மனமானது திடமாக இருக்க வேண்டும். எந்த மாதிரியான திடம் என்றால் உடல் வலிமையை விட மன வலிமை அதிகம் இருத்தல் வேண்டும்.
மன பலம் எப்படி இருக்க வேண்டும்?
மனமானது திடமாக இருக்க வேண்டும். எந்த மாதிரியான திடம் என்றால் உடல்
வலிமையை விட மன வலிமை அதிகம் இருத்தல் வேண்டும். அப்படி இருந்த மன்னர்கள்,
அரசர்கள், தலைவர்கள் இன்னும் பலர் வரலாற்றில் தடம் பதித்ததே இந்த மன வலிமையினால்
தான். அப்படி மன வலிமை பெறுவதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? என்னென்ன செய்தல்
கூடாது? சுருங்கக் கூறினால் எதை, எப்படி, எப்போது செய்ய வேண்டும் என்பதை விட எதை,
எப்படி, எப்போது செய்யக் கூடாது என்பதை தெரிந்து வைத்தலே வெற்றிக்கான பாதை என்று
சொல்கிறார்கள். பொதுவாகவே செய்யக் கூடாததை தெரிந்து வைத்தாலே செய்வது என்ன என்பது
எளிதாகப் புரிந்துக் கொள்ளலாம். தோல்வி கண்டு அஞ்சாதீர்கள். இங்கே எவரும்
தோற்காமல் ஜெயித்தது கிடையாது. தோல்வியே ஜெயிப்பதற்கான வழியைக்
காட்டுகிறது. தோல்வி வலி வெற்றிக்கு வழி என்றே அனைவரும் சொல்வார்கள். தோல்வி அடைந்து
விடுவோமா என்று நினைத்தாலே செயல் தோல்வி அடைவதற்கான சாத்தியம் உண்டு என்பது
சத்தியமான உண்மை. குழந்தைகளை கூட கவனமாக ஓடு என்று சொல்லுங்கள். அவர்கள் கவனமாக
ஓடி பதக்கம் வாங்கி வருவார்கள். மாறாக கீழே விழுந்து விடுவாய் என்று பயமுறுத்தி
அவர்களை இளம் வயதிலே அச்சத்தை உண்டு பண்ணாதீர்கள். அவர்கள் திறமையும் வெளிப்படாமலே
மறைந்து மரித்துப் போக வாய்ப்பு இருக்கிறது. இன்னும் பல திறமைசாலிகள் தெரியாமல்
இருப்பதற்கே இது தான் காரணமாக அமைகிறது. மனவலிமையானது ஒரு மனிதன் என்பவன் தன்னைச்
சுற்றி நாலாப் பக்கமும் நெருப்பு இருந்தாலும் தன்னுடைய ஒற்றை விரலினால் தன் மனபலம்
கொண்டு உடல் பலத்தையும் சேர்த்து தலைகீழாக நிற்பது போலக் கனவு செய்துப் பாருங்கள்.
கனவு செய்வதற்கே முடியாது போலத் தோன்றுகிறதா? தலை சுற்றுகிறதா? சில அரியச் செயலை
செய்ய நம்மில் சிலர் தலை கீழாய் நின்று தண்ணி குடித்தாலும் செய்ய முடியாது என்று
சொல்ல கேள்வி பட்டு இருப்பீர்கள் தானே? ஆனால் அப்படி சொல்லும்போதே யாரோ ஒருவர் அப்படி
செய்து இருப்பார்கள் தானே? அது போலத் தான் இந்த நெருப்பு விசயத்திலும் நெருப்புச்
சூடு தகதகன்னு எரியுமே? உடல் எரிய வாய்ப்பு இருக்குதே என்றெல்லாம் பயம் பற்றுகிறதா?
