்கலாம். மேலும் நேர்மையாகவும், நல்லவையாகவும் இருக்கும் பட்சத்தில் உங்கள் இலக்குகளுக்கு எவரேனும் தடுத்தாலும் நீங்கள் வச்சக் குறிகள் தப்பாது. இது சாத்தியம் என்பது சத்தியம். ஆனால் மாறாக எமது எண்ணங்களிலேயே காமம், வஞ்சகம், குரோதம், கோவம், பொறாமை போன்ற பல சிந்தனைகளுக்கு நாம் இடம் கொடுக்கும் பொழுது அது நமக்கான வெற்றிகளின் சிந்தனைகளை சிதைத்து விடுகிறது.

• சில சமயங்களில் ஒருவரைப் பற்றி நாம் சதாச் சிந்தித்து கொண்டிருக்கும்பொழுது, அடுத்த சில நிமிடங்களில், ஏன் அடுத்த நொடிகளில் கூட சிலர் நீங்கள் நினைக்கும் அவர்கள் உங்கள் கண் முன்னால் நிற்பார்கள். அப்போது நீங்கள் சொல்வீர்கள் இப்போதான் உங்களை பற்றி நினைத்தேன் நீங்கள் உடனே வந்து விட்டீர்கள் மேலும் உங்களுக்கு ‘ஆயுசு நூறு’, என்று கூடச் சொல்வதைக் கேள்விப் பட்டு இருப்பீர்கள், அனுபவப் பட்டும் இருப்பீர்கள். இதைத் தான் நம் எண்ணத்தில் அதிர்வலைகளின் சக்தியாக கருதப்படுகிறது. நாம் சிலரை வாழ்த்துவதற்க்குக் காரணமும் இதற்குத் தான். சமீபத்தில் கூட நெருங்கிய நண்பருக்கு நான் நடக்கும் என்று என் மனதில் உள்ள உறுதியான எண்ணங்களின் பிரதிபலிப்பால் சொல்லும் போது அடுத்த சில நொடிகளில் பலித்து விட்டது. நீண்ட நாட்கள் எதிர் பார்த்த அந்த செயல் அப்போது நான் நினைத்து சொன்ன அடுத்த வேளைகளில் நடக்கும் போது அவர் கூட என்னிடம் சொன்னார்கள் உங்கள் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது என்று. உண்மை தான் நாம் கோடி பேர்கள் சேர்ந்து வேள்வி அமைத்து மந்திரங்கள் ஓதும் போது அந்த செயல்கள் பலிக்கும். மழை வருவதற்கும் நாம் இது போன்று செய்து வர வைத்தது அனைவருக்கும் தெரிந்ததே. நாம் சிந்திக்கும் பொழுது நம்மிடம் எழுகின்ற எண்ண அதிர்வுகள் பிரபஞ்சத்தில் கலந்து எங்கு செல்ல வேண்டுமோ அங்கே சென்று ஒரு சமிக்ஞை அதாவது சிக்னல் கொடுத்து ரேடியோ அதிர்வலைகள் எப்படி செயல்படுமோ அது போலத்தான் செயல்படுகிறது.

• மனிதன் தான், அவனது குணங்களை வடிவமைக்கும் ஒரு சிற்பி ஆவான். தனக்குத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்குகின்ற ஓவியன் ஆவான். விதிகளை மாற்றி அமைத்து வெற்றி கொடி பறக்க விடும் வீரன் ஆவான். அவனே தான் அவனது எண்ணங்களுக்குத் தலைவன் ஆவான்.

ஒரு மனிதருடைய மகிழ்ச்சி ஆகட்டும்! சலிப்புகள் ஆகட்டும்!  இரண்டும் அவனே உருவாக்கி கொள்வது ஆகும். ஒரு மனிதர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அவரது குணங்களே காரணமாக அமைகிறது. எங்கு சமாதானம் விட்டு கொடுக்கும் மனம் இருக்கிறதோ அங்கு குழப்பம் ஒன்றுமே இருக்காது.

• நல்ல எண்ணங்களே நம்முடைய நண்பர்கள். அப்படிப்பட்ட நல்ல எண்ணங்கள் உள்ள நண்பர்களே உங்கள் அருகாமையில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி நல்ல எண்ணங்கள் கொண்ட கூட்டங்கள் ஒரு பொழுதும் தவறுகளுக்குத் துணை போகாது.

• ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எண்ணங்களின் பயனையே அனுபவிக்கிறான் எண்ணங்களின் பிரதிப்பலிப்பே ஒருவருக்கு செயலாக நடக்கிறது. அந்த எண்ணங்காளாலேயே நாம் உயர்ந்த இடத்தை அடைகிறோம். பரிசுத்தமான காரியங்களைப் பற்றியே அடிக்கடி சிந்திக்கும் ஒருவரின் எண்ணங்கள் அவர்களுடைய இதயத்தைச் சுத்தம் செய்கின்றன என்று சொல்கிறார்கள்.

• நம்முடைய மனதின் எண்ணங்களுக்கு ஏற்பவே நம் உடலும் மனம் பெறுகிறது. கெட்டவர்களுக்கு எண்ணங்கள் மட்டும் அல்ல உடம்பும் கெட்ட வாசனை வீசத் தான் செய்கிறது.

 

பெரியதாக நினையுங்கள்:

மனிதர்கள் அனைவருமே ஏதாவது இலட்சியம் கொண்டுத் தான் வாழ்வார்கள். என்ன? லட்சியங்கள் தான் சிறியது! பெரியது! என்று உண்டு. ஆனால் இந்த ஈர்ப்பு விதி என்ன சொல்கிறது என்றால் உங்கள் இலட்சியம் எட்டா முடியாத தொலைவில் இருந்தாலும் எப்போதும் எட்டக் கூடிய எண்ணத்திலேயே நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் இலக்கை எப்போதுமே உயர்ந்த இடத்தில் வையுங்கள். பெரியதாக நினையுங்கள். சுருக்கி கொள்ளாதீர்கள் உங்கள் எண்ணங்களை, இந்த உலகம் மிகப் பெரியது என்று எப்போதும் அதை மனதில் வையுங்கள். அப்போது உங்கள் இலக்குகள் விரிக்கப்படும். எப்போதுமே இலக்குகளை கண்டு மலை போல மிகப் பெரிய உயரத்தில் இருக்கிறதே என்று மலைத்து போய் விடாதீர்கள். நீங்கள் அந்த அந்த மலையின் உயரத்தில் சிரமம் பார்க்காது உழைத்து வந்தால் அந்த மலையும் உங்கள் காலடியில் இருக்கும் என்பதை மறக்காதீர்கள். உங்களது உயர்ந்த இலக்கை பகுதி பகுதிகளாக பிரித்துப் பாருங்கள். உதாரணமாக அடர் இருட்டில் வாகனத்தில் பயணம் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இருட்டாய் இருக்கிறதே! என்ன செய்ய என்று யோசிக்காதீர்கள்! கண்களில் கிடைக்கும் வெளிச்சம் வரும் வரை 10 மீட்டர் கிடைத்தாலும் பரவா இல்லை பயணம் செய்ய ஆரம்பியுங்கள். கடந்து செல்ல செல்ல அந்த 10 மீட்டர் போதும் நீங்கள் அடைய விரும்பும் இடத்தை அடைவதற்கு அந்த வெளிச்சமே போதுமானது. எந்தச் சூழ்நிலையிலும் பயணத்தை நிறுத்தி விடாதீர்கள்! அவ்வளவே! ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் என்றாலும் அந்தப் பயணம் ஒரு அடியில் தான் ஆரம்பிக்கிறது. போய் சேர்வோமா என்று சந்தேகத்துடன் பயணத்தை தொடங்காதீர்கள்! நாம் சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் ஆரம்பியுங்கள். எந்த ஒரு உயர்ந்தக் கட்டிடமும் ஒரே நாளில் கட்டி விட வில்லை. ஏன் உலக அதிசயமான தாஜ் மஹால் கூட ஒவ்வொரு