கணவனும் மனைவியும் கட்டாயம் படிக்க வேண்டிய வாழ்க்கை வழிகாட்டி! I'm Not Arguing, I 'm Explaining Why I Am Right.
இனிது இனிது இல்லற வாழ்தல் இனிது!
(கணவனும் மனைவியும் கட்டாயம் படிக்க வேண்டிய வாழ்க்கை
வழிகாட்டி!)
I'm Not Arguing,
I 'm Explaining Why I Am Right.
விவாதம் செய்கிற எல்லோரின் எண்ணமும் இதுதான்!
விவாதத்துக்குரிய விஷயத்துக்குத் தீர்வு கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு,
அதில் வெற்றி பெறுபவர் யார் என்பதே விவாதத்தின் நோக்கமாக
இருக்கிறது. எல்லா தம்பதியரும் தெரிந்தோ, தெரியாமலோ
எப்போதும், எது குறித்தாவது விவாதத்தில் ஈடுபட்டுக்
கொண்டுதான் இருக்கிறார்கள். அன்றைய தினம் என்ன சமைப்பது, வார
இறுதியை எங்கே கழிக்கலாம், எந்த ஹோட்டலில் உணவு நன்றாக
இருக்கும், எந்த சேனலில் என்ன நிகழ்ச்சி பார்க்கலாம்...
இப்படி விவாதத்துக்கான விஷயங்களுக்குப் பஞ்சமே இருப்பதில்லை. விவாதங்களும்
வாதங்களும் ஆரோக்கியமாக இருக்கும் வரை பிரச்னை இல்லை. அவை சற்றே எல்லை மீறினாலும்
ஆபத்துதான். ஒரு சின்ன விவாதம் அன்பான தம்பதியருக்குள் பெரிய தகராறுக்கு வழி
வகுத்து விடும். தவறான ஒரு வார்த்தை, இனிமையான பொழுதையே
நாசமாக்கி விடும்.
ஒருவரை
நாம் நேசிக்கிறோம்... ஏன்? அவர் நமக்காக மிகப்பெரிய தியாகங்களைச்
செய்திருக்கிறார் என்று அர்த்தமா? இல்லையே... அவரது சின்னச்
சின்ன செய்கைகளால் நாம் மனம் மகிழ்ந்திருப்போம். அதனால் அவரை நேசிப்போம். ஒருவரை
வெறுக்கிறோம் என்றாலும், அவர் பயங்கரச் சதிகாரர் என்று
அர்த்தமில்லை. அவரது செய்கைகள் நமக்கு சின்னச் சின்ன வருத்தங்களை, எரிச்சல்களை ஏற்படுத்தியதால் உண்டான வெறுப்பாக இருக்கும் அது. பெரிய
அன்பும் சரி, பெரிய பகையும் சரி தியாகங்களையோ, விரோதங்களையோ வைத்து ஏற்படுவதில்லை.
வாக்குவாதம்
எழும் போது, அதன் அடிப்படையைக் கவனிக்க வேண்டும்.
அன்பு என்பது அழகான மண்பானை போன்றது. கோபத்தில் உதிர்க்கிற ஒரு வார்த்தை, அந்தப் பானையில் லேசான கீறலாக விழும். அது பானைக்குள் உள்ள உறவு, உற்சாகம், அன்யோன்யம் எல்லாவற்றையும் கீறல்களின்
வழியே வெளியேறி, காணாமல் போகச் செய்து விடும். அந்தக் கீறலை
அடைக்கிற ஒரே வழி, அர்த்தமற்ற வாக்குவாதங்களில் ஆற்றலை
வீணாக்குவதைத் தவிர்ப்பதுதான்.