உங்கள் மேல் நெருப்பும் பற்றத்தான் செய்யும். மாறாக உங்கள் கவனம் இலட்சியத்தை
நோக்கி தீப்பிழம்பாய் வேலை செய்கிறீர்களா? நெருப்பு மட்டுமல்ல எதுவும், உங்களை
எதுவும் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் உறுதியாக வெற்றி கோட்டைத் தொட்டு உங்கள்
கொடியை கோட்டையில் பறக்க விடுவீர்கள். உலகிலேயே வீரம் மட்டுமே விளைந்த மன்னர்கள்
வாழ்ந்த இடமே நம் தமிழ் மண் தான். அப்படி குழந்தைப் பருவத்திலேயே எதிரிகளால்
நெருப்பு வைக்கப்பட்டு அதிலிருந்து தப்பித்தும், தன்னுடைய இளம் வயதிலும் கூட சிறையில்
அடைக்கப்பட்டு, அப்போதும் நெருப்பு வைக்கப்பட்டு தீப்பிளம்புக்குள் ஒரு மனிதன்
நடந்து வந்தானே, அப்புறம் நாட்டையே அரசாட்சி செய்து, வரலாறில் நீங்கா இடம் பிடித்த
மன்னன் யார் என்று உங்களுக்கு தெரிய வந்து இருக்கும் இப்போது. உண்மை தான் அந்த
தீயில் தன் கால்கள் மட்டும் எரிந்து விட்டதால் அனைவரும் அவர் வீரத்தை உலகிற்கு
காட்ட அழைக்கும் அந்த கரிகாலனே தான். மனவலிமையுடன் புத்தியும் சேர்ந்து
செயல்பட்டால் கேட்கவே வேண்டாம். நீங்கள் கேட்கும் அனைத்தும் உங்களுக்குக்
கிடைக்கும். அதற்க்கும் கதை இருக்கிறது. தன்னுடைய படையில் எதிரிகளிடம் இருப்பது
போல் யானைப் படை இல்லையே என்று மனம் சோர்ந்த நிலையில் வீரர்களை புத்திசாலி
தனத்தால் ஊக்குவித்து தன்னுடைய படையில் உள்ள விலங்குகளின் மீது யானை முகத்தை
வைத்து எதிரிக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கி எதிரி படைகளை தூரத்திலே பயம்
ஏற்படுத்தி மண்ணை கவ்வச் செய்தவர்களும் நம் மன்னர்கள் தான். அப்பேற்பட்ட மன வலிமை
உள்ளவர்கள் இருந்த நாட்டில் இயல்பு குணத்திலே இருக்கும் மனபலம், நெஞ்சுத் தைரியம்,
அசுர வெற்றியே அடைந்தே தீருவேன் என்ற வேட்கையுடன் உள்ள மனம் உள்ள நம்மிடமே
சிலருக்கு அந்த வலிமை இல்லாமல் போவதற்கு என்னக் காரணம். வாருங்கள் கட்டுரையைத்
தொடர்ந்துப் படியுங்கள்.
ஒரு இளைஞர் உடல் நலம் நல்லா இருக்கிறது. ஆனால் மனதில் மட்டும் படப்படப்பு,
இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கிறது. உடல் வியர்க்கிறது. நமக்கு இதய நோய்
இருக்குமோ என்ற அச்ச உணர்வு மனதைத் தொடுகிறது. தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் இளம்
வயதில் இதய நோயால் தவறியது கண்ணில் அடிக்கடி வந்துப் போகிறது. அவருக்கு இதயத்தில்
நோயே இல்லை. ஆனால் மனதில் ஒரு வகை நோய் மன நோய் அவரை ஆட்டிப் படைக்கிறது. இதை
எப்படி நிவர்த்திச் செய்வது? புள்ளிவிவரம் ஒன்று சொல்கிறது 5% மக்கள் இந்த மனப் பதற்றம்
நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பயம் என்பது அனைவருக்குமே வரக் கூடிய
ஒன்று தான். நம்மில் சிலருக்கு சில இடங்களில் சென்றால், சில மனிதர்களைக் கண்டால், சில
தனிமையான சமயங்களில் வரும். பயம் என்பது வேலைகளை திறன் படச் செய்வதற்கு வந்தால்
தப்பில்லை. ஆனால் எப்போதுமே பயத்தில் உள்ளவர்கள் தான் ஆபத்து. அது தான் ஒரு வகை
நோய் உள்ளவர்கள். இதைத் தவிர்க்க அவர்கள் பயம் உள்ள இடத்தை அடிக்கடி போய் வருவதாலோ,
பயம் கொண்ட மனிதர்களை அடிக்கடி சந்தித்தாலோ பயத்தை அவர்கள் எதிர் கொள்ளலாம். இன்னும்