செங்களினால் ஒவ்வொன்றாக அடுக்கி அடுக்கியே பல மாதங்களும், பல்லாயிரம் நாட்களின் தொடர் உழைப்புகளால் மட்டுமே சாத்தியம் ஆனது. ஒரு செயலை தொடர்ந்துச் செய்வதலாலும், விடா முயற்சி கொண்டு செயல் முடிக்கும் வரை செய்வதால் தான் வெற்றி கிடைக்கிறது. இதில் நம்முடைய உழைப்புத் தான் முக்கியம். இந்த உழைப்பை புறக்கணிப்பவர்கள் இரண்டு விதமாக காணப்படுவார்கள். ஒரு விதத்தினர்கள் சோம்பேறியாகவும், வறுமையிலும் இருப்பார்கள். இவர்களும் இலட்சியம் வைத்து இருப்பார்கள். இவர்களது முயற்சி, எதிர்பார்ப்பு எல்லாமே அதிர்ஷ்டம், லாட்டரி சீட்டு, குதிரைப் பந்தயம் இதுப் போன்ற யூக அடிப்படையிலே வாழ்வார்கள். இரண்டாவது தரப்பினர் அருகிலேயே நாம் போகுதல் கூடாது. ஏனென்றால் அவர்கள் அடுத்தவர்களை ஏமாற்றி பிழைக்கும் வகையினர். உழைப்பை நம்புவர்கள் மட்டுமே உயர்ந்த இடத்தை அடைகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாகவும், சுறு சுறுப்புடன் இருந்தாலே கவலை வாயில் கதவுக்கு வெளியிலே இருக்கும். நோய்களும் அருகே அண்டாது. ஆனால் மனிதனுக்கு அடுத்த கிரகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இருப்பார்களே ஒழிய தான் வசிக்கும் சொந்த வீட்டில் கூட மகிழ்ச்சியை விற்று விடுவார்கள். சந்தோசமாக வாழ்வது என்பது அவர்களுக்குக் குதிரைக் கொம்பாகத் தான் தெரிகிறது. என்றைக்குமே விருப்பத்தோடு ஒரு செயலை செய்து பாருங்கள். நேரம் போவதே தெரியாது. கஷ்டம் என்னவென்றே தெரியாமல், களைப்பு அறியாமல், கன்னாபின்னா வென்று விடிய விடிய உழைப்போம். அந்த செயல், வேலைகள் மனதில் மகிழ்ச்சி தருவதோடு சொர்க்கமாகத் தெரியும். அதே விருப்பம் இல்லாமல் வேண்டா வெறுப்பாகச் செய்யும் போது நரகமாகவும், வெறுப்பாகவும் இருக்கும். செயல்கள் கேவலமான முடிவுகளைத் தான் கொடுக்கும். சிறப்பாக அமைவது என்பது கேள்விக் குறியே. அடிக்கடி நம்முடைய இலட்சியத்தை எண்ணிக் கொள்ள வேண்டும். அது வெற்றி அடைந்தால் என்னவெல்லாம் கொடுக்கும் என்ற கற்பனை பொத்தானை அடிக்கடி தட்டி விட வேண்டும். உலகத்தில் இருக்கும் விதிகளில் மிகச் சிறந்த விதியாக இந்த ஈர்ப்பு விதி இருக்கிறது. நாம் நினைத்ததை அடைய வேண்டும் என்றால் இந்த விதியை கண்டிப்பாய் பின் தொடர வேண்டும். நமக்கு எது ஈர்க்கப்படுமோ அதை நோக்கித் தான் நாமும் ஓடுவோம். அது வயதிற்கு ஏத்தார் போல மாறிக்கொண்டே இருக்கும். எந்த விசயங்களில் நாம் கவனம் செலுத்துகிறோமே அந்த விசயமே நம்மை நோக்கி வரும். அது நேர்மறையா அல்லது எதிர் மறையா என்பது உங்களது எண்ணங்களில் தான் இருக்கிறது.