எந்த
வார்த்தை தவறாகும்? எத்தகைய வாக்குவாதம் எங்கே போய்
நிற்கும் என்பதை தம்பதியர் நிச்சயம் அறிந்திருப்பார்கள். வாதம் செய்வதற்கு முன்
அதைப் பற்றி யோசித்தாலே, சமயோசிதத்தால் வார்த்தைகள் தடித்து,
வாதம் வெடிப்பதைத் தவிர்க்கலாம். மோசமான வார்த்தைகளும் அதன்
தொடர்ச்சியாக எழும் மோசமான விவாதங்களும் எங்கே கால் வைத்தால் வெடிக்கும் எனத்
தெரியாத கண்ணி வெடிகள் போன்றவை. மோசமான வெடிகளைப் போலவே, மோசமான
வார்த்தைகளையும் செயலிழக்கச் செய்ய வேண்டியது அவசியம்.
வாக்குவாதமே
கூடாது என்பதல்ல என் வாதம். அர்த்தமுள்ள வாக்குவாதங்களை மட்டும் அனுமதிக்கலாம்.
வாக்குவாதங்கள் என்றாலே அதில் கோபமும் ஆத்திரமும் வன்முறையும் இருந்தாக வேண்டும்
என்கிற அவசியமும் இல்லை. கோபம் தவிர்த்த உருப்படியான வாக்குவாதங்கள் உறவை
வளர்க்கவும் உதவும்.
1.
இரண்டு வருடங்கள் கழித்து வீடு வாங்கும் திட்டத்தில் இருப்பார்கள். கணவர்
ஃபிளாட்தான் வாங்க வேண்டும் என்பார். மனைவிக்கோ தனி வீட்டில்தான் விருப்பம்
இருக்கும். அதாவது 2, 3 வருடங்களுக்குப் பிறகு நடக்கப் போகிற
ஒரு சம்பவத்துக்காக ரொம்பவே முன்கூட்டி நடத்தப்படுகிற இது போன்ற வாக்கு வாதங்கள்
தேவையற்றவை. ஒருவேளை வாக்கு வாதம் நடக்கிற அந்தச் சம்பவம் நடக்காமலே போகலாம்.
பேச்சுவார்த்தையாக மட்டுமே நிற்கிற விஷயத்துக்காக நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்க
வேண்டுமா?
2.
‘ஏதாவது...’ என்கிற வார்த்தை எத்தனை ஏடாகூடமானது என்பது பலருக்கும் தெரியாது.
‘என்ன சமைப்பது?’ என்கிற மனைவியின் கேள்விக்கு ‘ஏதாவது
செய்’ என பதில் சொல்லியிருப்பார் கணவர். சாப்பிட உட்காரும் போது, ‘இதை ஏன் செய்தே... அதைச் செய்திருக்கலாமே...’ எனக் கேட்பார். ‘ஏதாவது’
சமைக்கச் சொன்ன தன் தவறு அவருக்குத் தெரியாது. ‘என்ன மாதிரி புடவை வேணும்’ என
சேலைக்கடையில் இருந்தபடி மனைவியிடம் கேட்டிருப்பார் கணவர். ‘ஏதாவது வாங்கிட்டு
வாங்க’ எனச் சொன்ன மனைவிக்கு, கணவர் வாங்கி வந்த சேலை
பிடிக்காது. ‘இதே கலர்ல என்கிட்ட நாலு புடவை இருக்கே... அதுகூடத் தெரியாதா?’
என ஆரம்பிக்கும் வாக்குவாதம். ‘ஏதாவது’ எனச் சொல்லும் போதே நம்
‘பவரை’ விட்டுக் கொடுத்து விடுகிறோம் என்பதை இவர்கள் அறிந்திருப்பதில்லை. அந்த
பவரை அடுத்தவரிடம் கொடுத்துவிட்டு அப்புறம் விவாதிப்பதில் அர்த்தமில்லை.
3.
கணவனோ, மனைவியோ ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டிருக்கும்
போது, ‘அங்கே தவறு, இங்கே கோளாறு’ என
இடையில் கமென்ட் அடிப்பது மிக மோசமான பழக்கம். கட்டளையிடுகிற தொனியில்
சொல்லப்படுகிற எதையும் எதிராளிக்குக் கேட்கத் தோன்றாது. ஆலோசனையாக, அன்பான தொனியில் சொல்வதன் மூலம் விவாதங்களைத் தவிர்க்கலாம். ‘நான் இப்படி
நினைக்கிறேன். நீ என்ன ஃபீல் பண்றே?’ என துணைக்கு
முக்கியத்துவம் கொடுத்துக் கேட்பது நல்ல அணுகுமுறை.