சிலருக்கு நெருங்கிய நபர்களிடம் கூட பழகத் தயங்குவார்கள். இன்னும் சிலர் பொதுக் கூட்டங்களில்
பேசத் தயங்குவார்கள். பயமானது எப்போதும் இருந்து மனப் பீதியிலே இருப்பது
கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய கண்டிப்பான நடவடிக்கை ஆகும். பயம் வரும் செயல்களை
திரும்ப திரும்பச் செய்ய வேண்டும். நாளடைவில் பயம் என்ற உணர்வே இல்லாமல் போக அதிக
வாய்ப்புகள் இருக்கிறது. இந்த மனப் பதற்றத்தினால்
கார்டிசால் என்ற ஒருவகை ஹார்மோன் தொடர்ந்து அதிகமாக உருவாகும். இது உடம்பில் அதிக
பாதிப்புகளை உருவாக்க வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
நீரிழிவு நோய்க்கு அடிக்கோடிடும். உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும். உடல் குண்டாக
மற்றும் வயிறு சம்பந்த நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு அதிகம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியின்
ஒழுங்கீடு முறையை மாற்றி விடும். மனப் பதற்றமானது வேலையில் ஈடுபாடு குறைவு
ஏற்படும். குடும்ப உறவுகளைத் தவிர்க்க முற்படுவார்கள். தனிமையை விரும்புவார்கள்.
குடும்ப வாழ்க்கையும் பிரச்சனை கொடுக்கும். மிகப் பெரிய முன்னேற்றத்தை தடுக்கும். நம்
திறமைகளை வெளிபடுத்த விடாமல் நம்மை கிணற்று தவளைப் போல நம்முடைய உலகத்தை சுருக்கி
நம் வாழ்க்கையை சின்னா பின்னம்மாக்கிவிடும்.
• இதைத் தவிர்க்க நாம் தியானப் பயிற்சி எடுப்பது
நல்லது. அதாவது மூச்சுப் பயிற்சி தினமும் செய்து வர நாளடைவில் பயவுணர்வு போய்விடும்.
நாம் கண்களை மூடிக்கொண்டு நம் விடும் மூச்சை ஆழ்ந்து கவனித்தால் மனம் தெளிவு பெறும்.
நம் நாட்டில் கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்தல் கடினமாகத் தோன்றினாலும் பழகப்
பழகப் பழகிவிடும். இதுவே ஜப்பானியர்கள் கண்ணை விழித்துக் கொண்டு விழிப்புணர்வு
தியானம் செய்கிறார்கள். அது எவ்வளவு கடினம் என்று நினைத்துப் பாருங்கள். அனைத்து
இடமும், ஓசைகளும், மற்றவரின் பேச்சுக்களும் காதில் விழும் போதே மனதை ஒருமுகப்படுத்துக்கிறார்கள்
என்றால் அவர்களுடைய வளர்ச்சியே சான்றாக பார்க்க முடிகிறது. நாமும் முயற்சி செய்து
பயம் என்பதை நம் அகராதியில் எடுத்து விடுவோம். இப்படிச் செய்வதால் நினைவுத் திறன்
அதிகம் ஆகும்.
• அதிக புத்தகங்கள் படித்து வாருங்கள். உங்களிடம்
நம்பிக்கை பலம் பெறும்.
• அடுத்து பயத்திலிருந்து நாம் இயல்பு நிலைக்குத்
திரும்பி வருவதற்க்கு நாம் நம்முடைய கண்,
காது, மூக்கு, நாக்கு,
தோல் போன்ற ஐம்புலன்களையும் பயன்படுத்த கற்று கொள்ள வேண்டும். கண்களை
முதலில் பயன்படுத்த வேண்டும். பயம் வந்தவுடன் நமக்கு அருகே உள்ள நமக்கு பிடித்த
பொருள்களை பார்க்க வேண்டும். அடுத்து அருகேயுள்ள அந்தப் பொருள்களை தொட முயற்சி
செய்ய வேண்டும். அடுத்து நல்ல உங்களுக்குப் பிடித்த இசைகளை கேளுங்கள்.
உங்களுக்குப் பிடித்த வாசனைத் திரவியங்களை மூக்கின் வழியாக நுகருங்கள். கடைசியாக நீங்கள்
காபி அல்லது தேநீர் அருந்துங்கள். இதை செய்து வாருங்கள் நீங்களும் மனம் பதற்றம் நீங்கி
இயல்பு நிலைக்கு வர அதிகம் வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது.