 

ஈர்ப்பு விதிகள் செயல்படும் முறைகள்:

நமக்கு எது தேவையோ, எதை அடைய வேண்டுமோ அதையே நினைத்து தன்னம்பிக்கையுடன் செய்து வர அந்த செயலின் முடிவும் உங்களை நோக்கி வரும் என்பதே இந்த ஈர்ப்பு விதியானது செயல்படும் முறை ஆகும். மேலும் நேர்மறையான எண்ணங்களே இந்த ஈர்ப்பு விதிகளின் மையக் கரு ஆகும். இரு மனதாக இருப்பது, நடக்காமல் போனால் என்று நினைப்பது, நாம் அதுக்கு சரி பட்டு வருவோமா? என்று நினைப்பது கிடைக்குமா இல்லை கிடைக்காமல் போய் விடுமா? வருமா? வராதா? வரும் ஆனா வராது என்ற சந்தேகத்துடனோ இருந்தால் அவ்வளவு தான் உங்கள் இலக்கின் முடிவு முதலிலேயே சொல்லி விடலாம். என்னவென்பது உங்களுக்கே தெரிய வந்து இருக்கும். நம்முடைய சிந்தனைகள் நமக்கு தேவையானவைகளை மட்டுமே சிந்திக்க வேண்டும். தேவை இல்லாமல் தேவையற்றதை சிந்தித்தால் தேவையற்றது மட்டும் தான் கிடைக்கும். தேவையானது உனக்குத் தேவையா என தெறித்து ஓடிவிடும். அதே நேரத்தில் உங்கள் எண்ணங்களுடன் உங்கள் உணர்வுகளும் இணைய வேண்டும். கிடைக்கும் என்ற சந்தோச எண்ணங்களை மனதில் இருக்கும் பொழுது உங்கள் உணர்வுகளும் மகிழ்ச்சி புன்னகையில் பொங்க வேண்டும். மாறாக கவலையுடன் விழி பிதுங்கி இறுக்கத்துடன் காணபட்டால் செயல் அம்பேல் தான். இது எளிதான முறை என்று நினைக்கும் அளவுக்குத் தெரிந்தாலும், ஆழ்மனதில் எண்ணங்களை குவிப்பதன் மூலம் நீங்கள் நினைத்ததை, அடைய நினைக்கும் வெற்றியை எளிதில் அடையலாம். முதலில் ஈர்ப்பு விதியே உண்மை தானா என்று சந்தேகித்தால் எதுவும் நடக்காது. உங்களுக்கு சந்தேகம் என்பது பிறப்பு நோயாக இருப்பதால் வெற்றி என்பதும் உங்களுக்குச் சந்தேகம் தான் என்று நீங்களே நினைப்பீர்கள். சந்தேகம் ஒன்று இருந்தாலே அந்த சந்தேகத்தை எல்லா இடங்களிலுமே பொருத்திப் பார்க்கிற குணம் தானாகவே இயல்பிலே வந்து விடும். இங்கேயும் கூட ஈர்ப்பு விதி தான் செயல்படுகிறது. சந்தேகத்துடன் நினைத்தால் வெற்றியும் சந்தேகம் தான் என்று இங்கு சந்தேகத்தை ஈர்த்துக் கொள்கிறது என்பது நம்மால் பார்க்க முடிகிறது. புவி ஈர்ப்பு விதி போல தான் இந்த ஈர்ப்பு விதியும். புவி ஈர்ப்பு விதியில் பந்தை மேலே எறிந்தால், எப்படி கீழே வருகிறதோ, மேலே இருந்து ஒருவர் கீழே குதித்தால் தரையில் வந்து விழுவதும் இந்த புவி ஈர்ப்பு விதியினால் தான். நம்முடைய அனைத்து எண்ணங்களையும் ஒன்று திரட்டி முடிவில் செயல்களாக மாற்றும் சக்தி தான் இந்த ஈர்ப்பு விதிக்கான ஆற்றல். இதற்க்கு இந்த பிரபஞ்ச ஆற்றலும் உதவுகிறது. நாம் ஒரு வாகனத்தை வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறோம். அப்புறம் பாருங்கள் சாலைகளில் உங்களுக்கு அந்த வாகனம் அதிக அளவில் கண்ணில் தென்படும். இது எப்படி நடந்தது என்று ஆராயுங்கள். நன்றாகத் தெரியும் அதை நாம் வாங்க வேண்டும் என்று ஆழ்மனதில் பதிய விட்டதின் விளைவே நம் கண்களில் படுவதற்க்குக் காரணமாக இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது நீங்கள் சாதிக்க விரும்புவதை, விரும்பி கொண்டு இருப்பதை விட்டு விட்டு அடைந்து விட்டதாக எண்ணுங்கள். எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். விரைவில் உண்மையிலும் சாதித்துக் காட்டுவீர்கள். ஆகவே நல்ல எண்ணங்களை மனதில், ஆழ்மனதில் உரமிட்டு விதைகளை தூவுங்கள். அது இந்த பிரபஞ்ச ஆற்றலைப் பெற்று, அந்த நல்ல ஆற்றலை எல்லாருக்கும் பரப்பியும், நாமும், மற்றவர்களும், இந்த அனைத்துச் சமுதயாங்களும் நல்லதை மட்டுமே ஈர்த்து நல்ல வளமான வாழ்வை வாழ்ந்து தான் பார்ப்போமே! நன்றி! வாழ்த்துக்கள்!

 

மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

- தமிழர் நலம்

 

நலன் : தலை விதியை மாற்றும் விதிகள் - குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Welfare : Rules that replace the head rule - Tips in Tamil [ Health ]