4.
ஏதோ ஒரு விஷயம் குறித்து இரண்டு பேருக்கும் வாக்குவாதம் வரும். ‘ரஜினி
படத்துக்குப் போகலாம்’ என கணவர் சொல்வார். ‘கமல் படம்னாதான் வருவேன்’ என மனைவி
சொல்வார். இருவரும் அவரவர் தரப்பு பற்றி சொல்லி நிறைய பேசி,
இறுதியில் யாரோ ஒருவர் விட்டுக் கொடுக்க, இன்னொருவரின்
விருப்பம் நிறைவேறுவதென முடிவாகும். அந்தப் பேச்சை அத்துடன் நிறுத்திவிட வேண்டும்.
பல தம்பதிகள் அப்படிச் செய்வதில்லை. ‘அதெப்படி நீ அப்படி சொல்லலாம்?’ என மறுபடியும் முதலில் இருந்தே ஆரம்பிப்பார்கள்.
5.
சில விஷயங்களில் மாற்றுக் கருத்துகள் இருப்பது சகஜமே. அதை அப்படியே ஏற்றுக்
கொள்வதுதான் அமைதியான வாழ்க்கைக்கு அழகு. தான் சொல்வதுதான் சரி என்கிற நினைப்பில்,
தன்னை சரியானவராக நிரூபிக்கிற எண்ணத்தில் வாக்குவாதம் செய்வார்கள்
பலர். அதிலும் கணவன் - மனைவி இருவருமே ஓரளவு விஷயம் தெரிந்தவர்களாக இருந்து
விட்டால், வாக்குவாதங்கள் சர்வசாதாரணமாக எல்லா
சந்தர்ப்பங்களிலும் தலைதூக்கும். சரியாக இருப்பதை விட, அன்பாக
இருப்பது தான் சிறந்த விஷயம். ஆனாலும், தான் செய்வதுதான் சரி
என நிரூபிக்கிற ஆசை அனேக மனிதர்களுக்கு உண்டு. அந்த ஆசையின் விரட்டலால், அன்பாக இருப்பதை விடவும் சரியாக இருப்பதே சிறந்தது என்ற மனநிலைக்கு
பழகுகிறார்கள்.
அடுத்தவர்
சொல்வதை எதிர்த்துப் பேசி, பதிலடி கொடுக்கும் பழக்கத்துக்கு
நம்மில் பலரும் சிறு வயது முதல் பழகி விடுகிறோம். ‘நான் சொல்வதுதான் சரி... எனக்கு
எல்லாம் தெரியும்... என் வழியில் குறுக்கிடாதே... நான்தான் ஜெயிக்க வேண்டும்’ ஆகிய
4 எண்ணங்களும் அந்த மனநிலையினால் வளர்க்கப்பட்டவையே. சரியாக இருக்கலாம்...
சந்தோஷமாக இருக்கலாம்... இரண்டில் உங்கள் சாய்ஸ் எது என்பதை நீங்கள்தான்
தீர்மானிக்க வேண்டும்!
(வாழ்வோம்)
நன்றி!
கற்போம் கற்பிப்போம்!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!
🌷🌷முக
மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும்
எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!
நல்லதே
நினைப்போம் நல்லதே நடக்கும்.
நல்ல
எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...
இந்த
நாள் இனிய நாளாகட்டும்
வாழ்க
🙌
வளமுடன்
அன்பே🔥இல்லறம்
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி.
வணக்கம்.
- தமிழர் நலம்
💦💦💦💦💦💦💦💦💦💦💦💦
இல்லறம் : இனிது இனிது இல்லற வாழ்தல் இனிது! - தவிர்க்க வேண்டிய 5 வகையான வாக்குவாதங்கள்... [ இல்லறம் ] | domesticity : Sweet sweet homely life! - 5 types of arguments to avoid... in Tamil [ domesticity ]