மன அழுத்தம் கேட்கவே வேண்டாம். மனதின் பலத்தை
பாதியாய் குறைத்து விடும். சரி இந்த மன அழுத்தம் ஏன் ஏற்படுகிறது தெரியுமா? சில
சூழ்நிலைகளை, சில பிரச்சனைகளை கையாளத் தெரியா விட்டால் நாம் அனைவருமே இந்த மன
அழுத்ததில் சிக்கி விடுவோம். நாம் அனைவரும் தற்காலங்களில் எளிதாக சொல்லிவிடும்
வார்த்தையே இந்த ஸ்ட்ரெஸ் என்கிற மன அழுத்தம் தான். ஏன் மன அழுத்தம் இல்லாத
மனிதர்களை காண்பது என்பதே அரிது. முந்தைய காலங்களில் அதிகக் குழந்தைகள் பெற்று
மகிழ்ச்சியாய் வாழ்ந்தார்கள். ஆனால் இப்போ இரண்டு குழந்தைகளை பெற்றே மன அழுத்தம்
என்று சொல்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் அந்தக் குழந்தைகளுக்கும் கல்வி சுமையை
சுமத்தி மன அழுத்தம் உருவாக்குகிறார்கள் என்பது இன்னும் பெரியக் கொடுமை. மன
அழுத்தம் நோயை ஏற்படுத்தி உடலில் தேவையற்ற ஹார்மோன்களை சுரக்க செய்கிறது இந்த மன
அழுத்தம். ஒரு செயலை செய்கிறீர்கள், மறுமுறை செய்கிறீர்கள், மறுமுறை மறுமுறை செய்கிறீர்கள்
தோல்வி ஒன்றே நீங்கள் பெறக் கூடியது என்று வைத்துக் கொள்வோம். யாருக்குத் தான்
விரக்தி வராது. இந்த மன விரக்தியும் மன அழுத்தத்தின் ஒரு பகுதியே. நாம்
எதிர்பார்க்கும் விஷயம் நடக்கவில்லை என்றாலே நமக்கு கோவம், விரக்தி, அழுத்தம்,
சோர்வு, நம்பிக்கை இன்மை, வெறுப்பு இன்னும் பல தேவையற்றது அனைத்தும் நம் உடம்பில்
குடிசை போட்டுத் தங்கிக் கொள்ளும். அப்புறம் நீங்கள் வாடகை கொடுத்து அனுப்பினாலும்
உங்களை விட்டுச் செல்ல அடம்பிடிக்கும். மேலும் நமக்கு கமிட்மென்ட் அதாவது நிபந்தனை
பேரில் செய்யும் செயல்களும் மன அழுத்தத்தை தரத் தான் செய்யும். அடுத்து தூங்காமல்,
தொடர்ந்து வேலை செய்தாலும் மன அழுத்தம் வாசலில் வந்து வரவேற்கும். பொருளாதார
தேவைக்கு அனைவரும் தேவைக்கு மேலே, வருமானத்துக்கு அதிகமாக செலவு செய்து தன்னுடைய
ஆடம்பர வாழ்விற்காகவும் கடன் வாங்கி செலுத்த முடியாமல் மன அழுத்தம் அடைகிறார்கள்.
இன்னும் சிலர் கனவு நோக்கி நினைவு ஆக்க முடியாமல் திணறி மன அழுத்தம்
கொள்கிறார்கள். இந்த மன அழுத்தம் மிகவும் அதிகமாக போனால் மூச்சு அதிகமாக
வாங்குவார்கள். ஏன் இன்னும் சிலருக்கு மாரடைப்பு வருவதற்கு கூட வாய்ப்புகள்
இருக்கிறது. இந்த மன அழுத்தம் உள்ளவர்கள் செயல்கள் சீராக இருக்காது. மெதுவாக
இருக்கும். சிறப்பாக இருக்கவே செய்யாது. தற்போது உள்ள கார்போரேட் உலகத்தில் வேலை
என்பதே மன அழுத்தம் தான். அது நிரந்தரமா என்பது அடுத்த மன அழுத்தத்துக்கு காரணமாக
இருக்கும். தன்னை விட குறைந்த தகுதி உள்ளவருக்கு பதவி கிடைத்தால் இன்னும் அதிகமாக
மன அழுத்தத்தை உருவாக்கும். நமக்கு வரும் எல்லா மன அழுத்தங்களையும் ஒதுக்கி வைக்க
முடியாது. அதே நேரத்தில் எல்லாவற்றையும் மனதில் போட்டு மனதை மேலும் அழுத்தம்
கொடுக்கவும் கூடாது.
• மற்றவர்களின் வற்புறுத்தளுக்காக எந்தச் செயல்களையும்
செய்யாதீர்கள். தேவைபட்டால் முடியாது என்று கூட சொல்லத் தயங்காதீர்கள்.
• நமக்கு வேணும்மென்றே மன அழுத்தம் கொடுக்கும் நபர்களிடமும்,
அவமானப்படுத்தும் மனிதர்களிடமும் சற்றே தொலைவில் வைத்துப் பழகுங்கள். தேவைபட்டால்
அந்த உறவுகளை கழற்றி விடவும் தயங்காதீர்கள்.
• முடியாது, தெரியாது, நடக்காது என்று எப்போதும் எதிர் மறை எண்ணங்களை
நம் மனதில் விதைப்பவர்களை களை எடுக்கத் தயங்காதீர்கள்.
• போக்குவரத்து நெரிசலில் நீங்கள் செல்வதற்கு கால தாமதம்
ஏற்பட்டாலும் அதை கணக்கில் வைத்து ஒரு 15 நிமிடத்திற்கு முன்னாலே செல்லும்
இடத்திற்கு சென்று விடுங்கள். உங்களுக்கு நல்ல ஒரு இளைப்பாறுதல் மற்றும் அமைதி
மனதில் எழும்.
• வேலைகளை முன்னிலை படுத்துங்கள். எது சீக்கிரம் முடிக்க வேண்டும். எது
தாமதம் ஆனாலும் பரவா இல்லை. இன்னும் எது தேவை இல்லாத வேலை என்று அதை தள்ளி
வையுங்கள்.
• உங்களுக்கான வேலைகளில் யாராவது தொந்தரவு செய்தால் டாட்டா சொல்லிவிட
தயக்கம் காட்டாதீர்கள். சரியான நேரங்களை சரியான சமயங்களில் பயன்படுத்த தெரிந்துக்
கொள்ளுங்கள். இங்கே நேரம் தான் விலை மதிப்பற்றது. ஆனால் அதை தான் தேவை இல்லாமல்
அதிகம் செலவு செய்கிறோம். தேவை இல்லாத இடத்துக்கு தைரியமாக வரமுடியாது என்று
சொல்லி பழகுங்கள். உங்களுக்கான நேரத்தை சேமிக்கத் தவறாதீர்கள். அந்த நேரம் தான் உங்களுக்கு
பணத்தை சேமிக்க வைத்து விடும். எந்த வேலையும் அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள்ளே
செய்து முடியுங்கள். நேரத்தை விரயம் செய்து அந்த வேலையை முடிக்க அதிகம் நேரம்
எடுத்தால் தேவையற்ற மன அழுத்தம் உங்களுக்கு வரும். மேலும் ஒரு செயலை மிகச்
சிறப்பாக பண்ண வேண்டும் என்பதற்காகவே கால தாமதம் செய்யாதீர்கள். அனைவரும் பொதுவாக
செய்யும் முறையும், தரமும் செய்தாலே போதும். அதை விட்டு விட்டு கூடுதல் சிறப்பு
செய்ய வேண்டும் என்று காலம் தாழ்த்தி சிறப்பாகச் செய்தாலும் சில சமயங்களில்
பயனில்லாமல் போவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. பொதுவாக குறிப்பிட்ட
காலத்திற்குள் தேவைப்படும் நேரத்தில் வேலையை செய்தால் நல்ல பலன் பெறலாம்.
01. காலையில் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்
02. எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் !!
03. ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள் !!
04. காத்திருப்பது கஷ்டம் என்று நினைக்காதீர்கள். காத்திருப்பது கூட
சுகம். அந்த நேரங்களில் உங்களிடம் எப்போதும் உங்களுக்கு பிடித்த புத்தகங்களை
கையில் வைத்துக் கொள்ளுங்கள். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் !!
05. செய்ய வேண்டியதை சரியான நேரத்தில் தாமதம் வராமல் செய்யுங்கள் !!
தள்ளி போடும் குணங்களை மாற்றுங்கள்.
06. முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்த
பின் செய்வதைத் தவிருங்கள் !!
07. வீடுகளில் அல்லது அலுவலகங்களில் உங்களுக்கு தேவை இல்லாத அல்லது வேலை
செய்யாத எதையுமே கட்டி சேர்த்துக் கொண்டே அழாதீர்கள்.
கழற்றி தூக்கி எரிய தயங்காதீர்கள். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.
08. எப்போதும் சீக்கிரம் எங்கேயும் செல்ல பழக்கப் படுத்தி
கொள்ளுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே
புறப்படுங்கள்.
09. நீங்கள் எப்போதுமே மாற்றுத் திட்டத்தை கையில் வையுங்கள். திட்டம்
அ தவறினால் திட்டம் ஆ இன்னும் சொல்லப் போனால் அனைத்துக் கோணங்களிலும் வரும்
பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்க்கு பதில் மாற்றுத் திட்டம் பலவற்றை தயாராக வைத்து
இருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை இதைச் செய்வேன் என்பது போன்றவை.
10. இறுக்கத்தை தளருங்கள். சில வேலைகள் முடியாமல் போனாலோ, நமக்கு முடிவு கிடைக்க தாமதம் ஆனாலோ நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய
வாசகங்கள். உலகம் இத்தோடு முடிந்து விடப் போவது இல்லை!! தாமதமாக கிடைத்தாலும்
தரமானதாக உங்களுக்கு வந்துச் சேரும். முகத்தை புண் முருவலுடனே எப்போதும் வைத்துக்
கொள்ளுங்கள். காலையில் வெளியேச் செல்லும்போது தெரிந்த நபர்களை கண்டால் வணக்கம்
செலுத்துங்கள். கண்டும் காணாமல் போய் விடாதீர்கள். முகத்தில் புன்னகையும் அகத்தில்
நம்பிக்கையுமே நமது சொத்தாக இருக்கட்டும்.
11. தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை
விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்
!!
12. செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக்
கேட்டு வைத்துக் கொள்ளுங்கள் !!
13. சிறிது நேரம் தனிமையில் ஓய்வு எடுங்கள் எந்தத் தொந்தரவும் இன்றி
!!
14. செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று
நினைக்கும் பணிகளோ இருந்தால்,
‘மன்னிக்கவும்..
என்னால் செய்ய இயலாது’ என்று சொல்லப் பழகுங்கள் !!
15. உணவு, உடைகள், உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம் !!
16. எளிமையாக வாழுங்கள் !!
17. உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம் !!
18. நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற
தூக்கத்துக்கு அது உதவும் !!
19. வீடுகளை சுத்தமாக வைத்து இருங்கள். சுத்தம் தான் சோறு போடும். அதற்காக
குழம்பு யாரு ஊற்றுவார்கள் என்று கேட்காதீர்கள் சுத்தமாக இருந்தாலே எந்தவித நோயும்
நெருங்காது. மேலும் அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தைத் தரும் !!
அப்படி தராமல் இருக்க நம்மையும், வீட்டையும், சமுதாயத்தையும் சுத்தமாக வைத்தல்
நலம்.
20. ஆழமாக, நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து
மெதுவாக வெளியே விடுங்கள் !!
21. எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும் !!
22. குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்
!!
23. தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள்.
அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட !!
24. பிறருக்காக எதையேனும செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும்
ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள் !!
25. என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து
பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள் !!
26. உங்கள் உடை,
நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை
அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை !!
27. அதிக செயல்களை, திட்டங்களை ஒரே நேரத்தில் செயல்படுத்த ஆசைப் படாதீர்கள்..
ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.
28. இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை
மனதில் கொள்ளுங்கள் !!
29. பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது
தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும் !!
30. மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள் !!
இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை வாழலாம்
!!!! நன்றி..
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு
தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
நலன் : மன பலம் எப்படி இருக்க வேண்டும்? - குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Welfare : What should mental strength look like? - Tips in Tamil [ Health ]